periyar 450சட்டசபை தேர்தல்கள் வேலைகள் துவக்கமாகிவிட்டது. அபேக்ஷகர்கள் ஆகஸ்ட் முதல் தேதியில் நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்தாக வேண்டும். செப்டம்பர் 9 தேதியில் தேர்தல் (எலக்ஷன்) ஆனதால் நியமனச் சீட்டு தாக்கல் செய்தவுடன் பிரசாரம் துவக்க வேண்டும். ஆதலால் அபேக்ஷகர்களாய் நிற்பவர்களுக்கு இன்னம் சுமார் ஒன்னரை மாதங்களுக்கு ஓய்வு உரக்கம் இருக்காது.

அது மாத்திரமல்லாமல் அவர்களிடம் நாணயமும் இருக்க முடியாது. அதோடு அவர்களுக்கு தங்கள் மனதிற்கும் வாக்குக்கும் செய்கைக்கும் சிறிதும் சம்மந்தமும் இருக்க முடியாது. யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து எந்த எந்த சமயத்திற்கு எதை எதைச் செய்தால் - சொன்னால் ஓட்டுக் கிடைக்குமோ அந்தபடியெல்லாம் நடந்தும் பேசியும் ஓட்டுச் சம்பாதிக்க வேண்டியதே அவர்களது எலக்ஷன் தர்மமாகும்.

ஏனென்றால் ஓட்டர்கள் பெரிதும் 100-க்கு 90 பேர்கள் மூடர்கள் ஆன தாலும், எஞ்சியுள்ள 100-க்கு 10ல் 7 பேர்கள் சுயநலக்காரர்கள் ஆனதாலும் மீதி 3 பேர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருப்பவர்களானதாலும் பணக் கொழுப்பு சமயோசித தந்திரம் ஆகிய இரண்டும் உடையவர்களுக்கு முதல் வெற்றியும், மேற்படி இரண்டு குணங்களை தனித்தனியே உடையவர்களுக்கு இரண்டாவது வெற்றியுமே கிடைத்து விடும்.

அதில் சிறிதும் சம்சயமே இருக்க முடியாது. ஏனெனில் அப்படிப்பட்ட வர்கள் மாத்திரமேதான் எலக்ஷனில் அபேக்ஷகர்களாய் நிற்க முடியும் படியாக தேர்தல் நிலைமை அமைந்திருக்கின்றது. 1920வது வருஷத்திய சீர்திருத்தம் வருவதற்குமுன் ஒருவாறு பெருமை வேண்டியவர்களும் படித்து உத்தியோகம் வேண்டியவர்களும் மாத்திரமே அபேக்ஷகர்களாய் நிற்க தேர்தலில் இடமிருந்தது.

ஆனால் 1920 வருஷத்திய சீர்திருத்தமோ பெருமையும் உத்தியோகமும் மாத்திரம் அல்லாமல் அதிகாரமும் லட்சக் கணக்கான பணம் வருவாயும் கிடைக்கக் கூடியதாக அமைக்கப்பட்டு விட்டதால் அதிகார ஆசையும் பணத்தாசையும் உள்ளவர்களும் சேர்ந்து அபேட்சகர்களாய் நிற்க வேண்டியதாய் விட்டது.

இந்த ஆசைகளை அஸ்திவாரமாகவே வைத்தே தேர்தலுக்காக பல கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு அதின்பேரால் மக்களுக்கு கூட்டு ஆசைக்காட்டி ஆள்களை சேர்த்துக் கொண்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டு காங்கிரஸ் முதலிய ஸ்தாபனங்களின் மூலம் அப்பார்ப்பனர்கள் தேர்தலை உத்தேசித்தே தேசாபிமானம் காட்டி மக்களை வெகு காலமாய் ஏமாற்றி வந்தது யாவரும் அறிந்த விஷயமேயாகும்.

ஆனால் சமீபகாலமாய் தேசியத்தினுடையவும் தேசாபிமானத்தினுடையவும் யோக்கியதை வெளியாகிவிட்டதால் பார்ப்பனர்கள் தேர்தல்களில் தோல்வியையே அடைய நேரிட்டு விட்டதால் தேர்தலுக்கு நிற்க தைரியமற்று வரவர அவர்கள் தேர்தலை “சீ, அந்த பழம் புளிக்கும்” என்கின்ற முறையில் பகிஷ்காரம் செய்ய வேண்டியதாகி விட்டது.

தமிழ் நாட்டைப் பொருத்த வரை காங்கிரசிற்கும் பார்ப்பனர்களுக்கும் அடியோடு செல்வாக்குக் குன்றி வேறு விதத்தில் ஏமாற்றமடைந்தவர்களும் மற்ற கட்சிகளில் வெறுப்புங் கொண்டவர்களும் மாத்திரமே போய்ச் சேரும்படியான ஸ்தாபனமாகி விட்டது.

