மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சமீபத்தில் மிகப் பெரிய பிராமண சம்மேளனத்தை நடத்தி முடித்திருக்கிறது. அயோத்தியாவில் வேத மந்திரங்கள் முழங்க துவங்கிய இந்த மாநாடு, “ஜெய் பீம், ஜெய் பாரத், ஜெய் ஸ்ரீராம், ஜெய் பரசுராம்” முழக்கங்களோடு முடிவடைந்திருக்கிறது.
இது தொடர்பாக பிபிசி இந்தி இணையத்தில் செய்தியாளர் சமீராத்மஜ் மிஸ்ரா எழுதியுள்ள கட்டுரை.
துவக்கத்தில் ‘பிராமண’ சம்மேளனம் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், ஜாதியின் பெயரால் யாரும் கூட்டங்களை நடத்தக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், இந்த மாநாட்டின் பெயர் ‘ஞானம் பெற்ற வகுப்பினரின் சித்தனை கருத்தரங்கு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ராதான் இந்தக் கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர். இந்தக் கருத்தரங்கின் அடுத்த கட்டம் மதுராவிலும் மூன்றாவது கட்டம் காசியிலும் நான்காவது கட்டம் சித்திர கூட்டிலும் நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு இரண்டு மணிநேரம் தாமதமாக வந்த சதீஷ் சந்திர மிஸ்ரா, அங்கு வருவதற்கு முன்பாக ராம்லல்லாவுக்கும் ஹனுமான்கடிக்கும் சென்றுவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டார். கூட்டத்தில் பேசிய சதீஷ் சந்திர மிஸ்ரா, பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
“இராமர் கோவிலுக்காக கடந்த 30 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட பணத்திற்கு என்ன கணக்கு? அயோத்தியின் பெயரால் இலட்சம் இலட்சமாக, கோடி கோடியாக வசூலித்தனர். இப்போது மீண்டும் பணம் கேட்கின்றனர். ஒரு வருடமாகி விட்டது. இன்னும் அஸ்திவாரம்கூட போடப்படவில்லை. கோவிலைக் கட்டுவார்களா இல்லையா என்பதே கேள்வியாக இருக்கிறது” என்றார் அவர்.
அயோத்தி - லக்னௌ நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஒரு ஓய்வு உல்லாச விடுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் 50 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொன்னாலும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கே குவிந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பார்ப்பனரான சர்வேஷ் குமார் பாண்டே, நான்காண்டுகளாக பிராமணர்கள் மீது இல்லாத அக்கறை திடீரென இப்போது வந்தது ஏன் என்கிறார். அருகில் நின்று கொண்டிருந்த அமர்சந்திர தூபே, “எல்லாவற்றுக்கும் நேரம் வர வேண்டாமா? கான்பூரில் விகாஸ் தூபே கொல்லப்பட்ட போதுகூட பிஎஸ்பி போராட்டம் நடத்தியது. 2022இல் நாம் பாடம் கற்பிப்போம்” என்கிறார்.
‘விகாஸ் துபே’ என்ற வன்முறையாளர் அதிகாரங்களின் துணையோடு உ.பி.யில் ரவுடியாக வலம் வந்தவர். பல படுகொலைகளை செய்து சட்டம் நெருங்க முடியாத நிலையில் இருந்தார். 8 காவல் துறையினரை சுட்டுக் கொன்றதால் ஆதித்ய நாத் ஆட்சியில் ‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்டார். ஆனாலும் ‘பிராமணர்’ ரவுடியாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதே ‘மனு சாஸ்திரம்’ கூறுகிறது. மாயாவதியும் ‘விகாஸ் துபே’ கொல்லப் பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
“பிராமண”ரான சதீஷ் சந்திர மிஸ்ரா, பிஎஸ்பியில் சேர்ந்ததற்கான காரணத்தை இங்கு விளக்கினார். “மாநிலத்தில் 13 சதவீதமாக உள்ள பிராமணர்கள் 23 சதவீதமுள்ள தலித்களுடன் இணைந்தால் வெற்றி நிச்சயம்” என்கிறார்.
மிகப் பெரிய ரவுடியான விகாஸ் துபே என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்தும் கேள்வியெழுப்பினார் சதீஷ் மிஸ்ரா. கடந்த நான்காண்டுகளில் பல பிராமணர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தக் கருத்தரங்கில் பெண்களின் பங்கேற்பு என்பது சுத்தமாக இல்லை. இதற்கு அடுத்தடுத்த ‘ஞானம்பெற்ற வகுப்பினரின் சித்தனை கருத்தரங்கை’ அலகாபாத், பிரதாப்கர், கௌஷாம்பி, சுல்தான்பூர் ஆகிய இடங்களில் பிஎஸ்பி நடத்தவிருக்கிறது. அக்டோபர் 15க்குள் எல்லா நகரங்களிலும் இந்தக் கருத்தரங்கை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது பிஎஸ்பி. இதன் முத்தாய்ப்பாக மிகப் பெரிய மாநாடு லக்னௌவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
2007இல் ஒரு புதிய சமூகப் பொறியியல் வியூகத்தைக் கையில் எடுத்து, பார்ப்பனர்களையும் தங்கள் அணிக்குச் சேர்த்தது. இதன் மூலம் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. ஆனால், அந்தக் கட்டத்தில் அவருடன் இருந்த பார்ப்பன தலைவர்கள் யாரும் இப்போது பிஎஸ்பியில் இல்லை. பா.ஜ.க.வுக்கு ஓடி விட்டனர். 14 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் மீண்டும் அதே சமூகத் திட்டத்தைக் கையில் எடுக்கிறது பிஎஸ்பி.