&quo
எனக்குத் தெரிந்த ஒரு மாணவன், மிகவும் தீவிரமாகப் பல மாணவர்கள் படித்துப் போட்டியிடும் நகரப் பள்ளியொன்றில் படித்துக் கொண்டிருந்தான். வீட்டுச் சூழல் அவ்வளவு சிறப்பானதாக இல்லாவிட்டாலும் அவனுடைய உழைப்பும் மற்றவர்களுக்குச் சமமான சரக்கோடு தானும் திகழவேண்டும் என்கின்ற அவாவும் அவனைப் படிப்பில் முன் நிறுத்தின.

அவன் தந்தைக்குப் பணிமாற்றம் ஏற்பட்டு ஒரு புறநகர்ப் பகுதியில் சாதாரணப் பள்ளியொன்றில் அவன் சேர்க்கப்பட்டான். மிகவும் சாவகாசமாகப் படித்தாலே அவன்தான் முதல் மதிப்பெண் என்கின்ற நிலை. நாளடைவில் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும். நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்கின்ற அவனுடைய ஆர்வம் மழுங்கிப் போனது. நத்தைகளின் மத்தியில் ஆமையாக இருந்தாலே போதும் என்கின்ற திருப்தி அவனுக்கு ஏற்பட்டுவிட்டது.

நமக்குள் இருக்கும் சக்தி வெளிப்பட வேண்டுமென்றால் நம்மைப் போராடச் செய்கின்ற சூழல் நிலவ வேண்டும். சில நேரங்களில் நாமே சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பறவை நேசர்கள் ஒரு செய்தியை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள். கழுகு, அல்பட்ராஸ், புறா போன்ற வேகமாகப் பறக்கும் பல பறவைகள், பலமாக அடிக்கும் காற்றில், இதமாக வீசும் தென்றலில் பறப்பதைக் காட்டிலும் விரைவாகப் பறக்கின்றன என்பதுதான் அது. அதற்குக் காரணம் தங்கள் இறகுகளில் உள்ள தசைநார்களை நன்றாக இயக்குவதற்குப் பலமான காற்று உந்துதலைத் தருகிறது. உசுப்பிவிடுகிறது. அதைப்போலவே நீராவிக் கப்பலில் உள்ள கொதிகலன்கள் கடுமையான காற்றுக்கெதிரே கப்பல் கிழித்துச் செல்லும்போது சிறப்பாகச் செயல்படுகின்றன.

ஒவ்வொரு மனிதனுமே இக்கட்டு வரும்போது சுறுசுறுப்புடன் பணி செய்கிறான். வெள்ளம் வரும்போது, விபத்து ஏற்படும்போது நாமெல்லாருமே மின்னல் வேகத்தில் பணிகளை முடுக்கி விடுகிறோம். தேர்வுக்கு கடைசி மணிநேரத்தில் சில மாணவர்கள் காட்டுகின்ற தீவிரத்தை, ஏன் பள்ளி திறந்த நாளிலிருந்து அவர்கள் காட்டவில்லை எனப் பெற்றோர்கள் வருத்தப்படுவது உண்டு.

ஆப்பிரிக்காவில் மிகவும் உயரமாக வளரும் சில மரங்களின் விதைகளை இந்தியாவில் விதைத்தார்கள். ஆனால் அவை குட்டையாகத்தான் வளர்ந்தன. அடர்ந்த ஆப்பிரிக்கக் காடுகளில் உயரமாக வளர்ந்தால்தான் மற்ற மரங்களுடன் சூரிய ஒளிக்காகப் போராட முடியும். வேர்கள் ஆழமாகச் சென்றால்தான் பூமிக்கடியில் இருக்கும் நீரை ஸ்ட்ரா போட்டுக் குடிக்க முடியும். இங்கு அதற்கான அவசியமே இல்லாதபோது ஏன் வளரவேண்டும், எதற்காகப் பாடுபட வேண்டும்.

குழந்தைகளைப் போராடும் மனநிலையோடு நாம் வளர்க்க வேண்டும். மிகவும் பணிவோடு வளர்க்கப் படுகின்ற குழந்தைகளுக்குப் போராடத் தெரியாது. உண்மைக்காகவும் நியாயத்திற்காகவும் துணிச்சலுடன் போராடுகின்ற பக்குவம் அவர்களுக்கு வந்து விட்டால், அக்கிர மங்களும் அநீதிகளும் அராஜகங்களும் அடியோடு அழியும். வசதி வாய்ப்புகள் வேறு: போராடும் பக்குவம் வேறு. வசதி வாய்ப்புகள் தந்துவிட்டால் போராடத் தோன்றாது என்பதல்ல; நாம் ஏன் வெளியேயும் நம் குழந்தைகளுக்கு ஒரு கருப்பையை உண்டாக்க வேண்டும்? அதுதான் மனரீதியாக ஓர் ஊனத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி துணிச்சலைத் துண்டித்து விடுகின்றன. போராட்டம் என்றால் முரசெடுத்து முழுக்குவதும் அல்ல; குரலெடுத்துக் கூப்பாடு போடுவதும் அல்ல. மௌனமாக நிகழும் மலர்ச்சி.

புத்தர், லாவோட்ஸ், நானக், கபீர், தாதோ, மகாவீர், சாரதா துஸ்ட்ரா போன்ற அனைவருமே மிகப்பெரிய போராட்டக்காரர்கள்தான். ஆனால், அவர்கள் வன்முறையினால் அப்பட்டமாகத் தெரியும் விதிமுறைகளால் தங்கள் கிளர்ச்சியைச் செய்யவில்லை. அவர்களுடைய தாக்கம் பல ஆயிரம் ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும் தன்மை பெற்றதற்குக் காரணம் அவர்கள் மனித மனங்களில் மாற்றங்களைத் தோற்றுவித்தார்கள். நம் உடலும் மனமும் வரையறை இல்லாத அளவிற்கு ஆற்றலை அடைத்து வைத்திருக்கின்றன. இறைப்பவர்களுக்கு அவை தொட்டனைத்தூறும் மணற்கேணி. மலைப்பவர்களுக்கு மண் மூடிய பாழ் ஊரணி!

(படம் - ஓர் பொலிவிய கிராமத்தின் பள்ளியறை)
Pin It