விடுதலைப்புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டஇயக்கம் என்பதால் இந்த இயக்கம் பற்றிப் பேசாமல் தமிழர்கள் வாயில் ‘பிளாஸ்திரி போட்டு’ ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சு.ப. தமிழ்ச்செல்வன் மறைவுக்கு ‘எனக்கு தமிழ் ரத்தம் ஓடுகிறது’ என்று கூறி இரங்கல் கவிதை எழுதிய தமிழக முதல்வர், உடனே காங்கிரசின் மிரட்டலுக்கு வழி மொழிந்து விட்டார். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது, இரங்கல் கூட்டம் நடத்துவது, ஊர்வலம் போவது, சுவரொட்டி ஒட்டுவது, சட்டப்படி குற்றம் என்று தமிழக காவல்துறை இயக்குனரும் அறிவித்து விட்டார்.

தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதாலேயே அந்த இயக்கத்தைப் பற்றிப் பேசுவதற்கே தடை போட்டு இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமை, பேச்சுரிமையையும் சேர்த்துப் பறித்துவிட வேண்டும் என்கிறார்கள் காங்கிரஸ் காரர்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் தீர்மானம் போடுகிறது. அன்றைக்கு காங்கிரஸ் கட்சி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை அறிவித்தபோது, பிரிட்டிஷ் அரசு அதைத் தடை செய்தது. தடையை மீறினர் காரங்கிரசார்.

காங்கிரஸ் கட்சி போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் ஆட்சி ரவுலட் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதை எதிர்த்து குரல் கொடுத்த சீக்கியர்களை அன்றைக்கு ராணுவத் தலைமைப் பொறுப்பை ஏற்ற மைக்கேல் டயர் சுட்டுக் கொன்றான். 800 பேர் பிணமானார்கள். வரலாற்றில் தங்கள் நாட்டின் விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் எல்லாம் ஒரு காலத்தில் இப்படி தடை செய்யப்பட்டவையாகத்தான் இருந்திருக்கின்றன.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை உலகின் பல்வேறு நாடுகள் - பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தாலும் இந்தியா, அதை விடுதலை இயக்கமாக அங்கீகரித்து, அந்த இயக்கத் தலைவர் யாசர் அராபத்துக்கு இந்தியா வரவேற்பு தந்தது.

ராஜீவ் கொலை என்ற ஒரு சம்பவத்தை மட்டுமே முன்னிறுத்தி, எத்தனை ஆண்டுகாலம் ஒரு நாட்டின் விடுதலை இயக்கத்தைத் தடைப்படுத்திக் கொண் டிருப்பது?

இந்தியாவின் தேசத் தந்தை காந்தியையே சுட்டுக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம், நிரந்தரமாக தடை செய்யப்பட்டுவிட்டதா என்ன?

அந்த இயக்கம் இன்னும் உயிர்த் துடிப்போடு மதவெறியைப் பரப்பி, சமூகத்தைக் கூறுபோட்டு வருகிறதே. அதன் செயல் பாடுகள் முடக்கப்பட்டுவிட்டதா? அதன் பிரச்சாரம் தடுக்கப்பட்டுவிட்டதா?

பார்ப்பனர் என்றால் ஒரு நீதி, போராடுவது தமிழன் என்றால் ஒரு நீதியா?

பயங்கரவாத இயக்கங்களை காங்கிரஸ் கட்சியே வளர்த்துவிட்டது உண்டா? இல்லையா? ஆதாரங்கள் வேண்டுமா?

• பஞ்சாபிலே காலிஸ்தான் கேட்டு போராடிய சீக்கியர்களுக்கு எதிராக - இந்திய அரசே தனது உளவுத் துறை மூலம் சீக்கிய ஆயுதம் தாங்கிய குழுவை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கி களத்தில் இறங்கிய சீக்கியப் போராளிகளுக்கு எதிராகவே போராட வைத்தது.

