பிரதான வழக்கு அப்படியே தான் இருக்கிறது என்று - கி.வீரமணி,நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அறிக்கை விடுத்துள்ளார். பிரதான வழக்கில் என்ன இருக்கிறது? இனி அதில் உயிர் ஏதாவது இருக்கிறதா என்பதை கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி விளக்குகிறார்.
“எதிரிகளுக்கு இது இடைக்கால வெற்றிதான். பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதில் வெற்றி நமக்குத் தான்” - இது வீரமணியின் ஓங்கார அறிக்கை. “குப்புறத்தான் விழுந்தேன், ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை” என்கிறார். வழக்கில் தோற்று விட்டோம். தோல்விக்கு என்ன காரணம், என்ன பரிகாரம் காணலாம் என சிந்திப்பதுதான் அறிவார்ந்த செயல். அதை விட்டுவிட்டு, ‘பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, அதில் நமக்குதான் வெற்றி’ என்று கூக்குரலிடலாமா? அப்படி என்னதான், அந்த பிரதான வழக்கில் உள்ளது? பிரதான வழக்கின் சாராம்சம் இதுதான்.
“பெரியாரின் குடிஅரசு எழுத்துக்கள் மற்றும் அவரது மற்ற எழுத்துக்கள் பேச்சுகள், நூல்கள், கட்டுரைகள், இவை எதையும் பெரியார் திராவிடர் கழகம் பதிப்பிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று நீதிமன்றம் நிலையான கட்டளை பிறப்பிக்க வேண்டும். வீரமணிக்கு பெரியார் திராவிடர் கழகம் 15 லட்சம் இழப்பீடும் தர வேண்டும்” - இதுதான் பிரதான வழக்கில் அவரது கோரிக்கை.
இப்படிக் கோருவதற்கு என்ன காரணம்? அவர் மனுவில் முன் வைத்திருப்பது இதுதான். ஒன்று - பெரியாரின் எழுத்துக்கள். வீரமணியிடமுள்ள நிறுவனத்திற்குத்தான் சொந்தம். ஏனென்றால் 1952 இல் பெரியார் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர் மறைவிற்கு பிறகு அதனுடைய ஆயுள் செயலாளர் வீரமணிதான். அதனால் தனக்கு மட்டும்தான் பெரியாரின் எழுத்துக்களை பதிப்பிக்க பதிப்புரிமை உள்ளது. எனவே, வேறு யாரும் பெரியாருடைய எழுத்துக்களை பதிப்பிக்கக் கூடாது. இதுதான் அந்த பிரதான வழக்கு. அதனால் பிரதான வழக்கு முடியும் வரை பெரியார் திராவிடர் கழகத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு வேண்டும். இதுதான் அவர் வைத்த கோரிக்கை. இதற்காகத்தான் கடந்த 20 மாதங்களாக வழக்காடிக் கொண்டிருந்தார்.
தனக்குத்தான் பெரியாரின் எழுத்துக்களுக்கு பதிப்புரிமை உள்ளது என்பதற்கு அவர் முன்னிறுத்திய ஆதார ஆவணங்கள் என்னென்ன தெரியுமா? (அடேயப்பா யாரும் அசைக்க முடியாத, 21 ஆதார ஆவணங்கள்).
1. 1930 ஜனவரி குடிஅரசு இதழில் வெளிவந்த கட்டுரையை யாரோ ஒருவரால் கைப்பட எழுதிய நகல் (சுமார் 32 பக்கம்) (“இதை வீரமணிதான் ஆள் வைத்து 1983 ஆம் ஆண்டு நகல் எடுத்தாராம்; அவர் நகல் எடுத்த காரணத்தால் அந்த பெரியார் எழுத்துக்கள் அவருக்கே சொந்தமாகி விட்டதாம். அதனால் வேறு யாரும் பெரியார் எழுத்தை பதிப்பிக்கக் கூடாது - இதுதான் நீதிமன்றத்தில் வீரமணியின் வாதம்.)
2. 1949 ஆம் ஆண்டு ஸ்டார் பதிப்பகம் என்னும் நிறுவனம் ‘வெற்றி கண்ட வீரர்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட, ஒரு மாதிரி ஒப்பந்தத்தை பெரியாருக்கு அனுப்புகின்றனர். ஸ்டார் பதிப்பகம், பெரியாரிடம் ஒப்புதல் கேட்பதிலிருந்தே பெரியாரிடம் பதிப்புரிமை இருந்திருப்பது உறுதியாகிறதே, என்பது வீரமணியின் விவாதம். (உண்மை என்னவென்றால், பெரியார் அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தரவில்லை. அப்படியே பெரியார் ஒப்புதல் தந்ததாகவே வைத்துக் கொண்டாலும்கூட, அதனால் வீரமணிக்கு எப்படி காப்புரிமை கிடைக்கும்?)
