நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன் வரலாறு பால கங்காதர திலகருடனும், கடைசி இந்து அரசன் சிவாஜியுடனும் தொடங்குகிறது.
புராண புரட்டு
ஒருமுறை சிவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்வதி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல் காக்க ஒருவரும் இல்லை என்பதால் தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் ஊட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது எனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவனை உள்ளே செல்ல பிள்ளையார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபம்கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
நீராடி முடிந்ததும் பார்வதி வெளியே வந்து பிள்ளையார் தலை இல்லாமல் கிடந்த கோலத்தைக் கண்டு ஆவேசமும், கோபமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக உருமாறி தன் கண்ணில்பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார். காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன் தனது கணங்களை (ஏவலாளிகளை) அழைத்து, வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு பணித்தார். கணங்கள் வட திசையை நோக்கிச் சென்ற போது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச்சென்று சிவனிடம் கொடுத்தனர். சிவன் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் உடலில் பொருத்தி உயிரூட்டிவிட்டார்.
இதைக் கண்டு சாந்தமடைந்த பார்வதி அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டியணைத்துக் கொண்டார். சிவன் அந்தப் பிள்ளையாருக்கு கணேசன் என்று பெயர் சூட்டி, தனது கணங்களுக்குத் தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கிலபட்ச சதுர்த்தி அன்றாம். அன்றிலிருந்து இத்தினம் விநாயகர் சதுர்த்தி என்றாகிவிட்டது. இதுமட்டுமல்ல, விநாயகரின் தோற்றத்துக்கு இதுபோல பல கதைகள் இருக்கின்றன.
கலவர அரசியலில் விநாயகன்
அதேபோல விநாயகர் சதுர்த்தி அன்று நடத்தப்படும் ஊர்வலங்களுக்கும் சில தோற்றக் கதைகள் உள்ளன. 16ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜி, விநாயகர் சதுர்த்தியைப் பிரபலமாக்கினார். தங்களுடைய குலதெய்வமான கணபதிக்கு மக்கள் விழா எடுப்பதை மராட்டிய ஆட்சி அதிகாரத்திலிருந்த பேசுவாக்கள் (பார்ப்பனர்கள்) ஊக்கம் கொடுத்தனர். மராட்டிய ஆட்சி வீழ்ச்சியைச் சந்திக்கும்வரை விநாயகர் சதுர்த்தி விழாக்கள் அங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. இந்த நிலையில் பிரிட்டிசு ஆட்சிக்கு எதிராக பம்பாய் மாநகரில் விநாயகர் சதுர்த்தியை மீண்டும் பிரபலப்படுத்தத் தொடங்கினார் பால கங்காதர திலகர். இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தி அன்னி பெசண்டுடன் ஹோம்ரூல் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவரான பலகங்காதர திலகர் 1893ஆம் ஆண்டு முதல் பேசுவாக்களின் (பார்ப்பனர்) குடும்ப விழாவாக இருந்த விநாயகர் சதுர்த்தி விழாவை இந்துக்களின் விழாவாக்கினார்.
பிளேக் நோயைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் நடவடிக்கை எடுத்தபோது பாலங்காதர திலகர் சொன்னவை மிக முக்கியமானது. பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளைக் கொல்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது ஆங்கிலேய அரசு. ஆனால் பால கங்காதர திலகரோ எலிகள் விநாயகனின் வாகனம். அவற்றை அழிக்க ஆங்கிலேய அரசு முயற்சிப்பதாகக் கூறி இந்துக்களைத் திரட்டினார். இந்துக்களும் திரண்டனர். ஆங்கிலேயரால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. விநாயகனைப் பயன்படுத்திய முதல் அரசியலும், அதற்குக் கிடைத்த முதல் வெற்றியும் அது. அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மீண்டும் மும்பை முழுக்கத் நடைபெறத் தொடங்கியது. இந்து மதத்தின் அடிப்படையில் சிவாஜியும், பேசுவாக்களும் கொண்டாடிய சதுர்த்தியை இந்துத்துவத்தின் கூறுகளோடு திலகர் மறு அறிமுகம் செய்து வைத்தார்.
