இதிகாசங்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் கடவுள்களை பற்றியும் தனித் தனி மகுடமிட்டு “குடி அரசில்” எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணுகின்றேன். அவற்றை எழுதி வருவதின் நோக்கமெல்லாம், ஒரு சில சுயநலக்காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவைகளையும் அசம்பாவிதமானவைகளையும் வெகு சாதாரணமானவைகளையும் எழுதி வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி, அவற்றையே மதம் என்றும் பக்தி என்றும் மோக்ஷத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும் சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டி மக்கள் யாவரும் சமம் என்பதை உணர்ந்து சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்பதுதான்.

periyar and thiruvaroor thangarasuசுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து அவற்றிற்கு ஏராளமான யோக்கியதைகளைக் கற்பித்திருப்பதை பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணியஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து கொண்டு அந்தந்த ஊர்களுக்குப் போய் புத்தியையும் தங்கள் காலத்தையும் பணத்தையும் வீணில் பறிகொடுத்துவிட்டு வருவதுடன் தாங்கள் இதுவரை செய்த அக்கிரமங்களும் அயோக்கியத்தனங்களும் இந்த யாத்திரையில் மன்னிக்கப்பட்டு விட்டதாகக் கருதி மேலும் மேலும் புதிய அக்கிரமங்களையும் அயோக்கியத்தனங்களையும் செய்ய தைரியமுடையவர்களாக ஆக இடம் கொடுத்து வருகிறது.

ஸ்தல யாத்திரை என்று சொல்லப்பட்டு வந்ததானது ஒரு காலத்தில் மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கும் உலக அனுபவப் பயிற்சிக்கும் அனுகூலமாகத் ஆக்கினதாய் இருந்திருக்கலாம். எப்படியெனில் ரயிலும் போக்குவரத்து வசதியும் இல்லாத காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டிருந்ததால், உலக அனுபவம் தெரிந்து கொள்வதன் பொருட்டு வெளியிடங்களைச் சுற்றிப் பார்த்து வருவதற்காக ஸ்தல யாத்திரை என்பதின் பேரால் போய் வரும் வழக்கம் அனுகூலத்தைக் கொடுத்திருக்கலாம், ஆனால் இப்போது ரயில் வசதி ஏற்பட்டு விட்டதாலும் சுலபத்தில் ஒவ்வொரு இடத்து சங்கதிகளும் தன்மைகளும் பத்திரிகைகளின் மூலமாய் தெரிந்து கொள்ளுவதற்கு அனுகூலமாய் இருப்பதாலும் இப்போது புண்ய ஸ்தல யாத்திரை என்பதின் பேரால் அனாவசியமாக மக்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.

தற்காலத்திய புண்ணியஸ்தல யாத்திரைகளின் யோக்கியதைகளைப் பற்றியும் யாத்திரைக்காரர்களின் யோக்கியதைகளைப் பற்றியும் புண்ணியஸ்தலங்களிலுள்ள பண்டாரங்கள், பூசாரிகள், குருக்கள் முதலியவர்களின் யோக்கியதைகளைப் பற்றியும் அதனால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைப் பற்றியும் நாம் அதிகமாக விவரிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அது பல தடவை ‘குடி அரசி’லேயே பல தலைப்பின் கீழ் வந்திருக்கின்றது. இன்னும் வர இருக்கின்றது. ஆதலால் அந்த ஸ்தலங்களின் பெருமைகள் என்பவைகளைப் பற்றி மாத்திரம் எழுதலாம் என்று இந்த வியாசம் தொடங்குகின்றேன் :-

பண்டரிபுரம்

முதல் முதல் பண்டரிபுரம் என்பதின் யோக்கியதையைப் பற்றி எழுத துணிகின்றேன்.

பதும புராணத்தில் உமா தேவியின் அறிவு பிரகாசிக்கும் பொருட்டு சிவபெருமான் சொல்லியருளிய பண்டரிபுரத்தைப் பற்றிய கதையை ஸ்ரீதரர் விஸ்தரிக்கிறார் :-

கைலாச பர்வதத்தில் ஓர் காலத்தில் எழுந்தருளியிருந்தபோது உமா தேவியார் சிவபெருமானை நோக்கி, “நிலவுலகில் பண்டரிபுரத்தில் திருமால் நித்யவாசம் செய்வது யாது காரணத்தால்” என்று கேட்டதாகவும், அதற்கு சிவபெருமான் சொல்வதாகவும் கதை ஆரம்பிக்கப்படுகிறது.