• அசாமில் - போடோ பழங்குடியினர் தனி மாநிலம் கேட்டு ஆயுதம் ஏந்திப் போராடினார்களே, தெரியுமா? அந்தப் போடோ பழங்குடி யினருக்கான ஆயுதம் தாங்கிப் போராடும் “பயங்கரவாத” அமைப்பை உருவாக்கியதே, இந்திய அரசுதான். மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த வேத்மார்வா - இந்தியாவில், இந்திய அரசே உளவு நிறுவனங்களின் மூலம் வளர்த்துவிட்ட “பயங்கர”வாத இயக்கங்கள் பற்றி, ஒரு நூல் எழுதியுள்ளார். நூலின் பெயர் “"Uncivil Wars: Pathology of Terrorism in India" என்பதாகும். அதிலே - இந்த அதிர்ச்சியான தகவல்களை பதிவு செய்துள்ளார்.

• பல்வேறு - தமிழ் ஈழப் போராளி குழுக்களுக்கு ஆயுதங்கள் தந்து, இந்திய ராணுவத்தின் பயிற்சியை உளவுத் துறை வழியாக இந்திய அரசு வழங்கியது உண்டா? இல்லையா? ஈழத் தமிழர் போராட் டத்தை இந்தியா தங்களது பிராந்திய நலனுக்குப் பயன் படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டது யாருக்குத் தெரியாது? அதற்கு உடன்பட மறுத்த விடுதலைப்புலிகளை மட்டும் தனிமைப்படுத்தி, ஏனைய குழுக்களை, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மோதவிட்டது, இந்தியாவின் உளவுத் துறை என்பதை மறுக்க முடியுமா?

• இந்திய ராணுவம் - ஈழத்திலிருந்து திரும்பியபோது, தாங்கள் வளர்த்துவிட்ட ஆயுதம் தாங்கிய குழுக்களை தனிக் கப்பல் மூலம், சட்ட விரோதமாக தமிழ்நாட்டுக்கு இந்திய அரசு அழைத்து வந்ததும் - அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த முதல்வர் கலைஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கப்பலை விசாகப்பட்டினத்துக்குக் கொண்டு போய் “பயங்கரவாத” குழுக்களை ஒரிசாவிலே இந்திய அரசு தங்க வைத்தது உண்மையா? இல்லையா? ஜெயின் விசாரணை ஆணயத்தின் அறிக்கையில் அரசு ஆவணங்களாக, இந்த உண்மைகள் பதிவாகியிருப்பதை மறுக்க முடியுமா?

தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி பேசவே கூடாது என்பது அய்.நா.வின் மனித உரிமை கோட்பாடுகளுக்கே எதிரானது என்பது இவர்களுக்குத் தெரியுமா?

அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு - ஆதரவாக பேசலாம்; மருத்துவ உதவி செய்யலாம்; நிதி மட்டும் வழங்கக்கூடாது என்ற விதிமுறைகள் இருக்கிறதே, தெரியுமா?

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங் களோடு அரசே ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்து கிறதே. இது உள்ளூர் காங்கிரசாருக்கு தெரியுமா?

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை திரும்பிப் பார்க்கவே கூடாது; அவர்களுடன் பேசவே கூடாது என்பதுதான் இவர்களின் ஜனநாயகமா? பார்ப்பன நாயகமா?

இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் 2006-2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக் கிறது. அதில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில், தீவிரமாக ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக்களின் பெயர்களையும், இம்மாநிலங் களில் ராணுவத்துக்கும் போராடும் குழுக்களுக்கு மிடையே நடந்த மோதல்கள், கொல்லப்பட்டோர் விவரங்களையும் விரிவாக வெளியிட்டிருக்கிறது. அதே அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது;

“வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் தாங்கிப் போராடும் பல்வேறு ராணுவ குழுக்களுடன், இந்தியா சமாதானப் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதோடு, போர் நிறுத்த ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது”

என்று அறிவித்து, அப்படி பேச்சு வார்த்தை நடத்தும் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய பட்டியலையும் இந்திய உள்துறை அமைச்சகமே தெரிவித்துள்ளது. அப்படியே அதை கீழே தருகிறோம்.

2.36 இந்திய அரசு - ‘நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்’ எனும் ஆயுதக் குழுவுடன் (அய்சாக் மொய்சா, பிரிவு) 1997 ஆகஸ்ட் 1 ஆம் தேதியிலிருந்து போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பிறகு இந்த ஒப்பந்தம் 2007 ஜுலை 31 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

2.37 : மேற்குறிப்பிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சர்கள் குழுவுக்கு தி.கே.பத்ம நாபய்யா (ஓய்வு பெற்ற உள்துறை செயலாளர்), தேவையான உதவிகளை செய்து வருகிறார். அமைச்சர் ஆஸ்கார் பெர்ணான்டஸ் தலைமையிலான அமைச்சர்கள் குழுவும் (தடை செய்யப்பட்ட) நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில் பிரதிநிதிகளும், 2006 டிசம்பர் 4-6 தேதிகளில் ஆம்ஸ்ட்டர்டாம் நகரில் சந்தித்துப் பேசினார்கள். எந்த முடிவும் உருவாகவில்லை. மீண்டும் கூடிப் பேச தீர்மானிக்கப்பட்டது.

