கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

11 நாட்கள் : 80 பரப்புரைக் கூட்டங்கள்

சாதி - தீண்டாமை ஒழிப்பின் முதல் கட்டமாக பெரியார் திராவிடர் கழகத்தின் பரப்புரைக் குழு ஏப்.14 ஆம் தேதி போடியில் தொடங்கி, 28நாள் பயணம் நடத்தி, புதுவையில் நிறைவடைந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சாதி - தீண்டாமைக்கு எதிரான பரப்புரைப் பயணம், சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்களால், கடந்த ஜூன் 12 ஆம் தேதி கூடுவாஞ்சேரியில் தொடங்கி, 22 ஆம் தேதி காஞ்சியில் நிறைவடைந்தது. 11 நாட்களில்80 பரப்புரை நிகழ்ச்சிகளை தோழர்கள் செய்துள்ளனர். சாதி - தீண்டாமை எனும் சமூகக் கொடுமைக்கு எதிராக கழகம் நடத்திய பரப்புரைக்கு கட்சிகளைக் கடந்து, ஒடுக்கப்பட்ட மக்களும், சாதி எதிர்ப் பாளர்களும் வரவேற்று உற்சாகப்படுத்தினர். கழக சார்பில் வெளியிடப்பட்ட தமிழகத்தில் சாதி-தீண்டாமைகளை புள்ளி விவரங்களோடு விளக்கும் கள ஆய்வு நூல்கள் ஏராளமாக மக்களிடம் பரப்பப் பட்டன. நாடு முழுதும் நிலவும் இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, இழி தொழில்களை செய்யுமாறு கட்டாயப்படுத்துதல் போன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு சாதி ஆதிக்கத்தின் செல்வாக்குக்கு காவல்துறை அடி பணிந்து கிடப்பதை தோழர்கள் எடுத்துக்காட்டினர். பரப்புரைப் பயணத்தின் மூன்றாவது கட்டப் பிரச்சாரம் அடுத்த நாளே ஜூன் 23இல் குடந்தையில் தொடங்கிவிட்டது. ஜூலை 6 ஆம் தேதி வரை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பரப்புரை தொடர்கிறது.
 
வடமாவட்டங்களில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நடத்திய இரண்டாவது கட்டப் பயணம் பற்றிய செய்தித் தொகுப்பு:
 
12.6.2010 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தமிழின உரிமைகளை மீட்டெடுப்போம் பொதுக் கூட்டமும், சாதி-தீண்டாமைக்கு எதிரான பெரியார் கொள்கை பரப்புரை பயணத்தின் 2ஆம் கட்ட துவக்க நிகழ்ச்சியும் செங்கை மாவட்டம் கூடுவாஞ் சேரி (சென்னை) பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது. தோழர் மு. தினேஷ்குமார் தலைமைiயில் ஆ.முருகன், வி.பாபு, ரா.சசி ஆகியோர் முன்னிலை வகிக்க பொன். விஜயகுமார் வரவேற்புரையாற்றினார். பெரியார் சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் மா.சமத்துவமணி, விடுதலை சிறுத்தைக் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தே. தென்னவன், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர். சிற்பி இராசன் ‘மந்திரமல்ல! தந்திரமே!’அறிவியல் விளக்க கலை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அன்பு தனசேகரன், ரா. உமாபதி, தபசி குமரன், ரா. சுகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இறுதியில் டேவிட் பெரியார் நன்றி கூறினார்.
 
சாதி-தீண்டாமைக்கு எதிரான பெரியார் கொள்கை பரப்புரை பயணத்தில் பங்கேற்கும் தோழர்கள் அன்று இரவு தங்குவதற்கு புஞ்சை தமிழரசு, தலைநகர் தமிழ்ச் சங்க கட்டிடத்தில் (வண்டலூர் உயிரியல் பூங்கா) ஏற்பாடு செய்தார். கழகத் தோழர் கல்பாக்கம் முருகேசன் தோழர்களுடன் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
 
இரண்டாம் நாள் பரப்புரைப் பயணம், 13.6.2010 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு கேளம்பாக்கத்தில் துவங்கியது. தொடர்ந்து காலை 10 மணியளவில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் மூடநம்பிக்கை, சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள் மீண்டும் இப்பகுதியில் நடத்த விருப்பம் தெரிவித்தனர். சென்னை தோழர்கள் சபரி, பரணி ஆகியோர் பரப்புரை பயணக் குழுவிற்கு தேநீர் வழங்கினர்.
 
காலை 11.30 மணியளவில் மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகிலும், 12 மணியளவில் மாமல்லபுரம் நகராட்சி அலுவலக கட்டிடம் அருகிலும், பரப்புரை நடந்தது. ம.தி.மு.க. தோழர் பரமசிவம் மற்றும் மூர்த்தி, அப்துல்கலாம், எம்.வி.ஜெகநாதன், இளையராஜா,தேசிங்கு, ரவி, புஷ்பலிங்கம், நித்யா போன்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கழகத்தின் பயணம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று குழுவினரை வாழ்த்தினர்.
 