1. கொடி போல்பவளே! திருமாலானவர் வைகுந்தத்தில் வீற்றிருக்கும் காலத்தில் இந்திராணி அவரைக் கண்டு மோகித்து “இறைவனே! நான் உமது மடியில் இருக்க வேண்டுமென்று அபேக்ஷிக்கிறேன்” என்று பிரார்த்திக்க, திருமால் இரக்கங் கொண்டு ‘நீ பூலோகத்திற்குப் போய் 60000 வருஷம் தவம் செய்தால் நான் துவாரகாபுரியில் கிருஷ்ணாவதாரம் செய்து உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்வேன்’ என்று சொல்ல, இந்திராணி அப்படியே நிலவுலகில் சென்று 60000 வருடம் தவம் செய்து கோகுலத்தில் ராதையாகப் பிறந்து வளர்ந்து, திருமால் கிருஷ்ணனாக அவதரித்து எழுந்தருளியிருக்கும் துவாரகாபுரிக்குச் சென்று அவரை வணங்க, கிருஷ்ணன் ராதையை இன்னாளென்று அறிந்து வாரியெடுத்து தன் மடி மீது வைத்துக் கொள்ள, இதைக் கண்ட கிருஷ்ணனின் மனைவியான ருக்குமணி கோபங் கொள்ள, அதைக் கண்டு ராதை கிருஷ்ணனை விட்டு நீங்கி திண்டீரவனத்திற்குப் போய் கிருஷ்ணன் தனக்கு கணவனாக வேண்டுமென்று தவம் செய்ய, கிருஷ்ணன் ருக்குமணியை விட்டு விட்டு துறவி வேடம் பூண்டு ராதையைத் தேடித் திரிந்து கடைசியாக திண்டீரவனம் என்கின்ற ஓர் வனத்தில் அவளைக் கண்டு, ‘பிராண நாயகி! என்னை தனியே விட்டு இக்கொடிய வனத்திற் கெவ்வாறு வந்தனை’ என்று கேட்க, ராதையானவள் கிருஷ்ணனைப் பார்த்து ‘உன்னைப் பார்த்தாலே நீ ஒரு வஞ்சகனென்று தோன்றுகிறது. ஆதலால் நீ இங்கு நில்லாமல் ஓடிப் போ’ என்று சொல்ல கிருஷ்ணன் மதி மயங்கி தன் கைத்தடியை முழங்கால்களினால் இடுக்கிக் கொண்டு இடுப்பில் கையை வைத்து மூக்கின் முனையில் தன் பார்வையை வைத்து விருப்பத்தோடு இன்றையவரையும் அதாவது 28 துவாபரயுக காலம் ராதையின் முன் நிற்கின்றான். மேலும் பார்வதி!

2. திண்டீரனென்ற கொடிய அசுரன், சூரியனைத் தன் தேர்மீது ஏறிச் செல்லவொட்டாமல் தடுத்து தொந்திரவு செய்து கொண்டிருந்தான். ஆகவே தேவர்கள் திருமாலை அடைந்து இந்தச் செய்தியை விண்ணப்பம் செய்ய திருமால் மல்லிகார்ஜுனனாக சந்திரன் என்னும் அரசனிடம் பிறந்து வளர்ந்து வேட்டையாட திண்டீரன் என்னும் அசுரன் வசித்த திண்டீரவனம் சென்று அவனோடு ஆயிரம் வருஷம் போர் செய்தும் அவன் தோற்காமலிருக்க கடைசியாக லோகதண்டம் என்னும் கதாயுதத்தை கைக் கொண்டு அவனை யடித்து பூமியில் வீழ்த்தினார். அவன் உயிர் விடும்போது ‘ஸ்ரீஹரி’ என்று உச்சரிக்க மல்லிகார்ஜுனன் உடனே திருமாலாக மாறி அவ்வசுரனை நோக்கி “உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்டுக் கொள்” என்று அருள அவ்வசுரன் “இவ்வனம் லோக தண்டமென்று விளங்கவும் இதில் அழகிய நகர் ஒன்று உண்டாக்கி, நான் இறந்த இடத்தில் என் பேரால் ஒரு தீர்த்தமுண்டாக்கி அதனிடத்தில் உன் கதாயுதத்தை நிறுத்தி, அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி அக்கதாயுதத்தை ஆலிங்கனம் செய்வோர்களுடைய பாவங்களை நிவர்த்திக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள, திருமாலும் அவ்வரத்தைக் கொடுத்து அசுரனுக்கு வைகுண்டலோகத்தை அளித்தார். அன்று முதல் அந்த வனமானது ‘லோகதண்டம்’ எனவும் பெயர் பூண்டு விளங்கிக் கொண்டிருக்கிறது.

