ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் பூசுவக் கூடாது என்பார்கள்! வெண்ணெயில் மாவைக் கலந்துப் பிசைந்து விற்கின்ற ஆஸ்திக வெண்ணெய் வியாபாரிகள் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் கூட வெண்ணெயைக் கண்ணில் பூசிக் கொள்ள மாட்டார்கள்.
மனிதர்கள்! நம் கடவுள்கள்தான் எதை எங்கே வேண்டுமானாலும் பூசிக் கொள்ளும்! ஊற்றிக் கொள்ளும்! வாயில் ஊற்ற வேண்டியதைத் தலையில் ஊற்றிக் கொள்ளும்! நாக்கினால் சுவைக்க வேண்டியதை மேலே பூசிக் கொள்ளும்!
பக்தர்கள்! தங்களுக்குப் பிரியமானதைத் தான் கடவுளுக்குக் காணிக்கையாகத் தருகிறார்கள்! சில கடவுள்களுக்கு கள்ளும் சுருட்டும் தருகிறவர்கள்கூட இருக்கிறார்கள்! ஆதலால் மூக்குப் பொடிப் போடுகிற பக்தர்கள் மூக்குப்பொடி, தரலாம்! முகத்தில் பவுடர் போட்டுக் கொள்கிறவர்கள் கடவுளுக்கும் (அல்லது அம்மனுக்காவது) ஒரு டின் ‘குட்டிக்கூரா’ பவுடர் தரலாம்!
ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மற்றொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் பூசுவது தப்புத்தான்! வெண்ணெயையேப் பூசக்கூடா தென்றால் சுண்ணாம்பை மட்டும் பூசலாமா?
ஹரித்வாரத்தில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு இந்திய சர்க்கார் 36 லட்ச ரூபாய் செலவழித்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது.
“நான் ஜாதிச் சார்பற்றவன், எல்லா ஜாதிகளும் எனக்கு ஒன்று தான்,” - என்று கூறிக்கொண்டே 5 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ஜாதி மாநாட்டுக்குச் சென்றால் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?
“மதுவிலக்குக்காகவே நான் மூன்று தடவை சிறைக்குப் போயிருக்கிறேன்,” - என்று சொல்கிற ஒருவர் கள்ளுக்கடை காண்ட்ராக்ட் எடுத்தால் அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?
“பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் பிடித்திட்டுக் கண்ணால் மயக்குவதை” எதிர்த்து நின்று முற்றுந்துறந்ததாகக் கூறுகின்ற முனிபுங்கவர் ஒருவர், வேசி வீட்டில் கிருஷ்ணலீலை செய்துக் கொண்டிருந்தால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?
“மதச் சார்பற்ற சர்க்கார்” என்று பல்லவி, அநுபல்லலி, சரணம் ஆகிய மூன்றிலும் வைத்துப் பாடிவருகின்ற மத்திய சர்க்கார், ஹரித்வார கும்பமேளத்திற்காக 36 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்!
வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவுக்கும், நாகூர் கந்தூரி விழாவுக்கும் இனிமேல் விகிதாசாரம் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்!
ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவமாட்டார்கள், நீதி நெறி நிற்கின்ற நேரு சர்க்கார்! நிச்சயம் இது!
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் மத்தியச் சர்க்காருக்கு எழுதி உடனே தங்கள் தங்கள் பண்டிகைகளுக்குப் பண உதவி பெறுமாறு நினைவூட்டுகிறேன்!
மதச் சார்ப்பற்ற சர்க்காராகையால் நிச்சயம் கொடுப்பார்கள்! கேட்பதையும் சற்றுத் தாராளமாகத் கேளுங்கள்! கருமித்தனம் வேண்டாம்! மூன்று லட்சத்திற்குக் குறையாமல் கேளுங்கள்!
புதுக் கோவில் கட்டுகிறவர்கள் கூடப் பணம் கேட்கலாம்! மதச் சார்பற்ற சர்க்காராதலால் நிச்சயம் பணம் கிடைக்கும்!
- குத்தூசி குருசாமி (17-4-50)
நன்றி: வாலாசா வல்லவன்