இந்தக் காரணத்தால் தமிழ் நாட்டில் காங்கிரசுக்கும் தேசீயத்திற்கும் பார்ப்பனர்களுக்கும் செல்வாக்கில்லாமல் போய் தேர்தல்களில் வெறும் சீர்திருத்தக் கொள்கையின் மீது மாத்திரம் பார்ப்பனரல்லாதார்களேபோட்டிப் போட வேண்டியதாகிவிட்டதால் அவர்களுக்குள்ளாகவே சுயநலத்தின் மீது அர்த்தமற்ற இரண்டு மூன்று கக்ஷிகளை ஏற்படுத்திக் கொண்டு இந்தத் தேர்தலிலும் போட்டிப்போட போகின்றார்கள்.

இப்போட்டியில் மேல்படி கக்ஷிகளுக்கு பெயர்கள் சொல்ல வேண்டுமானால் ஒன்று உத்தியோகத்திலி ருக்கும் மந்திரி கக்ஷியார் என்றும் மற்றொன்று அம்மந்திரி உத்தியோகத்திற்கு வர ஆசைப்படும் கக்ஷியார் என்றும் மற்றொன்று எந்த கக்ஷி ஜெயிக்குமோ அதில் சேரும் கக்ஷியார் என்றும் தான் பிரிக்க முடியுமே அன்றி மற்றபடி வேறு ஏதாவது சரியான கொள்கையை உத்தேசித்துப் பிரித்துச் சொல்ல இடமில்லை.

ஒரு சமயம் ஒரு கக்ஷியை ஜஸ்டிஸ் கக்ஷியார் என்று ஏன் சொல்லக் கூடாது என்று கேட்கப்படுமானால் இப்போது மந்திரிகளாய் இருக்கும் இரு பார்ப்பனரல்லாதாரும் ஆளுக்கு 100, 100 ரூபாய் கொடுத்து ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்து அக்கக்ஷிக் கொள்கைகளை ஒப்புக் கொண்டவர்களேயாவார்கள். ஆதலால் மந்திரிகளும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கையை உடையவர்களே தவிர அக்கட்சியின் எந்த கொள்கைக்கும் எதிரிகளல்ல.

மற்றும் மந்திரியாக வர ஆசைப்படும் கக்ஷி என்பதற்குப் பதிலாக பார்ப்பனரல்லாதார் கக்ஷி என்று சொல்லக்கூடாதோ என்று கேள்க்கப்படுமாயின் அதற்கும் இடமில்லை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் அவர்களும் (மந்திரிக்கு ஆசைப்படும் கக்ஷியார்களும்) பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.

அன்றியும் அத்தீர்மானத்தை ஒரு பொது மகாநாட்டில் ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எண்ணமும் போய் இப்போது தாங்கள் (நிர்வாக சபையில்) தீர்மானித்துக் கொண்டதே போதும் என்று தீர்மானித்துக் கொண்டதாலும் அதை பார்ப்பனரல்லாதார் கக்ஷி என்று சொல்லுவதற்கும் இடமில்லாமல் போய்விட்டது.

ஆகவே இந்த கக்ஷிகளுக்கு மேல் கண்டபடி மந்திரியாய் இருக்கும் கக்ஷி மந்திரியாய் வர ஆசைப்படும் கக்ஷி, எது எது ஜெயிக்குமோ அதில் சேரும் கக்ஷி என்று தான் பெயர்கள் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்த கக்ஷிகளில் இரு கக்ஷியார் மாத்திரம் தங்கள் தங்கள் வேலைத் திட்டங்களை ஒருவாறு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவ்விரண்டையும் அடுத்த வாரம் வெளியாக்கி அதை பற்றிய நமது அபிப்பிராயத்தை பிறகு வெளியிடுவோம்.

பொதுவாகச் சொல்லுமிடத்து பார்ப்பனரல்லாதாரிலேயே இப்படியாக இரண்டு கக்ஷி பிரிந்திருக்க வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். பொதுநலப்பொறுப்பற்ற ஆள்களின் சூக்ஷிகளே பார்ப்பனரல்லாதார் களுக்கு இம்மாதிரி பிளவை உண்டாக்கிவிட்டது என்று சொல்வது மிகையாகாது.