3. மேலும் கேளும் பார்வதீ! அவ்வனத்தில் ஜன்ஹு என்ற ஒரு வேதியர் ஸாத்யகி என்பவளோடு இல்லறம் செய்து கொண்டு வரும் காலத்தில், புத்திரர் இல்லாமையால் நெடுங்காலம் தவம் செய்து, ‘புண்டலீகர்’ என்ற ஒரு அழகிய மைந்தனைப் பெற்றார். புண்டலீகன் வயதடைந்த பின் அவனுக்கு மணம் செய்வித்து மகிழ்ந்திருந்தனர். புண்டலீகனோ வெகு துஷ்டனாகி தாய் தந்தையரை வைது, அடித்து, துரத்திவிட்டு தன் மனைவியோடு தனியே வாழ்ந்திருந்தனன். துரத்தப்பட்ட தாய், தந்தையர் காசிக்குப் போக எண்ணிப் புறப்பட்டனர். புண்டலீகனும் அவனது மனைவியும் குதிரை மீதேறிக் கொண்டு பின் தொடர்ந்தனர். தாய் தந்தையர் நடக்க மாட்டாமல் தள்ளாடிக் கொண்டு போவதைப் பார்த்தும் புண்டலீகனுக்கு மனமிரங்காமல் பார்த்துக் கொண்டே போய் காசிக்கருகில் ஒரு சோலையில் குக்குடர் என்னும் ஒர் முனிவரது ஆசிரமத்தின் அருகில் இறங்கினான்.

அந்தக் குக்குட முனிவர் தம் தாய் தந்தையரையன்றி வேறு தெய்வமில்லை என்று துணிந்து இரவும் பகலும் அவர்களுக்கு சேவை செய்பவர். இப்படிப்பட்ட அவரது ஆசிரமத்தில் புண்டலீகன் அன்றிரவு தங்கியிருந்தான். அப்படியிருக்கையில், கோர ரூபங்கொண்ட மூன்று பெண்கள் நள்ளிரவில் அவ்வாசிரமத்திற்குள் புகுந்து அதிலுள்ள குப்பைகளைக் கூட்டி தரையை மெழுகி கோலமிட்டு அலங்கரித்து, ஒரு கணத்தில் தம் கோர ரூபம் நீங்கி சௌந்தரியவதிகளாய் வெளிவந்தனர். இதைக் கண்ட புண்டலீகர் இவர்களை பேய்களோ தேவதைகளோ என எண்ணி ஆச்சரியமும் பயமும் கொண்டு கடைசியாக ஒருவாறு பயந்தெளிந்து அம்மாதர்களிடம் அணுகி, “நீங்கள் யாவர்” என்று கேட்க, அவர்களில் ஒரு மாது ‘அடா பாவி! நீ முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயனே உன்னை இம் முனிவரிடம் கொண்டு வந்து விட்டது. அவரைக் கண்ட புண்ணியத்தால் எங்களையும் கண்டாய். இனி நீ எந்தப் பாவமும் தொடரப் பெறாதவனாய் பரிசுத்தனாகக் கடவை! நாங்கள் கங்கை, காளிந்தி, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இந்த உருக்கொண்டு வந்திருக்கின்றோம். எங்களிடத்தில் மூழ்குவோருடைய பாவங்களையெல்லாம் நாங்கள் ஏற்று அதனால் கோர ரூபங்கொண்டு, அந்த ரூபத்தை பரிசுத்த ஆத்மாவாகிய இந்த குக்குட முனிவருக்கு ஊழியம் செய்வதனால் மாற்றி நல்ல ரூபங்கொண்டு போகிறோம். இவர் தமது தாய் தந்தையரை வழிபடுகிற புண்ணியமே எங்கள் பாவத்தைப் போக்கிற்று” என்று சொல்லிச் சென்றுவிட்டனர்.

பின்பு புண்டலீகர் குக்குடரிடம் விடை பெற்றுக் கொண்டு தாய் தந்தையரைத் தேடினார். தேடிக் கண்டு அவர்களைத் தமது குதிரை மீதில் ஏற்றிக் கொண்டு, புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிவித்து, தம் ஊருக்கு வந்து தாமும் தம் மனைவியும் அத்தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள்.

