சமீபத்தில் வெளிவந்த Dravidian Model புத்தகத்தில் தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து Democratizing Care என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள் கீழே:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுப்பாட்டை உருவாக்குவதில் தொடர்ந்து செயல்பட்டுவந்திருக்கிறது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த கட்டமைப்பு இங்குதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் பாதி கட்டடங்கள் சுகாதாரம், கல்வி சார்ந்தவை.

மத்திய அரசு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்தாலும், ஆரம்ப நிலை மருத்துவத்தை வழங்குவதை நோக்கியே தமிழ்நாடு தனது நிதியை செலவழித்திருக்கிறது.

மக்களுக்கான மருத்துவ வசதிகளை அளிப்பதில் மிக முக்கியமான கட்டமைப்பு இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான். இந்திய சராசரியோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

கிராமப்புற சுகாதார செவிலியர்களின் மூலம், மாநிலத்தில் கர்ப்பமடையும் பெண்களின் தகவல்கள் பதிவுசெய்யப்படுகின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி உறுதிசெய்யப்படுகிறது. பிரசவத்திற்கு முந்தைய கவனிப்பு, பிரசவம், பிரசவத்திற்கு பின்பு தாய் - சேய்க்கான நல உதவிகளைச் செய்வது போன்றவற்றில் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களே முக்கியப் பங்காற்றுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 27,215 பேருக்கு ஒரு இத்தகைய மய்யங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 32,884 பேருக்குதான் ஒரு மய்யம் இருக்கிறது. தமிழ்நாட்டில் 12 கிராமங்களுக்கு ஒரு மய்யம் இருக்கிறது. இந்தியாவில் 25 கிராமங்களுக்கு ஒன்று என்றுதான் மய்யம்இருக்கிறது.

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாகவும் கூடுதல் வசதிகளோடும் செயல்படுகின்றன. மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 89 சதவீதத்திற்கு மேலானவை 24 மணி நேரமும் செயல்படுகின்றன. ஆனால், இந்திய அளவில் 39 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களே 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

அகில இந்திய அளவில் வெறும் 27 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும்தான் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 74 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இதில் 72 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிஎச்சிக்களில் பெண் மருத்துவர்கள் இருக்கிறார்கள். 95 சதவீத PHCகளில் பிரசவ வார்டு இருக்கிறது.

ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் குறைந்தபட்ச தேவைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை வைத்து தமிழ்நாடு தனது ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்க ஆரம்பித்தது. இதற்குப் பிறகு ‘தேசிய ஊரக சுகாதாரத் திட்டம்’ (National Rural Health Mission) மூலம் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு கருவிகளை வாங்கியதோடு கட்டமைப்பையும் மேம்படுத்தியது.

இப்படி ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கிவிட்டாலும், அதில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோர் தேவை. இதற்கு மருத்துவக் கல்லூரிகள் தேவை. இப்படியான மருத்துவ பணியாளர்களை உருவாக்குவதில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. இந்தியா வகுத்திருக்கும் விதிகளைக்காட்டிலும் அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருப்பது இதற்கு முக்கியக் காரணம்.

இந்திய அரசின் விதிகளின்படி 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 15 மருத்துவக் கல்லூரிகள் இருந்தால் போதுமானது. ஆனால், அப்போதே தமிழ்நாட்டில் 45 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்தியா முழுவதுமே 385 மருத்துவக் கல்லூரிகள்தான் இருக்கின்றன என்ற நிலையில் 12 சதவீத கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன என்றாலும், மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதை அரசு உறுதிசெய்திருக்கிறது. நேஷனல் ஹெல்த் ப்ரொஃபைல் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கையின்படி பார்த்தால், பத்தாயிரம் பேருக்கு 17.7 மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் 10,000 பேருக்கு 8.7 மருத்துவர்களே இருக்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட செவிலியர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் 10,000 பேருக்கு 44.4 பேர் இருக்கின்றனர். இந்திய அளவில் 10,000 பேருக்கு 22 செவிலியர்களே இருக்கின்றனர்.

அதேபோல, மருத்துவர்களை பொது சுகாதார அமைப்பு வேலைகளில் தக்கவைப்பதிலும் தமிழ்நாடு சாதனை படைத்திருக்கிறது. தொலைதூரப் பகுதிகளிலும் உள்ளடங்கிய பகுதிகளிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு incentive வழங்கப்படுகின்றன. இதனால், பொது சுகாதார அமைப்பில் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 7.6 சதவீத காலிப் பணி யிடங்களே இருக்கின்றன. ஆனால், பிஹாரில் 63 சதவீத காலிப் பணி யிடங்கள் இருக்கின்றன.

- கே.முரளிதரன்

Pin It