ஒரு முறை சென்னை வானொலியில் மூட நம்பிக்கைகள் பற்றி ஒரு சுவையான விவாதம் திருவாளர்கள் சுயமரியாதை வீரர் சி.பி. சிற்றரசுவுக்கும், கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜெகநாத(ய்யர்) அவர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

தோழர் சி.பி. சிற்றரசு கேட்டார் : “நல்ல காரியங்கள் கெட்ட நேரத்தில் ஏதும் நடக்கக் கூடாது என்றால், நான் ஒரு சந்தேகம் கேட்கிறேன், அதற்குப் பதில் கூறுவீர்களா?” என்றார்.

அவர், ஓ! தாராளமாக என்றார்.

“ஒரு குழந்தை கிணற்றை எட்டிப் பார்க்கிறது, உடனே தவறிப் போய் உள்ளே விழுந்து விட்டது. தாயும், மற்றவர்களும் பதறிக் கூச்சலிட்டனர். நாம் ஓடிப் போய்க் கீழே குதித்து அதனைக் காப்பாற்ற முனைகிறோம். அது நல்ல காரியம் தானே” சிற்றரசு கேட்டார்.

‘ஆம். செய்ய வேண்டியதுதான் இது’. கி.வா.ஜெ. பதில்.

உடனே ஒருவர் குறுக்கிட்டு, “இப்போது கொழுத்த ராகு காலம் - இது கெட்ட நேரம்; இந்தக் கெட்ட நேரத்தில் நல்ல காரியம் செயல்படக் கூடாது என்று கூறிச் சென்றவரைத் தடுத்தால் நியாயமா?’ என்றார். அது கேட்டு நின்று விட்டால், குழந்தையைக் காப்பாற்ற முடியுமா? ஏற்கனவே நீங்கள் கூறிய கருத்தைத் தானே தடுத்தவர் கூறினார். அது எப்படி நியாயமாகும்? அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? என்றவுடன், கி.வா.ஜெ. மிகவும் சங்கடத்துடன் பதில் கூறாது தவிர்த்து மவுனமாகி விட்டார்.

இதே போல சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் சோதிடத்தைப் பற்றி விவாதம் நடந்த பொழுது பகுத்தறிவாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சோதிடத் திலகங்கள் (?) சரியான பதிலைக் கூற முடியாமல் சங்கடப்பட்டனர்.

நமது அரசியல் சட்டத்தில் 51-ஏ என்ற பிரிவில் (எச்) என்ற உட்பிரிவில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நாட்டில் பெரும்பகுதியினர் அறிவியலை வளர்க்காமல், அறிவுக்கு சம்பந்தமே இல்லாத சோதிடத்தில் மூழ்கி அதில் தத்தளித்துக் கொண்டுதான் உள்ளனர்.

உலகின் மாபெரும் கணிதவியலாளர்களில் ஒருவரான டேவிட் ஹில்பெர்ட் என்பவர் “உலகின் பத்து பேரறிவாளர்களைக் கூட்டி அவர்களிடம், தற்போது மிகுந்த மடமை நிறைந்தது எது எனக் கேட்டால், சோதிடரை விட மோசமான முட்டாளைக் காண அவர்களால் இயலாது” என்று குறிப்பிட்டார்.

பார்ப்பன ஏடான காலைக்கதிர் சூன் 4, 2006 வாரக் கதிரில் ரூ.100 பரிசு பெற்ற கடிதம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. சி. எழிலரசி, பாசூர் என்பவர் எழுதியிருக்கிறார். அதில் “சாதகத்தால் வீணான வாழ்க்கை” என்ற தலைப்பில் “ப்ளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவி நான். என் தோழி மிகவும் நன்றாகப் படிப்பாள். ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வர வேண்டும் என்ற லட்சியத்தில் இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு படித்தாள். ‘இந்தப் பெண் வேற்று சாதி பையனைத்தான் திருமணம் செய்து கொள்வாள்’ என்று அவளது சாதகத்தைப் பார்த்த சோதிடர் கூற, உடனே தோழியின் பெற்றோர் அவளை பள்ளிக்கே அனுப்பவில்லை. என் தோழி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், ‘நீ படிச்சி என்ன ஆவப் போவுது; குடும்ப மானத்தைவிட படிப்பு பெரிதல்ல’ என்று சொல்லி சிறைப்படுத்தாத குறை தான்.

இப்போ வெளியில் தோழி வந்தாலே சந்தேகம்; யாரையாவது பார்த்தால், ‘என்ன ஓடி விடலாம் என்று பார்க்கிறாயா?’ என்று கேட்டு அவள் மனதை புண்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட குதர்க்கமான கேள்விகளாலும், பள்ளிக்கு போக முடியவில்லையே என்ற திடீர் அதிர்ச்சியின் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் இருக்கிறாள் என் தோழி! பெற்ற மகளைவிட சோதிடத்தை நம்பியவர்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தீர்களா?” என்று எழுதியிருக்கிறார்.

நன்கு படிக்கக்கூடிய பெண் பாழும் சோதிடத்தால் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறாள். பகுத்தறிவு கொண்டு சிந்தித்து வாழ்ந்தால் பகுத்தறிவு வாழ்வே பண்பட்ட வாழ்வாகும் என்றும் முட்டாள்தனமும், பித்தலாட்டமும் (அயோக்கியத்தனமும்) சரி சரி பகுதியாகக் கலந்ததுதான் சோதிடம் என்பதை (விடுதலை 12.2.1966) அன்றே அய்யா சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை.

Pin It