20.8.2006 வெளிவந்துள்ள ‘ராணி’ வார ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை
பிரதமர் மன்மோகன்சிங்கின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், சென்னைக்கு வந்திருந்தார். பிரதமரின் தூதராக வந்த நாராயணன், முதல்வர் கலைஞர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அதன்பின், ‘மத்திய அரசும், மாநில அரசும் இலங்கை விவகாரத்தில் ஒரே கொள்கையுடன் இருக்கின்றன’ என்று நாராயணன் கூறினார்.
என்ன கொள்கை?
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் கொள்கை என்ன என்பதையும் நாராயணன் தெரிவித்தார். அவர் சொன்னது:
1. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்தி, உடன்பாடு காண வேண்டும்.
2. அந்தப் பேச்சில் இந்தியா கலந்து கொள்ளாது.
3. புலிகளையும், தமிழர்களையும் வேறுபடுத்தி இலங்கை அரசு பார்க்க வேண்டும்.
4. இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்து இருக்கிறது. இதில் கருணாநிதி மாறுபடுகிறார். ‘இந்தத் தடை விவாதத்துக்கு உரியது’ என்று கருணாநிதி கூறுகிறார். இது பற்றி நாராயணனிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.
“இது விவாதத்துக்கு உரியதே அல்ல. ஏனென்றால், புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்குத் தடை விதித்தது சரிதான்” என்று நாராயணன் சொன்னார். அதே மூச்சில், “புலிகளால் தமிழ்நாட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இந்தியாவுடன் நட்பாக இருக்கப் புலிகள் விரும்புகிறார்கள்” என்றும் அவர் சொல்லுகிறார்.
உண்மையில் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் விடுதலைப் போர் வீரர்கள். ஈழத் தமிழரின விடுதலைக்காகத் துப்பாக்கி தூக்கிப் போராடுகிறார்கள். விடுதலைப் போராளிகள் எப்படிப் பயங்கரவாதி ஆவார்கள்?
அது இலங்கையில் நடக்கும் போராட்டம். புலிகளால் தமிழ்நாட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாராயணனே சொல்லுகிறார். புலிகள் இந்தியாவுடன் நட்பாக இருக்க விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தியா ஏன் தடை விதிக்க வேண்டும்?
“ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் புலிகள்” என்பார்கள்.
ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை “தடா” சட்டப்படி இரகசியமாக நடந்த ஒன்று. அது பகிரங்கமாக நடந்திருந்தால், பல உண்மைகள் வெளிவந்திருக்கும். அத்தனையையும் ‘தடா’ சட்டத்தால் மூடி மறைத்துவிட்டார்கள். ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது வருந்தத்தக்க ஒன்றுதான். ஆனால், சிங்களவர்களைக் காப்பாற்ற, தமிழர்களைக் கொல்ல அவர் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதை மறக்க முடியுமா?
எனவே, நடந்ததையே நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. நடப்பது நடக்க வேண்டும்.
இலங்கை போர் விமானங்கள் குண்டுமாரி பொழிந்து, தமிழர்களை - தமிழ்ப் பெண்களை, குழந்தைகளை கொன்று குவிக்கிறதே! இதைத் தடுக்க வேண்டாமா? கண்டிக்க வேண்டாமா? தடுக்கத்தான் இல்லை. இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்யலாமா? மூதூரில் சுனாமி நிவாரண வேலையில் ஈடுபட்டிருந்த 17 தமிழர்களை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. இதை இந்தியா கண்டித்ததா? கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இலங்கை அரசுக்கு இந்தியா வழி காட்டுகிறது என்று நாராயணன் பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார்! இதுதான் இந்தியா காட்டும் வழியா?