mahat dalit book 450ஆங்கில வழிப் பள்ளியன்றில் சேர்ந்து கல்வி பெறுவதற்கான தகுதித் தேர்வொன்றை ஆங்கில அரசு நடத்தி, அத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக மாதத்துக்கு ஐந்து ரூபாய் வழங்கி வந்தது. 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதத் தகுதியுள்ளவர்கள். கொலாபா மாவட்டத்தைச் சேர்ந்த அலிபாக் என்னும் சிற்றூரில் தொடக்கப் பள்ளியில் படித்த மாணவனொருவன் 1914 ஆம் ஆண்டில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றான்.

ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து உயர்கல்வி கற்கும் கனவுகளைச் சுமந்தபடி மஹத் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத்தைக் கொடுத்தான். அங்கிருந்த பள்ளி அதிகாரிகள் அம்மாணவர் சாதியடுக்கில் கீழ்நிலையில் உள்ளவன் என்று புரிந்து கொண்டதும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவனொருவன் கல்வி கற்க வருவதே பள்ளியில் இருந்தவர்களுக்கு ஒருவித ஒவ்வாமையை அளித்தது. அந்த மாணவன் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டால், பள்ளிக்கூடம் நடைபெறும் கட்டடத்தை பள்ளி நிர்வாகத்துக்கு வாடகைக்குக் கொடுத்திருக்கும் உரிமையாளர் பள்ளியை மூடிவிடுவதாக அச்சுறுத்தினார்.

தீண்டாமையைப் பற்றி பதற்றமுற்ற அளவுக்கு பள்ளி அதிகாரிகள் ஒரு சிறுவனின் எதிர்காலத்தை வீணடிப்பதைப் பற்றி சிறிதும் கவலையுறவில்லை. ஆனால் தன்னால் பள்ளி மூடப்படுமானால் மற்ற மாணவர்களின் கல்வி வீணாகிப் போகுமே என அந்தச் சிறுவன் கவலைப்பட்டான். அதனால் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி விட்டான். பிறகு, மற்ற சிறுவர்களைப் போலவே வீட்டுக் கால்நடைகளை மேய்ப்பதில் அவன் பொழுதுகள் கழிந்தன.

சிறிது காலத்துக்குப் பிறகு அவன் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பதை தற்செயலாகப் பார்த்த அந்த ஊரைச் சேர்ந்த சீர்திருத்தவாதியான பிகோடா நாராயண் திப்னிஸ் அவன் பள்ளிக்கூடம் போகாததற்கான காரணத்தைக் கேட்டார். அச்சிறுவன் நடந்ததை விரிவாக எடுத்துரைத்தான். அதைக் கேட்டு அவர் மிகவும் மனம் வாடினார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் வாடாவுக்குச் சென்று நாராயண் திப்னிஸ் என்பவரைச் சந்தித்து விவரங்களைக் கூறுமாறு அவனுக்குத் தகவலை அனுப்பி வைத்தார்.

அச்சிறுவனும் உடனடியாக அவர் சொன்னபடியே வாடாவுக்குப் பயணம் செய்து நாராயண் திப்னிஸைச் சந்தித்து நடந்ததைச் சொன்னான். அவர் ஒரு சமூக சேவகர். மாணவனுக்கு பள்ளிக்கூடத்தில் அனுமதி மறுக்கப்பட்ட செய்தியை அறிந்து அவர் அதிர்ச்சியில் மூழ்கினார். உடனே, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவன் என்ற அடிப்படையில் பள்ளிக்கு வழங்கப்படும் அரசு மானியங்களை ரத்து செய்யுமாறு ஒரு கோரிக்கையை பத்திரிகைக்கு ஒரு கடிதமாக எழுதும்படி அறிவுறுத்தினார். அவனும் அவ்விதமாகவே ஒரு கடிதத்தை எழுதி பிரபோதன் என்னும் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தான். கடிதம் பிரசுரமானது.

