தேவாங்கச் செட்டியார்கள் என்ற ஜாதியினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். வீட்டு மொழியாகக் கன்னடம் பேசுகின்றனர். தெலுங்கு போசுபவர்களும் இருக்கிறார்கள். எந்த மொழி பேசினாலும் குல தெய்வம் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் மட்டும் தான்.  சில இடங்களில் கருப்புசாமியையும், காமாட்சி அம்மனையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு 700 ரிஷி கோத்திரங்கள், 10 ஆயிரம் குலங்கள், 5 ஜகத்குரு பீடங்கள் உள்ளன.  அனைவருக்கும் மூலகர்த்தா தேவல மாமுனிவர் என்ற முனிவர் ஆவார். தமிழ்நாட்டில் உள்ள குலதெய்வ வழிபாட்டை முறையும், கன்னடம் பேசும் தேவாங்கச் செட்டியார்களின்  குலதெய்வவழிபாட்டு முறையும் ஒன்றாகவே இருக்கிறது.

உங்கள் குலதெய்வத்தைப் பற்றிக்கூறுங்கள்

ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் தான் எங்கள் குலதெய்வம். திண்டுக்கல் மாவட்டத்தில் சித்தையன் கோட்டைப் பேரூராட்சியில் கோவில் உள்ளது. இது தேவாங்கர் குலத்தைச் சேர்ந்த சின்னுக் கொட்லார்,  லத்திகாரர், கப்பலேறு உள்ளிட்ட பல்வேறு வம்சத்தினருக்குக் குலதெய்வக் கோவில் உள்ளது.

சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், மற்றும் தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும், பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து  எங்கள் வம்சங்களைச் சேர்ந்த அண்ணன், தம்பிமார்கள் சிவராத்திரியன்று குலதெய்வ வழிபாடு நடத்த இத்திருக்கோவிலுக்கு வருகின்றனர்.

உங்கள் குலதெய்வத்தின் கதை உங்களுக்குத் தெரியுமா?

முன்னொரு காலத்தில் கப்பலேறு வம்சத்தைச் சேர்ந்த அழகானப் பெண்ணைக் கண்டு அப்பகுதி ஜமீன்தார் மயங்கியுள்ளார். அப்பெண்ணை அடைதல் வேண்டி பல்வேறு முயற்சிகளில் இறங்கி யுள்ளார். இந்நிலையில் ஜமீன்தாரிடமிருந்து அப்பெண்ணைக் காப்பாற்ற ஏற்பட்ட சண்டையின் பொழுது அப்பெண்ணின் தலை வெட்டப்பட்டு, கொல்லப்பட்டதாகவும், அப்பெண்ணின் தலையையே கப்பலேறு வம்சத்தினர் இன்றும் வணங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

முதன் முதலில் அப்பெண் தெய்வத்தின் தலை வெட்டப்பட்ட காட்டில் சென்று முன்னோர்கள் வணங்கி வந்ததாகவும், பின்னாளில் சித்தையன்கோட்டையில் கோவில் எழுப்பி வழிபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

தலக்கட்டு வரி யாரிடம் வாங்குவீர்கள்? பெண்களிடம் வாங்குவீர்களா?

தலக்கட்டு வரி பெண்களிடம் வாங்குவது இல்லை. கணவன் இறப்புக்குப்பின் பெண்களிடம் வாங்குவது உண்டு. ஆண்களிடம் மட்டும் வரி வாங்குவோம்.

குலதெய்வத்துக்கும் உங்களுக்கும் அன்றாட வாழ்க்கையில் ஏதாவதுதொடர்பு உள்ளதா?

வீடு கட்டுவது, திருமணம், தொழில் தொடக்கம், வேலையில் சேருவது என்றாலும் முதலில் குலதெய்வக் கோவிலில் அர்ச்சனை செய்து பின் தொடங்குவார்கள்.  குழந்தைகளுக்கு முதல் மொட்டை எடுப்பதும், காதுகுத்துவதும் குலதெய்வக் கோவிலில் தான் நடைபெறும்.

