ஒரு அரசை வழி நடத்திச் செல்ல அல்லது அவற்றை வலுப்படுத்த நாடாளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகைகள் என்ற நான்கு பெரும் தூண்கள் மிகவும் அவசியம். அதிலும் இந்தியா போன்ற அதிக மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட, மக்களாட்சியை நம்புகின்ற நாடுகளின் வளர்ச்சிக்கு மேற்கண்ட நான்கு துறைகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். இவைகள் ஒன்றையொன்று சார்ந்து, கண்காணித்து, செயல்பட்டு மக்களாட்சியின் செழுமைக்கும், எழுச்சிக்கும் வித்திடுகின்றன. மன்னராட்சிக் காலத்தில் அரசர் வைத்ததே சட்டமாக இருக்கும். குடிமக்கள் எதிர்த்துக் கேள்வியெழுப்பினால், அரசரின் படைக்கலன்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். இதனால் வாய் பேச இயலாத ஏதிலிகளாக மக்கள் வாழ்ந்து மறைந்தனர்.

 
Law
உரிமைகளும், உணர்வுகளும் நசுக்கப்பட்ட நிலையில் குமுறிக் கொண்டிருந்த மக்களுக்கு வாய்ப்பாய் அமைந்ததுதான் மக்களாட்சி என்ற தத்துவம். வெள்ளைப் படைகள் இந்தியாவைச் சூறையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அரசர்கள் காலத்திலிருந்த ஒடுக்குமுறை இல்லையென்ற போதும், மக்களை உணர்வுகளற்ற வெறும் பொம்மைகளாய் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்தத் துணியவில்லை. மக்களின் சிற்சில அடிப்படை உரிமைகளை கிஞ்சித்தேனும் மதித்தார்கள். மண்ணை மீட்கப் போராடிய வெகுமக்கள் திரளை, ஒடுக்க பிரிட்டிஷ் பேரரசு முனைந்து நின்றது. தன்னுணர்வின்றிக் கிடந்த மகக்ளை உசுப்பேற்றினார்கள் தலைவர்கள். விடுதலைப் போராட்டம் மாபெரும் எழுச்சி பெற்று, செங்குருதி சிந்தியதன் விளைவால் மண்ணின் மைந்தர்களிடம் இந்தியாவை ஒப்படைத்து விட்டு விடை பெற்றுச் சென்றது வெள்ளையர் கூட்டம்.

 
நேரு தலைமையில் நாடாளுமன்ற மக்களாட்சி முறை முகிழ்த்தபோது, அண்ணல் அம்பேத்கர் வழிகாட்டுதலின் பேரில் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு, குடிமக்கள் நலனை மையமாகக் கொண்ட சட்டங்களும், நெறிமுறைகளும் தோற்றுவிக்கப்பட்டன. தற்போது அறுபதாவது ஆண்டை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட, நமது சட்டங்களில் பலவற்றை திருத்தியும், சீரமைப்பும் செய்து வருகிறோம். பல்வேறு சோதனைகளுக்கு இடையில் எவ்வளவோ சட்டங்கள் அமலாக்கப்பட்டும், நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. ஆனால் அதையும் மீறி அதிகார வர்க்கம் மக்களின் நலன்களைச் சூறையாடுவதில் முனைந்து நிற்கிறது. சனநாயகத்தின் நான்கு தூண்களிலும் மக்களின் நலன்களுக்கு எதிரான போக்கு ஊடுருவி நிற்கிறது என்பது நிகழும் எதார்த்தம்.

 
மத்தியில் கூட்டணி அரசுகள் ஆட்சியமைக்கத் தொடங்கியதும் அதிகாரப் பரவலாக்கமும், நிர்வாகச் சீர்திருத்தமும், மாநில நலன்களும் சற்றேனும் செயலாக்கம் கண்டன. மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளை பொது மக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் வெளிப்படையான நிர்வாகச் செயல்பாடு வேண்டும் என்ற அடிப்படையில் பல்லாண்டுகளாய்ப் பேசப்பட்டும், நீதிமன்றங்களால் அறிவுறுத்தப்பட்டும் வந்த ஒரு சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்ததுடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு மே 4ஆம் நாள் நடைமுறைக்கும் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு தமிழகத்தில் அச்சட்டம் எந்த அளவிற்குச் செயல்படுத்தப்பட்டது என்பது விவாதத்திற்குரிய ஒன்று. அதே ஆண்டில் கோவா மாநிலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தமிழகத்திற்கு சற்று முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது. இருந்தபோதும் தற்போது மத்தியில் ஆளுகின்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தமிழகமே முன்னோடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  
அதிகார வர்க்கத்தில் நடைபெறும் இலஞ்ச, இலாவண்ய முறைகேடுகளை அம்பலப்படுத்தவும், எளிய மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் நோக்கிலும், தங்களை ஆளுகின்ற அரசுகளின் செயல்பாடுகளை அனைத்து வர்க்கத்தினரும் அறிந்து கொள்ள வேண்டியும் புரட்சிகரமான திட்டமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தற்போது அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. சனநாயக ஆட்சிமுறைக்கு மாறி ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒளிவு மறைவற்ற அரசின் நடைமுறைகளுக்கு வழிகோலியிருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள். இந்திய ஒன்றியக் குடியரசின் இணையற்ற சாதனை (!?) இது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் ஆட்சி செய்த பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி அரசு தகவல் அறியும் உரிமைச் சட்ட முன்வடிவினைக் கொண்டு வந்தது. கடந்தாண்டு மே மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டன இந்தியக் குடியரசுத் தலைவர் சூன் 15இன் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