3. வீரமணி சமர்ப்பித்த மற்றொரு ஆவணம் - 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சட்டத் திட்டங்கள் அடங்கிய கையேடு. மேற்படி நிறுவனம் சட்டப்படி பதிவாளர் முன் பதிவு செய்ததன் உத்தரவு நகல். மேற்படி நிறுவனம் பதிவு செய்வதற்கான படிவமும், அறிக்கையும், உறுப்பினர் பட்டியலும். (சரி இருக்கட்டும். இவையெல்லாம் அவர் வைத்திருப்பதாலேயே பதிப்புரிமை கோரிவிட முடியுமா? என்னிடம் கூடத்தான் உள்ளன - அதனால் எனக்குத்தான் பதிப்புரிமை உள்ளது என நான்கூட கூறலாமா?
4. 1952 இல் பெரியாரால் ‘சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கம் - இது வீரமணி சமர்ப்பித்த மற்றொரு ஆவணம்.
5. 4.8.1971 இல் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் கி.வீரமணியும், புலவர் இமய வரம்பனும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்; அதற்கான அந்நிறுவனத்தின் நடவடிக்கைக் குறிப்பு. (இந்த ஆவணத்தில் எங்கேயாவது பெரியாரின் எழுத்துக்களின் காப்புரிமை அந்த நிறுவனத்திற்கு தான் சொந்தம் என்று உள்ளதா?) (அது மட்டுமல்ல; மற்றொரு முக்கியமான செய்தி இருக்கிறது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தைப் பதிவு செய்தாரே, தவிர, அந்த நிறுவனத்திற்கு ஒரு காசைக்கூட நன்கொடையாக தரவில்லை. பெரியார் மரணமடையும்வரை தன் சொந்த சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்கவில்லை. பெரியார் பெயரில்தான் அவை இருந்தன. தனது சொந்த சொத்துக்களை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு மாற்றித் தரவே இல்லை. பெரியார் தனது சொத்துக்களை நிறுவனத்துக்கு மாற்றி, பத்திரம் எழுதித் தந்தால் தான் அது நிறுவனத்தின் சொத்தாகும். எனவே, சட்டப்படி பெரியாரின் சொத்துக்களுக்கு அறக்கட்டளை உரிமை கோர முடியாது. அவை அரசுடைமை ஆக்கப்பட்டதாக அரசு அறிவிக்க வேண்டும். மற்றும் அந்த சொத்துக்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக கையகப்படுத்தி, அரசுடைமையாக்க வேண்டும். இது அரசு செய்ய வேண்டிய கடமை.) வீரமணி நிறுவனத்திடம் பெரியார் சொத்துக்கள் இருப்பதால், அவை பெரியார் கொள்கையைப் பரப்புவதற்குப் பயன்படப் போவதில்லை; பரப்புவதைத் தடை செய்வதற்கு வழக்குகள் போடுவதற்குத்தான் பயன்படும்.
6. 1978 - மத்திய அரசு பெரியார் நூற்றாண்டையொட்டி வெளியிட்ட ‘அஞ்சல் தலை’யும், அதற்கு அந்த அஞ்சல் துறையினர் வெளியிட்ட விளக்கமும் வீரமணி சமர்ப்பித்த மற்றொரு ஆவணம். அரசு, பெரியாருக்கு நன்றி கூறி அஞ்சல் தலை வெளியிட்டால் அது எப்படி பெரியார் எழுத்துக்களுக்கு காப்புரிமை கோருவதற்கான ஆவணமாக இருக்க முடியும்? வீரமணி எப்படிப்பட்ட “வலிமையான”ஆவணங்களை முன் வைத்துள்ளார், பாருங்கள்!