சென்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கக்ஷி தோல்வி அடைந்ததின் பயனாய் அது வெளிப்பட்டு பிரசாரங்கள் செய்து காங்கிரஸ் சார்பாய் இருந்த மந்திரி கக்ஷியை ஒழித்து ஜஸ்டிஸ் கக்ஷி சார்பான மந்திரி கக்ஷியை அமைத்து அதனிடம் பார்ப்பனரல்லாதார் கக்ஷிக் கொள்கைப் பிரகாரமே சரியானபடி வேலை வாங்கி வந்ததுடன் அம்மந்திரி கக்ஷி ஜஸ்டிஸ் கக்ஷிக்குள் அய்க்கியமாகி விட்ட சமயத்தில் அதை அப்படியே ஜஸ்டிஸ் கக்ஷியாக ஆக்கி விடாமல் சிலரின் சுயநல சூக்ஷியானது மறுபடியும் மந்திரி கக்ஷியை தனிக்கச் செய்து அதற்குத் தனி பலமும் ஏற்படுத்திக் கொள்ள இடங்கொடுத்து இப்போது அதை ஒரு சரியான எதிரியாக ஆக்கிக் கொண்டது.

இது மாத்திரமல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியானது (பார்ப்பனரல்லாதார் கட்சியானது) மந்திரி கட்சியை ஒழிப்பதற்கென்று செய்த முயற்சியில் மந்திரி கட்சிக்கு வெட்டின குழியில் தானே போய்விழுந்து விட்டது.

அதாவது அவர்கள் மந்திரிகள் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கின்றார்கள் என்று அதன் மீது பழி கிளப்பி விட்டு கடைசியாக அப்பழிக்குத் தாங்களே ஆளாகிப் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி பார்ப்பனரல்லாதார் கட்சி என்கிற பெயரையே கொன்று விட்டார்கள். இதிலிருந்து ஜஸ்டிஸ் கட்சிக்குப் பெயரும் கெட்டு பலமும் குறைந்ததோடு நாணய மும் போய் மக்களிடம் மதிப்புமில்லாமல் போக வேண்டியதாகி விட்டது.

ஆகவே மந்திரிக் கட்சியும் மந்திரிக்கு ஆசைக் கட்சியுமாய் தேர்தலுக்கு போட்டி போடவேண்டியதாகி காங்கிரஸ் செய்தது போலவே தங்கள் தங்கள் கட்சியின் பேரால் நிற்கும்படி அபேட்சகர்களைக் கெஞ்ச வேண்டியதாகிவிட்டது.

அபேட்சகர்களும் “நீங்கள் ஜெயித்தால் எனக்கு என்ன உத்தி யோகம் கொடுக்கின்றீர்கள்?” “நீங்கள் ஜெயித்தால் எனக்கு என்ன உத்தியோகம் கொடுக்கின்றீர்கள்?” என்று வியாபாரம் பேசி ஒப்பந்தம் செய்யப் பார்க்கின்றார்கள்.

ஒவ்வொரு கட்சியாரும் தங்கள் கட்சிக்கு ஆள்களை சேர்ப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு கேட்டதெல்லாம் கொடுப்பதாய் வாக்களித்து ஏமாற்றி வருவதன்மூலம் தங்கள் தங்கள் கட்சிக்கு 40, 50 பேர்களுக்கு குறையாமல் வருவார்கள் என்று இருவரும் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தந்திரக்காரர்கள் எல்லாம் தாங்கள் ஒரு கட்சிப் பேரும் சொல்லாமல் தனிக் கட்சியின் பேரால் பலர் நிற்கின்றார்கள். எது எப்படி இருந்தாலும் நமது ஆசையெல்லாம் பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள் நெல்லூரில் நாணயத் தவருதலாய் நடந்து கொண்ட போதிலுங்கூட அதனால் ஏற்பட்ட கெடுதியையும் சமாளித்து அக்கட்சியே வெற்றி பெற வேண்டும் என்றே ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அது பார்ப்பனர்களையும் தங்கள் ஸ்தாபனத்தில் அங்கத்தினர்களாய் சேர்த்துக் கொள்வது என்ற தீர்மானத்தோடு தேர்தலுக்கு நிற்குமானால் அது சரியான தோல்வி அடையவேண்டும் என்பதே நமது மனப்பூர்வமான விருப்பமாகும்.

ஏனெனில் அந்தத் தோல்வியானது பார்ப்பனரல்லாத இயக்கத் தலைவர்கள் என்பவர்களுக்கு விரோதமாக முடிந்தாலும் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு இரட்டிப்பு பலனை தருவதோடு இனியாவது கண்டிப்பான கொள்கையோடு கட்சி பரிசுத்தமடையக் கூடும் என்றும் நினைக்கின் றோம்.

நிற்க, சுயமரியாதை இயக்கத்தைப் பொருத்தவரை வரப்போகும் தேர்தல்களில் சுயமரியாதைக் கொள்கைகளை ஆதரிப்பவர்களை ஆதரிப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.

அவ்வியக்கத் தலைவர்களுக்கும் நிர்வாகஸ்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் யார் எக்கட்சியில் இருந்தாலும் இயக்கக் கொள்கைகள்தான் பிரதானமாக இருக்குமே ஒழிய கட்சி என்பது இரண்டாவதேயாகும் என்பதையும் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 20.07.1930)

Pin It