 
அக்டோபர் (2005) மாதம் 12ஆம் நாள் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்திய ஒன்றியத்திலுள்ள மாநிலங்களில் வாழும் குடிமகன் தனக்குத் தேவைப்படும், அரசோ அல்லது அரசு சார்புள்ள அமைப்புகள் தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாய்ப்பளிக்கிறது. இதன் மூலம் மக்களுக்குத் தாங்கள் கடமைப்பட்டவர்கள், அவர்களுக்கான ஊழியர்கள் என்பதை அரசுப் பணியாளர்கள் உணர்வதற்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. அரசு அலுவலகங்களின் மெத்தனப் போக்கால் குடிமக்களுக்குக் கிடைக்க வேண்டிய திட்டங்கள், சலுகைகள் இன்ன பிறவற்றின் தாமதத்தை அல்லது உரிமை மறுப்பை உடனடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும், அதன் பொருட்டு மேல் நடவடிக்கை எடுப்பதற்கான சூழலும் தற்போது உருவாகியிருக்கிறது.
அரசு அமைப்புகளும், அதைச் சார்ந்த அமைப்புகளும் தங்களின் செயல்பாடுகளை தாமாக முன்வந்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும் அல்லது மக்கள் கேட்கும் போது மறுக்காமல் தந்தாக வேண்டும் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் அடிப்படை உரிமையாக்கியுள்ளது. அதிகார மூலையின் எந்தப் பக்கமும் இனி தப்பிக்க இயலாது. தகவல் பெறுபவர் எதற்காக அந்தத் தகவலைப் பெற வேண்டும் என்பதை எவருக்குமோ அல்லது எந்த அமைப்பிற்கு விளக்க வேண்டிய அவசியமில்லை என்பது இந்தச் சட்டத்தின் பாராட்டக்கூடிய மற்றொரு அம்சமாகும். பொது அதிகார அமைப்பு என்ற வரையறையின் கீழ் வரும் அனைத்து அதிகார மட்டங்களும் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன. ஊராட்சி, நகரசபை, கூட்டுறவு அமைப்புகள், அரசின் நிதி உதவி பெற்றுச் செயல்படும் தனியார் நிறுவனங்கள், மத்திய, மாநில அரசு அமைப்புகள் ஆகியவை உள்ளடங்கும்.
 
அனைத்து அலுவலகங்களிலும் பொதுத் தகவல் அலுவலர் (Public Information Officer) என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ள ஒருவரே மக்கள் கேட்கும் தகவல்களுக்குப் பொறுப்பாவார். இவருக்குக் கீழ் உதவித் தகவல் அலுவலர்கள் கிளை மற்றும் பிரிவு அலுவலகங்கள் சார்ந்து செயல்படுவார்கள். இவர்களுடைய பணி, மக்கள் கேட்ட தகவல்கள் தாமதமாகவோ, தர இயலாமலோ போய்விடின் அதற்கான காரணத்தையும் தெரிவித்தாக வேண்டும். அவசரமான தகவல்களை 48 மணி நேரத்திற்குள் வழங்கியாக வேண்டும். எழுத்தறிவற்ற பாமர மக்களுக்கு, தகவல் பெறுவதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்களை நிரப்பித் தர வேண்டிய பணியும் இவர்களைச் சார்ந்தது. வழங்கப்படும் விண்ணப்பத்தோடு ரூ.50ம் தகவல் அலுவலரிடம் அளிக்க வேண்டும். தகவலைப் பொறுத்தும், அதனை அளிக்கின்ற விதத்தைப் பொறுத்தும் மாறுபடும் கட்டணங்களை தகவல் அலுவலரிடம் வழங்குதல் வேண்டும். ஆவணங்களைப் பார்வையிட்டு தகவல்களைக் குறிப்பெடுக்க விரும்பினால், முதல் ஒரு மணி நேரத்திற்கு எவ்விதக் கட்டணமுமில்லை. அதன் பிறகு ஆகும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ரூ.5 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம்.

