முப்பது ஆண்டுகளுக்கு முன் சத்துக் குறைபாடு காரணமாக, நோஞ்சான் குழந்தைகளும், சவலைக் குழந்தைகளும் பெருமளவில் இருந்த நிலை மாறி, குறைந்து வரும் நிலையில், தற்போது அதிகமான குழந்தைகள் அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். பொருளாதாரத்தில் மேல்தட்டு மக்களிடம் அதிகமாகக் காணப்பட்டு வந்த உடல் பருமன் தற்போது நடுத்தர வர்க்கத்தினரையும், கீழ்தட்டு மக்களையும் விட்டு வைக்கவில்லை.

குழந்தைகளுக்கு உள்ள எடை என்பது அவர்களின் வயது மற்றும் பாலினம் பொறுத்து வேறுபடும். சிறு வயதில் எடை அதிகமாக உள்ள குழந்தை பின்னாளிலும் அதே அதிக எடையுடன்தான் வாழ வேண்டியுள்ளது. குழந்தைகள் அதிக எடை மற்றும் உடல் பருமனுடன் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்தான். முதல் வகை, அவர்களுக்கு உள்ள மரபணு மற்றும் பிறவிக் கோளாறுகள். இரண்டாவது வகை உணவுப்பழக்க மாற்றத்தால் உடலில் கொழுப்பு சேர்ந்து விடுவது. இந்தக் கட்டுரையில் நாம் இந்த இரண்டாவது வகையைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

இன்றைய நிலை

இன்றைய தினம் உலகம் முழுவதும் 80 கோடி மக்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதாகவும் அவர்களில் 40 லட்சம் பேர் ஆண்டுதோறும் உடல் பருமனால் வரும் பின் விளைவுகளால் இறப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரம் சொல்லுகிறது. 5 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளில் 1975இல் 4 சதவீதம் பேர் அதிக எடை மற்றும் உடல் பருமனால் பாதித்திருந்த நிலையில் 2016இல் அதுவே 18 சதவீதமாக உயர்ந்தது. இன்றைய நிலை அதைவிடவும் பல மடங்கு இருக்கும். 2030இல் உலகம் முழுவதும் இருக்கும் உடல் பருமனான குழந்தைகளில் 10இல் ஒருவர் நம் இந்தியக் குழந்தையாக இருக்கும் என்று WHO கணிக்கிறது.girl childஇந்த 21ஆம் நூற்றாண்டில் தொற்றுக் கிருமிகளால் வரும் வியாதிகள் குறைவாகவும், வாழ்வியல் நோய்கள் அதிகமாகவும் ஆகிவிட்டன. இந்த உடல் பருமன் என்னும் வாழ்வியல் பிரச்சினை அனைத்து வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் கடந்த 20-30 ஆண்டுகளாக மெல்லப் பரவி காலூன்றி விட்டது. உலகம் முழுக்கவும் பஞ்சம், பட்டினியால் இறப்பவர்களைக் காட்டிலும் உடல் பருமனின் பின்விளைவுகளால் இறப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அனைத்து வாழ்வியல் நோய்களுக்கும் அடிப்படை உடல் பருமன்தான்.

அதிக உடல் எடையை எப்படித் தீர்மானிப்பது?

ஒரு நபரின் உடலில் இயல்பை விட அதிகப்படியாகவும், தேவையற்றும் கொழுப்புச்சத்து சேர்ந்து அதனால் அவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமானால் அவர் அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினையில் உள்ளதாகக் கூறலாம். ஒருவர் உடல் பருமன் பற்றித் தெரிந்து கொள்ள அவரின் உயரம், எடை, மற்றும் இடைச் சுற்றளவு தெரிந்தால் அவர் இயல்பாக உள்ளாரா அல்லது அதிக எடையுடன் உள்ளாரா என்றும் எளிதில் கணக்கிட்டு விடலாம். எப்படிக் கணக்கிடுவது என்று பார்ப்போம்.

