மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேணுவதில்தான் மக்களாட்சியின் மாண்பு அடங்கியுள்ளது. அடிப்படை உரிமைகளில் தலையாயது கருத்துரிமை. அஃதின்றி வெறும் தேர்தலும் தேர்தல்வழி பெரும்பான்மை ஆட்சி அமைவதுமே மக்களாட்சி ஆகிவிடாது.

கருத்துகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, வெளிப்படுத்தும் உரிமை, பரப்பும் உரிமை. அவற்றிற்காய் ஒன்றிணையும் உரிமை, போராடும் உரிமை முதலானவற்றை உள்ளடக்கியதே கருத்துரிமை ஆகும். ஒவ்வொருவரும் தான் நினைக்கின்ற கருத்துகளை அச்சமின்றி எடுத்துரைக்கும் வாய்ப்பு இருக்கவேண்டும். இதைப் பேசினால் தீங்கு நேருமோ என்ற நிலை இருப்பின் அங்கு சனநாயகம் இல்லை என்றே பொருள்.

மறுப்பதற்கான உரிமையையே (Rights to Dissent) கருத்துரிமையின் சாரம் என்பர். பெரும்பான்மையாய் உள்ளதை, பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, நிலவுகின்ற உண்மையை, நிறுவப்பட்டுள்ள கோட்பாடுகளை மறுக்கின்ற உரிமை வேண்டும். இருப்பதை ஏற்றுக் கொள்ள சனநாயகம் வேண்டியதில்லை ; இருப்பதை மறுப்பதற்கே சனநாயகம் வேண்டும். இதைப் பேசலாம், இதைப் பேசக்கூடாது என வரம்பிடுவது கருத்துரிமை ஆகாது.

தமிழ்நாட்டில் ஒரு கேலிக்கூத்தான சனநாயகம் நிலவுகிறது. இதைப் பேசலாம், இதைப் பேசக்கூடாது என்ற நிலை மட்டுமின்றி, இன்னார் பேசலாம். இன்னார் பேசக் கூடாது என்ற இழிநிலையும் காணப்படுகிறது. சிலருக்கு எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற முற்றுரிமையும் (absolute right) வாரி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்குச் செல்வோருக்கு இந்த முற்றுரிமை குறித்து நன்கு தெரியும். நாக்கில் நரம்பில்லாத பேச்சு என்பார்களே, அத்தகைய பேச்சுகளை இக்கூட்டங்களில் கேட்கலாம். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்ற புகழ்பெற்ற தடாலடிப் பேச்சாளர்கள் மட்டுமின்றி, பெரும் அரசியல் தலைவர்கள் சிலரும்கூட சிலநேரம் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவது உண்டு. நீலப்படங்களைப் பார்ப்பதற்குச் சேரும் கூட்டத்தைப் போல், இப்பேச்சுகளைக் கேட்பதற்கும் கூட்டம் உண்டு.

ஆனால் மாற்று அரசியலை முன் வைப்போருக்குத்தான் அனைத்து இடையூறுகளும், நெருக்கடிகளும், தடைகளும்,  தளைப்படுத்தல்களும். தமிழ்நாட்டின் இவ்வரசியல் நிலையைப் ‘பொறுக்கு நெருக்கடி நிலை’’ என்பார் தோழர் தியாகு (பார்க்க: தமிழ்த்தேசம் பிப்ரவரி 2008 ஆசிரியவுரை) இப்பொறுக்கு நெருக்கடி நிலையைப் பட்டுணரும் பெரும்பேறு இக்கட்டுரையாளனுக்கும், அனைத்து மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவ நண்பர் இராம்குமாருக்கும் கிடைக்கப்பெற்றது. தோழர்கள் பெ. மணியரசன், கொளத்தூர் மணி, வைகோ, நாஞ்சில் சம்பத், சீமான், அமீர் எனப் ‘பேசியதற்காகவே’’ தளைப்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாங்களும் இணைந்து கொண்டோம். அவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் நன்கு அறிந்த தலைவர்கள்; பேச்சாளர்கள். பெரும்பாலும் அறிந்திராத,  சிறுவட்டத்திற்குள் இயங்கி வந்த எங்களையும் அறியப்பட்ட அவர்களோடு இணைத்ததைப் பெரும்பேறாகவே கருகிறோம்.

