பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தை பிறக்கும் முன்பாகவே எப்படி எல்லாம் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று கனவு கண்டு திட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்ற புதிர் ஒரு பக்கம் இருந்தாலும், ஆணாக இருந்தால் எப்படி வளர்ப்பது, பெண்ணாக இருந்தால் எப்படி வளர்ப்பது என்ற சிந்தனை அவர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். தங்கள் குழந்தை அனைவரின் பாராட்டுதலுக்கும் உரிய பண்புகளுடன் வளர வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்று, குழந்தைகள் நல்ல முறையில் வளருவதற்கான அன்பும், அக்கறையும், பாராட்டும், கண்டிப்பும் உள்ள உணர்வுபூர்வமான சூழல் வீட்டில் அமையும்படி பார்த்துக் கொள்வது.

AUTHORITARIAN PARENTINGதங்கள் குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் முன்னெடுக்கும் முறைகளைப் பார்க்கும் போது அவர்களிடையே நிறைய வேறுபாடுகள் தெரிகின்றன. அவர்களின் குடும்பச் சூழலுடன் தாங்கள் சார்ந்துள்ள சமூகம், கலாச்சாரம், மொழி, நாடு என பல்வேறு காரணிகளும் சேர்ந்து அவர்களின் குழந்தை வளர்ப்பு முறையைத் தீர்மானிக்கின்றன. நம் இந்தியா உள்பட அனைத்து கிழக்காசிய நாடுகளிலும் குழந்தைகளை அதிகப்படியான கட்டுப்பாடுகளுடன் வளர்க்க விரும்புகிறார்கள். நல்லொழுக்கம், கீழ்ப்படிதல், மரியாதை, உண்மை பேசுதல், நேர்மை போன்ற குணங்களுக்கு எல்லோரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் அதற்காக சில பெற்றோர்கள் மிகுந்த கண்டிப்புடன் சில நேரங்களில் தண்டித்தும் வளர்க்க முற்படும்போது அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை கரடு முரடாகி விடுகிறது. இந்த முயற்சி கொஞ்சம் சுதந்திரத்தோடு வளர விரும்பும் குழந்தைகளுக்கு பலன் அளிக்க மாட்டேன் என்கிறது.

DIANA BAUMRIND என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் 1967இல் பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள்? என்று ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டார். அவர் தனது ஆராய்ச்சிக்கு இரண்டு முக்கியமான கேள்விகளை எடுத்துக்கொண்டார். 1.குழந்தைகளிடம் பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? 2. குழந்தைகளின் தேவைகளான அன்பு, அரவணைப்பு, அக்கறை, கண்டிப்பு போன்றவைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு ஈடு கொடுக்கிறார்கள்?

மேலே சொன்ன இரண்டு கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களில் இருந்து குழந்தை வளர்க்கும் முறையை 3 வகைகளாகப் பிரித்தார். அதில் ஒரு வகைதான் இந்த AUTHORITARIAN PARENTING என்று சொல்லப்படும் சர்வாதிகாரக் குழந்தை வளர்ப்பு முறை. இந்த முறையில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்ப்புகள் மிகமிக அதிகமாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் தேவைகளுக்கு இவர்களின் பங்களிப்பு மிகமிகக் குறைவு. நாம் அன்றாடம் இவ்வகையான பெற்றோர்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்

இவர்களை எப்படி அடையாளம் காணுவது?

வீட்டில் இவர்களின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. மிலிட்டரி ரூல்தான். சர்க்கஸ் ரிங் மாஸ்டரைப் போல எப்போதும் குழந்தைகள் மீது ஆதிக்கம். முதலில் ‘சொன்னதைச் செய், எதிர்த்துப் பேசாதே' என்பார்கள். குழந்தைகள் எப்போதும் பெற்றோர்கள் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்லாமல் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்குக் கண்டித்து வளர்ப்பதை விடவும் தண்டித்து வளர்ப்பதில் நம்பிக்கை அதிகம். குழந்தைகளின் விளக்கத்தையோ பேச்சையோ கேட்க மாட்டார்கள். இவர்களும் குழந்தைகள் லெவலுக்கு மனதளவில் இறங்கி வந்து ஏன் எதற்கு என்று குழந்தைகளிடம் விளக்குவதோ விவாதிப்பதோ கிடையாது.

