பெரியார் சிந்தனைகள் - பெண்ணுரிமை குறித்த விவாதங்களின் நிகழ்வாக பேராசிரியர் சரசுவதி எழுதிய ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு ஜூலை 9ஆம் தேதி மாலை சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் சிறப்புடன் நிகழ்ந்தது. பல்வேறு இதழ்களில் பேராசிரியர் சரசுவதி எழுதிய 32 கட்டுரைகளின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் இந்த நூலை, பரிசல் புத்தக நிலையம் வெளியிட்டிருக் கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் இலக்கியங்களாக்கிய எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தலைமையில் நடந்த நிகழ்வில் மணிமேகலை சவுரிராசன் வரவேற்புரையாற்ற, கவிஞர் காளமேகம், ஓ. சுந்தரம், கீதா இராமகிருட்டிணன், கவிஞர் ஜெய பாஸ்கரன், ஆழி. செந்தில்நாதன், முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் நூல் குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் ஆழமான கருத்துகளை முன் வைத்தனர். நிறுவனங்களின் வழியாகவும் குடும்ப அமைப்பின் வழி யாகவும் மறுக்கப்படும் பெண்ணுரிமை குறித்தும் சமூகத்திலும் குடும்பத்தி லும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

நூலை தந்தை பெரியாருக்கு அர்ப் பணித்துள்ள இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் சரசுவதி முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“இராமாயண ‘புஷ்பக விமானம்’, ரைட் சகோதரர் களின் கண்டுபிடிப்புக்கு மிக மூத்தது. அவர்களுக்கே உந்து சக்தியாக இருந்தது என்று மார்தட்டும் இவர்கள், சந்தேகத்தின்பேரில் சீதையை இராமன் தீக்குளிக்கச் செய்தது தான், இன்றைய பெண் எரிப்புக் கொலைகளுக்கு முன்னோடி, வழிகாட்டி என்பதை மூர்க்கமாக மறுப்பார்கள், மழுப்புவார்கள். மதிமயங்கி மாதவி வீடேகி வாழ்ந்து, பொருளிழந்து பிணங்கித் திரும்பிய கோவலன், புது வாழ்வு தொடங்க ‘சிலம்புள கொண்மின்’ என்று இன் முகத்தோடு ஈந்த கண்ணகிகள் இன்றும் இருக் கத்தான் செய்கிறார்கள். உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்த, கற்பரசிகள் பெய்யெனப் பெய்யும் பெருமழையாகப் போற்றப்படுகிறார்கள். சரி! ஆனால், இவர்களோடு கற்பே அற்ற, கற்பிழந்த கோவலன்கள், கேவலன்களாக எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி மதுரை மூதூர்களிலும், மதராசப் பட்டணங்களிலும் தலை நிமிர்ந்து நெஞ்சுயர்த்தித் திரிந்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் தூற்றப்படு கிறார்களா என்ன? ஏனிந்த இரட்டை அளவுகோல்?” என்று கேட்கிறார்.

நூலுக்கு அணிந்துரை எழுதிய எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி, தனது அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

மனித விலங்குகள் கூட்டமாக குழுவாக வாழும் தன்மை கொண்டவை. அதனால் தாய்வழிச் சமுதாயத்தில் குடிகளாக வாழ்ந்தது. பின்னர் தந்தை வழிச் சமுதாயத்தில் அதுவே படிப்படியாகக் குடும்பம் என்ற அமைப்பாக இறுக்கப்பட்டது. குடும்பம் என்ற அமைப்பை அப்படியே கட்டிக் காப்பதன் மூலம்தான் சொத்துடைமை உரிமையை வம்சாவழியாகக் கை மாற்ற முடியும் என்பதால் ஆணாதிக்க சக்திகள் மதத்தையும் அரசையும் அதற்காக உருவாக்கிப் பயன் படுத்தின. இன்று வரை உலகில் பல அமைப்புகள், நிறுவனங்கள் தூள் தூளாக நொறுக்கப்பட்டு விட்டன. ஆனால் குடும்பம் என்ற அமைப்பு மட்டும் அப்படியே பாதுகாக்கப்படு கிறது. இதனை முதன்முதலில் பெண்ணிய  நோக்கில் உணர்ந் தவர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் என்பார்கள்.

அதற்கு அடுத்து இதனைச் சரியாகக் கணித்துக் கூறியவர் தந்தை பெரியார். பெண் விடுதலையில் சாதி ஒழிப்பின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டினார். சுயமரியாதைத் திருமணங்களை முன்னெடுத்து நடத்திக் காட்டினார். ஆயிரக் கணக்கில் அவர் நடத்திய சுயமரியாதைத் திருமணங்கள் இந்து மதத்தின் அகமண முறையை வெடி வைத்துத் தகர்த்தன.

அது மட்டுமல்லாமல் வீட்டுக்குள் குடும்பத்துக்குள் பெண்களுக்கு எதிராக நடை பெறும் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பெண்களைப் போராடத் தூண்டினார். “புருஷன் இரண்டாம் கலியாணம் செய்து கொண்டால் நீயும் இரண்டாம் தாரமாக, மூன்றாம் தாரமாகக் கலியாணம் செய்து கொள்’ என்றார். அவன் சின்ன வீடு வைத்துக் கொண்டால் நீயும் வைத்துக் கொள். புருசன்  அடித்தால் அடிபட்டுக் கொண் டிராதே” என்றார். இது பழைய மன்னராட்சி அல்ல. ஜனநாயக ஆட்சியில் பெண்ணுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது என்றார். அந்தக் காலகட்டத்தில் சமூகத்துக்கு இது அதிர்ச்சி வைத்தியம்தான். ஆனால் இன்று இவையெல் லாம் பெண்ணுரிமை சாசனத் தில் இடம் பெறத் தொடங்கி யிருக்கிறது” என்று குறிப்பிடு கிறார்.

விழாவில் நூல் வெளியீட்டுக்கு உதவியோருக்கு சிறப்புகள் செய்யப் பட்டன. நூலின் ஆசிரியர் பேராசிரியர் சரசுவதி சுருக்கமான ஏற்புரை வழங்கினார். ‘தோழமை’ அமைப்பின் இயக்குனர் தேவநேயன் நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். பல்துறை சார்ந்த சிந்தனையாளர்கள், இலக்கிய வாதிகள், திராவிடர் விடுதலைக் கழகத்  தோழர்கள், பெண்கள் என அரங்கம் நிரம்பியிருந்தது.

Pin It