கோவையில் கடந்த சூன் 21இல் நடைபெற்ற ஈழ ஆதரவாளர் விடுதலைக் கோரிக்கை மாநாட்டில் நாங்கள் இருவரும் (வேலிறையன், இராம்குமார்) கலந்து கொண்டு பேசியதற்காகவே கைதானோம். அப்படி நாங்கள் என்ன பேசி விட்டோம்?

என்னுடைய பேச்சின் சாரம் இதுதான்: இந்தியா பகை நாடு. இந்தப் பகை என்பது வரலாற்றுப் பகை, கருணாநிதியும், அவரது துதிபாடிகளும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் இரண்டகம் செய்துள்ளனர். பகையை வெல்ல துரோகிகளை அடையாளங்காண வேண்டும். நாடற்ற தமிழருக்கு நாடு வேண்டும். இந்தியா எப்படிப் பகை என்பதை விளக்கியும், கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பதை எடுத்துரைத்தும் இருபது நிமையங்களுக்கும் குறைவாகவே பேசினேன். காவல்துறையின் முதல் அறிவிப்பு அறிக்கையில்(ய்ணூயூ) என்னுடைய பேச்சை ஒரு சில விடுபாடுகளோடு முழுமையாக இணைத்துள்ளார்கள்.

இராம்குமார் தமது பேச்சில் தமிழ்நாட்டு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி பற்றியும், அவர்களைச் சரியான திசைவழி நடத்தத் தேவையான தலைமை குறித்தும் விரிவாகப் பேசினார். இன்று ஈழத் தமிழர்களுக்கு நேரிட்டுள்ள பேரழிவைப் பற்றிப் பேசும் பொழுது, அவ்வழிவிற்குக் காரணமான இராசபட்சே, சோனியா, கருணாநிதி ஆகியோரைச் சாடினார். பேச்சினூடே உணர்ச்சியின் விளிம்பிற்குச் சென்று தம்மிடம் துமுக்கி இருந்து, அதில் ஒரே ஒரு குண்டு மட்டும் இருந்து, சுட நேர்ந்தால், கருணாநிதியைத்தான் சுட நேரிடும் என்றார்.

மேற்கண்ட பேச்சுகளுக்குத்தான் என்னையும், அவரையும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும், தமிழக முதல்வரை அவதூறு செய்ததாகவும் இந்தியத் தண்டனைச் சட்டம் 153(ய)505 (1) (1ணு) என்பனவற்றின் கீழ் தளைப்படுத்தினர். ஆக, ‘இந்தியா’ என்ற கட்டமைக்கப்பட்ட, நிறுவப்பட்ட அரசியல் வடிவத்தைத் திறனாய்வு செய்ய உரிமை இல்லை. மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.  ஆளுகின்ற ஆட்சியாளரைத் திறனாய்வுக்குட்படுத்தவும் உரிமை இல்லை.

இராம்குமாரின் ‘ஒரு துமுக்கி ஒரு குண்டுப் பேச்சும்’ உணர்ச்சிக் கொதிநிலையின் வெளிப்பாடே தவிர, அதனால் விளைந்துவிடப் போவது எதுவும் இல்லை. பெரியார் கத்தி வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்; பார்ப்பானையும், பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்றார். புரட்சிப் பாவலரோ “பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை” என்று பாப்புனைந்தார். முன்னொரு நாள் மதுரை ‘டெசோ’ மாநாட்டில் கருணாநிதி பேசினாரே அதைவிடத் ‘தீவிரத்தன்மை’ கொண்டதா இராம்குமாரின் பேச்சு?’

