இந்துத்துவா - பார்ப்பன சக்திகள் - ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதாலேயே காங்கிரஸ் கட்சியின் மீது உடன்பாடு இல்லாதவர்களும் அக்கட்சிக்கே வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு தேர்தலிலும் வந்து விடுகிறது. இந்துத்துவா எதிர்ப்பு சக்திகளின் வாக்கு - எப்படி இருந்தாலும் தங்களுக்குத் தானே கிடைக்கப் போகிறது என்ற இறுமாப்பில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் தமிழின உணர்வுகளை அவமதித்து வருகிறார்கள்.

ஈழத் தமிழர் படுகொலைகளுக்கு எதிராக தமிழர்கள் வெளிப் படுத்தும் உணர்வுகளை ‘தேச விரோதம்’ என்கிறார்கள். கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும் என மிரட்டுகிறார்கள். காங்கிரசின் இந்த இனத் துரோகத்தை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பலப்படுத்தி, ‘இந்துத்துவா’ பார்ப்பன சக்திகளைப் போல் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோக காங்கிரசையும் தமிழர்கள் புறக்கணித்து சரியான பாடம் கற்பித்தாக வேண்டும்.

இதற்கு - வாக்களிக்கும்போது 49(ஓ) என்ற பிரிவை - உணர்வுள்ள தமிழர்கள் பயன்படுத்த முன்வர வேண்டும். இந்தப் பிரிவைப் பயன்படுத்துவதன் நோக்கம், போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்வதாகும்.

இந்திய அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 1962 ஆம் ஆண்டில் இந்த 49(ஓ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டு, வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் இருக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறை மக்கள் மன்றத்தில் பழக்கத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதில் ஆளும் கட்சிகள் அது பா.ஜ.க.வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் கவனமாகவே இருந்து வருகின்றன.

தற்போதுள்ள நடைமுறையின்படி வாக்குச்சவாடி யில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற் றுள்ளதை சரி பார்த்த பிறகு அந்தப் படிவத்தில் வாக்காளரின் கையெழுத்தைப் பெற்று வாக்களிக்கும் சீட்டு வழங்கப்படுகிறது. அப்போது 49(ஓ) பிரிவை பயன்படுத்த விரும்புவோர் அதை அதிகாரியிடம் தெரிவித்தால் 49(ஓ) என்பதைக் குறிப்பிட்டு அதே படிவத்தில் மற்றொரு கையெழுத்தைப் போட வேண்டும்.

ஆனால், பல தேர்தல் அதிகாரிகளுக்கே இப்படி ஒரு ‘புறக்கணிப்பு’ நடைமுறை சட்டத்தில் இடம் பெற் றிருப்பது தெரிவதில்லை. இந்த நிலையில், வாக்களிக்கும் சீட்டுகளிலே வேட்பாளர்கள் சின்னங்கள் இடம் பெற்றுள்ள பட்டியலிலேயே 49(ஓ) என்பதும் இடம் பெற்று விட்டால், வாக்காளர்கள் இந்த உரிமையை இலகுவாகப் பயன்படுத்த முடியும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக மனித உரிமை அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதை வலியுறுத்தி மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் 6 ஆண்டு களுக்கு முன் தொடர்ந்த வழக்கு இன்னும் விசாரணைக்கே வரவில்லை. காரணம் இந்த வழக்கு மனுவுக்கு கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த வாஜ்பாய் ஆட்சியும் தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியும் பதில் மனுவையே தாக்கல் செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதுதான்.

ஆனாலும் சீப்பை மறைத்துவிட்டால் திருமணம் நின்று விடாது’ என்பதுபோல் இத்தகைய நட வடிக்கைகளால் மக்கள் உணர்வுகளை திசைதிருப்பி விட முடியாது. எனவே, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழினத்தின் கோடரிக் காம்புகளாக மாறி நிற்கும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களையும், பார்ப்பன பா.ஜ.க. வேட்பாளர்களையும் படுதோல்வி அடையச் செய்வதற்கு தமிழின உணர்வாளர்கள் 49(ஓ) பிரிவை பயன்படுத்த முன்வரவேண்டும்.

இந்தப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மனித உரிமை அமைப்புகள், சமூக மாற்றத்துக்கான புரட்சிகர அமைப்புகள், ஈழத் தமிழர் விடுதலை ஆதரவாளர்கள் இணைந்து மக்களிடம் மிகப் பெரும் பிரச்சார இயக்கத்தைத் தொடங்க வேண்டும். 

தமிழனை காட்டிக் கொடுக்கும் துரோக கட்சிகளுக்கு இதுவே சரியான பாடமாக அமையும்.

Pin It