பால் தாக்கரேவின் பங்கு
இந்த விழாவின் அடிப்படையில் ஊர்வலத்தின் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தி, பிரிட்டிசாரை வீழ்த்தி இந்து ராசுட்டிராயைப் படைக்க விரும்பியிருந்தார் திலகர். அப்போதிருந்தே விநாயகர் ஊர்வலம் அரசியலில் வலுவாகக் காலூன்றிவிட்டது. ஆகவே ஒருவகையில் விநாயகருக்கு முன்பே அவரது வாகனமான எலி விநாயகருக்கான அரசியலுக்குள் நுழைந்துவிட்டது. 1947-க்குப் பிறகு மும்பை மாநகரில் இந்து மத உணர்வோடு மராட்டிய இன உணர்வையும் ஊட்டி வளர்க்க விநாயாகர் ஊர்வலங்கள் பயன்படுத்தப்பட்டன. 1960களில் அந்தப் பணியை வேகமாகச் செய்தது பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா.
விநாயகர் ஊர்வலங்களின் போதெல்லாம் கொலைகள், கலவரங்கள் அல்லது இறப்புகள் சாதாரணமாகிப் போனது. இசுலாமியர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறிவைத்து தாக்கப் பட்டனர். தமிழர்கள் வாழும் தாராவியும் தப்பவில்லை. விநாயகர் சதுர்த்தி, சிவாஜி விழா, தசரா போன்ற சிவசேனாவின் முன்னெடுப்புகள் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தன. 1995ஆம் ஆண்டில் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று சிவசேனா ஆட்சியமைத்தது. அதே காலகட்டத்தில் விநாயகர் ஊர்வலங்கள் நாடு முழுவதும் கொண்டாட ஆரம்பமாகியிருந்தன. அதற்கு முன்பு அது ஒரு இந்து பண்டிகையாகக் கோவில் சார்ந்து இருந்தாலும், வீதிகள் தோறும் விநாயகன் கொண்டுவரப்பட்டது 1990களில்தான்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்து சமயத்தில் ஆரம்பம் முதலே விநாயகர் இருந்திருக்கவில்லை. சங்ககால இலக்கியங்கள் எதிலும் விநாயகர் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியங்களில் பல பெயர்களில் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் வருகிறது. ஆனால் சங்க இலக்கியக் காலங்களில் பவுத்த, சமண மதங்களே கோலோச்சியிருந்தது. அவற்றின் அழிவின் மேல்தான் வைதீக மதங்களான சைவ, வைணவ மதங்கள் பக்தி இலக்கிய காலத்தில் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியிருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் அரச மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் நினைவாகப் பவுத்தர்கள் கடைப்பிடித்து வந்த வழிபாட்டைப் பிள்ளையார் ஆக்கிரமித்திருக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. பவுத்தமும், தமிழும் என்ற நூலில் மயிலை சீனி வேங்கடசாமி அரச மர வழிபாட்டை வைதீக மதங்கள் சுவீகரித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் கி.பி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசனான நரசிம்ம வர்மன் இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள வாதாபி என்ற ஊரை வீழ்த்தியிருக்கிறார். நரசிம்ம வர்மனின் படைத்தளபதியாக இருந்தவரே சிறுதொண்டர். இவர்தான் வாதாபி வெற்றியின் நினைவாக அங்கிருந்து கணபதியைக் கொண்டுவந்து கணபதிச்சுரம் என்ற கோயில் எழுப்பியதாகத் திருஞானசம்பந்தர் பாடியிருப்பதாகக் கூறுகிறார் தெ.பொ. மீனாட்சி சுந்தரம். சோழர் காலத்தில் வந்தது; பல்லவர் காலத்தில் வந்தது; நாயக்கர் காலத்தில் வந்தது என்று பல பண்பாட்டு ஆய்வுகளை விநாயகர் குறித்து முன்வைக்கப்படுகிறது.
பிள்ளையாரைப் போட்டுடைத்த பெரியார்
பெரியார் காலத்திலிருந்தே பெரியார் முன்னெடுத்த இந்துமத எதிர்ப்பு பிரச்சாரங்களில் மற்ற கடவுள்களைக் காட்டிலும் பிள்ளையாரை அதிகம் தாக்கினார். இராமன் தொடங்கி அனுமன் வரை பலர் குறித்தும் கட்டவிழ்ப்புகள் நிகழ பிள்ளையார் மட்டும்தான் உடைபட்டார். பெரியார் பிள்ளையாரை உடைக்க ஆரம்பித்ததற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளையார் குறித்து விமர்சிக்க ஆரம்பித்திருந்தார்.
“கடவுள்களின் சங்கதி தெரியவேண்டு மானால் முதலில் முதற்கடவுளைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் நன்மையானதாகும். முதற்கடவுளின் சங்கதி இன்னமாதிரி என்று தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம். ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தைக் கவனிக்க வேண்டியது முறை என்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள்களின் கதையைப் பற்றி விளக்கப்போவதில் முதற் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறை யாகுமன்றோ! இல்லாவிட்டால் அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்துக்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படும். அன்றியும், சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்தி ஒன்றும் வரப்போவதால் இந்தச் சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குது” என்றுதான் பிள்ளையாரை அம்பலப்படுத்தினார் பெரியார்.
