கடந்த 21.11.2021 அன்று ஆடு திருடிய கும்பலை விரட்டிப் பிடித்த நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அக்கும்பலால் பட்டப்பகலில் பொது வெளியில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சிறாராக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும் வன்முறையைப் பயன்படுத்துவது, அதிலும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாட்டில் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, நியாயத்திற்குப் புறம்பானது ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்பதில் முழு நம்பிக்கை கொண்ட குடிமைச் சமூகமும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இத்தகைய வன்முறையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். 

காவல் வன்முறைக்கு எதிராகச் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காவல்துறையினர் மீது நடத்தப்பெறும் வன்முறையையும் கண்டிக்க ஒரு போதும் தவறியதில்லை; தவறவும் மாட்டோம். இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் படி அனைத்து மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுதல் கூடாது. அனைத்து மக்கள் என்பதில் காவல்துறையினரும் அடங்குவர். அனைவரின் வாழ்வுரிமையும் பாதுக்காக்கபெற வேண்டும். இது எவர்க்கும் மறுக்கப்படக் கூடாது. ஒருவர் உயிரைப் பறிக்க எவர்க்கும் அதிகாரமில்லை.

இது போன்ற கொடூர குற்றங்கள் செய்வோர்க்கு எதிராக விரைவான, முறையான, தரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவான தீர்ப்பு வழங்கப்பெற வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகிறது. 

திருட்டுக் கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நீதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாக அளிக்கப்பட வேண்டும். 

குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வன்முறைக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மலேசிய நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகளைத் துண்டித்து வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆயுதக் கலாச்சாரமும் வன்முறையும் பொருந்தாது என்பதை இன்று வரை நிறுவி வருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் பண்புகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார்கள். 

இது போன்ற வன்முறைகளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கண்டிப்பதில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். வன்முறை யார் மீது நிகழ்த்தப்பெற்றாலும் அதை மனித உரிமை அமைப்புகள் ஒரு போதும் கண்டிக்கத் தவறியதில்லை. வன்முறையை யார் பயன்படுத்தினாலும் அது வன்முறை தான், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபெற வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. 

- ஹென்றி திபேன், நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

Pin It