தொடர்ந்து மதியம் 1 மணியளவில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடந்தது. கட்டண கழிப்பிட ஊழியர் கழகத் தோழர்கள் கழிப்பறைக்கு சென்றபோது இவர்கள் பரப்புரை பயணக் குழுவினர் என்பதை அறிந்து வாங்கிய கட்டணத்தை திருப்பித் தந்து, பயணக் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். திருக்கழுக்குன்றம் குருசாமி மதிய உணவிற்கு ஏற்பாடு செய்தார்.
 
மாலை 4.30 மணியளவில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடைபெற்றது. கருத்துகளை கேட்ட செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர், ரூ.10 நன்கொடை வழங்கி, தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
 
மாலை 5.30 மணியளவில் திண்டிவனம் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 6 மணியளவில் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது. ஆதித் தமிழர் பேரவையை சேர்ந்த துரை செந்தில், அசோக் ஆகியோர் குழுவை வரவேற்று ரூ.200 நன்கொடை வழங்கினர்.
 
செஞ்சி வட்டம் கொங்கரப்பட்டு கிராமத்தில் இரவு 7.30 மணியளவில் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெரியாரின் மூத்த தொண்டர் இராமானுஜர் தலைமை தாங்கினார். பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர்கள் சாக்ரடீசு, அன்பு தனசேகரன்,குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் சிற்பி இராசன்,மந்திரமல்ல! தந்திரமே! அறிவியல் விளக்க கலை நிகழ்ச்சி நடத்தி,பொது மக்களிடையே சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தினார். சுதாகர் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தார். சுபாஷ் நன்றி கூறினார். அன்று இரவு குழுவினர் தோழர்கள் தங்குவதற்கும், இரவு உணவு, மறு நாள் காலை உணவு ஆகியவற்றை தோழர் சுதாகர் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தார்.
 
அனைத்து இடங்களிலும் கனியூர் தமிழ்ச் செல்வன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அன்பு தனசேகரன், குமரன், சாக்ரடீசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருப்பூர் தியாகு, சென்னை நாத்திகன்,சாதி ஒழிப்பு மற்றும் பகுத்தறிவு பாடல்களை பாடினார். பிரச்சாரத்தில் பெண் தோழர்கள் ஜெயந்தி, அம்பிகா, தமிழ்ச் செல்வி,பெரியார் சிந்தனைகளை உள்ளடக்கிய புத்தகங்களை மக்களிடையே விற்பனை செய்தனர். தோழர்கள் லட்சுமணன், சரவணன், சுகுமார்,மனோகர் ஆகியோர் மக்களிடத்தில் நிதி திரட்டினர். அனைத்து இடங்களிலும் தோழர் திலீபன் பறை முழக்கம் செய்தார். இரண்டாம் நாள் மொத்தம் 8 இடங்களில் பரப்புரை நடந்தது குறிப்பிடத்தக்கது.
 
மூன்றாம் நாள் 14.6.2010 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வல்லத்தில் பரப்புரை நடைபெற்றது. அப்பகுதியை தோழர் தேவராஜ்,அறிவுச் சுடர் என்ற கல்வி அமைப்பின் வழியாக பகுத்தறிவு கொள்கைகளை பரப்பி வருகிறார். அந்த அமைப்பைச் சார்ந்த 15தோழர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்பகுதியை சார்ந்த மூத்த பெரியார் தொண்டர் எஸ்.பாலன் அவர்களை சந்தித்தது பயணக் குழுவினர் உரையாடினர்.
 
காலை 10.30 மணியளவில் நாட்டார்மங்கலத்தில் பரப்புரை நடைபெற்றது. 11.15 மணியளவில் பெரியகரத்திலும், மதியம் 12.45மணியளவில் செஞ்சி பேருந்து நிலையம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் வீரமணிதாசன், தங்கராசு, அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர். மதிய உணவை பேராசிரியர் அ. பெரியார் ஏற்பாடு செய்தார்.
 
மாலை 3.40 மணியளவில் நேமூர் கிராமத்தில் பரப்புரை தொடங்கியது. 5 மணியளவில் விழுப்புரம் அரசு பொது மருத்துவமனை அருகிலும், மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம்,விழுப்புரம் மந்தக்கரையிலும் நடைபெற்றது. கூட்டத்திற்கு ம. கணேசன் தலைமை தாங்கினார். வி.ப. இளங்கோவன் முன்னிலை வகிக்க, ச.க. இளையராஜா வரவேற்புரையாற்றினார். கோ. சாக்ரடீசு,பேராசிரியர் த. பழமலய் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் சிற்பி இராசன், ‘மந்திரமல்ல! தந்திரமே!’ நிகழ்ச்சியை நடத்தினார். தோழர் ந. அய்யனார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
 
தோழர்கள் ஜெயந்தி, அம்பிகா, தமிழ்ச்செல்வி ஆகியோர் பெரியார் சிந்தனைகள் அடங்கிய புத்தகங்களை மக்களிடையே விற்பனை செய்தனர். அனைத்து பரப்புரை நிகழ்ச்சியிலும் தோழர்கள் லட்சுமணன், சுகுமார், சசிகுமார், சுதாகர், மனோகர் ஆகியோர் பொது மக்களிடையே நிதி திரட்டினர். இன்றைய பரப்புரை மொத்தம் 7இடங்களில் நடைபெற்றது. வழக்கறிஞர் பி.ஆ.லூசியா இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.