7. 1983 ஆம் ஆண்டு ‘விடுதலை’ வெளியிட்ட பெரியார் பிறந்த நாள் மலரில் வெளியான ‘கடந்த ஆண்டு கழக டைரி’ - 17.9.1982முதல் ஆகஸ்ட் 1983 வரை நடந்த கழக நிகழ்ச்சிகளின் தொகுப்பை - மற்றொரு ஆவணமாக வீரமணி காட்டியுள்ளார். அதில் புலவர் இமயவரம்பன் முயற்சியில் சில பெரியார் பற்றாளர்கள் பெரியாரின் எழுத்துக்களை தொகுத்ததாக ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. இதுதான் வீரமணிக்கு கிடைத்த பெரிய ஆதாரம். நான் தான் நகல் எடுக்கச் சொன்னேன். அதனால் பெரியாரின் எழுத்துக்களை யார் நகல் எடுத்தாலும் அது தனக்குத்தான் சொந்தம். ஆகவே வேறு யாரும் பெரியாரின் எழுத்துக்களை பதிப்பிக்கக் கூடாது. இது வீரமணியின் அடுத்த வாதம். இதை வைத்துத்தான் இரத்தினகிரி என்பவர் தாம்தான் அந்த தொகுப்புப் பணியை திட்டமிட்டு செயல்படுத்தியவர் என்றார். அதனால் தன்னையும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் நுழைந்தார். (வீரமணிக்கே உரிமை கிடையாது எனும்போது - இந்த இரத்தினகிரிக்கு ஏது உரிமை என நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது தனிக் கதை)
8. மற்றொரு “வலிமையான” வீரமணி சமர்ப்பித்த ஆவணம் -1987 ஆம் ஆண்டு கோவை இராமகிருட்டிணனை திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றிவிட்டதாக ‘விடுதலை’யில் வெளிவந்த அறிக்கை.
9. 2000 ஆம் ஆண்டில் கொளத்தூர் மணி தி.க.விலிருந்து விலகிக் கொண்டுவிட்டதாக, அவரால் எழுதப்பட்ட கடிதம். கோவை இராமகிருட்டிணனை நீக்கிவிட்டோம்; கொளத்தூர் மணி விலகி விட்டார்; எனவே பெரியார் எழுத்துகளில், பதிப்புரிமை கிடைத்துவிட்டது என்கிறார் வீரமணி. அவர்கள் இரண்டு பேரும் தி.க.விலிருந்து வெளியேறிவிட்டதாலேயே தானாகவே வீரமணிக்கு சொத்துரிமையும் எழுத்துக்களின் பதிப்புரிமையும் வந்துவிடுமா? (கொளத்தூர் மணியும், கோவை இராமகிருட்டிணன் - வெளியேறியபோது அந்த உரிமைகளை வீரமணியிடம் தாரை வார்த்துவிட்டு போனார்களா?)
10. 21.11.2000 - ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவந்த வீரமணியின் அறிக்கை. அவர் சமர்ப்பித்த மற்றொரு ஆவணம், திருச்சியில் ஒரு மாநாடு நடந்தபோது அதே தேதியில் “கொளத்தூரில் ஒரு மாநாடு” என்ற தலைப்பில் உள்ளது, அந்த அறிக்கை. பெரியாரின் எழுத்துக்கள் தனக்கே சொந்தம் என்பதற்கு இந்த அறிக்கை ஒன்றே போதும் என்பது வீரமணியின் வாதம்.
11. அரசு நூலக இயக்குநர் அரசு நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல் தொடர்பாக எழுதிய கடிதமும் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு ஆவணம்.
12. ஆவணங்கள் இவை மட்டுமல்ல! பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன இயக்கத்தின் சார்பில் மேற்படி நூலகத்திற்கு அனுப்பிய நூல்களின் பட்டியல்.
13. அரசு பொது நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்கான மாதிரி ஒப்பந்த படிவம். (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
14. புத்தகங்கள் விற்பனைக்காக பணம் பெற்றுக் கொண்டதற்கு இரசீது.
15. அரசு பொது நூலகத்தின் இயக்குனர், பதிப்பகத்தார்களுக்கு எழுதிய கடிதத்தின் நகல்.
16. அரசு பொது நூலகத்திற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அனுப்பிய புத்தக பட்டியல்.
17. 8.7.2008 இல் ரத்தினகிரி என்பவர் தஞ்சையில் கூட்டிய கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்புகள்.
18. குடிஅரசு தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும் என்ற அறிவிப்பு வந்த பெரியார் முழக்கம் வார இதழ்.
19. பெரியார் யாருக்கு சொந்தம் என்ற தலைப்பில் ‘குமுதம் ரிப்போர்ட்’டரில் வெளியான கட்டுரையின் நகல்.
20. பெரியார் சிந்தனைகள் தொகுப்புக்காக வே. ஆனைமுத்து எழுதியுள்ள பதிப்பாசிரியர் முன்னுரை.
21. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்ட புத்தக பட்டியல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். (நல்ல வேளை, தொடர்வண்டி கையேடு புத்தகத்தையும் சேர்க்காமல் விட்டு விட்டார்களே!)