 
குடிமக்களால் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றும் நாடாளு மன்றத்தில் எழுப்பப்படும் வினாக் களுக்குச் சமமாகும். காரணம் எதுவுமின்றி மறுக்கப்பட்டாலோ அல்லது தாமதிக்கப்பட்டாலோ தகவல் ஆணையம் நாளொன்றுக்கு ரூ.250ஐக் தண்டத் தொகையாகச் செலுத்த அலுவலருக்கு உத்தரவிடலாம். உரிய காரணமின்றி விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டாலோ அல்லது தீய நோக்குடன் தகவல்களைச் சிதைத் திருந்தாலோ தொடர்புடைய அதிகாரிகள் மீது ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்.

 
மத்திய புலனாய்வுத் துறை, உளவுத்துறை, விண்வெளி ஆய்வு மையம், இராணுவ இரகசியத் தகவல்கள், காவல்துறை, பாதுகாப்புத்துறை, வருவாய்ப் புலனாய்வுத் துறை, அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை போன்றவை உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு சார்ந்த அரசுத் துறைகள் முப்பத்தி மூன்றை தகவல் பெற முடியாத துறைகளாக நடுவணரசு பட்டிய லிட்டுள்ளது. அதே போன்று மாநில அரசும் பட்டியலிட்டுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற உரிமை மீறல்களுக்குக் காரணமாகும் தகவல்களும், நீதிமன்ற அவமதிப்பிற்கும், நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட தகவல்களும், நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறாய்த் திகழும் அனைத்துத் தகவல்களையும் தகவல் பெற முடியாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் பெரும் பான்மையாய் நடைபெறும் காவல்துறை யிடமும் தகவல்கள் பெற முடியாத துறைகள் உள்ளன. சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகளும் தகவல்கள் பெற இயலாத துறைகளின் பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளது மிகப் பெரும் தவறாகும். வீரப்பனைப் பிடிக்கின்ற சாக்கில் அதிரடிப்படையினர் நடத்திய அக்கிரமங்கள் இன்றைக்கு வெளியே வந்துள்ளன என்பதும் இவ்விடத்தில் குறிக்கத்தக்கது. மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராய்த் தீவிரக் குரலெழுப்ப வேண்டும்.

 
அய்.நா. அவை 1946ஆம் ஆண்டு தனது முதல் அமர்விலேயே தகவல் அறியும் உரிமையை குடிமக்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரித்து தீர்மானமாக 59(1) இயற்றியுள்ளது. 1980ஆம் ஆண்டு பார்படாசில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளில் சட்ட அமைச்சர்கள் கூட்டத்தில், தகவல் அறியும் உரிமையின் மூலமே சனநாயக மாண்பினைக் காத்து, அரசின் நடைமுறைகளை அர்த்தமுள்ளதாக ஆக்க இயலும். அதன் மூலம் மக்களின் பங்கேற்பினையும் உறுதி செய்ய முடியும் என் முடிவெடுக்கப்பட்டது. 1766ஆம் ஆண்டு சுவீடன் கொண்டு வந்த பத்திரிகைச் சுதந்திரச் சட்டமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முன்னோடியாகத் திகழுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலான உலக நாடுகள் இச்சட்டத்தினை அமல் செய்து வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
காலம் தாழ்ந்தேனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள இந்தியா, இதனைச் செயல்படுத்துவதில் தீவிர முனைப்புக் காட்ட வேண்டும். அனைத்து மாநிலங்களும் இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தி அரசில் மக்களின் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் நேர்மையான தூய்மையான நிர்வாக முறை சாத்தியமாகும். பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்று கதையாக தகவல் அறியும் உரிமைச் சட்டமும் சீரழிக்கப்படுமாயின் மக்களாட்சியை அவமதிக்கும் செயலுக்கு ஒப்பாகும். இச்சட்டம் மக்களாட்சியின் மகுடமா..? அல்லது சேற்றில் விழுந்த மாணிக்கமா..? என்பதை நடைமுறைப்படுத்த இருக்கும் அரசுகளும், அதிகார அமைப்புகளும் தான் சொல்ல வேண்டும்.
Pin It