லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள், ‘புரட்சி’ செய்து வருகிறார்கள். எதிர்ப்புக்கு அமெரிக்காவும் பின்புலமாக இருப்பதால் அய்.நா.வும், லிபியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அய்.நா. மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றிருந்த லிபியா, அதிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. அய்ரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு விரைவில் லிபியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆலோசனை நடத்தி வருகிறது. லிபியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான விசாரணை நடத்திட அய்.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது. அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அறிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அய்.நா.வின் தலைமையகமான ஜெனிவாவுக்கு சென்று, அங்கே மனித உரிமைக் குழு கூட்டத்துக்கு வரும் பல்வேறு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து லிபியாவுக்கு எதிராக கருத்துகளை விவாதித்துள்ளார்.

 அமெரிக்காவின் போர்க் கப்பலும் விரைந்துள்ளது. அய்க்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்டப் பிரிவின் நல்லெண்ணத் தூதராக இடம் பெற்றிருந்த கடாபி தனது மகள் ஆயிஷாவை நியமித்திருந்தார். அவரையும் அப்பதவியிலிருந்து அய்.நா. நீக்கியுள்ளது. இதேபோல் தமிழ் ஈழத்தில் தமிழர்கள் மீது இலங்கை அரசு இனப்படுகொலைகளை நடத்தியபோது, அய்.நா.வும், சர்வதேச நாடுகளும் இனப் படுகொலைக்கு எதிராக அதை தடுத்து நிறுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை. இந்தியாவே தமிழர்களுக்கு எதிராக போரை நடத்தியதால் உலக நாடுகள் ஒதுங்கிக் கொண்டன. ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான அரசியல் அமைப்புகள் ஈழத் தமிழர்களிடம் இல்லாமல் போனதும் ஒரு காரணம் தான். புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்திய உறுதியான போராட்டங்கள் எந்த அசைவையும் உருவாக்க முடியாமலே போய் விட்டது.

 லிபியாவின் அதிபர் கடாபியும் போர்க் குற்றவாளி ராஜபக்சேவுக்கும் நெருங்கிய குடும்ப உறவுகள் உண்டு. ஈழத் தமிழர்கள் மீது இனப் படுகொலைகளை ராஜபக்சே கட்டவிழ்த்துக் கொண்டிருந்தபோதே, கடாபியுடன் நெருக்கமாக இருந்தவர் ராஜபக்சே. இப்போது லிபியாவில் மக்கள் நடத்தும் போராட்டத்தை எதிர்த்து கடாபிக்கு ஆதரவாக இலங்கை பேரினவாத ஆட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ராஜபக்சே கடாபி குடும்ப உறவுகளுக்கு இணைப்பு சங்கிலியாக இருப்பர் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெரும்புள்ளி என்று ‘ஏர் லங்கா நியூஸ்’ இணையதளம் கூறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை அரசு மேற்கொள்ளும் வர்த்தக உடன்படிக்கைகள் இவர் வழியாகவே நடப்பதாகவும், ராஜபக்சேயின் ஆதரவு கடிதத்தை, கடாபியிடம் கொண்டு போய் சேர்த்தது, இந்த நபர்தான் என்றும், அந்த இணைய தளம் கூறுகிறது. கடாபி நாட்டை விட்டு வெளியேறும்போது அவருக்கு புகலிடம் அளிக்க இலங்கை தயாராக உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

Pin It