பேச்சின் இடம் பொருள் ஏவல் அறிந்து பொருள் கொள்ள வேண்டுமே தவிர ஒரு சில சொற்களை மட்டும் அப்படியே எடுத்துக்கொண்டு அவற்றிற்குப் பதவுரை விளக்கவுரை வழங்கக்கூடாது. ஆனால் இங்குதான் ஆள்சார்ந்து, அவர் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து பொருள் விளக்கம் தரப்படுகிறதே! உரிமையும், உரிமை மறுத்தலும் நடைபெறுகிறதே! பொறுக்கியயடுத்த ஒரு சிலருக்கே சனநாயகம். இதைப் ‘பொறுக்கு சனநாயகம்’ என்றழைக்கலாமா?

எங்களைத் தளைசெய்த முறையிலும் எந்தச் சட்டநடைமுறை யும் பின்பற்றப்படவில்லை. மாந்த உரிமைகள்(ஜுற்துழிஐ rஷ்ஆஜுமிவி) எனப் பேசுவார்களே, அவை எதுவும் பின்பற்றப்படவில்லை. மாநாடு நடைபெற்றது சூன் 21இல்; நாங்கள் சிறைப்பிடிக்கப்பட்டதோ சூலை 8இல்.  காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற நிகழ்வு நாள்: 21.06.09 நேரம்-11.15 முதல் 15.15,காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்த நாள் 7.7.09; நேரம் 21.15. காலத்தாழ்விற்கான காரணம் ‘அரசு நடைமுறை’’ என்கிறது அறிக்கை. அரசு நடைமுறை என்றால் என்னவென்று அரசும் காவல்துறையும்தான் விளக்க வேண்டும்.

எங்கள் இருவரையும் சிறைப்படுத்தியது ஏறத்தாழ ஒரே பாணியில் அமைந்திருந்தது. 08.07.09 விடியற்காலை 5.00 மணியளவில் பெருந்துறையில் இராம்குமாரின் வீட்டுக்கதவும், ஏறத்தாழ அதே நேரத்தில் திருப்பூர் ஆர்.எம்.நகரில் என் இல்லக் கதவும் தட்டப்பட்டன. படுக்கையில் வைத்தே, தூக்கத்திலிருந்து தட்டியயழுப்பியே இருவரும் அழைத்துச் செல்லப்பட்டோம். ‘அய்யோ அம்மா’’ என்று கத்தாமல்.... அழைத்ததும் மறுப்பின்றி சென்றோம்.

என்னைப் பொறுத்த வரை காவல்துறை என்னைச் சிறைப்பிடிக்க வந்ததாகக் கருதவில்லை. உசாவலுக்காக வந்துள்ளதாக நினைத்துக் கொண்டேன். என்னை அழைக்க வந்த காவலரும் அவ்வாறு கூறித்தான் அழைத்துச் சென்றார். காவல் துறையின் கியூ பிரிவைச் சேர்ந்த ஒருவர் அடிக்கடி என்னிடம் செல்பேசி வழியாக உசாவல் மேற்கொள்வார். அப்பொழுதெல்லாம் என்னை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்பார். தளை நடவடிக்கைக்குச் சில நாள் முன்னரும் மேற்கண்ட அழைப்பு வந்திருந்தது. அதனால் தான் உசாவல் என்பதை நம்பி விட்டேன். அணிந்திருந்த அதே மூட்டியுடன்(லுங்கி) கையில் கிடைத்த ‘டீ’’ சட்டை (வீ.றீஜுஷ்rமி) ஒன்றை எடுத்து மேலில் போட்டுக் கொண்டு அப்படியே கிளம்பி விட்டேன். வெளியே வண்டியில் காத்திருந்த ஆய்வாளரும் ‘பள்ளியில் சென்று பேசலாம், ஏறுங்கள்’”என்றுதான் சொன்னார். வண்டி திசைமாறிச் செல்லத் தொடங்கிய பொழுதுதான்,அய்யத்தில் உசாவலா, தளைப்படுத்தலா என்று வினவிய பொழுது ஆய்வாளர் பின்னதை உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு எங்களை ஏமாற்றித் திருட்டுத்தனமாக தளைப்படுத்தி விட்டு, காவல் அடைப்பு அறிக்கையில் வேறு பொய்க்கதை புனைந்துள்ளார் கள். எங்கள் இருவரையும் தளைப்படுத்த போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் பி. திருமேனி தலைமையில் ஒரு தனிப்படை யும்,சிங்காநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் வெற்றிச் செல்வன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டதாம். சிங்கா நல்லூர்க் காவல் நிலைய ஆய்வாளர் திருப்பூரில் என்னைத் தேடி வருகையில் நான் சின்னக்கரை அருகிலுள்ள விநாயகர் கோவில் முன்பு 8.7.09ம் தேதி 5.30 மணிக்கு நின்று கொண்டிருந்த பொழுது..... “கைதுக்கான காரணம் கூறிக்” கைது செய்தாராம். இந்த விநாயகர் கோயில் இருப்பதை என்னிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டார்கள். ஆனால் கேட்டறிந்ததைச் சரியாகப் பதிவு செய்யவும் தெரியவில்லை. சின்னக்கரை என்பது பல்லடம்-திருப்பூர் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. அங்கு மசூதிதான் உள்ளது. விநாயகர் கோயில் இல்லை. விநாயகர் கோயில் எங்கள் வீடு அமைந்துள்ள ஆர்.எம்.நகரில்தான் உள்ளது.