உடல் நிறை குறியீட்டு எண் (BODY MASS INDEX)

சர்வதேச உடல் பருமன் பணிக்குழு (INTERNATIONAL OBESITY TASK FORCE) வின் பரிந்துரையின்படி ஒருவர் தன் உயரத்திற்கேற்ற எடையுடன் ஆரோக்கியமாக உள்ளாரா என்பதை அறிய முதலில் நாம் அவரின் 'உடல் நிறை குறியீட்டு எண்' (BMI) என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு அவரின் எடையை (கிலோகிராமில்), உயரத்தின் (மீட்டரில்) ஸ்கொயரால் வகுத்தால் வரும் எண் அவரின் 'உடல் நிறை குறியீட்டு எண்' அல்லது BMI ஆகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி ஒருவருக்கு உடல் நிறை குறியீட்டு எண் 25 க்கு மேல் இருந்தால் 'அதிக எடை' என்றும் 30 க்கு மேல் இருந்தால் ‘உடல் பருமன்' என்றும் கூறலாம். அதுவே அவருக்கு 18.5 லிருந்து 25 வரையிலும் இருக்கும்போது அவர் இயல்பான எடையும் உயரமும் இருப்பவராகக் கருதலாம். இந்தியர்கள் உள்பட அனைத்து ஆசியக் கண்டத்தவர்களுக்கும் அதிகமான கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேருவதால், இவர்களுக்கான உடல் நிறை குறியீடு 23 க்கு மேல் ‘அதிக எடை' என்றும் 28 க்கு மேல் “உடல் பருமன்' என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இடைச் சுற்றளவு (WAIST CIRCUMFERENCE)

ஒருவரின் இடைச் சுற்றளவை மட்டுமே கொண்டு அவர் பருமனாக உள்ளாரா இல்லையா என்றும் சொல்லி விடலாம். ஆண்களுக்கு இடைச் சுற்றளவு 102 செ.மீக்கு அதிகமாகவும், பெண்களுக்கு 88 செ.மீக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்கள் பருமனாக உள்ளவராகக் கருதலாம். பெரும்பாலானவர்களுக்கு உடலின் நடுப்பகுதி மட்டும் பருமனாவதால் கை, கால்கள் மெலிந்தும் வயிற்றுப் பகுதி பெருத்தும் காணப்படுகிறது. இதை 'இரண்டு தீக்குச்சிகளுக்கு மேலே இருக்கும் எலுமிச்சை' (LEMON ON MATCHSTICKS) போன்ற பருமன் என்கிறார்கள்.

என்ன காரணங்களால் குழந்தைகள் பருமனாகி விடுகிறார்கள்?

இன்றைய குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றங்களைக் காண்கிறோம். மனிதனின் ஆரோக்கியத்திற்குத் தேவை சத்தான உணவு என்ற நிலைமை மாறி உணவுப் பழக்கமே மனிதர்களின் தகுதியின் அடையாளமாகவும் அவர்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் பொருளாகவும் மாறிவிட்டது. உணவுப் பண்டங்கள் வணிகப்பொருளாகி, விளம்பரங்கள் மூலம் குழந்தைகளை இலக்காக்கி இழுக்கும்போது குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அடிமையாகி விடுகிறார்கள். இங்கே சந்தைப்படுத்தப்படும் உணவுகளில் கலோரிகள் அதிகம். ஆனால் சத்துக்கள் குறைவு. ஆம் வெற்றுக் கலோரிகள்தான்!

நாம் உண்ணும் உணவு செரித்து, உடலுள் கிரகித்து அதன் எரிபொருள்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பங்கெடுத்தது போக மீதி உள்ள கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரிகளும் உடலின் அன்றாட எரிசக்தித் தேவையும் சமநிலையில் இருக்கும்போது கொழுப்பு சேருவதில்லை. தினம் தினம் தேவைக்கு அதிகமாகக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படியான கலோரிகள் உள்ளே போகும்போது அது கொழுப்பாக மாறித் தங்கி விடுகிறது.