பத்திரிகையில் கடிதத்தைப் பார்த்ததுமே நிர்வாகத்தினர் பதற்றம் கொண்டனர். அரசு மானியத்தை இழக்க நேரிடுமோ என்னும் அச்சத்தில் பள்ளி நிர்வாகம் அவனை உடனடியாக அழைத்து வந்து வகுப்பில் வேண்டாவெறுப்பாகச் சேர்த்துக் கொண்டது. ஆயினும், அச்சிறுவனுக்கான இருக்கையை வகுப்பறைக்கு வெளியே வாசலோரத்தில் போட்டு தனிமைப்படுத்தியே வைத்தது. படிக்க வேண்டும் என்கிற ஆவலில் பள்ளி நிர்வாகமும் சமுதாயமும் காட்டிய பாரபட்சத்தை அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

ஒவ்வொரு வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களோடு தேறி, பள்ளி இறுதித் தேர்விலும் வெற்றி பெற்றான். அவன் பெயர் ஆர்.பி.மோரே. மஹத் என்னும் அச்சிறு நகரத்தில்தான் சமூகத்தின் உண்மையான முகத்தை அவர் புரிந்து கொண்டார். ஆதலால் அவர் வளர்ந்து இளைஞரான பிறகு இந்திய வரலாற்றில் முதன்முதலாக தலித் எழுச்சி மாநாட்டை நடத்துவதற்கு மஹத்தையே தேர்ந்தெடுத்தார்.

மஹத் ஒரு சிறுநகரம். அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் சுமந்துவரும் பொருட்களை அந்த நகரத்தில்தான் விற்க வேண்டும். ஆனாலும் உள்ளூர் வணிகர்கள் அவ்விற்பனையைத் தடை செய்ய முனைந்தனர். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அந்த உரிமையைப் பெற்றுத் தந்தார் மோரே. பிறகு அவர்கள் பசிக்கு உண்ணுவதற்கோ தாகத்துக்கு அருந்துவதற்கோ எதுவும் அந்த நகரத்தில் கிட்டாத நிலை இருந்தது. அந்த உரிமைக்காகவும் போராடி வெற்றி பெற்றார் அவர்.

இப்படிப்பட்ட சூழலில் 1923ஆம் ஆண்டில் மக்கள் கல்விக்கழக உறுப்பினரும் சீர்திருத்தவாதியுமான போல் என்பவர் பொதுக்கிணறுகள், குளங்கள், சத்திரங்கள், பள்ளிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றொரு தீர்மானத்தை பம்பாய் சட்டமன்ற மேலவையில் கொண்டு வந்தார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அத்தீர்மானம் நிறைவேறியது. இதன்வழியாக உத்வேகம் பெற்ற மோரே, ஒவ்வொரு நாளும் மஹத்துக்கு வந்துபோகும் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்டோர்களிடையே பொது இடங்களைப் பயன்படுத்துவதற்கு தமக்குள்ள உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வூட்டும் விதமாக மஹத் நகரில் ஓர் எழுச்சி மாநாட்டை நடத்த வேண்டுமென்றும் அம்மாநாட்டுக்கு பம்பாயிலிருந்து எப்படியாவது அம்பேத்கரை அழைத்து வரவேண்டுமென்றும் திட்டமிட்டார்.

மாநாட்டுத் திட்டத்தைப் பற்றிய செய்திகளை அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கு தொடர்ந்து அனுப்பி, அவர்கள் அனைவரையும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். திரண்டு வரத் தயங்கிய மக்களுக்குத் துணிவூட்டித் தயார்ப்படுத்துவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. பலகட்ட சந்திப்புகளுக்குப் பிறகு அம்பேத்கரின் ஒப்புதலுடன் 19-03-1927, 20-03.1927 ஆகிய இரு நாட்கள் மாநாடு நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. எண்ணற்ற தொண்டர்கள் மஹத்திலேயே தங்கி பிரச்சார வேலைகளைச் செய்தனர். மாநாடு நிகழும் இடமாக நகரத்திலேயே இருந்த கைவிடப்பட்ட நாடகக் கொட்டகை முடிவு செய்யப்பட்டு திருத்தப்பட்டது. அருகிலிருந்த வெற்று நிலங்களை வாடகைக்குப் பேசி தங்குவதற்கும் சமைப்பதற்கும் பொருத்தமான வகையில் கொட்டகைகள் எழுப்பப்பட்டன. விரிவான அளவில் பத்திரிகைகளுக்கும் செய்தி வழங்கப்பட்டது.

வெளியூர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் முதல்நாள் இரவே நிகழிடத்துக்கு வந்து பந்தல்களில் முகாமிட்டுத் தங்கினர். பத்தொன்பதாம் தேதி அன்று ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் கூடிவிட்டனர். பம்பாயிலிருந்து அம்பேத்கரும் அவர் நண்பர்களும் வந்து சேர்ந்தனர். அம்பேத்கர் மேடையேறியபோது அனைவரும் தம் கைகளில் வைத்திருந்த தடிகளை உயர்த்தி முழக்கமிட்டனர். தாழ்த்தப்பட்டோர் தலைவர்களோடு சமூகத்தில் சாதி வேற்றுமைகள் அழிய வேண்டும் என்னும் விருப்பமுடைய பிற சாதித் தலைவர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். அனைவருடைய உரைகளும் அரங்கத்தில் கூடியிருந்த மக்களுக்கு பல சமூக உண்மைகளைப் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தன.

