பெரியாரின் பெருந்தொண்டரும், சுயமரியாதை வீரருமான ஆனைமலை நரசிம்மன் அவர்களுக்கு இது நூற்றாண்டு ஆகும்.
1906-ல் அவர் பிறந்தார். ஆனைமலை நரசிம்மன் சாதி ஒழிப்புப் போராளி. 1957-ல் சாதியை ஒழிக்க பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் பங்கேற்று 9 மாதம் சிறைத் தண்டனை பெற்றவர்; ஆச்சாரியார் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில், நீடாமங்கலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு வழி நடைப்படையில் பங்கேற்றவர்; ‘ராமன்’ பட எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு; ஓட்டல்களில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்பு உட்படப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். தான் பிறந்த ஆதிக்க பிற்படுத்தப்பட்ட சாதியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே தலித் மக்களின் உரிமைக்குப் போராடியவர்; தனது சொந்த ஊரான ஆனைமலையில் அருந்ததி சமூகத்தைச் சார்ந்த தோழர் மாசானியை பஞ்சாயத்துத் தலைவராக்கிக் காட்டினார்.
தேசியக் கட்சியான காங்கிரசில் இருந்த போதே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரவு பாடசாலையை தனது சொந்த செலவில் துவங்கினார். திறப்பு விழாவுக்கு இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பன தலைவர்களையே அழைத்தார். தலித் மாணவர்களுக்கு ஆனைமலையில் விடுதி ஒன்றைத் திறந்தார். அதன் திறப்பு விழாவுக்கு, அன்றைய சட்டப் பேரவைத் தலைவர் சிவசண்முகம் (பிள்ளையை) அழைத்தார்.
சாதி ஆதிக்கவாதிகள் குடியிருப்புப் பகுதியில் தனது சொந்த செலவில் வீட்டு மனைகளை வாங்கிக் கொடுத்து, தலித் மக்களைக் குடியேறச் செய்தார். சொந்த கிராமத்தில், சாதி ஒழிப்புக்காகப் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஆனைமலை நரசிம்மன். தோழர் ஆனைமலை நரசிம்மன் அவர்களுடன் சாதி ஒழிப்புப் போரில் சிறை சென்ற போராளிகளுக்கு திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ‘தமிழர் எழுச்சி’ விழாவில் மரியாதை தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த சாதி ஒழிப்புப் போராளிகளான மா.திருமூர்த்தி, க. காளிமுத்து, ஆறுமுகம் ஆகிய மூவரும், தோழர் ஆனைமலை நரசிம்மன் அவர்களின் சாதி ஒழிப்பு நடவடிக்கைக்களை விளக்கும் துண்டறிக்கைகளை அச்சிட்டு வழங்கியுள்ளனர்.