இத்தனை “ஆதாரங்களையும்” முன் வைத்துதான் வீரமணி நீதிமன்றத்தை நாடி பெரியார் திராவிடர் கழகம், பெரியார் எழுத்துக்களை அச்சிட உரிமை கிடையாது; அது தனக்குத்தான் சொந்தம் என வழக்கு தொடர்ந்தார்.
பதிப்புரிமை சட்டப்படி பதிப்புரிமை கோருவதற்கு தேவையான அடிப்படைகள் என்ன?
1. நூலை ஆக்கியவர் தன்னுடைய எழுத்துக்கு பதிப்புரிமை உள்ளது என அறிவித்திருக்க வேண்டும். (பெரியார் மறையும் வரை அப்படியொரு உரிமையை கோரவில்லை)
2. அல்லது அந்த உரிமையை எழுத்து வடிவில் வேறு ஒருவருக்கு மாற்றி எழுதித் தந்திருக்க வேண்டும்.
3. ஒரு நூலின் படைப்பாளி, அந்த நூலை வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு எழுதியிருக்க வேண்டும். (பெரியார் அப்படித்தான் செய்தாரா?)
4. இதைத் தவிர, பத்திரிகைகளில் வெளிவந்த அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த கட்டுரைகளை மறுவெளியீடு செய்வதற்கு யாரும் பதிப்புரிமை கோர முடியாது என்று சட்டம் தெளிவாகவே கூறுகிறது.
5. நூலை ஆக்கியவர் மறைந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த வாரிசுகள் உட்பட யாருக்கும் பதிப்புரிமை கோர உரிமையில்லை. அந்த எழுத்துக்கள் பொது மக்களின் உடைமையாகி விடும்.
வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி மாண்பு மிகு சந்துரு,இடைக்கால தடை கோர வீரமணிக்கு போதுமான ஆதாரம் இல்லை என்றுதான் தீர்ப்பளித்தார். மேல் முறையீடு செய்யாமல், அப்படியே பிரதான வழக்கை கி. வீரமணி நடத்தியிருப்பாரானால், தன்னிடமுள்ள ‘அசைக்க முடியாத 21’ ஆவணங்களை முன் வைத்து பிரதான வழக்கை நடத்தியிருக்கலாம்.
கீழ்க்கண்ட வாதங்களை எல்லாம் அவர் முன் வைத்திருக்கலாம்:
• “பெரியார் தனது சொத்துக்களை எவருக்கும் எழுதித் தரவில்லையென்பதால் அந்த ஒரு காரணத்தினாலே பதிப்புரிமை எனக்கு வந்து விட்டது.
• கொளத்தூர் மணியும் இராமகிருட்டிணனும் கட்சியை விட்டு விலகி விட்டார்கள் என்பதால் - பதிப்புரிமை எனக்குத்தான்.
பெரியார் குடிஅரசைத் தொடங்கியது 1925 இல்; அறக்கட்டளையை நிறுவியது 1952 இல்; இந்த இரண்டையும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் - 1, 2, 9, 5 ஆகிய எண்கள் மட்டுமே இரண்டிலும் பொதுவாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதிலிருந்தே பதிப்புரிமை எனக்குத்தான் உண்டு என்பது திட்டவட்டமாக உறுதியாகிவிட்டதே.”
- இப்படி அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளி வீசியிருந்திருக்கலாமே? இத்தனைக்கும் மேலாக தஞ்சை ரத்தினகிரியின் வலிமையான மனுவும் சேர்ந்து விட்டதே; இந்த‘ஆணித்தர வாதங்களால்’ பிரதான வழக்கில் உள்ள ‘வெற்றி வாய்ப்பை’ அவர் தட்டிப் பறித்திருக்க முடியும். இருந்தாலும் இப்போதும் குடிமுழுகிப் போய்விடவில்லை. அதோடு “பிரதான வழக்கு” அப்படியேதான் இருக்கிறது என்பதால், வீரமணி, அச்சப்பட தேவையே இல்லை. வீரமணியும், இரத்தினகிரியும், வழக்கு மனுவில் தங்களை ‘இந்து’ என்று கூறி விட்டதால், இந்துக் கடவுள்கள் எல்லாம்,வேலாயுதம், சூலாயுதங்களோடு வீரமணிக்கு, துணைக்கு வந்து நிற்குமே! பிறகு என்ன?
ஆனாலும் நமக்கு, ஒரு சந்தேகம் மட்டும் உறுத்திக் கொண்டே இருக்கிறது.