குழந்தைகளிடம் இருந்து இவர்களுக்கு எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். எதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அதற்காகக் குழந்தைகள் மீது அக்கறையையும் அன்பையும் காட்டி ஊக்குவிக்க மாட்டார்கள். நம் குழந்தை இந்தச் செயலை நன்றாகச் செய்து முடிப்பான் என்று நம்ப மாட்டார்கள். அந்த செயலைச் செய்து முடிக்கக் குழந்தைக்கு உதவுவதோ அல்லது குழந்தையின் முயற்சியைப் பாராட்டுவதோ கிடையாது. எப்போதும் குழந்தைகளிடம் இருந்து மனதளவில் தள்ளியே இருப்பார்கள்.

இவர்களால் குழந்தைகள் செய்யும் சிறுசிறு தவறுகளைக் கூட தாங்க முடியாது. வார்த்தைகளாலும் சில நேரங்களில் அடித்துத் துன்புறுத்தியும் குழந்தைகளை அவமானப்படுத்தி விடுவார்கள். மீண்டும் செய்யாதே என்று கண்டித்து அறிவுறுத்தி விட்டுவிட மாட்டார்கள். செய்த தவறை மன்னித்து மறந்து குழந்தைகளோடு அன்பாகப் பேசவும் தெரியாது. குழந்தைகளைத் தண்டித்து விட்டோமே என்று பின்னர் வருத்தப்படவும் மாட்டார்கள். பொதுவாகவே இவர்களுக்கு குழந்தைகள் மீது உள்ள பாசத்தைக் காண்பிக்கத் தெரியாது. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பார்கள். கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை இவர்கள் தாங்கள் அறியாமலேயே தங்கள் குழந்தைக்கும் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

இந்த வகைப் பெற்றோர்களுக்கு சமுதாயம் மிகவும் இரக்கமற்றதாகவும் கொடூரமானதாகவும் தோன்றுவதால் அதில் தங்கள் குழந்தை எப்படி வாழப்போகிறான் என்ற மனக்கவலை அதிகம் இருக்கும். தாங்கள் சார்ந்துள்ள சமூகம், கலாச்சாரம் போன்றவைகள் போதித்து வரும் நெறிமுறைகள் பிறழாமல் குழந்தையை வளர்க்க முற்படுவார்கள். அம்மாதிரியான கடின வாழ்க்கைக்குத் தங்கள் குழந்தையைத் தயார்படுத்தவே இப்படிக் கட்டுப்பாடும் தண்டனையும் சேர்ந்த குழந்தை வளர்ப்பு முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். எல்லாமும் குழந்தைகளின் நன்மைக்குத்தான் என்று நினைத்துக் கொள்வார்கள்.

தாங்கள் குழந்தைகளாக இருந்த போது எவ்வாறு தங்கள் பெற்றோர்கள் அவர்களை வளர்த்தார்கள் என்ற எண்ணம் அவ்வப்போது இவர்கள் மனதில் ஓடும்.

குழந்தைகளுக்கு என்ன பாதிப்புகள் வரலாம்?