அவ்வாறே மாணவர் இராம்குமாரை போத்தனூர் காவல்நிலைய ஆய்வாளர் “8.7.09ஆம் தேதி 5.15 மணிக்கு பெருந்துறை பவானி ரோடு காஞ்சி கோயில் சாலை சந்திப்பிலுள்ள அண்ணா சிலை முன்பு வைத்து “கைது செய்வதற்கான காரணம் கூறிக்” கைது செய்தாராம். கைதிற்கான காரணம் எதுவும் கூறாமலேயே விடியற்காலை வீட்டின் கதவைத் தட்டி அழைத்துச் சென்று விட்டு இப்படிக் கதை விடுகிறார்கள், தமிழ்நாட்டு ஸ்காட்லாந்து யார்டுகள்.

இங்கே காவல்துறையின் இன்னொரு கழிசடைப் போக்கையும் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மைக் கைது செய்ய வேண்டுமென்றால், தலைமறைவாய்த் திரிந்து கொண்டுள்ள திருடனையோ, கொலைகாரனையோ தேடி வருவது போல் இரவு நேரத்தில் வரவேண்டிய தேவையில்லை. நாம் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ளப் போவதில்லை. என்னைத் தேடி வந்த காவல்துறை இன்னொரு இழிசெயலையும் செய்துள்ளது. என் பொறுப்பில் இயங்குகின்ற தாய்த் தமிழ் பள்ளியை ஒட்டி அமைந்திருந்த அனைத்து வீடுகளின் கதவுகளையும் விடியற்காலை 4 மணி தொடங்கி தட்டியயழுப்பி உசாவியுள்ளார்கள். இவ்வாறு செய்ய வேண்டியதின் நோக்கம் என்ன? நம்மைச் சுற்றியுள்ள மக்களிடையும், தெரிந்தவர்களிடையும் நம்மைப் பற்றி ஒருவகை அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்துவதைத் தவிர வேறென்ன? ஆனால் காவல்துறையின் இந்நோக்கம் என்றும் நிறைவேறப் போவதில்லை. மக்கள் நம்மைப் புரிந்துதான் வைத்துள்ளார்கள். நம்மிடம் அன்பும் மதிப்பும் தான் கொண்டுள்ளார்கள். பிணையில் வெளிவந்த பொழுது சுற்றியுள்ள மக்கள் மேற்கொண்ட நலவினவலில் இதை நன்கு உணர முடிந்தது.