உங்கள் குலதெய்வத்திற்கும், சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

தேவாங்கர்கள், இராமலிங்கேசுவரரையும் ஸ்ரீசெளடேஸ்வரியையும் சேர்த்தே வணங்க வேண்டும் என  தேவல முனிவரின் ஏழாவது அவதாரமான தேவதாஸ மையனின் காலத்தில் தான் அருளப்பட்டது. இது இரண்டாம் நூற்றாண்டு. அதற்கு முன்பு வரை ஸ்ரீ செளடேஸ்வரி தேவி மட்டுமே வணங்கப்பட்டு வந்தார்.  செளடேஸ்வரி தேவியாக இருந்த எங்கள் அன்னை இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் ஸ்ரீஇராமலிங்க செளடாம்பிகை என்று வணங்கப்படுகிறார். (ஆதாரம்: தேவாங்க சிந்தாமணி, இரண்டாம் பதிப்பு- பக்கம் எண்-150-701-702)

குலதெய்வக் கோவிலில் பூசாரியாக வருபவர்கள் பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் வருவார்களா?

ஆமாம். அவர்களைச் செட்டிதனக்காரர், பெத்தர் என்ற பெயர்களில் அழைப்போம்.  செட்டிதனக் காரர், பெத்தர் இவர்கள் பதவி பரம்பரையாக வருவன. வங்குசம் என்று கன்னடத்திலும், இண்டி பேரு என்று தெலுங்கு மொழியிலும் வீட்டின் பெயர் என்று தமிழிலும் சொல்லப்படுவன மூன்றும் ஒன்றே ஆகும்.

உங்கள் ஜாதியிலிருந்து வேறு மதத்திற்கு மாறியிருக்கிறார்களா? அப்படி மாறியவர்கள் உங்கள் குலதெய்வங்களைப் பின்பற்று வணங்குகிறார்களா?

கத்தோலிக்க தேவாங்க சங்கம்: சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் தேவாங்க குல மக்களில் சிலர் கிறிஸ்தவர்களாக சத்தியமறையில் சேர்ந்திருக்கிறார்கள் இவர்கள் கோயமுத்துரில் உள்ள கருமத்தம் பட்டி மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் நெசவுத் தொழில் செய்கிறார்கள். இவர்கள்  1956 ல் மும்பையிலும் ,1964 ல் கோவையில் உள்ள கருமத்தம்பட்டியிலும் ‘கத்தோலிக்க தேவாங்க சங்கம்’ என்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இவர்களிலும் தேவாங்க சமுதாய வழக்கப்படி ஊர்ச் செட்டியார்கள் இருக்கிறார்கள். .ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி புனித ஜெபமாலை அன்னைக்கு விண்ணேர்ப்புத் திருவிழாவும் ,ஆண்டுவிழாக் கூட்டமும் ‘பூணூல் விழா’ வைத்து, பூணூல் அணிவதை ஒரு சடங்காகச் செய்து வருகிறார்கள்.

உங்கள் குலதெய்வக் கோவிலுக்குப் பார்ப்பனர்களை அழைப்பதுண்டா?

விழாக்காலங்கலிலும் மற்ற தினங்களிலும் பூசை செய்வதற்கும் அர்ச்சனை செய்வதற்கும் தொடர்ந்து ஒரு அய்யரைத்தான் வைப்போம். (அவருக்கு மாதா மாதம் அரிசி மூடையோ, பணமோ கொடுப்போம்.) பின் பெரிய அய்யரைக் கும்பாபிஷேகம் பண்ணும் பொழுதும், விழா சமயத்தில் அலங்கரிப்பதற்கும்,  பூசைசெய்வதற்கும் வரவழைப்போம்.

குலதெய்வ விழாவில் பெண்களின் நிலை?

மூலஸ்தானத்தில் நுழைவதருக்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது. விழா சமயங்களில் ஆற்றில் தண்ணீர் எடுப்பது, மஞ்சள் அம்மியில் அரைப்பது, அலங்காரம் செய்வது, உரலில் அரிசி இடித்துப் பலகாரம் செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வேலைகளைச் செய்வார்கள். திருமணத்திற்கு முன்பு அப்பாவின் குலதெய்வம் தான் பெண்களுக்கு. திருமணமான பிறகு, கணவனின் குலதெய்வத்தைத்தான் வணங்குவார்கள்.

நீங்கள் திருமணம் செய்யும் போது எப்படி முறை பார்ப்பீர்கள்? மாமன், மச்சான் முறையை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

நாங்க கும்பிடுற குலதெய்வத்தையும், ரிஷிகோத்திரத்தையும் வச்சு முறைபார்ப்போம். எங்களுக்கு ‘பாலிதாரு’ என்ற வங்குசத்தினர் மாமன் முறையாக வருவார்கள்.

Pin It