ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர்களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகு காலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விபரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்து வந்தார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு திரு. சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள்.
அவ்வுபசாரப் பத்திரங்களுக்கு திரு.சௌந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப்போவதாயும், ஆனால் அதில் தனக்கு சில கஷ்டங்கள் நாடார் சமூகத்தாராலேயே இருப்பதாகவும் சொல்லி, உதாரணமாக அருப்புக் கோட்டையில் உள்ள நாடார் ஹைஸ்கூலில் ஆதிதிராவிடப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளுவதில்லை என்கின்ற நிர்ப்பந்தமிருப்பதேதான் முக்கியமான தடையென்றும் கூறி, அதனால் தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் தன்னுடைய சமூகத்திலேயே இவ்வித கொடுமையிருந்தால் தன்னுடைய உத்தியோக ஓதாவில் மற்ற சமூகத்தாருக்குள் இருக்கும் கொடுமைகளை நீக்கும்படி சொல்ல தனக்கு எப்படி தைரிய முண்டாகுமென்றும், ஆகவே எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரத்தில் இவ்வருப்புக்கோட்டை பள்ளிக்கூடத்தில் இக்கொடுமை நீக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு தனது வேலை சுலபமாகுமென்றும் அவசியம் செய்யவேண்டும் என்று தனது சமூகத் தலை வரை அடிபணிந்து கேட்டுக் கொள்ளுவதாகவும் சொன்னார்.
அதற்கிசைய அன்று அப்பள்ளிக்கூட நிர்வாகிகள் அவ்வித நிர்ப்பந்தத்தை நீக்கிவிட்டு ஆதி திராவிட மக்களை அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . இது நமது நாட்டில் உள்ள தீண்டாமையும் உயர்வு தாழ்வும் ஒழிய ஒரு பெரிய அறிகுறியாகும் என்றே சொல்ல வேண்டும். இவ்வித அரிய காரியத்தைச் செய்த அருப்புக் கோட்டை நாடார் தலைவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 29.09.1929)