இப்படியிருக்க பூர்வயுகத்தில், ‘விருத்திரன்’ என்பவன் தேவராஜனாகிய இந்திரனைக் கொல்ல நினைத்து பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். இதையறிந்த இந்திரன் பாதாள லோகம் சென்று தன் வஜ்ஜிராயுதத்தால் அவன் தலையை சேதித்து வீழ்த்தினான். அப்பொழுது விருத்திரன், “தவஞ் செய்யும்போது தலையை அறுத்த பாவத்தால் நீ செங்கல்லாய் பூமியில் விழக்கடவை” என்றான்.

இந்திரன் செங்கல்லாய் விழுமுன்னே திருமால் மகிழும்படி தோத்திரம் செய்ய, திருமால் மகிழ்ந்து “தேவராஜனே நான் புண்டலீகாஸ்ரமத்தில் வந்து செங்கல்லுருவாய்க் கிடக்கிற உன் மேல் அடி வைத்து உன்னைப் பூர்வ ரூபமாய்ச் செய்கிறேன். அஞ்ச வேண்டாம்” என்றனர். அன்று முதல் இந்திரன் புண்டலீகர் வசிக்கும் திண்டீரவனத்தில் செங்கல் உருவாய்க் கிடந்தான்.

இப்படியிருக்க திருமால், புண்டலீகர் தாய் தந்தையர் வழிபட்டுக் கொண்டிருக்குஞ் சமயம் அவருக்குப் பின்புறம் வந்து நின்றார். அப்போது திருமாலின் ஒளி புண்டலீகரின் தந்தையாரின் பாதத்தில் படவே புண்டலீகன் திரும்பிப் பார்த்து அருகிற் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்தெறிந்து “இதன் மீது சற்றுநேரம் நில், என் வேலையை முடித்து வருகிறேன்” என்று சொல்லி விட்டு தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து விட்டு திருமாலிடம் வந்து வணங்கினான். திருமால் “உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று புண்டலீகனைக் கேட்க அவன் ‘தேவரிர்’ இந்த இடத்தை என் பெயர்ச் சார்பினால் பண்டரிபுரமென்ற பெயருடையதாய்ச் செய்து இத்தலத்தில் எல்லாவற்றிலும் சிறந்த தீர்த்தம் ஒன்றையும் உண்டாக்கி, அதில் மூழ்கி உன்னை வணங்குவோர் யாவரும் பாவ விமோசனம் அடைந்து பரிசுத்தராகும்படி இத்தலத்தில் தேவரீரும் பாண்டுரங்கன் என்னும் நாமத்துடன் நித்யவாசம் செய்ய வேண்டும்” என்று வேண்ட திருமாலும் அவ்வரத்தை அருளினார்.

திருமாலின் அடியில் செங்கல்லாகக் கிடந்த இந்திரன் நற்பதவி அடைந்து தேவதச்சனை வரவழைத்து அத்தலத்தில் ஒரு அழகிய நகரமும் விமானமும் செய்யச் செய்து திருமாலை மகிழ்வித்தான். அந்நகரமே இப்பண்டரிபுரம், திருமாலே இப்பண்டரிநாதன்; சந்திர பாகை என்னும் நதியே இத்தீர்த்தம் என்று சிவபெருமான் சொன்னாராம்.

மேல்கண்ட வரலாறுகளிலிருந்து, திண்டீரவனமென்ற ஒரு வனம் எப்படி லோகதண்டமென்றும் பண்டரிபுரமென்றும் பேர் பெற்றன என்பதும் திருமால் பாண்டுரங்கன் என்று பேர் பெற்றனர் என்பதும் காணக் கிடக்கின்றதுடன் திருமால், தேவராஜனாகிய இந்திரன், இந்திராணி முதலிய நம் இந்து தெய்வங்கள் எனப்படுபவைகளின் யோக்யதையும் வெளியாகின்றது. ‘தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய இந்திரனுடைய மனைவி இந்திராணி’ தன் கணவனை அலட்சியம் செய்துவிட்டு திருமாலைக் கண்டு மோகிக்கிறாள். “லோக ரக்ஷகராகிய திருமாலும்’ தமது மனைவி லக்ஷிமியை அலட்சியம் செய்து விட்டு பிறன் மனையாளாகிய இந்திராணியைத் தம்மடி மீது எடுத்து வைத்துக் கொள்கிறார். அவளுக்காக மாறுவேடம் பூண்டு காமப் பித்தேறி அலைகிறார். அப்பித்தால் 28 துவாபரயுக காலம் இந்திராணியின் முன்னிலையில் மதிமயங்கி நிற்கிறார். என்னே “பரம் பொருளாகிய திருமால்”, “தேவ ராஜன் மனைவி இந்திராணி” இவர்களின் ஒழுக்கம்!