மேலும் விநாயகரின் உருவாக்கத்தை, அதுதொடர்பான புராணக்கதைகளைப் பேசி பகுத்தறிவு இயக்கத்தை வளர்த்தார் பெரியார். இதுதவிர தனது குடிஅரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் விநாயகர் உருவாக்கம் தொடர்பாக, விநாயகர் செயல்பாடு தொடர்பாக இருக்கும் புராணக் கதைகள் தொடர்பாக சிலவற்றை மேற்கோள்காட்டியிருப்பார். அப்படியான புராணக் கதைகளை பேசி, எழுதி பிரச்சாரம் செய்த பெரியார் ஒரு கட்டத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்தும் விட்டார்.
இதற்கு இந்துத்துவா இயக்கங்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் பெரியார், “பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை, தயக்கப்பட வேண்டியதில்லை. பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மண் பிள்ளையாரை மக்கள் மண்பாண்ட தயாரிப் பாளர்களிடம் வாங்கிப் பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அதனுடன் கரைந்து பிள்ளையார் நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக கரைந்துவிடுவது இல்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவது இல்லையா? அதுபோன்ற செய்கைதான் இதை உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண்ணாக்குவதும். நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை. தொடவில்லை. நாமாக வாங்கி உடைப்பதும் நமக்கு பிள்ளையார் கடவுள் அல்ல; வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது கடவுள் அல்ல; கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை” என்று 1953ஆம் ஆண்டு மே மாத விடுதலை இதழில் எழுதினார் பெரியார்.
தமிழ்ச் சினிமாவின் பங்கு
இப்படித் தமிழ்நாட்டில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர் மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான். மண்டைக்காடு கலவரம் அதற்கு முக்கியமானது. விநாயகர் சதுர்த்தி சிலையில் இருந்து தொடங்கிய கலவரம் துப்பாக்கிச்சூட்டில் சென்று முடிந்தது. பாட்சா படத்திற்குப் பிறகு ரஜினி ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வாகிப்போனது விநாயகர் சதுர்த்தி. அதன்பிறகு வீரா படத்தில் தொடங்கி, காலா படம் வரை ரஜினியின் படங்களில் விநாயகர் அவ்வப்போது தலை காட்டி வந்தார். இதுதவிர அஜித்தின் படங்களிலும் அதிகம் முக்கியத்துவம் பெறும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி முன்னிறுத்தப்பட்டது. தமிழ்ச் சினிமா எங்கும் பரப்பப்பட்டு விநாயகர் சதுர்த்தி இளைஞர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டது.
இராமாயணம், மகாபாரதம் எப்படி எழுத, படிக்கத் தெரியாத மக்களிடம் கூட நாடகங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதோ அதேபோல விநாயகரும் நாடகங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. 1990களுக்குப் பிறகு வெளிவரத் தொடங்கிய விநாயகர் நாடகங்கள் இன்று வரையில் வார இறுதி நாட்களில் முக்கிய நேர நாடகங்களாக இருக்கின்றன. இந்த நாடகங்கள் விநாயகர் மீதான புனித பிம்பத்தைக் கட்டமைத்தது. வட நாட்டில் சித்தி, புத்தி என இரண்டு மனைவிகளுடன் வலம்வந்த விநாயகர் சிலைகள் தமிழ்நாட்டில் மட்டும் பிரம்மச்சாரியாக வலம் வந்தது. தமிழ்நாட்டில் ராமரைக் கொண்டுபோய் சேர்ப்பதே இன்னும் கடினமாக இருக்கும்போது விநாயகர் எளிதாகச் சென்று சேர்ந்ததற்கு மிக முக்கியக் காரணம் விநாயகர் குறும்புக் கடவுளாகவும், குழந்தைக் கடவுளாகவும் முன்வைக்கப்பட்டதே. இன்றைக்கு விநாயகர் ஊர்வலங்கள் மிகப்பெரிய சட்டம் - ஒழுங்கு சிக்கலாக மாறியிருக்கிறது. இசுலாமிய பகுதிகளை விநாயகர் சிலை ஊர்வலங்கள் கடக்கும்போது காவல் துறையின் நிலைமை கவலைக்குரியதாக மாறுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி சுற்றுச் சூழல் பிரச்சினையும் இதில் முக்கியமானதாக எழுந்துள்ளது.
- விடுதலை இராசேந்திரன்