நவீன கால வாழ்வியல் மாற்றங்களினால் ஒடி விளையாடிய குழந்தைக்கு, உட்கார்ந்து கொண்டு வீடியோ கேமும் தொடு திரையும்தான் வாழ்க்கை என்றாகிவிட்டதால் உணவில் உள்ள எரிசக்திக்கு வேலையில்லாமல் கொழுப்பாக மாறி உடலில் சேர்கிறது. ஓடுவதும் நடப்பதும் குறைந்து இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் என்பதால் மேலும் கொழுப்பு சேரும் நிலைமை வந்து விடுகிறது.

உடல் பருமனாக இருப்பதால் வரும் விளைவுகள்

பதினைந்து வயதில் எடை அதிகமாகி உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைக்கு 30 வயது ஆகும்போது அனைத்து வாழ்வியல் நோய்களும் எட்டிப் பார்க்கின்றன. உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, உடனடி விளைவுகள். இரண்டு, நீண்ட கால மாற்றங்கள்.

உடனடி விளைவுகள்

பள்ளி செல்லும் உடல் பருமனான குழந்தைகள், சக மாணவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகி தன்னம்பிக்கை இழந்து படிப்பில் ஆர்வம் குறைந்து போகிறார்கள். தன் உடல் எடையைத் தாங்க முடியாமல் கைகால் வலி, மூட்டுவலி என உடல் உபாதைகள் வந்து விடுகின்றன. விளையாடுவதையும், படிகளில் ஏறுவதையும் தவிர்த்து வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். தூக்கமின்மை, குறட்டை, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் என ஒன்றன்பின் ஒன்றாகப் படையெடுக்கின்றன. இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்துக்களின் விகிதங்களும், சர்க்கரைச் சத்தின் விகிதமும் மாறிப் போய் சிறுவயதிலேயே சர்க்கரை வியாதிக்கும் இருதய வியாதிக்கும் வழிவிட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

நீண்ட கால விளைவுகள்

உடல் பருமன் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதித்து விடுகிறது. சர்க்கரை வியாதி, இருதய நோய்கள், கல்லீரலில் கொழுப்பு சேருதல், இரத்த நாளங்களில் அடைப்பு, எலும்பு மூட்டு தேய்மானம், குழந்தையின்மை, மூச்சுத் திணறல், ஆஸ்துமா, தூக்கமின்மை, மன நோய் என அவரவர் மரபணுவுக்கும் சூழலுக்கும் ஏற்ப வந்து விடுகின்றன.

எப்படித் தடுக்கலாம்?

நம் எல்லோருக்கும் உடல் எடையை எப்படிக் குறைப்பது என்பது தெரியும். ஆனாலும் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால் ஒழிய இந்த வாழ்வியல் நோயை வெல்ல முடியாது. பொதுவாகவே உடலில் அதிக எடையும் உடல் பருமனும் அடைய எவ்வளவு காலம் ஆனதோ அதே அளவு காலம் உடல் எடையைக் குறைக்கவும் ஆகும். இங்கே எந்தக் குறுக்கு வழியும் வேலை செய்வதில்லை.

நாம் அதிகப்படியாக உண்ணும் உணவுகள் அனைத்தும் கடைசியில் கொழுப்பாக மாறி உடலில் படிந்து விடுகிறது. உடலில் சேர்ந்த கொழுப்பைக் கரைக்க வேண்டுமானால் முதலில் உணவு வழியாக உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதேநேரம் சேர்ந்த கொழுப்பையும் எரிசக்தியாக்கி நாம் உபயோகித்து விட வேண்டும். சோம்பேறி வாழ்வில் இருந்து விடுபட்டு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும்.

வீட்டில் நாம் என்ன செய்யலாம்?

