தலையங்கம்

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. அந்த இயக்கத்துக்கு உதவிகள் செய்வதுதான் குற்றம் என்று பொடா சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் 16.12.2003 இல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேந்திரபாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேதான் ஜெயலலிதா ஆட்சியில் பொடாவில் கைது செய்யப்பட்டிருந்த பழ.நெடுமாறன், வை.கோ. உள்ளிட்டோர், சுமார் ஒன்றரையாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா, தவறாக சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர் மீது உரிமைப் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா, தனது தவறான கருத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் நியாயப்படுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் ‘முரசொலி’ ஏட்டில் (பிப்.19) விளக்கமாக விடுத்துள்ள அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பகுதிகளையே எடுத்துக் காட்டியுள்ளார்.

“உள் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடாச் சட்டம் 3 (1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ளபோது ஒரு நபர், ‘பகிரங்கமாக அறிவிப்பதாலோ’ (பொடாவின் 20வது பிரிவு) அல்லது, “ஆதரவைக் கோரினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ” அல்லது “ஏற்பாடு செய்வதினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தில் பேசினாலோ” (பொடாவின் 21வது பிரிவு), ஒரு (பயங்கரவாத) அமைப்பின், எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கரவாதச் செயலை செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்? அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” (‘முரசொலி’ பிப்.19) என்று கலைஞர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டியுள்ளார்.

பார்ப்பன ஜெயலலிதாவுக்கு, இது ஆணித்தரமான மறுப்பு என்பதில் அய்யமில்லை. ஆனால் இப்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக இருந்தும்கூட, தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தாலும், கூட்டம் நடத்தினாலும், பொதுக் கூட்டமாக இருந்தாலும் அறையில் நடக்கும் கூட்டமாக இருந்தாலும், அது சட்டப்படி குற்றம் என்று, உள்துறையை தம்மிடம் வைத்துள்ள முதல்வரே, காவல்துறை இயக்குநர் வழியாக அறிவித்துள்ளாரே, அது சரி தானா? உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது அல்லவா? இதுதான் நாம் எழுப்ப விரும்பும் கேள்வி! இன்னும் ஒருபடி மேலே போய் இதேபோல் கூட்டம் நடத்தினால், 1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத செயல்பாடுகள் சட்டம் பாயும், என்று சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் வழியாக தி.மு.க. அரசு அறிவித்துள்ளதே; இது நியாயமா?

சட்டத்தையே முறைகேடாகப் பயன்படுத்துவது அல்லவா? சட்டவிரோத செயல்பாடுகள் சட்டத்திலே கூட கூட்டம் போட்டு பேசுவது சட்ட விரோதம் என்று கூறப்படவில்லையே! அந்த சட்டத்தின் பெயரே சட்டவிரோத ‘செயல்பாடுகள்’ என்றிருக்கும்போது, எந்தச் செயல்பாடுமின்றி, மக்களிடம் கூட்டம் போட்டுப் பேசினாலே இந்தச் சட்டம் பாயும் என்பது எப்படி சரியாகும்? காங்கிரசாரையும் பார்ப்பனர்களையும் திருப்திப்படுத்த தமிழக அரசு, தமிழின உணர்வுகளை நசுக்கலாமா என்ற வேதனையான கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. பார்ப்பன ஜெயலலிதா ‘பொடா’ சட்டத்தை தவறாகப் பார்ப்பன உணர்வோடு பயன்படுத்தினார் என்றால், தமிழக அரசும், தமிழின உணர்வுக்கு எதிராக அதே தவறைச் செய்யலாமா என்பதை மிகுந்த கவலையுடன், சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்

செங்கல்பட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டின் 80 ஆம் ஆண்டு விழாவில் பேசிய முதல்வர் கலைஞர் பெருமைமிகு பெரியார் பரம்பரையையும், அவர் வலியுறுத்திய சுயமரியாதையையும் உணர்ச்சிப்பூர்வமாக சுட்டிக்காட்டி பேசியுள்ளது, நமக்கு பெருமகிழ்வைத் தருகிறது. அதே உரையில் அந்த முதல் சுயமரியாதை மாநாட்டுக்கே, பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூக்குரலிட்ட வரலாற்றை ‘திராவிடன்’ ஏட்டிலிருந்து எடுத்துக் காட்டிப் பேசியிருக்கிறார். இந்த வரலாற்றை அறியும்போது, நமது உள்ளத்தைக் குடையும் கேள்வி இதுதான்:

1929 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடந்த நிர்வாகமே - பார்ப்பன எதிர்ப்புகளைப் புறந்தள்ளி, பெரியார் மாநாட்டுக்கு அனுமதி தந்திருக்கும்போது, பெரியார், அண்ணா வழி வந்த கலைஞர் ஆட்சி, இவ்வளவு காலத்துக்குப் பிறகு, பார்ப்பனிய சக்திகளின் மிரட்டலுக்கு அஞ்சி, பெரியார் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து வருகிறதே. ஈழத் தமிழர் பிரச்சினை மட்டுமல்ல; பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டங்களுக்குக்கூட - பா.ஜ.க., இந்து முன்னணி மிரட்டலுக்கு பணிந்து, தமிழக காவல்துறை அனுமதி மறுக்கிறதே; இது நியாயம் தானா?

1929 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டு காலத்திலிருந்து இன்று வரை பார்ப்பனர்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லாத போது, அவர்களை திருப்திப்படுத்தும் முயற்சிகளில் என்ன பயன் ஏற்படப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்புவது நமது கடமையாகிறது!

Pin It