ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அவர் வெற்றிபெற்ற சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தல், வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது ஒரு வழக்கமான இடைத்தேர்தல் இல்லை. இதற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அது பல துண்டுகளாகப் பிரிந்திருக்கிறது. சசிகலாவின் தலைமையின் கீழ் ஓர் அணியும், பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் ஓர் அணியும் நிற்க, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளார். எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் சந்திரன் என்பவர் சில நாள்களுக்கு முன் திருச்சியில், தன் பங்கிற்கு ஒரு புதுக் கட்சியை அறிவித்துள்ளார். இன்னும் எத்தனை அண்ணன் மகன்களும், மகள்களும் புறப்படுவார்களோ தெரியவில்லை.
மேலே உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே எதிரி தி.மு.க.தான். அதனை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் இந்த நான்கு கட்சிகளுக்கு மட்டுமின்றி, யாரோ கல்லெறிய தங்களுக்கும் ஒரு மாங்காய் கிடைக்காதா என்று காத்திருக்கும் பா.ஜ.க. விற்கும் நோக்கம். “கழகங்கள் இல்லாத தமிழகத்தைக் காண வேண்டும்“ என்று ஆசைப்படுகிறார், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். கழகங்கள் இல்லையென்றால், அவரை பார்ப்பனியம் எந்த இடத்தில் உட்கார வைத்திருக்கும் என்பது அவருக்குத் தெரியவில்லை.
தமிழ்நாட்டின் ‘பழைய கட்சியான’ தே.மு.தி.க.வும் அங்கு போட்டியிடுகின்றது. இனி வாழ்நாளில்,அக்கட்சி வைகோவுடன் கூட்டு சேர வாய்ப்பில்லை. தனித்துதான் போட்டியிடுகிறதாம்.
சிதறிக் கிடக்கும் , வலிமையற்ற கட்சிகள்தானே என்று தி.மு.க. தொண்டர்கள் நினைத்துவிடக் கூடாது. இடைத்தேர்தல் என்றாலே அங்கு ஆளும் கட்சியின் அதிகாரம் இல்லாமல் இருக்காது. மேலும், சசிகலா அணியிடம் உள்ள பணபலமும், பன்னீர்செல்வத்தை இயக்கும் பா.ஜ.க.வும் பாதாளம் வரை பாயக் கூடியன. எனினும், கவனமாக இருந்தால், தி.மு.க. தலைமைக்கு உள்ள செல்வாக்கும், தொண்டர்களின் ஓய்வறியா உழைப்பும், பெரும் வெற்றியைத் தேடித் தரும்.
***
மறுப்பு
12.3.17 ஆம் நாளிட்ட ஜூ.வி. இதழில், “திராவிட ஆட்சி 50 ஆண்டுகள்” சிறப்புக் கட்டுரைகள் பகுதியில், பதித்திரிகையாளர் சுப்பு, “கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது , திண்ணியம் என்ற ஊரில், பஞ்சாயத்துத் தலைவரின் ஊழலைப் பற்றிக் கேள்வி கேட்டதற்காக, ஏழை தலித் ஒருவர், மனித மலத்தை உண்ணும்படி தண்டிக்கப்பட்டார்” என்று எழுதியுள்ளார்.
தி.மு.க.வின் மீது பழி போடவேண்டும் என்று காத்திருக்கும் சுப்பு போன்றவர்கள், அந்த நோக்கில் உண்மைக்கு மாறான எந்த ஒன்றையும் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. திருச்சிக்கு அருகில் உள்ள திண்ணியத்தில் அந்தக் கொடுமை நடைபெற்றது 2002 ஆம் ஆண்டு மே மாதம். அப்போது கலைஞரா முதலமைச்சராக இருந்தார்? 2002-06 காலகட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பது அவருக்குத் தெரியாதா? உண்மைகளை இப்படி அப்பட்டமாகத் திரித்துப் பேசும் இவர், “மூத்த பத்திரிகையாளராம்“. நல்ல கூத்து!