இந்திய உளவுத் துறையான ‘ரா’ அமைப்பை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை தடை செய்வது குறித்தும், அதை எழுதியவர் மீது அரசு அலுவலக ரகசியங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.

‘ரா’ அமைப்பில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.கே.சிங் அண்மையில் ‘இந்தியாஸ் எக்ஸ்டர்னல் இன்டலிஜன்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். இந்திய ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றி வந்த சிங், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ‘ரா’ அமைப்புடன் இணைந்து பணியாற்றினார். இதில் கிடைத்த அனுபவத்தை புத்தகமாக எழுதியிருந்தார்.

இதில் ‘ரா’ அமைப்பு செயல்படும் விதம் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் பலரை பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார்.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., ஆண்டுதோறும் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்கிறது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்துக்கு எவ்வித அறிக்கையும் ‘ரா’ அமைப்பு தாக்கல் செய்வதில்லை. இது ஏன் என தனது புத்தகத்தில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

‘ரா’ அமைப்புக்கு தரம் குறைந்த கருவிகள் வாங்கியதில் மேல் அதிகாரிகளின் ஊழல், வெளிநாட்டுக்கு மேற் கொள்ளும் சொந்த பயணங்களை உளவு பார்க்கும் பணிக்காக சென்றதாக மேல் அதிகாரிகள் பொய்க் கணக்கு காட்டும் முறைகள், வெளிநாடுகளில் படிக்கும் தங்களது பிள்ளைகளின் செலவுகளை அன்னிய ஏஜென்ட்களுக்கு செலவிட்டதாக உயர் அதிகாரிகள் எழுதும் போலிக் கணக்கு ஆகியவற்றை தனது புத்தகத்தில் புட்டு புட்டு வைத் துள்ளார். ‘ரா’ அமைப்பின் செலவு களை இந்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்வதில்லை.

இதை வைத்து ஏகப்பட்ட கணக்கு மோசடிகள் அங்கு அரங்கேறி வருவதாக இந்த புத்தகத்தில் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்தப் புத்தகத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. புத்தகத்தை எழுதிய வி.கே.சிங் மீது அலுவலக ரகசியங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் யோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

‘தலித்’ மக்களுக்கு துரோகம்!

கடந்த 10 ஆண்டுகளில் - தலித், பழங்குடியினருக்காக தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 11 ஆயிரத்து 380 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்களின் ஊதியம் ரூ.32 கோடி பயன்படுத்தப்படாமல், வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாம். தமிழக நிதிநிலை அறிக்கையில் - ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மக்கள் தொகை அடிப்படையில் ரூ.2800 கோடி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட்டதோ ரூ.1556 கோடி மட்டுமே! கிருஷ்ணகிரியில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி எஸ்.சி., எஸ்.டி. பட்டியலினத்தவரின் துணைத் திட்டம் குறித்து நடந்த கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு மற்றும் கிறிஸ்துதாஸ் காந்தி ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.

தமிழ் வழிபாடு தடை நீக்கம்

திருமணம் மற்றும் வாழ்வியல் சடங்குகளை தமிழில் நடத்தக் கூடாது; சமஸ்கிருதத்திலேயே நடத்த வேண்டும் என்ற தர்மபுர ஆதினத்தின் ‘சூத்திர’ சீடர்கள் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்நீதிமன்றம் இதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை நீக்கி, தமிழில் நடத்த அனுமதி வழங்கியது. தமிழில் நடத்தக் கோரி சக்திவேல் முருகனார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் ஆஜராகி வாதாடினார்.

நீதிபதி இராம சுப்ரமணியம் - இடைக்காலத் தடையை நீக்கி அறிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் வந்தாலும் இன்னும் பொதுக் கோயில்களுக்குள்ளே ‘தலித்’ மக்கள் நுழைய முடியவில்லை. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

ஓய்வு வயது உயர்கிறதாம்!

அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களின் ஓய்வு வயதை மத்திய அரசு 58லிருந்து 60 ஆக உயர்த்துகிறது. இதனால் - இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது.

ரகசியம்... முக்கிய காரணம் இருக்கிறது!

கேள்வி : திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள், இயக்கத்தில் இல்லாத புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இவர்களின் படைப்புகளை நாட்டுமையாக்கிய கலைஞர் தந்தை பெரியார் மற்றும் திராவிடர் கழக எழுத்தாளர்களின் படைப்புகளை ஏன் நாட்டுடைமை ஆக்கவில்லை?

பதில்: அதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கலாம்.

‘உண்மை’, ஜூன் 1-15,2007. தி.க. தலைவர் கி.வீரமணி பதில்

Pin It