மறுநாள் இருபதாம் தேதி காலை ஒன்பது மணிக்கே நிகழ்ச்சிகள் தொடங்கின. நண்பகல் வரையில் பேச்சாளர்கள் உரை நிகழ்த்தினார்கள். பின்பு சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நன்றியுரை நிகழ்த்த வந்தவர் கிராமங்களில் பொதுக்கிணறுகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் தண்ணீரைப் பயன்படுத்துவதில் உள்ள உரிமைகளைப் பற்றிய தீர்மானத்தை நினைவுபடுத்திவிட்டு, “இந்த மாநாட்டின் தேவைக்காக சவதார் குளத்திலிருந்து ஒரு குடத்துக்கு ஒரு பைசா விலை கொடுத்து நாற்பது குடங்கள் வாங்கி வந்திருக்கிறோம். சவதார் குளம் அனைவருக்கும் பொதுவான நீர்நிலை. பொதுக்குளங்களில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இது நண்பகல் நேரம். நாம் அனைவரும் தாகத்தோடு இருக்கிறோம். நம் தலைவர் நம்மை வழிநடத்த நாம் அங்கு சென்று நீர் அருந்துவோம்” என்று சொல்லி முடித்தார்.

அக்கணமே அம்பேத்கர் மேடையிலிருந்து இறங்கி குளத்தை நோக்கி நடக்க, தலைவர்களும் மக்களும் அவரைப் பின்தொடர்ந்து ஊர்வலமாக நடந்தனர். தெருவோரம் நின்றிருந்தவர்கள் அனைவரும் அந்த ஊர்வலத்தையே பார்த்தபடி நின்றார்கள். குளத்தை நெருங்கிய அம்பேத்கர் குளத்தைச் சுற்றியிருந்த வீடுகளிலிருந்து தம்மையே பார்த்தபடி நின்றிருக்கும் உயர்சாதிக்காரர்களை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தார்.

பிறகு குனிந்து குளத்திலிருந்து கைகளால் தண்ணீரை முகந்தெடுத்து அருந்தினார். அவர் கரையேறியதும், ஊர்வலமாக வந்திருந்த அனைவரும் அவரைப் போலவே கைகளால் தண்ணீரை முகந்தெடுத்து அருந்தினர். பிறகு ஊர்வலம் அமைதியாகத் திரும்பி மதிய உணவுக்காக மாநாட்டுத் திடலுக்கு வந்தது. ஊரே அமைதியாக நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்தது. தலைவர்களும் பார்வையாளர்களும் கலைந்து தத்தம் ஊர்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

மஹத் நகரத்து மேல்சாதிக்காரர்களால் மாநாட்டின் வெற்றியைச் செரித்துக் கொள்ள முடியவில்லை. சவதார் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீரெடுத்துப் பருகியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் உடனே ஒரு தந்திரத்தில் ஈடுபட்டனர். ”தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றாகத் திரண்டு வந்து சவதார் குளத்தில் இறங்கி களங்கப்படுத்தி விட்டனர். இப்போது அருகில் உள்ள வீரேஷ்வர் கோவிலுக்குள் நுழையச் சென்று கொண்டிருக்கிறார்கள்” என்று தவறான செய்தியை ஆட்கள் வழியாக அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

தூண்டிவிடப்பட்ட வதந்தியை உண்மையென நம்பிய உயர்சாதிக்காரர்கள் ஒரு கூட்டத்தையே திரட்டிக் கொண்டு மஹத்துக்கு வந்தார்கள். கடவுளையும் மதத்தையும் பாதுகாக்கும் வேகம் அனைவரையும் விசை கொள்ள வைத்தது. கூட்டத்துக்கே உரிய முரட்டுத்தனத்தோடு உண்மையென்ன என்று கேட்டறியும் எண்ணமே இன்றி, கடைத்தெருக்களிலும் நகரத் தெருக்களிலும் நடமாடிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்தினர். விடுதியில் தங்கியிருந்த அம்பேத்கர் நடந்த செய்தியைக் கேள்விப்பட்டு மாநாட்டுத் திடலுக்கு மீண்டும் வந்து, ஆவேசம் கொண்ட தாழ்த்தப்பட்டோரை அமைதி காக்குமாறு வேண்டிக் கொண்டார். காவல்துறை அதிகாரிகள் வந்து இருவகுப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மாநாட்டில் நிகழ்ந்தவை அனைத்தையும் விரிவான கட்டுரையாக தம்முடைய ’பகிஷ்கிருத் பாரத்’ பத்திரிகையில் எழுதி வெளியிட்டார் அம்பேத்கர். அடுத்தடுத்து அவர் எழுதிய சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் அதில் வெளிவந்தன. சாதியப் பாகுபாட்டையும் தீண்டாமையையும் ஆதரிப்பவர்களை கடுமையாக எதிர்த்து எழுதினார். உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் தம் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் விதத்தில் கருத்துகளை தெளிவாகவும் அழுத்தமாகவும் குறிப்பிட்டிருந்தார். அடுத்த மாநாட்டை இன்னும் விரிவான அளவில் நடத்த வேண்டுமென்ற எண்ணத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதற்கான நாளாக 25.12.1927 குறிக்கப்பட்டது.

தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டன என்கிற ஒரே காரணத்துக்காக அறத்துக்கு எதிரானவற்றையும் பகுத்தறிவுக்குப் புறம்பானவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமெதுவும் இல்லை என்னும் கருத்துடைய காந்தியடிகள் மஹத் சவதார் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை அறிந்து கொண்டதும் அப்போராட்டம் எல்லா வகைகளிலும் நியாயமானதே என்று ஆதரவான நிலைபாட்டோடு கட்டுரை எழுதி வெளியிட்டார்.

முதல் மாநாட்டின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டு பின்வாங்காமல் தாழ்த்தப்பட்டோர்கள் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நின்றார்கள். முதல் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தாழ்த்தப்பட்டோருக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்த கிராமத்துக் கடமைகளையும் இறந்த கால்நடைகளின் தோலுரிப்பது போன்று தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த மரபார்ந்த சாதியம் சார்ந்த பணிகளைச் செய்வதை நிறுத்தி விட்டனர். இதனால் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் இழைத்த துன்பங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அவர்கள் தம் நிலையிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் தொட்டதால் குளம் தீட்டாகி விட்டது என அறிவித்த சாதியவாதிகள் பசுவின் சிறுநீர் நிரம்பிய 108 குடங்களைக் கொண்டுவந்து குளத்தில் கவிழ்த்துக் கொட்டி தூய்மைப்படுத்தினர். சவதார் குளம் பொதுச்சொத்து என தீர்மானம் நிறைவேற்றியிருந்த மஹத் நகராட்சி தந்திரமான வகையில் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சவதார் குளத்தை மாசுபடுத்திய குற்றத்துக்காக அம்பேத்கர் மீது வழக்கு தொடரப்பட்டது. உயர்சாதிக்காரர்களின் பிரதிநிதிகளாகத் தம்மை முன்னிறுத்திக் கொண்டவர்கள் சவதார் குளத்துநீரைப் பயன்படுத்துவதிலிருந்து தாழ்த்தப்பட்டோரைத் தடை செய்யும் உத்தரவை நீதிமன்றத்திலிருந்து பெற்று அறிவிப்பாக வெளியிட்டார்கள். ஒருவர் மீது இன்னொருவர் கொண்ட வஞ்சம் வளர்ந்து கொண்டே போனது.

இரண்டாவது மாநாடு குறிப்பிட்ட நாளில் ராய்கட் சாலையிலிருந்த வைத்யாஸ் தோட்டத்துக்கும் பவுத்தவாடாவுக்கும் இடையில் நடைபெற்றது. மாநாட்டினர் அனைவரும் தங்குவதற்கும் உணவு உட்கொள்வதற்கும் அங்கேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கேயே இருந்த கிணற்றுநீரைப் பயன்படுத்திக் கொண்டதால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் குளத்துக்கும் நிகழ்ச்சிக்கும் பாதுகாப்பாக நின்றார்கள். பலத்த பாதுகாப்புக்கிடையில் மாநாடு மனுஸ்மிருதியை எரிக்கும் நிகழ்ச்சியோடு மாநாடு தொடங்கியது. மாநாட்டுப் பந்தலுக்கு அருகிலேயே எழுப்பப்பட்டிருந்த வேள்வித்தீயின் முன்னால் நின்று மனுஸ்மிருதியில் ஆட்சேபணைக்குரிய பகுதிகளை உரக்கப் படித்து அனைவருக்கும் தெரிவித்த பிறகு, அதை வேள்வித் தீயில் ஆகுதியாக இட்டார் அம்பேத்கர்.

