நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கூர்மையான பேச்சுக்குப் பதில் சொல்வதற்குப் பதில் பொய்களை அள்ளி இரைத்திருக்கிறார் பிரதமர் மோடி.
அவருடைய 10 ஆண்டுகால 'நல்லாட்சியை'ப் பார்த்து மீண்டும் பாஜகவை வெற்றி பெறச் செய்திருக்கிறார்களாம் மக்கள், சொல்கிறார் மோடி.
நாடாளுமன்றத் தொகுதிகள் மொத்தம் 542.
அதில் 2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் பாஜக பெற்ற தொகுதிகள் 303. இப்போது 2024 தேர்தலில் அது பெற்ற தொகுதிகள் 240. அதாவது 63
தொகுதிகளை பாஜகவிடம் இருந்து பிடுங்கி விட்டார்கள் மக்கள். ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் பலம் இல்லாமையால், ஆந்திராவின் தெலுங்கு தேசக் கட்சி, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவுடன் சிறுபான்மை அரசின் பிரதமராக அவர் அமர்ந்து இருக்கிறார் என்பதை மறைத்து, மக்கள் அமோக வாக்களித்தார்கள் என்று கூசாமல் பொய் பேசியிருக்கிறார் மோடி.
மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இன்னும் அங்கே பிரதமர் என்ற முறையில் ஒரு தடவை கூட செல்லாத மோடி, எதிர்க்கட்சிகள். தான் அதைத் தூண்டுவது போலப் பேசியிருக்கிறார். மணிப்பூரில் அமைதி திரும்ப பாஜக ஒன்றிய/மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்தன என்பதை மக்களவையில் சொல்லி இருக்கலாமே! இது வெறும் ‘சாம்பிள்' தான்.
பா.ஜ.க வும், அதன் கொள்கையும், நடைமுறையும், அமைச்சரவையும், பொய்களும் எதுவும் மாறவில்லை. சொல்லப் போனால்:-
புதிய தொன்னை ; ஆனால் பழைய ‘கள்'.
- கருஞ்சட்டைத் தமிழர்