தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்யலாம் என்று, தமிழக அரசு நியமித்த எம். ஆனந்தகிருட்டிணன் தலைமையிலான 6 பேர் அடங்கிய குழு, தமிழக முதல்வர் கலைஞரிடம், தனது பரிந்துரையை வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்று, தமிழக சட்டமன்றத்தில், அடுத்த மாதம் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, தமிழக அரசு சட்டம் கொணர இருக்கிறது. கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்கல்விக்கு ‘நந்தி’யாக நின்ற நுழைவுத் தேர்வை ஒழிப்பதில் திட்டமிட்டு விரைந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட தி.மு.க. ஆட்சியின் இந்த மகத்தான சாதனையைப் பாராட்டி வரவேற்கிறோம்.

அதே போல் - தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி, சாதி ஆதிக்க, வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஊராட்சிகளின் தனித் தொகுதிகளை மேலும் நீட்டித்து - தேர்தல் நடத்தி, ‘தலித்’ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வழி வகுத்துள்ளது - தி.மு.க. ஆட்சி. அந்தத் தலைவர்களுக்கு தலைநகரில் பாராட்டு விழா நடத்தி - அந்த ஊராட்சிகள் ஒவ்வொன்றுக்கும் அரசு சார்பில் தலா ரூ.20 லட்சமும், தி.மு.க. சார்பில் தலா ரூ.5 லட்சமும் நிதி வழங்கி, தலித் மக்களின் சுயமரியாதையை அரசு அங்கீகரித்துள்ளதைப் பாராட்டுகிறோம்.

69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது - தமிழக அரசு சார்பில் - முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொராப்ஜி, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் அந்த் அர்ஜுனா, முன்னாள் சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி ஆகிய தலைசிறந்த வழக்கறிஞர்களை நியமித்து, வழக்குக்கு உறுதி சேர்த்துள்ளதையும் பாராட்ட வேண்டும். இதன் காரணமாகவே - தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் - ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதை, மறு ஆய்வு செய்யப் போவதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதா, தி.மு.க. அரசை குறை கூறியிருப்பது உள் நோக்கம் கொண்ட, அர்த்தமற்ற குற்றச் சாட்டு என்பதே நமது கருத்து. 69 சதவீத இடஒதுக்கீடுக்கு தடைகோரி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது - அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதா அரசின் வழக்கறிஞர், 9வது அட்டவணையில் இந்த சட்டம் சேர்க்கப்பட்டது என்ற கருத்தையே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, வி.பி. சிங், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பித்தபோது, அவரது ஆட்சியைக் கவிழ்த்ததில் - அ.இ.அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டு.

அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வி.பி.சிங், இப்பிரச்சினையை முன் வைத்து, நம்பிக்கை ஓட்டுக் கோரிய போது, அவருக்கு எதிராகவே பா.ஜ.க.வினரோடு சேர்ந்து வாக்களித்தனர் என்பதை மறந்துவிட முடியாது. மருத்துவ மேல்பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை மய்ய அரசிடம் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் ஒப்படைத்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. இந்த 50 சதவீத மருத்துவ உயர் பட்டப்படிப்புகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இல்லாமலே, இன்றளவும் நிரப்பப்பட்டு வருகிறது. எனவே, இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் - ஜெயலலிதா குறை கூறுவதற்கு தார்மீக உரிமை இல்லை என்பதே நமது கருத்து.

இடஒதுக்கீட்டுக் கொள்கையில் உறுதியுடன் செயல்பட்டு வரும் தி.மு.க. ஆட்சி, நாடாளுமன்றத்தில், 27 சதவீத இடஒதுக்கீட்டை குழி பறிக்க வரும் மசோதாவையும் நிறைவேற்றவிடாமல் தடுத்து நிறுத்துவது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

Pin It