soozhalum sathiyum‘சூழலியலில்’ ஆய்வுகளில் மிகப் பெரும் பங்காற்றி வரும் ஆய்வாளர் நக்கீரன் எழுதி அண்மையில் வெளி வந்திருக்கும் நூல் ‘சூழலும் - சாதியும்’. சாதியத்துக்கும் சூழலியலுக்கும் உள்ள உறவுகள் இவ்வளவு துல்லியமாக இதுவரை ஆராயப்பட வில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

சமூகப் பார்வையைத் துண்டித்துக் கொண்டு சூழலியல் மட்டும் பேசுகிற ஆய்வாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் இடம் என வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் ‘சூழலியம்’ சமூகத்துடன் பிணைந்து நிற்கிறது. சமூகத்தோடு துண்டித்து விடாமல் சாதியமும் பிணைந்து நிற்கிறது.

நூலாசிரியரே முன்னுரையில் இந்நூலை பற்றி சுருக்கமான படப்பிடிப்பை இவ்வாறு வழங்கியிருக்கிறார். “நீர், நிலம், தீ, காற்று, வானம், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் ஆகிய அனைத்தும் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பலருக்குப் புதிதாக இருக்கலாம்.

புல்லும் பூணூலும் உயர்ஜாதி அடையாளமானது எப்படி? சுற்றுச் சூழல் தூய்மை என்ற சிறந்த சிந்தனையின் மீது கழுவ முடியாத ஜாதிக் கறை படிந்தது எப்படி, இயற்கையின் அசல் நிறமான கறுப்பு இழிவாக்கப்பட்டது எப்படி? போன்ற கேள்வி களுக்கான விடைகள் இதில் அடங்கியுள்ளன.

‘கறுப்பர் களான’ தென்னிந்தியர்களுடன் நாங்கள் இணைந்து வாழவில்லையா என்று கேட்கும் தருண் விஜய் போன்ற திமிரான குரல்களின் பின்னணியை அடையாளம் காண இந்த விளக்கங்கள் நமக்கு உதவும்.”

சோமபானம் சுராபானத்தை மட்டுமே குடித்து சோர்வடைந்த ஆரியர்கள் உண்ணுவதற்கு உணவு வேண்டும் என்பதற்காக காடுகளை எரித்து வேளாண் நிலமாக்கியதையும் காடுகள் எரிக்கப்பட்ட போது அங்கே வாழ்ந்த பழங்குடி மக்களையும் சேர்த்தே எரித்ததையும் ‘சதபத - பிராமணர்’ எழுதி வைத்திருக்கிறார்.

ஒளி தரும் பகல் மகிழ்ச்சியானது. ஒளியற்ற இருள் துன்பமானது என்ற கருத்து ஆரியர் நூல்களான வேதம் முதல் இராமாயணம் வரை முழுதும் பரந்து கிடக்கிறது. அந்த அடிப்படையிலேயே கருப்பு இழிவு வெள்ளை உயர்வு என்ற கருத்தியலும் வர்ணதர்ம கோட்பாடும் உருவானது என்பதை பல்வேறு ஆய்வறிஞர்களின் மேற்கோள்களோடு நூல் நிறுவுகிறது.

‘காலம் - வெளி’ (Time - Space) இரண்டுமே இயற்கையின் கூறுகள். அதிலும் பார்ப்பனர்கள் தீண்டாமையைத் திணித்தார்கள். இதில் தீண்டப்படாதவர்களுக்கான ‘வெளி’ ஊருக்கு புறம்பானது. அவை சேரிகள் தீட்டுக்குரியவை. ‘பிராமணர்களுக்கான’ வெளி ‘புனிதமான’ அக்கிரகாரங்கள் கோயில்கள் .

மனித உடல் ‘பஞ்ச பூதங்கள்’ என்ற இயற்கையின் தொகுப்பு. இயற்கை உயிருள்ளது என்பதே உலகின் பழங் காலச் சிறப்பு. ஆனால் உடல்கள் அனைத்தும் சமமதிப்புக் கொண்டவை எனும் கருத்து பார்ப்பனர்களுக்கு உவப்பானதாக இல்லை.

எனவே உடலை சமப்படுத்துவதை பார்ப்பனியம் வெறுத்தது; உடலைக் கடந்து நிற்கும் ‘பிரம்மம்’ மட்டுமே சுயமானது. மற்ற இயற்கை சார்ந்த உடல் உள்ளிட்ட அனைத்தும் சுயமற்றவை என்ற தத்துவத்தை உருவாக்கியது. அதற்கு ‘பிரம்மம்’ என்று பெயர் சூட்டியது.

அதேபோன்று நிலம், நீர், தீ, காற்று, வானம், திசைகள், உணவு, தாவரம், பறவை மற்றும் சுற்றுச் சூழலியலில் ஜாதியும், தீண்டாமையும் எப்படி கட்டமைக்கப்பட் டிருக்கிறது என்பதை உரிய ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்த நூல்.

சூழலியலாளர்கள் ஜாதி எதிர்ப்பாளர்களாகவும் ஜாதி எதிர்ப்பாளர்கள் சூழலியல் காப்பாளர்களாகவும் இணைந்து நிற்க வேண்டிய கருத்தை வலியுறுத்தும் இந்த நூல் தமிழ் படைப்புலகில் மிக்க கூர்மையான அறிவியல் முயற்சி.

வெளியீடு:

காடோடி பதிப்பகம், 6 வி.கே.என். நகர், நன்னிலம்-610 105, திருவாரூர் மாவட்டம். தொடர்புக்கு : 8072730977

- விடுதலை இராசேந்திரன்

Pin It