aanaimuthu copyதோழர் ஆனைமுத்து விடை பெற்றுக் கொண்டார்; தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்த ஏப்.6, 2021 அன்று இந்தத் துயரமான செய்தியும் வந்தது. கருஞ்சட்டையுடன் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருந்த அவரது உடலில் விரல்கள் அவருக்குரிய மிகச் சிறந்த அடையாளத்தை ஏந்தி இருந்தது.

அதுதான் அவரது எழுதுகோல் (பேனா). பெரியாரியலை முதன்முதலாக தொகுப்புகளாக்கி மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தார் என்பதே அவருக்கான தனித்துவமான முதன்மை அடையாளம்.

96 ஆண்டுகள் முழுமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். மனித ஆயுள் நீட்டிப்புக்கு நவீன மருத்துவ அறிவியலைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூகம், ‘கடவுள் அருளை’த்தான் நம்புகிறது. இப்படி அறிவியலுக்கு எதிராக மதம் கட்டமைத்த மூடநம்பிக்கைகளை மக்களிடம் பரப்பும் பெரியாரியல்வாதிகள் தங்கள் வாழ்க்கையையே சான்றுகளாக மக்களிடம் விட்டுச் செல்கிறார்கள்.

ஆம்! கடவுளை மறுத்து இறுதிக் காலம் வரை நேர்மையாக சமூகப் பணியாற்றி பெரியாரைப் போலவே அவரது தொண்டர்களும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் இதுவே உயிரியக்கத்திலிருந்து விடைபெறுவதற்கு முன் இவர்கள் சமூகத்துக்கு விடுத்துச் செல்லும் அறிவியல் பாடம்.

‘தோழர்’ ஆனைமுத்து, தன்னை தோழர் என்று அழைப்பதையே விரும்புவார். பெரியார் கொள்கைப் பாதையில் 70 ஆண்டுகாலம் பயணித்திருக்கிறார். 20ஆம் வயதில் 1945இல் திராவிடர் கழகத்தில் இணைந்து, 32ஆவது வயதில் பெரியார் அறிவித்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 18 மாதம் சிறைத் தண்டனை பெற்று பெரியார் இறுதிக் காலம் வரை அவரது கொள்கைக்காகவே தன்னை அர்ப்பணித்தார்.

பெரியார் பேச்சுகளையும் எழுத்துகளையும் அவர் நடத்திய குடிஅரசு, பகுத்தறிவு, திராவிடன், விடுதலை போன்ற இதழ்களிலே மட்டும் தேடிப் படிக்க வேண்டிய நிலை தான் 1974 வரை இருந்தது என்பது மிகப் பெரும் சோகம். அந்த ஏடுகளும் ஆய்வாளர்களுக்குக்கூட எளிதில் கிடைக்கப் பெறாத நிலையில் பெரியார் அனுமதியோடு அவரது சிந்தனைகளை மூன்று தொகுதிகளாக வெளியிடும் முயற்சிகளில் தோழர் ஆனைமுத்து இறங்கினார்.

திருச்சியில் உருவான சிந்தனையாளர் கழகம் என்ற அமைப்பு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் தொகுப்புப் பணிகளை தலை மீது சுமந்து, ‘கடும் தடை’களை எதிர்கொண்டு பெரியார் நடத்திய ஏடுகளைத் திரட்டினார். ஓராண்டு கடும் உழைப்புக்குப் பிறகு பெரியாரின் ஒப்புதலோடு பெரியார் சிந்தனைகளின் மூன்று தொகுப்புகள் பெரியார் முடிவெய்திய அடுத்த ஆண்டில் 1974இல் திருச்சியில் வெளியிடப் பட்டது.

அதற்குப் பின் 35 ஆண்டுகள் கழித்து 2009இல் 20 தொகுதிகளாக விரிவாக்கி, ‘பெரியார் ஈ.வெ. ராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சிக் கட்டளை’ வழியாக உரிய பதிப்புரிமையோடு வெளியிட்டார். (பெரியார் திராவிடர் கழகம், பெரியார் எழுத்து - பேச்சுகளை ஆண்டுவாரியாக கால வரிசைப்படி தொகுத்து 2010இல் வெளியிட்டது. இதற்கு எதிராக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிய இடைக்காலத் தடைகளைத் தகர்த்து வெளிக் கொணர்ந்தது)

தோழர் ஆனைமுத்து அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க வெளியீடு ‘பெரியாரின் அயல்நாட்டுப் பயணக் குறிப்புகள்’ என்ற பெரியார் கைப்பட எழுதிய நாட்குறிப்பாகும். 1931-32 இல் பெரியார் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு 331 நாட்கள் பயணம் செய்தபோது ஒவ்வொரு நாளும் பயண நினைவுகளை நாட்குறிப்பில் பதிவு செய்தார்.