தனிப்பட்ட முறையில் காவல்துறையைச் சார்ந்த அனைவருமே கைதின் பொழுதும், உசாவலின் போதும்,பின்னரும் முறையாகவே நடந்து கொண்டார்கள். பிணையின் பொழுது உதவியும் செய்தார்கள். தனிப்பட்ட எவரையும் குறை சொல்வதற்கில்லை. ஆனால் ஒட்டுமொத்தக் காவல் துறை அதன் செயல்பாட்டில் மெச்சத் தக்கதாய் இல்லை. சட்டத்தைப் பேண வேண்டிய துறை சட்டப் புறம்பாகவே செயல்படுகிறது. காவல்நிலையத்தில் ‘கியூ’’ பிரிவு, நுண் பிரிவு (Intelligence Service) என ஏறத்தாழ நான்கைந்து பிரிவினர்  எங்களிடம் மேற்கொண்ட உசாவல்கள், எடுத்த நிழற்படங்கள், பதிவு செய்த ரேகை மற்றும் மச்சங்கள் ஆகிய எதுவும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பனவாய் இல்லை.

பெற்றோர்களின் பெயர் முகவரிகளில் தொடங்கி உடன்பிறந்தோர், உற்றார் உறவினர் நண்பர் ஈறாக அனைவரின் பெயர் முகவரிகளையும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் மாறி மாறிக் கேட்டுப் பதிவு செய்கிறார்கள். அவ்வாறே மாறிமாறி நிழற்படம் எடுக்கிறார்கள். கைவிரல் ரேகைகளையும் ஒவ்வொரு விரலாக மாறி மாறி நான்கைந்து முறை பதிவு செய்கிறார்கள். உண்மையில் இதுவே ஒரு பெருந் தண்டனையாக அமைகிறது குற்றவாளி என மெய்ப்பிக்கும் முன்னரே காவல்துறை வழங்கும் தண்டனை! இவ்வாறு செய்வதற்குச் சட்டத்தில் இடம் உள்ளதா எனக் கேட்டால் காவல்துறையிடம் எந்த விளக்கமும் இல்லை.

ஆந்திரப் பிரதேசக் குடியியல் உரிமைக் குழு (APCLC) வெளியிட்டுள்ள ‘மாந்த உரிமைகள் தொகுப்பு’(Digest of Human Rights) என்ற வெளியீட்டில் இது குறித்துச் சிறிய செய்தி உள்ளது. நிழற்படங்கள் எடுப்பதற்கும் அடையாளப் பதிவுகளுக்கும் குற்ற நடுவரிடம் (Magistrate) கட்டாயமாக முன்னிசைவு பெறவேண்டும் என்று கர்னாடகச் சிறைச் சட்டத்தில் (Identifications of Prisoners Act, 1920 as applicable to Karnataka) குறிப்பிடப்பட்டுள்ளது. நீதி மன்றத்தில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது (பார்க்க மேற்கண்ட புத்தகம் பக்106). தமிழ்நாட்டு மாந்த உரிமை ஆர்வலர்கள் இதுகுறித்துப் பேசுகிறார்களா எனத் தெரியவில்லை. நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். நாகரிகமற்ற இம்முறைகளை மாற்றப் போராட வேண்டும்.

அதேபோல்தான் சிறையினுள் அனுமதிக்கு முன் மேற்கொள்ளும் சோதனை முறைகள், மச்ச அடையாளங்களுக்காய்ச் சட்டை, உள்யளாட்டிகளை அகற்றக் கட்டாயப் படுத்துவது. அம்மணமாய் நிற்க வேண்டும் எனக் கோருவது போன்றவை. சிறையை விட்டு வெளியே வரும்பொழுது இந்நடைமுறைகள் மீண்டும் ஒருமுறை அரங்கேறும். நாங்கள் இவற்றை எதிர்த்து நின்று முறியடித்த போதிலும். மற்ற சிறையாளர்கள் இந்நடைமுறைகளுக்கு அடிபணிந்தே போகிறார்கள். நுட்பமான நுண்ணோக்குக் கருவிகளுள்ள இன்றைய அறிவியல் தொழில்நுட்பக் காலத்தில் இவைபோன்ற காட்டு விலங்காண்டி நடைமுறைகள் உடனடியாக ஒழித்துக் கட்டப்படவேண்டியவை ஆகும். இன்றும் காவல்நிலையத்திலும், சிறைச்சாலையிலும் மனித மாண்பை இழிவுபடுத்தும் மேற்கண்ட நடைமுறைகள் நடைமுறையிலிருப்பதற்கான காரணம் அதிகாரத்தில் உள்ளோரைக் கண்டு அச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, வேறொன்றிற்காகவும் அல்ல. அச்சம் அகன்றால் அதிகார பீடங்கள் தகர்ந்து நொறுங்கி விடுமே!