2.38 : இந்திய அரசு நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) என்ற ஆயுதம் தாங்கிய குழுவின் பிரதிநிதிகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண் டுள்ளது. 2004 ஏப்.28 முதல் இது தொடருகிறது. ஏப்.27, 2007 வரை போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2.39 : ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக் களுடன், மோதல்களை நிறுத்தி வைப்பதற்கும் - இந்தியா, சில குழுக்களுடன் உடன்பாடு செய்துள்ளது. அசாமில் போடோ தேசிய ஜனநாயக முன்னணியுடன் இதற்கான ஒப்பந்தம் 2005, மே 25 இல் கையெழுத்தாகியது. 2007 மே வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

2.40 : வடகிழக்கு மாநில ஆயுதக் குழுவான அய்க்கிய மக்கள் ஜனநாயக ஒருங்கிணைப்பு (யு.பி.டி.எஸ்.) என்ற ஆயுதம் தாங்கிய குழுவுடன் அரசு சிறப்பு அதிகாரிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏப்.1, 2002 இல் இது தொடங்கியது. 2007 ஜூலை 31 வரை, அரசு ராணுவ ‘தாக்குதலை நிறுத்தி வைக்கும்’ உடன்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அசாமிலுள்ள திமாஹலன் தாவோகா (டி.எச்.டி.), மேகலாயாவிலுள்ள ‘அச்சிக் நேஷனல் வாலான்டிர் கவுன்சில்’ (அச்சிக் தேசிய தொண்டா குழு) ஆகிய ஆயுதம் தாங்கிய குழுக்களுடன் ராணுவம் தாக்குதலை நிறுத்தி வைக்கும் உடன்பாடுகளை மேற் கொண்டு - உடன்பாடு 2007 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டது.

அசாமில் ஆயுதம் தாங்கிப் போராடும் ‘உல்பா’ தீவிரவாதக் குழுவுடன் இந்தியா பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள உல்பா “தீவிரவாதிகள்” 5 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, அசாம் மாநில அரசுடன் கலந்து பேசி, இந்தியா ஏற்றுக் கொண்டு அவர்களை (“பயங்கரவாதிகளை”) விடுதலை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

2006 ஆகஸ்டு 13 ஆம் தேதியிலிருந்து இந்த அமைப்புடன், ராணுவத் தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் உடன்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டவையெல்லாம் காங்கிரஸ் கட்சி தiலைமையில் நடக்கும் அய்க்கிய முன்னணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல் பாடுகளை விளக்கி அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.

இந்த இயக்கங்கள் மீதான தடைகள் ஒரு பக்கம் நீட்டிக்கவே செய்கின்றன. மறு பக்கத்தில் ரகசிய பேச்சு வார்த்தை, போர் நிறுத்தம், தாக்குதல் நிறுத்தி வைப்பு என்ற சமரசங்கள்!

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சமரசம் பேசி போர் நிறுத்தம் செய்வார்களாம்!

ஆனால் - தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் மீது, காலம் முழுதும் தடை போட்டு - பேசவோ, கண்ணீர் வடிக்கவோ, கூடாது என்று மிரட்டுவார்களாம்!

சத்தியமூர்த்தி பவன் சத்தியமூர்த்திகளே!

அரிவாள்களுடன் கட்சி அலுவலகத்துக்குப் போகும் காந்தியவாதிகளே!

உங்கள் கட்சித் தலைமையிடம் வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுடன் பேசக் கூடாது; தொடர்பு கொள்ளக் கூடாது; அவர்கள் பயங்கரவாதிகள் என்று உங்களால் கூற முடியுமா? அப்படி தீர்மானம் போட முடியுமா?

தமிழர்கள் என்றால் மட்டும், உங்களுக்கு அவ்வளவு அலட்சியமா?

Pin It