டாக்டர் அனிதா அவர்களின் படுகொலையைக் கண்டித்து திரைப்பட இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் 07.09.2017 ல் சென்னையில் நடத்திய கண்டனக் கூட்டத்தில், தோழர் இரஞ்சித் அவர்கள் ஆற்றிய உரையில், தோழர் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் வாக்கியங்களைப் பயன்படுத்தினார்.
“பெரியார் தெரு எங்கள் காலனிக்குள் இருக்கிறது. எத்தனை ஊர்த்தெருவுக்குள் அம்பேத்கர் பெயர் இருக்கிறது?
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தோழர் இரஞ்சித் மட்டுமே வைத்த குற்றச்சாட்டுக்கள் இல்லை. திராவிடர் இயக்கங்களோடு தோழமையாக இயங்கும் பல அமைப்புத் தோழர்கள் பல ஆண்டுகளாக தங்களுக்குள்ளும், சில மேடைகளில் பகிரங்கமாகவும் எழுப்பிய கேள்விகள் தான். அந்தக் கேள்விகளைச் சுயமரியாதைக் காலத்தில் நின்று விவாதிப்போம்.
‘ஊர்’த் தெருவில் பெரியார் பெயர் இருக்கிறதா?
பெரியார் பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும், சேரியில் அவர் பெயர் இருக்கிறது. ஆனால் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக ‘ஊர்’ தெருவுக்குள் அம்பேத்கரின் பெயர் இருப்பதில்லை என்பது தான் குற்றச்சாட்டு. வார்த்தைகள் வேறுவிதமாக வருகின்றன. அவ்வளவுதான். இது பெரியாரையும், அம்பேத்கரையும் ஒட்டுமொத்தமாகக் கொச்சைப்படுத்துவதாகும்.
பெரியார் தெரு காலனிக்குள் இருக்கிறது. எத்தனை ‘ஊர்’த்தெருவில் அதே பெரியாரின் பெயர் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிப் பாருங்கள். பெரியாரை அறிந்தவர்கள் என்றால் இப்படித்தான் கேட்டிருக்கவேண்டும். எத்தனை பிற்படுத்தப்பட்டவர்களின் ஊர்களில் தெருக்களுக்குப் ‘பெரியார்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது? இருக்காது.
ஒன்றிரண்டு இருந்தால்கூட அவை திராவிடர் இயக்கங்கள் மிக வலுவாக இருந்த காலத்தில், அந்த இயக்கங்களின் தோழர்களின் முயற்சியால் பெயர் சூட்டப்பட்டவையாக இருக்கும். ஆனால் சேரிகளில், எந்த இயக்கத்திலும் இல்லாத வெகு மக்கள்கூட பெரியார் பெயரை முன்மொழிந்து, தெருவுக்குப் பெயர் வைத்திருப்பார்கள். எந்தச் சராசரிப் பிற்படுத்தப்பட்டவனும் - எந்தச் சராசரி ஊர்க்காரனும் பெரியார் பெயரைத் தெருவுக்குச் சூட்ட முன்வரமாட்டான். வந்ததே இல்லை.
நகரங்களின் நிலை வேறு. நகரங்களிலும், பெரு நகரங்களிலும் பெரியார் பெயர் இருக்கிறது. பெரியார் சிலைகள் இருக்கின்றன. உண்மைதான். அங்கெல்லாம் அம்பேத்கர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. சில இடங்களில் அம்பேத்கர் சிலைகள் உள்ளன. சில இடங்களில் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. ஒப்பீட்டளவில் அம்பேத்கர் பெயர்களும், சிலைகளும் நகரங்களில்கூட குறைவாகத் தான் இருக்கும்.
காரணம், பெரியார் - அம்பேத்கர் இருவரும் கருத்தியல் ரீதியாக ஒரே பாதையில் பயணித்தவர்கள் தான். ஆனால், தோழர் பெரியார் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டி எங்கும் 50 ஆண்டு காலம் சுற்றிச் சுழன்று சாதி ஒழிப்புப்பணியாற்றியவர். அவருடைய நேரடியான களமும், தளமும் தமிழ்நாடு. அம்பேத்கர் அவரைவிடக் குறைந்தவர் என்றோ, பெரியார் அளவுக்குப் பணியாற்றாதவர் என்றோ பொருள் அல்ல. அவரது நேரடிக் களமும் தளமும் வேறு வேறு. தமிழ்நாட்டைவிட மற்ற தேசங்களில் அவர் அதிகமாக நேரடியாகக் களம் கண்டிருக்கிறார்.
1951 ம் ஆண்டு நடந்த முதல் அரசியல் சட்டத்திருத்தத்தால் இந்தியா முழுவதும் வாழ்ந்த பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்டவர் - பிற்படுத்தப்பட்டவர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டு உரிமை கிடைத்தது. இந்தியா முழுவதும் எத்தனை தாழ்த்தப்பட்டவர் - பிற்படுத்தப்பட்டவர் தெருக்களில் ‘பெரியார்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது? ஆனால், தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள நகரங்களிலும், சேரிகளிலும் ‘அம்பேத்கர்’ பெயர்கள் சூட்டப்பட்டிருக்கும். இதுதான் இயல்பு.