இம்மாதிரி மிகுந்த கட்டுப்பாட்டோடு கொஞ்சம் கூட சுதந்திரம் இல்லாமல் வளரும் குழந்தைகள் மகிழ்ச்சியாக வளருவதில்லை . எப்போதும் தன்னம்பிக்கையின்றி தனிமை விரும்பிகளாக குற்ற உணர்வோடு இருப்பார்கள். இவர்களிடத்தில் அதிகமான கீழ்ப்படிதலும் மனச்சோர்வும் தென்படும். மற்றவர்களிடத்தில் உரையாடும் போது தன்னுடைய கருத்தை உரக்கச் சொல்லவோ அல்லது பிறரின் கருத்தை விமரிசித்தோ பேசப் பயப்படுவார்கள். தனித்துவமும் வளராமல், சுயமாகச் சிந்தித்து முடிவும் எடுக்கத் தெரியாமல் மிகவும் தடுமாறுவார்கள். சில நேரங்களில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தாம்தான் காரணம் என்ற குற்ற உணர்வும் வந்து விடும். பின்னாளில் இவர்கள் மனநோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மனவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விடலைப்பருவம் ஆரம்பித்து பெற்றோர்களின் பிடி தளரும்போது முரட்டுத்தனமும், கோபமும், பிடிவாதமும் வந்து விடும். ஒரு சில குழந்தைகள் மனச்சோர்வு, மன அழுத்தம், குற்ற உணர்வு, தற்கொலை எண்ணம் போன்றவைகளாலும் பாதிக்கப் படுகிறார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் சில நேரங்களில் இளங்குற்றவாளிகள் என்ற அளவுக்குப் போய் விடுகிறார்கள்.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தை எல்லோரையும் மதித்து நடப்பவனாக, நல்ல பண்புகள் நிறைந்தவனாக உடன்பிறந்தவர்களையும் பெற்றோர்களையும் அரவணைத்துச் செல்பவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மிகுந்த கட்டுப்பாடு, தண்டித்தல் என்று வளர்க்கும் பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் என்ற நினைப்பில்தான் செய்கிறார்களே ஒழிய, குழந்தையைத் தண்டித்து துன்புறுத்த வேண்டும் என்று செய்வதில்லை. இப்படி மிலிட்டரி ரூல் போட்டு வளர்க்கும் பெற்றோர்களுக்கும் அதனால் பின்னாளில் குழந்தைக்கு ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் பற்றியும் தெரிவதில்லை . எனவே இந்தக் கடுமையான கட்டுப்பாட்டுடன் கூடிய குழந்தை வளர்ப்பு முறை குழந்தையின் மன நலத்திற்கு நல்லதல்ல என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மனவியலாளர்கள் குழந்தை வளர்ப்பு முறையைப் பல விதமாகப் பிரித்து ஆராய்ந்தாலும் பெரும்பாலான குடும்பங்களில், எல்லோரும் ஒரே மாதிரியான வளர்ப்பு முறையைக் கையாளுவதில்லை. ஒவ்வொருவரின் அணுகுமுறையிலும் நிறைய வித்தியாசங்கள். அப்பா கட்டுப்பாடுடன் இருந்தால் அம்மா அன்பையும் அக்கறையையும் அதிகம் காட்டுவார். இல்லையென்றால் தாத்தா பாட்டி அன்புடன் வளர்ப்பார்கள். இப்படி வீட்டில் உள்ளவர்கள் குழந்தையைக் கையாளும் விதம் வெவ்வேறாக இருப்பதால், இந்த மிலிட்டரி கட்டுப்பாடுகளின் தாக்கமும் குழந்தைகள் மீது முழுமையாகப் படுவதில்லை. சில குடும்பங்களில் ஆண் குழந்தையை ஒரு பாணியிலும் பெண் குழந்தையை இன்னொரு பானியிலும் வளர்ப்பார்கள். இப்படி குடும்பத்தில் உள்ள அனைவரின் தாக்கமும் சேர்ந்து சம நிலைப்படுத்த முயற்சிப்பதால்தான் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் அதிகம் பாதிக்காமல் வளர்கிறார்கள்.

நம் இந்தியா, சீனா போன்ற கிழக்காசிய நாடுகளில் பெரும்பாலும் இம்மாதிரி கண்டிப்புடன் குழந்தை வளர்க்கும் முறைதான். வாழ்க்கை நெறிமுறைகளுக்கும், சமூகக், கலாச்சாரக் கட்டுப்பாட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறார்கள். ஆனால் தற்போது உலகம் எவ்வளவோ மாறி விட்டது. குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை விடவும் வெளி உலகத்தில் இருந்து நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகள் மீது வெளி உலகத்தின் தாக்கம் மிகமிக அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் பயப்படுவது போலவே குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளின் இறக்கையை ஆரம்பத்திலேயே ஒடிப்பதை நிறுத்திவிட்டு பெற்றோர்கள் கொஞ்சம் இறங்கி வந்து குழந்தைகளுக்கும் இடம் கொடுத்து, ஒவ்வொரு செயலையும் விளக்கி, அவர்களையும் பேச விட்டு, தைரியம் கொடுத்து தன்னம்பிக்கையுடன் வளர்க்கலாமே! அதனால் குழந்தைகளுக்கும் இந்த உலகத்தை எளிதாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்து விடுமே!

- மருத்துவர். ப.வைத்திலிங்கம், குழந்தைகள் உடல்நலம் மற்றும் மனநல மருத்துவர்.