பெரியார் திராவிடர் கழகம் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் பறிக்கப்படும் தலித் நிலங்களுக்கான உரிமைப் போராட்டத்தில் கழகம் இறங்கியுள்ளது; இது பற்றிய விவரம்:

மண்ணின் மைந்தர்களான, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பஞ்சமர் நிலங்கள், பூமி தான நிலங்கள் வழங்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையிலும் தலித் மக்கள் மண் உரிமை மறுக்கப்பட்டு இன்று வரை பண்ணை அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆதிக்க சாதி வெறியர்களின் கோரப்பிடியில் உள்ள பஞ்சமர் நிலங்களும் பூமிதான நிலங்களும் கணக்கிலடங்காதவை.

ஒரு சிற்சில சம்பவங்கள் அதாவது மண்ணுரிமைக் கான போராட்டங்கள் தலித் ஆதரவு நிலை சக்திகளால் நடத்தப்படும்போது அவர்களை தீவிரவாதிகளாக அடையாளம் காண்பித்து துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் கொடுமை ஆங்காங்கே நடந்து வருகிறது. (உதாரணமாக 1992 ஆம் ஆண்டு செங்கற்பட்டு, காரணையில் ஜான்தாமஸ் ஏழுமலை படுகொலை) ஆயினும் மண்ணின் மைந்தர்களான தலித் மக்கள் தங்கள் மண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் வட்டம் கேதையுறும்பு கிராமம் பழையபட்டி புல எண்கள். 267/2பி, 267/4பி ஆகியவற்றில் சுமார் 2 ஏக்கர் நிலம் பழையபட்டியைச் சேர்ந்த பெருமாள் மாதாரி மகன் அழகிரி மாதாரி என்பவருக்கு பூமிதான கமிட்டியின் மூலமாக பட்டா எண்.660-ன்படி தானமாக வழங்கப்பட்டது. அழகிரி மாதாரி உயிருடன் வாழ்ந்த காலத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி போன்ற இனங்களை முறையாக செலுத்தி விவசாயம் செய்து அனுபவித்து வந்தார்.

அழகிரி மாதாரி இறப்புக்கு பிறகு அழகிரி மாதாரியின் வாரிசுகளான மகன் சுப்பிரமணியன் அவர்களும் மகள் முனியம்மாள் அவர்களும் சேர்ந்து விவசாயம் செய்து ஆண் வாரிசான சுப்பிரமணியன் (அரவாணி) பெயரில் வரி போன்ற இனங்களை செலுத்தி வந்தனர். கடந்த 2003 ஆம் ஆண்டு ஒட்டன் சத்திரம் சார்நிலை கருவூல ரசீது எண்.55/03-ன்படி ரூ.160/- கட்டணம் செலுத்தி ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அவர்கள் ஆணைப்படி மேற்படி பூமிதான நிலம் புல எண். 2672பி, 267/4பி ஆகியவைகள் உட்பிரிவு செய்து விவாசயம் செய்து வந்தனர்.

பக்கத்திலுள்ள நில உடைமையாளர்களான நாச்சிமுத்து செட்டியார் மகன்கள் சாதிவெறியுடன் தலித் மக்களின் நில உரிமையை பறிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். 2004 ஆம் ஆண்டு அழகிரி மகன் சுப்பிரமணியன் (அரவாணி) நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தார்.

மேற்படி நாச்சிமுத்து செட்டியார் மகன்கள் மேற்படி குடிசைக்கு தீ வைத்து அழகிரி மாதாரி வாரிசுகளை நிலத்திலிருந்து துரத்துவதற்கு முயற்சி செய்தனர். ஒரு எளியவனின் குடிசைக்கு தீ வைத்த சம்பவத்தை ஒட்டன்சத்திரம் காவல்துறை சமரம் செய்து வைத்து வன்கொடுமை புரிந்துள்ளது. அதன்பிறகு தொடர்ந்து அழகிரி மாதாரி வாரிசுகளான சுப்பிரமணியம் (அரவாணி), முனியம்மாள் ஆகிய இருவரும் கூட்டாக விவசாயம் செய்து அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 19.11.2006 ஆம் தேதி காலை சுமார் 7 மணிக்கு தங்களுடைய நிலத்தில் உழுவடை செய்யச் சென்ற அழகிரி மாதாரி மகள் முனியம்மாள் அவர்களை பழையபட்டியை சேர்ந்த நாச்சிமுத்து செட்டியார் மகன்களான செல்லமுத்து மற்றும் பாலு என்ற பாலகிருஷ்ணன் ஆகியோர் உழவடை செய்யாமல் தடுத்து சாதியைச் சொல்லி திட்டி வன்கொடுமை புரிந்தனர். இது விசயமாக 21.11.2006-ம் தேதி ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் மனு செய்து (மனு எண்.426/06) 25.11.2006 -ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. (மு.த.அ.எண்.949/06 U/S 448, 341, IPC, 3(1) (X) SC/ST ACT). இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இரு நபர்களும் பல நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமலும் பழனி வருவாய் கோட்டாட்சியர் 12.12.2006-ல் பிறப்பித்த 145 (1) அறிக்கையை தலைமறைவு எதிரிகளுக்கு ஒட்டன்சத்திரம் காவல் துறையே சார்பு செய்து கையெழுத்தும் வாங்கியுள்ளது.