எல்லா தேசிய இனங்களும் பார்ப்பனர்களால், இந்து வேதங்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. அவற்றால் மனநோயாளிகளாக மாற்றப்பட்டுள்ள வெகு மக்கள் தமிழ்நாட்டிலும், மற்ற தேசிய இனங்களிலும் ஒரே மாதிரியாக - அம்பேத்கரியல், பெரியாரியல் போன்ற அனைத்துத் தத்துவங் களுக்கும் எதிராகவே இருப்பார்கள். அவர்களை அந்த நோய்களிலிருந்தும் - நோயாளிகளாக மாற்றியுள்ள பார்ப்பனக் கருத்தியலில் இருந்தும் மீட்டு வருவதுதான் நமக்கு இலக்காக இருக்க வேண்டும். நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களான தலைவர்களை எதிர் எதிர்த்துருவங்களாக நிறுத்துவது பார்ப்பனர்களுக்குத்தான் வெற்றியைக் கொடுக்கும்.
தோழர் பெரியார் யார் யாரை எல்லாம் எதிர்த்து நின்றார்; யாருக்காக உழைத்தார்; யாருடைய உணர்வுகளைப் பிரதிபலித்தர் என்பவற்றை அவரது ‘குடி அரசு’ வாயிலாகப் பார்ப்போம்.
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும்
தமிழ்நாட்டில் 1928 ல் முதன் முதலாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நடைமுறைப்படுத்தப் பட்டது. சென்னை மாகாண அமைச்சர் முத்தையா தனது பத்திரப்பதிவுத் துறையில் முதலில் அந்த உரிமையைத் தொடங்கிவைத்தார். உடனே பார்ப்பன ஏடான ‘சுதேசமித்திரன்’ அதைக் கடுமையாக எதிர்த்தது.
சுதேசமித்திரன் 08.11.28 தேதி “வகுப்புப்பித்தம் தலைக்கேறிவிட்டதா?” என்ற தலைப்பில் “ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிகளாக இருந்த காலத்தில் செய்யத் துணியாத அக்கிரமத்தை....கனம் எஸ்.முத்தையா முதலியார் செய்யத் துணிந்து விட்டார்” என்று ஆரம்பித்து “இது சட்ட விரோதமான காரியமாகும்” என்று தனது கடுமையான எதிர்ப்பைக் கக்கியிருந்தது.
அரசுப் பதவிகள் அனைத்தும் பார்ப்பனர்களுக்கே என்று இருந்த காலத்தில், பார்ப்பனர் அல்லாத மற்ற ஜாதியினர் அனைவருக்கு இடஒதுக்கீடு கிடைத்ததைப் பெரியார் வரவேற்கிறார். ஆனால் அந்த வரவேற்பு அறிக்கையிலேயே அமைச்சர் முத்தையா அவர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார். தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.
“நமது மந்திரி திரு. முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத்தில் உள்ள முக்கிய இலாக்காவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்பதாக ஒருவிதி ஏற்படுத்தி, சட்டமாக்கி விட்டார்...இந்தத் திட்டத்தின் விகிதங்களில் 100-க்கு 3 வீதம் ஜனத்தொகை உள்ள பார்ப்பனருக்கு 100-க்கு 16 உத்தியோகம் வீதமும், 100-க்கு 20 வீதத்திற்கு மேல்பட்ட மகம்மதியர்களுக்கு 100-க்கு 16 வீதமும், 100-க்கு 20 வீதம் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற வகுப்பாருக்கு 100-க்கு 8 வீதமும் உத்தியோகங்கள் பங்கு பிரித்துக் கொடுத்திருப்பதானது மிகவும் அநியாயமானதென்றே சொல்லுவோம்....” (குடி அரசு 11.11.1928 )
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீடு போதாது என்று குரல் எழுப்புகிறார்.
பொதுஇடங்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைய உரிமைப் போராட்டம்
1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 9, 10 தேதிகளில், சென்னை மாகாண 2 வது தீண்டாமை விலக்கு மாநாடு நடத்தப்பட்டது. அதில் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் உட்பட சென்னை மாகாணத்தின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், திவான் பகதூர் பராங்குசம் நாயுடு, டி.வரதராஜுலு நாயுடு, ராவ் பகதூர் கிருஷ்ணாராவ் பான்ஸ்லே, ராவ் சாகிப்கள் ரங்கநாதம் செட்டி, எம்.ஸி. மதுரைப்பிள்ளை போன்றோரும் கலந்து கொண்டனர்.
தோழர் பெரியார், தீண்டாமை விலக்கு என்ற கருத்தை தாழ்த்தப்பட்டவர்களிடம் மட்டும் போய்ப் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஜாதியில் உயர்ந்தவர்கள் என்று கருதிக்கொண்டிருப்பவர்களில், அரசாங்க அதிகாரங்களிலும், சமுதாய அதிகாரங்களில் இருப்பவர்களையும் அழைத்து, தீண்டாமை விலக்கின் அவசியத்தை விளக்கினார். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டு முக்கியத் தீர்மானங்களைப் பார்ப்போம்.
