திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் டார்வின் தாசன் இணையர் அமுதா ராணி படத்திறப்பு நிகழ்வு திருச்சி தங்கம் நகர், பொன்மலைப்பட்டியில் உள்ள டார்வின்தாசன் புதிய இல்லத் தில் ஜூலை 25 அன்று பகல் 11 மணி யளவில் நிகழ்ந்தது. அவரது படத்தை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார்.
அவரது மறைவைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் முடிவெய்திய அமுதாராணியின் தாயார் சுப்பு லட்சுமி அம்மையார் படமும் திறக்கப்பட்டது. நிகழ்வில் சென்னை - திருச்சி மாவட்ட தி.வி.க. தோழர்களும், த.பெ.தி.க. தோழர்களும் தோழமை அமைப்பினரும் பங்கேற்றனர். தொடக்க உரையாக டார்வின்தாசன் தனது இணையர் தனது கொள்கையிலும் வாழ்க்கையிலும் இணைந்து பணியாற்றியதை உணர்வுகளுடன் நினைவு கூர்ந்தார்.
கழக நிகழ்வுகளுக்கு தனது இணையருடன் பங்கேற்பதை வழக்கமாக்கிக் கொண்டவர் டார்வின்தாசன். கழகத் தோழர்களுடன் கொள்கை நட்பு உறவுகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் அமுதா ராணி. தவறான முடிவுகள் எடுக்க நேர்ந்தால் அதை சுட்டிக்காட்டி திருத்துபவராகவும் கழக நிகழ்வுகளில் தமது அங்குசம் பதிப்பக வெளியீடுகளை மக்களிடம் கொண்டு சென்று விற்பனை செய்வதிலும் தோழர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பதிலும் அமுதா ராணி ஆர்வம் காட்டியதையும் டார்வின் தாசன் நினைவு கூர்ந்தார். தோழர்கள் பலரும் அவரது குடும்பத்துடன் நெருக்கமாகப் பழகிய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
தமிழ்நாடு முழுதும் கருஞ்சட்டை நம்மை ஒரே குடும்பமாக இணைக்கிறது. பெரியாரிய கொள்கை தோழர்களை நெருக்கமாகவும் உணர்வாளர்களாகவும் மாற்றி விடுவதை தோழர்கள் நெகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டினர்.
தமிழ்த் தேசிய அமைப்பிலிருந்து திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு வந்த டார்வின்தாசன், அடக்கம் அமைதி இனிமையாகப் பழகுதல் தோழர்களுடன் இணக்கமாக செயல்படும் பண்புகளைக் கொண்டவர் என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார். கொள்கையிலும் இணையர்களாக வாழ்ந்தவர்களின் பிரிவு மரணம் என்பது மிகவும் தாங்க முடியாத கவலையையும் மன அழுத்தத்தையும் உருவாக்கி விடுகிறது என்றாலும் ஒரு பெரியாரிஸ்ட் இவற்றையும் கடந்து செல்லத்தான் வேண்டும் என்றும் பெரியாரே முன்னுதாரணமாக இதில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். நாகம்மையார் மரணத்தின் போது பெரியார் விடுத்த இரங்கல் அறிக்கையில் குடும்பச் சுமையிலிருந்து தனக்கு விடுதலை தந்து விட்டது என்று பெரியார் எழுதினார்.
இலண்டனில் இந்திய அமைச்சருக்கு ஆலோசகர் பதவி ஏற்கச் சென்ற சர். ஏ.டி. பன்னீர் செல்வம், விமான விபத்தில் மரணமடைந்தபோது, ‘திராவிட நாடு’ கிடைப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பை அவர் வழியாக முயற்சித்திருக்க முடியும் என்ற நிலையில் அவரது இழப்பு திராவிட நாடு கொள்கைக்கே பின்னடைவைத் தந்து விட்டதே என்று பெரியார் கண்ணீர் அறிக்கை வெளியிட்டார்.
“பன்னீர் செல்வமே காலம் சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா? தமிழர் சாந்தி பெறுவாராக” எனும் தலைப்பில் பெரியார் தனது அறிக்கையில் (குடிஅரசு) இவ்வாறு எழுதினார்.
“என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்து விட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை. பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது” என்று எழுதினார்.
கொள்கை வழிப்பட்ட மரணத்தையும் உறவு வழிப்பட்ட மரணத்தையும் பெரியார் எப்படி அணுகினார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
‘கொரானா’ பெருந்தொற்று, ஒரு பாடத்தை மக்களிடம் உணர்த்தி யிருக்கிறது. மதம், கடவுள், சடங்குகளைவிட நோய் தடுப்புக்கான மருத்துவ விஞ்ஞானமே முதன்மைத் தேவையாகிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. திருமணம், மரண இறுதிச் சடங்குகளில் தலைகீழ் மாற்றங்களை கொரானா காலம் உருவாக்கிவிட்டது.
கோயில், மசூதி, சர்ச் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. மக்கள் மூடுவது சரிதான் என்று ஒப்புக் கொண்டார்கள்; எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் கொரானாவுக்கு எப்போது மருந்து வரும்? எந்த நாடாவது தடுப்பூசி கண்டுபிடிக்காதா? சீக்கிரம் தடுப்பூசி வராதா என்பதே மக்கள் கவலையாகவே இருந்ததே தவிர, வழிபாடு நடத்தவில்லையே என்று கவலைப்படவில்லை. வழிபாடு நடத்தினால் கொரானா வராமல் தடுத்துக் கொள்ள முடியும் என்று நம்பவும் தயாராக இல்லை. இது கொரானா கற்பித்து வரும் பகுத்றிவுப் பாடம் என்றார் விடுதலை இராசேந்திரன்.
நிகழ்விற்கு திருச்சி மாவட்ட அமைப்பாளர் புதியவன் தலைமை வகித்தார்.
சீனி விடுதலையரசு (கொள்கை பரப்புச் செயலாளர் தபெதிக), மீ.ஆரோக்கியசாமி (திவிக திருச்சி மாவட்டத் தலைவர்), இரா உமாபதி (திவிக தென் சென்னை மாவட்ட செயலாளர்), செல்வராசு (திவிக ஈரோடு மாவட்டத் தலைவர்), தமிழ்க்கனல் (தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி), தமிழ்ப்பித்தன் (தபெதிக தலைமைக்குழு உறுப்பினர்), தமிழகன் (நதிகள் பாதுகாப்புக் கூட்டியக்கம்), அன்பு தனசேகர் (திவிக தலைமைக்குழு உறுப்பினர்), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர் திவிக), முனைவர் ஜெய ஜீவகனி (தியாகராயர் பொறியியல் கல்லூரி மதுரை), அய்யனார், திவிக தலைமைக் குழு உறுப்பினர் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
இறுதியாக திருச்சி மாவட்ட செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.