காற்று மாசை ஏற்படுத்தும் நச்சு வேதிப்பொருட்கள் பிறக்காத குழந்தையையும் பாதிக்கிறது. கருவில் இருக்கும் சிசுவின் மூளை, கல்லீரல், நுரையீரலில் ஆபத்தான இப்பொருட்கள் உள்ளன. மனித வளர்ச்சியின் முக்கிய கட்டமாகக் கருதப்படும் சிசு வளரும் காலத்தில் இந்த நஞ்சுகள் அதன் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

உடலெங்கும் கார்பன் நானோ துகள்கள்

ஒவ்வொரு க்யூபிக் மில்லிமீட்டர் திசுவிலும் ஆயிரக்கணக்கான கார்பன் நானோ துகள்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தாயின் சுவாசத்தின் வழியாக, தாயின் இரத்தத்தின் கலந்து, நஞ்சுக்கொடி மூலம் கருவிற்குச் செல்கிறது. பூமியில் பிறந்து, முதல் சுவாசம் விடும் முன்பே குழந்தை நஞ்சுகளால் பாதிக்கப்பட்டு ஆரோக்கியமற்ற நிலையில் வளர்கிறது.

குறைப்பிரசவம், குறைவான எடையுடன் பிறத்தல், சரியில்லாத மூளை வளர்ச்சி இன்மை போன்றவற்றின் மூலம் அசுத்தக் காற்று கருவைப் பாதிக்கிறது என்று முன்பே அறியப்பட்டுள்ளது. ஆனால் இப்புதிய கண்டுபிடிப்பு இந்த பாதிப்புகள் எவ்வாறு கருவில் நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. பிறந்தபின் குழந்தையின் ஆயுட்காலம் முழுவதும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.air pollutionயார் காரணம்?

இந்நிலைக்கு முக்கிய காரணம் வாகனங்களில் புதைபடிவ எரிபொருட்கள் எரித்தல், வீட்டில் இருந்து வரும் புகை, தொழிற்சாலை மாசுகள்.

ஸ்காட்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் காற்று மாசு குறைவாக இருக்கும் இடங்களில் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத கருவுற்ற தாய்மாரிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

கரும் கார்பன் நானோ துகள்கள் (black Carbon nano particles) கரு வளர்ச்சியின் முதலிரண்டு மும்மாத காலத்தில் மட்டும் இல்லாமல் அதன் பின்னரும் வளரும் சிசுவின் உடல் உறுப்புகளிள் பரவுகின்றன என்று ஸ்காட்லாந்து அபர்டீன் (Aberdeen) பல்கலைக்கழகப் பேராசிரியர் பால் பவுலர் (Paul Powler) கூறுகிறார்.

மூளை வளர்ச்சி

பிறந்த பிறகு வளரும் குழந்தையின் மூளையில் இத்துகள்கள் பரவுகின்றன. இதன் மூலம் அவை மனித செல்கள், பிறப்புறுப்புகளையும் பாதிக்கின்றன. கருவாக பெண்ணின் உடலில் உருவாகி, குழந்தையாகப் பிறக்கும் காலத்திற்கு இடைப்பட்ட நிலையில் உள்ள முக்கிய காலத்தில் நடைபெறும் மாற்றங்களிலும் நச்சுக்காற்று மாசு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனித இனத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இது பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் நடத்தப்படவேண்டும்.

மாசில்லா காற்று

காற்று மாசைக் குறைக்கும் பொறுப்பு ஆட்சியாளர்களுடையது. என்றாலும் தனிமனிதர்கள் மாசு மிகுந்த இடங்களைத் தவிர்ப்பது நலவாழ்விற்கு நல்ல தீர்வாக அமையும் என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் பெல்ஜியம் ஹேஸெல்ட் (Hasselt) பல்கலைக்கழகப் பேராசிரியர் டிம் நோராட் (Prof Tim Nawrot) கூறுகிறார்.

நஞ்சுக்கொடி முதல் கல்லறை வரை

தாயின் நஞ்சுக்கொடியை மாசுத் துகள்கள் பாதிக்கிறது என்பதை 2018ல் லண்டன் க்வீன்மேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோனதன் கிரிக் (Prof Jonathan Grigg) முதன்முதலாகக் கண்டுபிடித்தார். பிறந்த பிறகும் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் இத்துகள்கள் பாதிப்பைத் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன என்கிறார் அவர். இவை எப்போது உடலிற்குள் இருக்கும் வேதிப்பொருட்களுடன் வினைபுரிந்து எந்த விதமான நச்சுகளை உருவாக்கும், எந்த உறுப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.

தடைகளைத் தாண்டும் மாசுகள்

2019ல் வெளியிடப்பட்ட இது பற்றிய விரிவான உலகளாவிய ஆய்வறிக்கை (Global Review) காற்று மாசு உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் செல்லையும் பாதிக்கிறது என்று எச்சரித்திருந்தது. நுண் துகள்கள் இரத்தத்திற்கும், மூளைக்கும் இடையில் இயல்பாக உள்ள இயல்பான தடுப்பையும் தகர்த்து மூளைக்குள் நுழைந்து பின் அதன் செயல்களைப் பாதிக்கிறது. இதனால் நகரங்களில் வாழும் மில்லியன் கணக்கான இள வயதினரின் உடலிலும் இத்துகள்கள் கலந்துள்ளன.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தரக்குறியீடுகளை விட தாழ்ந்த தரமுடைய காற்றுள்ள இடங்களிலேயே உலகின் 90% மக்கள் வாழ்கின்றனர். இது ஆயிரக்க்கணக்கான அகால மரணங்களுக்குக் காரணமாகிறது. Journal Lancet Planetary Health இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை ஆய்விற்குட் படுத்தப்பட்ட ஒவ்வொரு நுரையீரல், கல்லீரல் மற்றும் மூலைத்திசுக்களிலும் நச்சுத்துகள்கள் கலந்துள்ளன என்று கூறுகிறது.

இப்படியே போனால்?

மாசு அதிகம் உள்ள இடங்களில் வாழும் தாய்மாரில் நச்சுத்துகள்களின் அளவு அதிகம் காணப்படுகிறது. ஸ்காட்லாந்து பகுதியில் பரிசோதிக்கப்பட்ட 36 சோதனைகள் இயல்பாக கரு வளரும் 7 முதல் 21 வார காலத்தில் நடத்தப்பட்டன. பெல்ஜியத்தில் 60 தாய்மாரிடம் சோதனைகள் நடந்தன. உறுப்பு வளர்ச்சியில் இது முக்கிய கட்டம் என்பதால் ஆய்வாளர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய கண்டுபிடிப்பு இது.

பிறந்து வளர்ந்த மனிதனைப் பாதித்து காற்று மாசு அகால மரணமடையச்செய்கிறது என்றால், இப்போது பிறக்கும் முன்பே மனிதக் கருவையும் அவன் உருவாக்கும் நச்சுத்துகள்கள் பாதிக்கின்றன. பூமியை நஞ்சாக்கிய மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறான்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்