அடுத்தபடி அவர் அருகில் நின்றிருந்த ஏனைய முக்கியத் தலைவர்களும் பிரதிநிதிகளும் அம்பேத்கர் செய்ததைப் போலவே தத்தம் கைகளில் இருந்த பிரதிகளைப் படித்துவிட்டு வேள்வித்தீயில் வீசினர். நிகழ்ச்சிக்கு இடையில் வந்த மாவட்ட ஆட்சியர் “சாதியை முன்வைத்து வேற்றுமை பாராட்டுவதில் ஆங்கில அரசுக்கு நம்பிக்கையில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொதுக்குளத்திலிருந்து தண்ணீர் எடுக்க உங்களுக்குள்ள உரிமையை நாங்கள் ஏற்கிறோம்.

ஆனால் சவதார் குளம் பொதுச் சொத்தல்ல, தனியார் சொத்தென இங்குள்ளவர்கள் வாதிடுகிறார்கள். இந்த உரிமை கோரலுக்குத் தீர்வு காணும்வரை நீங்கள் நடத்தவுள்ள சத்தியாக்கிரகத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்று அறிவித்துவிட்டுச் சென்றார். அதனால் அன்று நிகழவிருந்த சத்தியாக்கிரகம் நிகழாமல் போனது. மாறாக, அனைவரும் ஊர்வலமாக நடந்து சென்று சவதார் குளத்தைச் சுற்றிக் கொண்டு மாநாட்டுப் பந்தலுக்குத் திரும்பி வந்தது. அதற்குப்பிறகு இரவு வரைக்கும் சிறப்புரைகள் நிகழ்ந்த பிறகு மாநாடு முடிவுற்றது.

சவதார் குளம் வழக்கு பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதியில் 08.06.1931 அன்று தாழ்த்தப்பட்டோருக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து புகார் மனுதாரர்கள் தாணா மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 1933இல் இவ்வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆயினும் புகார் மனுதாரர்கள் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீண்ட கால விசாரணைகளுக்குப் பிறகு 17.03.1937 அன்று அவ்வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தீண்டாமையின் காரணமாக காலம்காலமாக ஒருவர் பயன்படுத்தவில்லை என்கிற காரணத்தின் அடிப்படையில் அவர் அந்த இடத்தின்மீது உரிமையற்றவர் என்று சொல்ல முடியாது என்றும் குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தாழ்த்தப்பட்டவர்கள் உரிமை படைத்தவர்கள் அல்ல என்னும் மரபு முழுமையாக சட்டபூர்வமானதெனக் கருதப்பட முடியாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மஹத் போராட்டத்தைப் பற்றிய ஆவணமாக அதன் அமைப்பாளராகச் செயல்பட்ட ஆர்.பி.மோரே மராத்தி மொழியில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அது ஒரு வரலாற்று ஆவணம். இந்தியாவில் சாதியமைப்புகளைப்பற்றி விரிவான ஆய்வுகளை நிகழ்த்தி வெளியிட்ட ஆனந்த் டெல்டும்ப்டே, மோரேயின் ஆவணத்தை முன்வைத்து நீண்டதொரு ஆய்வை மேற்கொண்டார். மஹத் போராட்டத்தைப் புரிந்து கொள்ளும் விதமாக இந்திய வரலாற்றின் போக்கில் சாதிமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது தோன்றி மறைந்த இயக்கங்களின் செயல்பாடுகளையெல்லாம் தொகுத்து வழங்கியிருக்கிறார் டெல்டும்ப்டே. தலித் இயக்கத்தின் வரலாற்றைக் கற்பதற்கு மஹத் எழுச்சி சிறப்பான தொடக்கமாக எவ்விதத்தில் அமைந்திருக்கிறது என பல மாறுபட்ட கோணங்களில் ஏராளமான பின்னணித் தகவல்களோடு அவர் ஆய்வு அமைந்துள்ளது.

வினா விடை முறையில் அமைந்துள்ள டெல்டும்ப்டேயின் ஆய்வுமுறை பாராட்டுக்குரியது. நூலின் பின்னிணைப்பாக உள்ள பம்பாய் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மொழிபெயர்ப்பு மிக முக்கியமானதொரு ஆவணம். வரலாற்றைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் முக்கியமாகப் படிக்க வேண்டிய நூல் மஹத். ஏறக்குறைய அறுநூறு பக்கமுள்ள இந்த நூலை நல்ல தமிழில் மொழிபெயர்த்திருக்கும் கமலாலயனுக்கு தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

மஹத்
ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: கமலாலயன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
ரூ.550/-

Pin It