கேவலம் ஒரு அசுரனைக் கொல்ல திருமால் ஆயிரம் வருடம் போர் செய்தும் வெல்ல முடியாமல் கடைசியாக சூழ்ச்சியாக தம்மிடமுள்ள லோக தண்டத்தால் அவனைக் கொன்றார் என்றால் எல்லாம் வல்ல திருமாலின்’ சக்தியும் நேர்மையுந்தான் என்னே!

ஆயிரம் வருடம் போர் செய்தும் தம்மால் வெல்ல முடியாத ஒருவருக்கு திருமால் வைகுண்ட பதவி அளித்தார் என்பது கொஞ்சமும் பொருந்தாது என்பதை நாம் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

கங்கை, காளிந்தி, சரஸ்வதி ஆகிய நதிகளில் குளித்தவர்களுடைய பாவங்களையெல்லாம் அந் நதிகள் ஏற்றுக் கொள்கின்றன என்பதும், அப்படி குளித்து தம்மை புகழ்ந்தவர்களுக்கெல்லாம் திருமால் முக்தி அளித்தார் என்பதும் உண்மையென்று நம்பினவர்கள், என்ன பாவம் செய்தாலும் கங்கையில் மூழ்கி திருமாலைப் புகழ்ந்து விட்டால் அப்பாவங்களெல்லாம் ரத்தாகி முக்தி வந்து விடும் என்று மேலும் மேலும் அக்கிரமங்கள் செய்வார்களா மாட்டார்களா?

நிற்க, தேவராஜனாகிய இந்திரனுடைய யோக்கியதையைப் பாருங்கள். அவன், விருத்திரன் கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிற போது அவனை வஜ்ராயுதத்தால் அடித்துக் கொல்கிறான். இப்படிப்பட்ட கொடும் பாதகன் திருமாலைப் புகழ்ந்து விருத்திரன் கொடுத்த சாபத்தைப் போக்கிக் கொள்கிறான்!

ஆச்சரியம்! பாவமன்னிப்பு டிக்கட்டும் மோட்சலோக டிக்கட்டும் இவ் விந்து மதத்தில் கிடைப்பதுபோல வேறு எந்த மதத்திலும் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை. செங்கல், நதி முதலியவைகள் மனிதர்களாகவும், மனிதர்கள், நதி, கல் முதலியவைகளாகவும் திடீர் திடீரென்று மாறுகின்றனர். இவைகளெல்லாம் ஆதாரமாகக் காட்டப்படும் இந்து மத கடவுள்கள், புராணங்கள் முதலியவைகளெல்லாம் - நம்பாவிட்டால் நாஸ்திகமாம்! மேற்கண்ட கதைகளை ஆதாரமாகக் கொண்ட பண்டரிபுரத்திற்குத்தான் நம் பாமர மக்கள் - பகுத்தறிவில்லா மக்கள் - லக்ஷக்கணக்காக ஒவ்வொரு வருஷமும் பிச்சையெடுத்துக் கொண்டாவது போய் விடுகிறார்கள். இப்படிப் போய் வருவதில் இவர்கள் செலவிடும் காலமும் பணமும் கணக்கிடப்பட முடியாது. அரிய காலத்தையும் பொருளையும் செலவிடுவதின்றி ஆண் பெண் என்ற வித்யாசமின்றி ஒருவரை யொருவர் தழுவிக் கொள்ளலாகிய ஒழுக்கக் குறைவுகளுக்கும் உட்பட்டு, சீதோஷ்ண மாறுதலினாலும் ஆகார மாறுதலினாலும், நோய்வாய்ப்பட்டு, ரயிலில் இடிபட்டு, எல்லா உணர்ச்சியுமற்று கோவிந்தா! கோவிந்தா! என்ற வாய் வார்த்தையோடு ஊர் வந்து சேருகிறார்கள்.

அந்தோ! இப்பண்டரிபுர யாத்திரைக்குச் செலவிடும் காலத்தையும் பணத்தையும் ஏழை மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்குமான கல்விக்கு செலவழித்தால் பண்டரிநாதன் நம் கண்ணைக் குத்தி விடுவானா? பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

(சித்திரபுத்திரன், குடி அரசு - கட்டுரை - 16.09.1928)

Pin It