ரூ.15 லட்சம் வீரமணி இழப்பீடு கேட்டுள்ளாரே, அது எந்த அடிப்படையில் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அது என்ன கணக்கு, 15 லட்சம்? பெரியார் எழுத்துக்களுக்கு விலை மதிப்பீடு கிடையாது என்பது கூடவா இவர்களுக்குப் புரியாது.
இப்போது மேல் முறையீட்டு தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய தீர்ப்பின் சுருக்கம் இதுதான்.
1. பெரியார் எழுத்துக்களுக்கும் வீரமணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
2. வீரமணியின் பிரதான வழக்கு மனுவில் என்ன கோரிக்கை வைத்துள்ளார்கள் என்பதே தெளிவாக இல்லை. (அதனால் பிரதான மனுவே செல்லாது)
3. பெரியார் எந்த தனி மனிதனுக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் உலகப் பொது மனிதர்.
4. பெரியார் தன்னுடைய எழுத்துக்களுக்கு உரிமை கோர தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மற்றும் யாருக்கும் அதிகாரம் தரவில்லை. பெரியாரே தன் எழுத்துக்களை எவரும் பயன்படுத்தலாம் என்றுதான் கூறியுள்ளார்.
5. பெரியார் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பிறகும் சட்டப்படி பெரியாரின் எழுத்துக்கள் மக்கள் உரிமையாகி விட்டன. அதனால் இனிமேல் தனி மனிதர்கள் யாரும் காப்புரிமை கோர முடியாது.
நீதிமன்றம் இப்படி கூறிய பிறகு - இனி எங்கே இருக்கிறது பிரதான வழக்கு? பிரதான வழக்கிற்கே அடிப்படை கிடையாது என்பதால்தான் இடைக் கால தடை கோர வீரமணிக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. ஏனென்றால் பெரியார் எழுத்துக்கள் இனி மக்கள் உடைமையாகி விட்டது. எனவே இனி பிரதான வழக்கை பொது மக்களுக்கு எதிராகத்தான் வீரமணி போட வேண்டும்.
அரசே பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க நினைத்தால்கூட இனி அது முடியாது. காரணம் நீதிமன்ற தீர்ப்பின்படி பெரியாரின் எழுத்துக்கள் மக்களின் பொது உடமையாக (Public Domain) மாறிவிட்டது. மக்களின் உடமையை நாட்டுடைமையாக்க எந்த நாட்டுச் சட்டத்திலும் இடமில்லை. பெரியார் உலக மக்களுக்குத்தான் சொந்தம். இன்னொன்றும் வீரமணி பகர்ந்துள்ளார். ‘தம்மிடம் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் பெரியார் எழுத்துக்களை பதிப்பிக்கலாம். ஆனால் தன்னிடம் முன் அனுமதி பெறவேண்டும்’ என்று அறிக்கை விடுகிறார். அட விளங்காதவரே, பெரியார் எழுத்துக்கும் உமக்கும் சம்மந்தமே கிடையாது. அது பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியால் பொது மக்களின் உரிமை என்று நீதிமன்றமே கூறிவிட்ட பிறகும், உம்மிடம் எதற்காக எந்த அடிப்படையில் அனுமதி கேட்பது? உமக்கேது உரிமை, அப்படி அனுமதி கொடுப்பதற்கு?
பெரியார் கூறுவார், ‘மொட்டை அடித்துக் கொண்டு சுங்க கேட் வழியாக போனவன், மொட்டை தலைக்கு சுங்கம் உண்டா?’ என கேட்டானாம். அவனும் ‘வைய்யடா காலணாப் பணம்’ என்றானாம். அந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது. பெரியார் தன் தத்துவங்கள் உலகெல்லாம் கொண்ட செல்ல வேண்டும். உலக மக்கள் பகுத்தறிவுச் சிந்தனை பெற வேண்டும். சாதி சமய வேற்றமைகள் ஒழிய அதுவே நன்மருந்து என்றே கருதினார். ஆனால், வீரமணியின் சிறு கும்பல் பெரியார் தத்துவங்களை ஒரு பெட்டிக்குள் கட்டி, அவர் கருத்துக்களை பரவாமல் பார்த்துக் கொண்டது. ஆனால் அந்த சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு, பெரியார் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் வென்றெடுத்துவிட்டது. பெரியார் சொத்துக்கள் இன்னும் அந்த சிறு கும்பலின் சட்டவிரோத ஆதிக்கத்தில்தான் உள்ளது. அதனையும் மீட்டெடுப்போம். இறுதி வெற்றி நமதே.
- வழக்கறிஞர் எஸ்.துரைசாமி