அ.இ.அ.தி.மு.க. தலைமையகத்தில் சசிகலா, தினகரன் படங்கள் அகற்றப்பட்டன!

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் தளைப்படுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்காக அவரை வெளியில் எடுத்து, வேண்டு மென்றே இழிவுபடுத்தி, எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது தில்லி காவல்துறை!

அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் இவற்றைக் கண்டிக்கவில்லை! அ.இஅ.தி.மு.க.வினரே கண்டிக்காத நிலையில் வெளியில் வேறு யார் கண்டிப்பார்கள்?  ஒரு மாதத்திற்கு முன் “மாண்புமிகு சின்னம்மா”வின் காலில் விழுந்து, எழுந்து, மூச்சுக்கு மூச்சு “மாண்புமிகு சின்னம்மா”வின் புகழ் பாடிய அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள், இப்போது ஏன் அவரை இப்படி இழிவுபடுத்து கிறார்கள்?

துணைப் பொதுச்செயலாளர் தினகரன் காலடியைக் காவல் தெய்வத்தின் கருவறையாகக் கருதிய அ.இ. அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்ட அல்லது  இரண்டுங்கெட்டான் தலைவர்கள், இப்போது தினகரனை அனாதையாக விட்டது ஏன்?

சொந்த ஆதாயத்திற்காக செயலலிதாவின் அடிமைகளாக, அடியாட்களாகச் செயல்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பிரமுகர்களும், தங்களது அடியாள் அதிகாரத்தைத் தொடர, தாங்கள் கொள்ளையிட்டதைக் காத்துக் கொள்ள, மேலும் கொள்ளையைத் தொடர, செயலலிதா “தரத்தில்” ஒரு “தாதா”த் தலைவரை சின்னம்மாவிடம்  அடையாளம் கண்டார்கள். அவர்  ஊழல்  வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைபடப் போன போது, தமது வாரிசாக, தம் அக்காள் மகன் தினகரனைத் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டுப் போனார்.

உடனே அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆதாயக் கும்பல் தினகரனைத் தாள் பணிந்து தோள் சுமந்தது. ஊழல் கும்பலின் உற்பத்திதான் தினகரன்; எனவே எளிதில் மாட்டிக் கொண்டார்.

எங்காவது மாடு செத்தால், எலி செத்தால், கழுகுக்கு மூக்கு வேர்த்து விடுமாம்! பா.ச.க. என்ற தில்லிக் கழுகுக்கு செமையாக மூக்கு வேர்த்து விட்டது. அ.இ. அ.தி.மு.க.வைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப்படுத்துகிறது!  இதில் அ.தி.மு.க.வை ஆதரிப்பதா? பா.ச.க. நடவடிக்கைகளை ஆதரிப்பதா என்ற குழப்பம் தமிழ்நாட்டில்!

அ.தி.மு.க. பெருச்சாளிகள் வேட்டையாடப்பட வேண்டியவையே என்று மனச்சான்று கூறுகிறது. மறுபக்கம் வேட்டையாடுபவை பா.ச.க. ஓநாய்கள் அல்லவா என்று அறிவு எச்சரிக்கின்றது!  இப்படிப்பட்ட இக்கட்டுக்கும், சீரழிவுக்கும் தமிழ்நாட்டைக் கொண்டு வந்து - முச்சந்தியில் நிறுத்தியவர் செயலலிதா!

அறமற்ற, சனநாயகமற்ற, ஒற்றை எதேச்சாதிகாரத் தலைமை கொண்ட கட்சியாக அ.இ.அ.தி.மு.க.வை மாற்றினார் செயலலிதா! கையூட்டு வாங்குவதை நிரந்தர நிர்வாக ஏற்பாடாக்கினார். இப்படியாக அண்டிப் பிழைப்போரின் ஆராதனைத் தெய்வமாக செயலலிதா விளங்கினார்.

இனியாவது தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் மீண்டும் கேவலப்படாமல் இருக்க வேண்டுமானால் செயலலிதா பாணி அரசியலை மறுக்கும் நேர்மையும் விழிப்புணர்ச்சியும் பெறவேண்டும்.

அப்படியென்றால் கருணாநிதி பாணி அரசியலை ஏற்க வேண்டுமா? கூடாது! செயலலிதாவின் மறைமுகக் குருநாதர் கருணாநிதிதான்!  தமிழ்நாட்டின் எல்லாச் சீரழிவுகளின் தொடக்கமும் கருணாநிதியாகத்தான் இருப்பார்! கருணாநிதியின் விசுவரூபம்தான் செயலலிதா!

செயலலிதா - புடவை கட்டிய கருணாநிதி! கருணாநிதி - வேட்டி கட்டிய செயலலிதா! ஸ்டாலினோ வேட்டி - புடவை இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டிக் கொள்பவர்!

அ.இ.அ.தி.மு.க. - மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு வெளியேதான், அவற்றின் துணை ஆற்றல்களாகச் செயல்படும் பல்வேறு கட்சிகளுக்கும் வெளியேதான் தமிழ் மக்கள் இன்று உரிமைப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே அன்றாடம் மக்கள் போராட்டங்கள் அதிகம் நடைபெறுவது தமிழ்நாட்டில்தான்!

அந்த மக்களைப் பாருங்கள்! அதோ முன்னணிப் படைபோல் மாணவர்களும் இளைஞர்களும் மக்களுக்கு முன் செல்கிறார்களே, அவர்களைப் பாருங்கள்! நல்லோரே நாட்டோரே அவர்களைப் பார்த்து நம்பிக்கை கொள்ளுங்கள்! அந்தப் புதிய எழுச்சியிலிருந்து புதிய இலட்சிய அரசியலை வார்த்தெடுக்க முன் வாருங்கள்!  செயலலிதா, கருணாநிதி காட்டிய பாதையை மட்டுமல்ல, அவர்கள் வெளிப்படுத்திய “பண்பாட் டையும்” மறுக்கப் பழகுங்கள்!

அவர்களை மறுப்பது, கடினமல்ல! இதோ சசிகலாவின் காலில் விழுந்தவர்கள், தினகரனைத் தோள் சுமந்தவர்கள் அவர்களை மறுக்கவில்லையா? அதன் அடுத்தகட்ட மன வளர்ச்சிதான், செயலலிதா - கருணாநிதி  “அரசியலை” மறுப்பது!

செயலலிதா - கருணாநிதி அரசியலை மறுப்பதும், ஆரிய ஏகாதிபத்திய பா.ச.க. ஆக்கிரமிப்பை முறியடிப்பதும் ஒரே வேலைத் திட்டத்தின் இரு கூறுகள்! ஒரே அணிவகுப்பின் இரு முழக்கங்கள்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைக்கும், தமிழ்த் தேசியம் இதுதான்!

கும்பகோணம் டிகிரி காப்பிக் கடைபோல் தமிழ்த்தேசிய கடைகள் பல இருக்கின்றன! இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்து சரியான தமிழ்த்தேசிய அமைப்பைத் தேர்வு செய்வதே தமிழர்களின் புதிய வரலாற்றைப் படைக்கும்!

Pin It