வீட்டில் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். உட்கார்ந்தபடியே தொலைக்காட்சியும், கைபேசியும், வீடியோ கேமும்தான் வாழ்க்கை என்று இருக்கக் கூடாது. இரண்டு வயது முடியும் வரையிலும் குழந்தைகளுக்கு எலக்டிரானிக் திரைகள் எல்லாம் தேவையில்லை. இரண்டு வயதிலிருந்து ஒன்பது வயது வரை தேவையிருப்பின் தினம் 30 நிமிடம் மட்டும் பெற்றோர்களின் மேற்பார்வையில் கொடுக்கலாம். குழந்தைகள் ஒரு நிமிடம் டெலிவிஷன் பார்த்தால் அதில் 4 முறை சர்க்கரையும், உப்பும் கலந்த எனர்ஜி பானங்களையும் துரித உணவுகளையும் காட்டிப் பெருமையாகப் பேசுகிறார்கள். அவைகள்தான் சிறந்த உணவு என்று மூளைச்சலவை செய்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. வீட்டில் உள்ள துரித உணவுகளையும், எனர்ஜி பானங்களையும் குழந்தைகள் பார்க்கும்படி தூக்கிக் குப்பையில் போடுங்கள்.

குழந்தை 2 வயதில் எவ்வளவு எடையும் உயரமும் இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் பின்னாளில் அவர்களின் வளர்ச்சியும் எடையும் இருக்கப் போகிறது. இரண்டு வயதில் குண்டாக இருக்கும் குழந்தை அதே பாதையில்தான் பயணிக்கும். இதைத் தவிர்க்க முதல் 6 மாதம் கட்டாயம் தாய்ப்பால், வீட்டிலேயே தயாரித்த இணை உணவுகள், ஃபார்முலா உணவுகளைத் தவிர்த்தல் போன்ற குழந்தைநேய வளர்ப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். கைபேசியைக் காண்பித்து குழந்தைகளுக்கு சோறு ஊட்டத் தேவையில்லை. குழந்தைகள் எடை அதிகமாக இருக்கும்போது அடுத்த இரண்டு ஆண்டுகள் எடை அதிகம் ஏறாமல் இருந்தாலே இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள்.

வளரும்

எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து உண்ணும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உணவு வேளைக்கு இடையில் தின்பண்டங்களும், நொறுக்குத் தீனிகளூம், பழச்சாறுகளும் பானங்களும் தேவையில்லை. சில நேரங்களில் வாழ்க்கை போரடித்தாலும், மன இறுக்கத்தில் இருந்தாலும் கூட தின்பண்டங்களில் நாட்டம் வந்து விடும். பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் உணவு விடுதிக்குப் போகும் பழக்கத்தை விட்டு விளையாட்டு, உடற்பயிற்சி என மாற்றிக் கொள்ளலாம்.

ஆரோக்கியமாகத் தூங்கும் பழக்கம் தேவை. தூக்கம் குறைவாக இருக்கும் குழந்தைகள் குண்டாக இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதுபோல தூங்கப்போகும் முன்னர் 30 நிமிடங்களுக்கு முன்னரே எல்லா எலக்டிரானிக் சாதனங்களையும் மூடி விட வேண்டும். இரவுச் சாப்பாட்டைத் தாமதமாகச் சாப்பிட்டுத் தூங்கும்போது உணவு செரித்து எரிசக்தியாகும் நிலை இல்லாததால் கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து விடுகிறது.

பள்ளியில் என்ன செய்யலாம்?

குழந்தைகளுக்கு பள்ளியிலும் அதிகப்படியான கலோரிகள் போவதைத் தடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைக்கு வீட்டில் தயாரித்த உணவே போதும். பேக்கரி ஐட்டங்களும், துரித உணவுகளும் தேவையில்லை. பள்ளிக்கூட வளாகத்திலேயே எனர்ஜி பானங்களும், தின்பண்டங்களும் கிடைக்காதவாறு செய்யலாம். தினம் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தொடர்ந்து விளையாடி உடலில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைத்துக் குறைக்க குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வத்தை உண்டு பண்ண வேண்டும்.

உடல் பருமனும் அதன் விளைவாக சர்க்கரை நோயும், இருதய நோய்களும் பெருந்தொற்று போல் பரவுவதற்கு முன்னர் அனைவரும் விழித்தெழுந்து குழந்தைகளின் உடல் பருமனைத் தடுப்போம். அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உண்டு பண்ணுவோம்!

- மருத்துவர் ப.வைத்திலிங்கம், குழந்தை மருத்துவ நிபுணர்.

Pin It