பதினான்கு நாள்கள் மட்டுமே சிறையிலிருந்த போதிலும், அவை வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நாள்களாக அமைந்தன. மகிழ்ச்சி உற்சாகம் தவிர வேறொன்றுமே அறியா நாள்கள் அவை. சிறைச்சாலையை ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை’” என அழைத்தார் புரட்சிப் பாவலர். உண்மையிலேயே கோவைச் சிறை பாரதிதாசன் வண்ணனைக்கேற்பவே அமைந்திருக்கிறது. காலை, மாலை என்றில்லாமல் எப்பொழுதும் குயிலின் இன்னிசை காதுகளை நிறைத்துக் கொண்டேயிருக்கும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளிருந்த பெரியார் தி.க. தோழர் ஒருவர் அக்குயிலுக்குக் குயில்போன்றே மறுகுரல் கொடுப்பார். அக்குயிலும் உடன் எதிர்க்குரல் கொடுக்கும். இன்னிசை நிறைந்த நாள்கள். பெரும்பாலும் என்னைக் காலையில் துயில் எழுப்புவது இக்குயிலோசைதான். மைனா ஒன்று எப்பொழுதும் தோழர்களின் தோள்களில் மாறி மாறி சவாரி செய்த வண்ணமே இருக்கும். ம.தி.மு.கவைச் சேர்ந்த நண்பர் பெருமாள் அம்மைனாவிற்கு இரைதேடி அதன் பசி போக்குதையே தம் தலையாய கடமையாகக் கொண்டு செயல்படுவார். தோழர் பெ. மணியரசனின் கவிதைப் பொருளான மைனா வேறொரு மைனாவாம். அம்மைனாவைப் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அவரும், கொளத்தூர் மணியும் சிறைவாயிலை ஒட்டிய பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொட்டடி வ.உ.சி. கொட்டடிக்கு அடுத்தது. எங்களை அப்பகுதிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். சிறைக்குள் பேசும் கிளி ஒன்று இருப்பதாகவும் சொன்னார்கள். அக்கிளி மாலை மணி ஆறானால் கொட்டடிக்குள் போகும்படி ஆணையிடுமாம். அக்கிளியையும் பார்க்க இயலவில்லை.

நாங்கள் தங்கியிருந்த ஆறாம் தொகுதி தென்னை மரங்கள் நிறைந்தது. பெரிய வேப்பமரம் ஒன்றும் இருந்தது. மதில் சுவரைத் தாண்டிச் செல்லும் அதன் கிளைகள் வெட்டப்பட்டிருந்தன. குளுமை நிறைந்த காற்று எப்பொழுதும் வீசிய வண்ணம் இருக்கும் தொட்டியில் தண்ணென்ற நீர் எப்பொழுதும் நிறைந்திருக்கும்.

நாங்கள் சென்ற பொழுது படை வண்டி மறியிலில் சிறைப்பட்டிருந்த பெ.தி.க., ம.தி.மு.க தோழர்கள், கொடி எரிப்புத் தோழர்களான பாரதி (த.தே.வி.இ), தமிழரசன் (த.தே.பொ.க) எனத் தொகுதி ஆறு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. படை வண்டி மறியலில் பெ.தி.க., ம.தி.மு.க அல்லாமல் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் வள்ளுவராசனும், சிறு முதலாளிகளின் தொழில் அமைப்பைச் சேர்ந்த கோப்மா கருப்புசாமி போன்றோரும் இருந்தனர். பெ.தி.க. பொதுச் செயலாளர் இராமகிருட்டினணும் உடன் இருந்தார். சிறையினுள் இருந்த ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல், விவாதம் எனக் கழிந்தன. மாலையில் விளையாட்டுகளும் உண்டு. வெளியில் பார்த்திராத உற்சாகம் தரும் புதுவகையான விளையாட்டுகளையும் தோழர்கள் விளையாடுவதைக் கண்டு வியப்புற்று மகிழ்ந்தேன். இவ்விளையாட்டுகளில் விழுப்புண் பெற்றோரும் உண்டு. ஆனால் அதற்காக வருந்தியவர் எவரும் இலர்.

