நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசு தனது அடுத்த அதிரடியாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டத்தை அறிவிக்க அணியமாகிக் கொண்டிருக் கிறது.
நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்ற தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்து 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி தலைமை தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினர். மோடி. அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் உடனடியாக இந்தத் திட்டத்தை ஆதரித்து நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதினார். உண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த குருவான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அறிவுரையின்படி நடத்தப்படும் திட்டம்தான் இது.
கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தில்லியில் நடந்த சர்வதேச வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு ஒன்றை தொடங்கி வைத்துப் பேசிய இந்திய தேர்தல் கமிஷனர் நசீம் சைதியிடம் நிருபர்கள் மோடியின் பரிந்துரை பற்றி கேள்விகள் எழுப்பினர். நாடாளு மன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதுடன் ஒப்புக் கொண்டால் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நசீம் சைதி தெரிவித்தார்.
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்து வதற்கு அதிக அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப் படும், அவற்றை வாங்குவதற்கு ரூபாய் ஒன்பதாயிரம் கோடி வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்புப் படைகள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் எடுக்கும் முடிவுகள் எல்லாம் இந்தியாவின் நீண்ட கால நலன்களை கருத்தில் கொண்டவை என்று பிரதமர் அறிவித்தவுடன், இந்தத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் இந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்ட மோடி அரசு, அதனை மீண்டும் மெதுவாக கையில் எடுக்கிறது.
பணநீக்கம் நடவடிக்கையை அறிவித்ததுபோல ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று மோடி அரசு செயல்படக்கூடாது. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் களை ஒரே நேரத்தில் நடத்துவது பற்றிய சாதக பாதகங்களை, மக்கள் உணர்வுகளை நாடு தழுவிய அளவில் முதலில் விவாதிக்க வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என ஏராளமான தேர்தல் கள் நடத்த வேண்டியிருக்கிறது; அவற்றுக்காக நிறைய பொருள் செலவாகிறது; மனித வளம் வீணாகிறது; அரச இயந்திரம் தடைபட்டு போகிறது; இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது; மக்களுக்கு ஏராளமான இன்னல்கள் எழுகின்றன என்றெல் லாம் ஆதரவு வாதங்கள் அடுக்கப்படுகின்றன.
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் ரூ.3,870 கோடி செலவு செய்யப்பட்ட தாகவும், இந்த தேர்தல் செலவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் ‘ஒரே தேர்தல்’ ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்து வதால், வளர்ச்சிப் பணிகள் தடைபடு கின்றன என்று ஒரு புதிய கதையை இப்போது சொல்கிறார் மோடி.
இவை தவிர, இந்த “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்பது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற தேசியவாத சக்திகளுக்கு அரசியல் நலன் பயக்கும். சனநாயகத்தில் உண்மையான, ஆழமான நம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள். எடுத்துக்காட்டாக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் (சர்சங்சலக்) தேர்தல் மூலம் தேர்ந் தெடுக்கப்படுவதில்லை.
இவர்களைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு அதிபர் ஆட்சி முறை வேண்டும், அனைத்து அதிகாரங் களையும் கொண்டவராக அவர் இருக்க வேண்டும். பல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பேச்சுக்களில், எழுத்துகளில், விவாதங்களில் இந்தக் கருத்து இழையோடுவதைக் காணலாம். இந்த எதேச்சாதிகார இலக்கு நோக்கிய முதல் முன்னெடுப்புத்தான் இந்த “ஒரே தேசம், ஒரே தேர்தல்” நடவடிக்கை.
அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது சர்வாதிகாரத் துக்கு வழிகோலும். ஏனென்றால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் அனுமதியை வாங்கிவிட்டால், யாரையும் பொருட்படுத்தாமல், எந்தவிதக் கவலையுமின்றி தங்கள் வலதுசாரிக் கொள்கைகளை, திட்டங்களை, தங்களுக்கு விருப்ப மான, சாதகமான நடவடிக்கைகளை எந்தவித தங்கு தடையுமின்றி நிறை வேற்றிக் கொள்ள முடியும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு மக்களைப் பற்றி, அவர்கள் நிலைப்பாடுகள், எண்ணங்கள், உணர்வுகள் பற்றி யெல்லாம் கடுகளவும் கவலைப்பட வேண்டியதில்லை.
மக்களைப் பொறுத்தவரை, ஒரு முறை வாக்களித்துவிட்டால், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, ஆமோதிப்பை விலக்கிக் கொள்ள அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருந்தாக வேண்டும். அரசியல் ரீதியாக இது ஒரு கையறுநிலையை உருவாக்கி விடும். கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற பீகார் மாநிலத் தேர்தல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அந்தத் தேர்தலில் பீகார் மக்கள் ஒன்றாக நின்று பா.ஜ.க.வை தோற்கடிக்காமல் இருந்திருந்தால், இன்று இந்தியாவின் அரசியல் நிலைமையே வேறாக இருந்திருக்கும். அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் மாநிலத் தேர்தல்கள்தான் உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய சனநாயகத்தைச் செழுமையாக்கு கின்றன, உயிர்ப்பிக்கின்றன.
மேலும், மாநிலத் தேர்தல்கள் மாநிலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடத்தப்படுபவை. இவற்றில் மாநிலக் கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே போல, அண்மைக் காலங்களில் மாநிலக் கட்சிகள் மத்தியிலும் ஓரளவு பிரதிநிதித்துவம் பெற முடிகிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் முழுக்க முழுக்க உள்ளூர் பிரச்சனைகளை முன்னிறுத்தி நடத்தப்படுபவை.
மோடி அரசின் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” திட்டம் இவை அனைத்தையும் அடியோடு காலி செய்துவிடும். அரசியல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ, அல்லது அவ்வப் போதோ நிகழ்வது அல்ல. சுவாசிப்பது போல தொடர்ந்து நடப்பது அது. எனவே சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களும் ஆங்காங்கே அவ்வப் போது நடப்பதுதான் சரியாக இருக்கும்.
இந்த “ஒரே தேசம், ஒரே தேர்தல்” திட்டம் பல நடைமுறை சிக்கல் களையும் உருவாக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரே தேர்தல் என்று முடிவெடுத்தால், ஏதோ காரணங்களால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுகிறோம் என்று வையுங்கள். அப்படியானால் அனைத்து சட்ட மன்றங்களையும் கலைக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது.
தேர்தல் நடந்து முடிந்த ஆறு மாதங்களுக்குள் ஒரு மாநில சட்டமன்றம் கலைக்கப் பட்டால், அடுத்த நான்கரை ஆண்டு களுக்கு அங்கே கவர்னர் ஆட்சிதான் நடக்க வேண்டுமா? இப்படிப்பட்ட பல அரசியல் சாசனச் சிக்கல்கள் எழலாம். அரசியல் குழப்பங்கள் நிகழலாம். இந்தியத் தேர்தலும், சனநாயகமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நிற்கும் இந்தத் தருணத்தில், அவற்றை இன்னும் பலவீனப்படுத்தும் ‘ஒரே தேர்தல்’ திட்டத்தை மோடி அரசு அரங்கேற்றக் கூடாது.
-சுப.உதயகுமாரன்