மேலும் மேற்படி நபர்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சூழ்நிலையில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத காரணத்தால் அடியாட்களை ஏவி முனியம்மாள் அவர்களை கொலை மிரட்டல் செய்தனர். இது விசயமாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனு செய்யப்பட்டு (மனு எண்.490/31.12.2006) இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழனி வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த ஆணையில் விசாரணைக்கு ஆஜராகாத பட்சத்தில் இரு நபர் ஜாமீனில் ஆஜராக உத்திரவு பிறப்பித்திருந்தார். ஆனால் செல்லமுத்து என்கிற நபர் பழனி வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் பலமுறை ஆஜராகாமல் இருந்துவிட்டு எந்தவிதமான ஜாமீனிலும் வராமல் மீண்டும் ஆஜராகியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் 2003 ஆம் ஆண்டு அத்துமால் செய்யப்பட்ட பூமி தான நிலத்தை நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பூமிதான வாரியம் 27.8.2005 ஆம் தேதி ந.க.எண்.2296/04 உத்தரவுப்படி திருத்தி உட்பிரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்சமயம் மேற்படி திருத்தி உட்பிரிவு செய்யப்பட்டுள்ளபடி அனுபவித்து கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமலேயே நிலத்தை உட்பிரிவு செய்து திருத்தி உள்ளது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை பறிக்கும் தீண்டாமை வன்கொடுமை செயலாகும். இதுபோலவே ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக நில அனுபவத்தை தொடர்ந்து மறுத்து இடையூறு செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம், தமிழக தலித் விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் களத்தில் இறங்கின. மார்ச் 5 ஆம் தேதி காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், எஸ்.டி. கல்யாண சுந்தரம் (நிறுவனர், ஆதித் தமிழர் ஜனநாயக முன்னணி), தலித் பி. சுப்ரமணியன் (நிறுவனர், தமிழக தலித் விடுதலை இயக்கம்) ஆகியோர் முன்னிலையில் ‘பூமி தான நில மீட்புப் போராட்டம்’ அறிவிக்கப்பட்டது.

போராட்ட அறிவிப்பு வெளிவந்தவுடன், ஒட்டன் சத்திரம் வட்டாட்சியர் அவசர அவசரமாக கடந்த மார்ச் 4 ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் போராட்டம் நடத்த இருப்பதையொட்டி, இந்த அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது என்று வட்டாட்சியர் எழுத்து மூலம், அழைப்பு விடுத்தார். வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் இருதரப்பு பிரதிநிதிகளும், காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றாக 15.3.2007 அன்று பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. நீதி கிடைக்காவிட்டால் மார்ச் 20 ஆம் தேதி பூமிதான நில மீட்புப் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்:

நிலமில்லா விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கும் 2 ஏக்கர் இலவச நிலம் திட்டத்தில் பஞ்சமர் நிலங்களையும், பூமிதான நிலங்களையும் விட்டுவிட்டு இதர தீர்வை ஏற்பட்ட தரிசு நிலங்களையும் புறம்போக்கு நிலங்களையும் பட்டா வழங்கு!

திண்டுக்கல் மாவட்டத்தில் பஞ்சமர், பூமிதான நிலங்களில் தமிழ்நாடு கதர் வாரியம், மத்திய இரயில்வே துறை போன்ற பிற அரசு மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து தலித் மக்களுக்கு பட்டா வழங்கு!

இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மற்றும் மான்ய நிலங்கள் ஆகியவற்றை தலித் மக்களுக்கு குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை எடு!

பஞ்சமர் நிலம், பூமிதான நிலம் ஆகியவற்றை தலித் மக்களிடமிருந்து பறித்துக் கொண்ட ஆதிக்க சாதி வெறியர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைகள் ஒழிப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்கு.

மாவட்டந்தோறும் உள்ள பஞ்சமர் நிலங்கள் பூமிதான நிலங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்தின் விளம்பரப் பலகையில் வெளியிட உத்தரவிடு!

சாதி வெறியுடன் செயல்பட்டு தலித் மக்களின் நில உரிமையை பறிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படும் ஒட்டன்சத்திரம் பழைய பட்டியைச் சேர்ந்த என்.ரத்தினவேலு சாமி, என் செல்லமுத்து, என். கந்தசாமி, என்.சிவசுப்பிரமணியன், என். சக்திவேல், என். பாலு என்ற பாலகிருஷ்ணன் மற்றும் என். ராதா கிருஷ்ணன் ஆகியோரை தீண்டாமை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்.

பூமிதான வாரியம் தாழ்த்தப்பட்ட அரவாணி சுப்பிரமணியன் என்பவரின் நில அனுபவ உரிமைக்கு எதிராக பிறப்பித்த உத்தரவு எம்.2.3034/2004 பூ.வா.4/நாள் 27.6.2006க்கு 20.7.2006 தேதி அனுப்பிய பதில் அறிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுத்து அழகிரி மாதாரி மகள் முனியம்மாள் பெயருக்கு பட்டா வழங்கு.

பழனி வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில விசாரணைக்கு ஆஜராகாத என்.செல்லமுத்து மீது வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த முதல் நிலை ஆணையில் கூறப்பட்டுள்ளபடியும், சட்டபடியும் பிடி ஆணை பிறப்பித்து கைது செய்.

நிலத்தை அனுபவித்து வருகிறவர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யாமல் புல எண்.267/2பி, 267/4பி-யில் திருத்தி உட்பிரிவு செய்து பிறப்பித்த தமிழ்நாடு பூமி தான வாரிய தனி அலுவலர் அவர்களின் எதேச்சதிகாரமான உத்திரவை இரத்து செய்.

ஒட்டன் சத்திரம் வட்டம், கேதையுறும்பு கிராமம், பழையபட்டி புல எண்.267/2பி, 267/4பி-யில் 1956 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா எண்.660-ல் உள்ளபடியும், 2003 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரம் வட்ட நில அளவையர் உட்பிரிவு செய்தபடியும் அழகிரி மாதாரி மகள் முனியம்மாள் பெயருக்கு பட்ட வழங்க உத்தரவிடு.