அதில் 73 நாட்களுக்கான பயணக் குறிப்பு மட்டும் பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கி.கிருஷ்ணசாமியின் இரண்டாவது மகன் ஈ.வெ.கி. செல்வராஜ் அவர்களிடமிருந்து இவருக்குக் கிடைத்தது. அந்தப் பயண அனுபவங்களை முழுமையாக விவரிக்கும் வரலாற்று ஆவணத்தை, தனது சொந்த முயற்சியில் 1997இல் வெளியிட்டார்.

பெரியார் கையெழுத்துப் பிரதிகளுடன் அது வெளி வந்தது. இந்த அரும்பணிகளோடு வடநாட்டில் பெரியாரின் வகுப்புவாரி கொள்கைகளைக் கொண்டு சென்றது, அவரது மற்றொரு மகத்தான தொண்டு.

மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய விகிதாச்சாரத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக உ.பி., பீகார், இராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சமூக நீதியில் பற்றுள்ள தலைவர்களையும் சந்தித்து உரையாடினார்.

குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியை சந்தித்து, பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு ஆணைய அமைச்சகம் வற்புறுத்தும் மனுவைத் தந்ததோடு பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயையும் சந்தித்து நேரில் வாதிட்டார். பிரதமர் மொரார்ஜி ஒப்புதலோடு மண்டல் ஆணையம் அதற்குப் பிறகு தான் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதிலும் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

ஒரு பெரியார் தொண்டருக்கு உரிய எளிமை, கொள்கை மீதான உறுதி, சமூகக் கவலையோடு அர்ப்பணித்த வாழ்க்கை போன்ற உயரிய விழுமியங்களோடு அவர் வாழ்ந்தார்.

இந்தியா பிரிட்டிஷ் காலனி ஆட்சிப் பிடியில் இருந்த காலத்தில், அவர் பெரியார் இயக்கம் நோக்கி வந்தார். நாடு முழுதும் ‘சுயராஜ்யம்’, ‘காந்தி’ என்ற உணர்வுகள் அலைகளாக வீசிய காலத்தில் அவற்றில் அடங்கியுள்ள ‘பார்ப்பனிய - வர்ணாஸ்ரம’ மேலாதிக்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைத்தனத்தையும் மக்களிடம் அந்தச் சூழலில் பேசுவது அவ்வளவு எளிதல்ல. துணிவோடு உரத்து முழக்கமிட்டு எதிர்நீச்சல் போட்ட தலைவராக பெரியார் ஒருவர் மட்டுமே இருந்தார். ‘இது சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்’ என்று உரத்து முழங்கினார்.

 அந்தக் காலங்களிலும் சரி, காங்கிரஸ் பார்ப்பனர்களின் கட்சியாக அதிகார பீடத்துக்கு வந்த காலத்திலும் சரி, அதைத் தொடர்ந்து மாநிலங்களின் குரல் ஓங்கி மாநிலக் கட்சிகள் உருவான காலங்களிலும் சரி, அதைத் தொடர்ந்து 1990களில் நாட்டின் சமூகப் பொருளியல் - வாழ்வியலை தலைக்கீழாகப் புரட்டிப் போட்ட ‘உலகமயமாக்கல்’ கொள்கை நுழைந்த காலத்திலும் சரி, பெரியாரின் கொள்கைகளோடு பயணித்த மூத்த தலைவர் என்ற பெருமை தோழர் ஆனைமுத்துவுக்கு உண்டு.

அரசியலில் உருமாற்றங்கள் நிகழ்ந்தாலும் பார்ப்பனிய வர்ணாஸ்ரம ஆதிக்கம் தனது உருவங்களை அதற்கேற்ப மாற்றிக் கொண்டு உயிர்த் துடிப்போடு தன்னை தக்க வைத்துக் கொண்டிருப்பதை வரலாறு இப்போதும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

பெரியார் இறப்புக்குப் பிறகு இயக்க முரண்பாடுகளால் அவர் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் பெரியார் சமஉரிமைக் கழகம், பிறகு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி என்ற பெயர் மாற்றங்களோடு அவர் பெரியாரியலைத்தான் முன்னெடுத்தார். அதிலும் முதன்மையானதாக அவர் ‘வகுப்புரிமை’ என்ற ஒற்றை இலட்சியத்துக்குள்ளேயே உறுதியாக சுழன்றுக் கொண்டிருந்தார்.

இளைய தலைமுறை இன்று பெரியார் என்ற ‘புரட்சிக் கிழவருக்கு’ ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிவித்து ஓவியம் தீட்டுகிறது. அதன் உட்பொருள் பெரியாரின் புரட்சி கருத்துகளை சமூக மாற்றத்தைக் கோரும் இளைய தலைமுறை தன்வயமாக்கிக் கொண்டுவிட்டது என்பது தான்.

தோழர் ஆனைமுத்து இன்றைய இளைய தலைமுறைக்கு, கடந்த தலைமுறை பெரியாரியலின் சாட்சியமாக நிற்கிறார்!

தோழர் ஆனைமுத்து முடிவெய்தினார்; தோழர் ஆனைமுத்து வாழ்க!

- விடுதலை இராசேந்திரன்

Pin It