தலையங்கம்
இராணுவத்தின் முப்படைகளையும் - தமிழர்கள் மீது ஏவி, அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்கி, வாழ்வுரிமையைப் பறித்து வரும் சிறீலங்கா அரசிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உரிமைகளை மீட்டெடுக்கவும், ஈழத் தமிழ் மக்கள் உருவாக்கியுள்ள ராணுவம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம்.
ஈழத் தமிழர்களின் குடும்பத்திலிருந்து ஆண்களும், பெண்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, தங்களின் விடுதலைக்காக, உயிர்த் தியாகம் செய்து வருவதை உலகமே பார்த்து நிற்கிறது.
ஆனால் - இந்தியாவில் மட்டும் பார்ப்பன சக்திகள் தங்களின் ஊடக வலிமையைப் பயன்படுத்தி, தமிழ் மக்கள் உருவாக்கிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாதியாக சித்தரித்து, பொய்யானப் பிரச்சாரத்தைத் தீவிரமாகப் பரப்பி வருகின்றன.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், ஈழத் தமிழர் உணர்வுகள் முற்றாக நசுக்கப்பட்டு, ‘பொடா’ அடக்குமுறைச் சட்டங்களை தமிழின உணர்வாளர்கள் மீது ஏவினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், ஓரளவு சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியது. பார்ப்பன இறுக்கம் சற்று தளருவது போன்ற தோற்றம் உருவானது.
திரைப்படக் கலைஞர்கள், கவிஞர்கள் கூட - ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வெளியே வந்தனர். செஞ்சோலை எனும் குழந்தைகள் காப்பகத்தில், 63 பச்சிளங் குழந்தைகள், சிங்கள விமான குண்டு வீச்சுக்குப் பலியாகி, பிணமாகக் கருகியதைப் பார்த்து, மனித நேயம் கொண்டோர் கண்ணீர் விட்டனர். தமிழக சட்டமன்றம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. பார்ப்பனர்களுக்கு இது பொறுக்கவில்லை.
1. ஜெயலலிதா
2. ‘இந்து’ ராம்
3. ‘துக்ளக்’ சோ
4. தினமலர்
5. சுப்ரமணிய சாமி.
- என்ற பார்ப்பன அணி - எங்கே தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவு அலை உருவாகிவிடுமோ என்று பதை பதைத்தது.
தமிழர்களின் ராணுவமான விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் - குண்டுவீசி, ராணுவம் ஆக்கிரமித்தபோது - கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து யாழ்ப்பாணத் தமிழர்களை வெளி உலகோடு இணைக்கும் ஒரே சாலை வழி பாதையை மூடி மக்களை யாழ்ப்பாணத்துக்குள்ளே இலங்கை அரசு சிறை வைத்தபோது - ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் குடியிருப்புகள் மீது ராணுவம் குண்டு வீசி கொன்று குவித்தபோது - பல்லாயிரக்கணக்கில் உயிரைப் பணயம் வைத்து, தமிழ்நாட்டை நோக்கி தமிழர்கள் அடைக்கலம் தேடி அகதிகளாக ஓடி வந்தபோது (இப்போதும் வருகிறார்கள்), இந்தப் பார்ப்பன ஏடுகள், இலங்கை ராணுவத் தாக்குதலைக் கண்டித்தனவா? இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்தனவா? ஆனால் இதை எதிர்க் கொள்வதற்கு வேறுவழியின்றி, ராணுவத் தாக்குதலில் விடுதலைப்புலிகள் இறங்கினால் - பயங்கரவாதம் தலைதூக்குகிறது என்று, ஓலமிடத் தொடங்கிவிடுகிறார்கள்.