குடும்ப சொத்தில் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் உரிமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1929இல் செங்கல்பட்டில் நடந்த தமிழ் மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின்போது அன்றைய முதல்வர் கலைஞர் இதை சட்டமாக்கினார். 2005ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்திலேயே குடும்ப சொத்தில் பெண்களின் பங்கை உறுதிப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது ஏற்கெனவே அமுலில் இருந்து வந்த இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தேவையற்ற சட்டங்கள் என்று சுமார் 140 சட்டங்களை நீக்கிவிட்டது. இனி இந்தச் சட்டங்கள் அமுலில் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டமும் இதில் இடம் பெற்றிருக்கிறது.

 பெண்களுக்கு குடும்ப சொத்தில் உரிய பங்கினை உறுதி செய்யும் ஒரு முக்கியமான சட்டத்தை எந்தவித விவாதமும் இன்றி வெளிச்சத்துக்கு வராமலேயே மோடி அரசு நீக்கியிருப்பது நாட்டின் கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, கருநாடகா, ஆந்திரம் ஆகிய தென்னக மாநிலங்களில் மாநில அரசுகள் இப்படி சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. இத்தகைய சட்டங்களே இல்லாத வட இந்திய மாநிலங்களில் மத்திய அரசின் சட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருந்த நிலையில் அது நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னையில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து ‘வாட்ஸ் அப்’ வழியாக நாள் நாள்தோறும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பகிர்ந்து வரும் செய்தியில் இந்த செய்தியையும் பகிர்ந்தார். இந்த செய்தி அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. தோழர்கள் பலரும் ‘வாட்ஸ் அப்’ உரையாடல்கள் வழியாகவும் அலைபேசி வழியாகவும், இந்த செய்திக்கு ஆதாரமான ஆவணங்களை வழங்கும்படி கேட்டார்கள். அதைத் தொடர்ந்து நீக்கப்பட்ட சட்டங்களின் பட்டியலில் இந்த சட்டமும் இடம் பெற்றிருப்பதற்கான ஆவணங்கள் திராவிடர் விடுதலைக் கழக இணையத்தளம், முகநூல்களில் வெளியிடப்பட்டுள்ளன. (இணையதளம்: www.dvkperiyar.com; முகநூல்: ‘திராவிடர் விடுதலைக் கழகம்’.

Pin It