சிறையினுள் ஒவ்வொருவரும் அன்பாகவும், ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் இருந்தனர். அவ்வப்பொழுது சிற்சில முரண்பாடுகள் எழுவதுண்டு. ஆனால் அவை எழுந்த விரைவிலேயே மறைந்து விடும். தனிப்பட்ட முறையில் சிறையுணவு   எனக்கு    அவ்வளவாக      ஒவ்வாமலே இருந்தது. இந்த இடர்ப்பாட்டைக் கடக்கத் தோழர்கள் எனக்குப் பெரிதும் உதவினர். சிறைச் சிற்றுண்டியகத்திலிருந்து (கேண்டீன்) உணவு கிடைக்க ஏற்பாடு செய்தனர். மருத்துவரிடமும் அழைத்துச் சென்று பால் கிடைக்க உதவி செய்தனர். எனக்கு மட்டுமன்று, உதவி தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் உதவி செய்தனர். கூட்டு வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதை வாழ்ந்துணர முடிந்தது.

எங்களுடைய சிறைக்காலம்தான் எல்லோருடையதைக் காட்டிலும் குறுகியது என நினைக்கிறேன். சூலை 8 உள்ளே சென்று சூலை 21 பிணையில் வெளிவந்தோம். படை வண்டி மறியலில் சென்றவர்கள் பலர் 50ஆம் நாள், 75ஆம் நாள் என உள்ளே விழாக் கொண்டாடினர். இந்திய சிங்களக் கொடி எரிப்பு வழக்கில் சிறைபட்டுள்ள பாரதியும் தமிழரசனும் நூறு நாள்களைத் தாண்டியும் உறுதி குலையாமல் உள்ளனர். எந்தக் கொடியை எரித்தார்களோ அந்தக் கொடியை வீட்டின் முன் ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்த இருவரது துணிவும் கொள்கைப் பிடிப்பும் பாராட்டுக்குரியவை. அனைவராலும் பின்பற்றுதற்குரியவை. அவர்களது உறுதி, உறுதியாய் வெற்றியீட்டும். இந்திய -சிங்களக் கொடி எரிப்புப் போராட்டம் தமிழ்த் தேச விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பெறும்.

சிறைக்குள் அடைபட்டிருந்த எவரும் சிறைவாழ்விற்கு நொந்தவர்களாய்த் தோன்றவில்லை. சிறை அச்சமும் கொண்டிருந்ததாய்ப்படவில்லை. சிலருக்கு சில நெருக்கடிகள் காரணமாக ( வேலையிழப்பு, பொருள் நெருக்கடி, குடும்ப நெருக்குதல்) மன உளைச்சல்கள் தோன்றியிருக்கலாம். சில பின்வாங்கலும் நேர்ந்திருக்கலாம். அதற்காக அவர்களைக் கோழையர் எனச் சாட வேண்டியதில்லை. நாம் அவர்களுக்குத் துணை நின்று அவர்தம் துயர்துடைத்தால், நாளைய போராட்டத்தில் உறுதியாய்த் துணையிருப்பர்; முன் நிற்பர்.

சிறைப்பட்டிருந்தவர்களில் என்னையும், வள்ளுவராசனையும் தவிர பெரும்பாலோர் இளைஞர்களே! தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க உறுதியான இளைஞர் பட்டாளம் ஒன்று உருவாகி வருவதையே இது காட்டுகிறது. அடக்குமுறைகளும் சிறைப்படுத்தல்களும் இவர்களை அச்சுறுத்தி விடப் போவதில்லை. “சூழ்ச்சிதனை, வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும் காழ்ச்சிந்தை மறச் செயல்கள் மிகவும்கொண்ட இவ்விளைஞர்களால் நாளை தமிழருக்கென நாடொன்று அமைவது உறுதி!உறுதி!.

Pin It