1. தீண்டாமை எனும் காரணத்தால், நகரவாசிகள் யாருக்கும் பொதுவான உரிமைகள் மறுக்கப் படக்கூடாதென்று இம்மாநாடு அபிப்பிராயப்படுவதுடன், இந்நாட்டு மக்களுள் சகல வகுப்பாரும் தெருக்கள், ஆபீஸ்கள், குளங்கள், கிணறுகள், ஆஸ்பத்திரிகள் சத்திரங்கள் முதலான பொது ஸ்தாபனங்களில் தாராளமாய் விடப்பட்டு உபயோகித்துக் கொள்ளும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.
2. காபி ஹோட்டல்கள், சரவக் கடைகள் (சலூன்), தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றில், “தீண்டாதோருக்கு இடமில்லை” என்று கேவலப்படுத்தும் விளம்பரங்கள் போடப்படுவதைக் குறித்து இம்மாநாடு வருந்துவதுடன், அத்தகைய இடங்களில் எல்லாம் தீண்டாதாரைத் தாராளமாக அனுமதிக்க வேண்டும் வற்புறுத்துவதுடன், தீண்டாதாரின் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அத்தகைய ஆட்சேபிக்கத்தக்க விளம்பரங்கள் உள்ள இடங்களுக்குச் செல்லாமல் நின்று விட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை, தனது இயக்கத் தொண்டர்களின் முன்னால் நிறைவேற்றி, தீர்மானங்கள் எழுதிய தாள்களைக் குப்பைக்கு அனுப்பிவிடவில்லை. தீர்மானங்களைச் செயல்படுத்த வேண்டியவர்களை அழைத்து, அவர்கள் முன்னிலையில் நிறைவேற்றை, சென்னை மாகாணம் முழுவதும் அரசாணைகளாகச் செயல்படுத்தியும் காட்டியவர் பெரியார். ( குடி அரசு 17.02.1929)
இந்து மதக் கோவில்களில் நுழைவு
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவண்ணாமலை கோவில், சுசீந்திரம் கோவில், ஈரோடு சிவன்கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என தமிழ்நாட்டின் பல முக்கியக் கோவில்களில் 1927 லேயே, ஜே.எஸ். கண்ணப்பர், எம்.வி.சுப்பிரமணியம், மாயவரம் நடராசன், பட்டுக் கோட்டை அழகிரி போன்றோர் கோவில் நுழைவுக் கிளர்ச்கிளை நடத்தினர். தாழ்த்தப் பட்டோரை உடன் அழைத்துக்கொண்டு கோவில்களுக்குள் செல்ல முயன்று தாக்கப்பட்டும், கோவில்களுக் குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டும் கொடுமைகளுக்கு ஆளாகினர். (குடி அரசு 06.07.1928)
1929 ல் ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் ஈஸ்வரன் (பிள்ளை) என்பவர் தலைமையில், கருப்பன் பசுபதி ஆகிய தோழர்களோடு நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தினர்.
திருவாரூரில் இலட்சுமண (பிள்ளை) என்பவர் தலைமையில், சுப்பிரமணியம், ரெங்கராஜ் ஆகிய தோழர்கள் 300 தாழ்த்தப்பட்ட மக்களுடன் $வீரபத்திர சாமி கோவிலுக்குள் நுழைந்தனர். உள்ளேயே விருந்தும் நடத்தி வந்தனர். ( குடி அரசு 21.04.1929)
இந்தப் போராட்டங்களில் கைதான தோழர்களுக்கு வழக்கு நிதி திரட்டப்பட்டது. ஆதி திராவிட மகாஜனசபையும், மருத்துவர் சங்கமும் மிகத் தீவிரமாக நிதி திரட்டிக் கொடுத்தனர்.
இவை எல்லாம் பார்ப்பனர்களை எதிர்த்துத்தான நடத்தப்பட்டன. பிற்படுத்தப் பட்டவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் பெரியார் என்ன செய்தார் என்று கேட்கலாம். இதோ தொடர்ச்சியாக வருகின்றன.
“மதுரையில் சில பாகம், திருநெல்வேலி, இராமனாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக் கர்வமும் ஜாதிக் கொடுமையும் தலைசிறந்து விளங்குவது யாவரும் அறிந்த ஒன்றாகும். உதாரணமாகப் பார்ப்பனர்களின் கொடுமையோ சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அதற்கடுத்ததான தெற்கத்திய சைவ வேளாள சமூகத்தாரின் கொடுமையோ பார்ப்பனரல்லாதார் சமூகமே வெட்கப் படத் தக்கதாகும். இவ்விரு சமூகக் கொடுமைகளுக்கும் மத்தியில் அங்குள்ள மற்ற வகுப்பார்கள் படும் கஷ்டம் நினைக்கமுடியாததென்றே சொல்லுவோம்.
சாதாரணமாக சென்னை மாகாணத்தில் வேறு எங்குமே இல்லாத கொடுமைகள் பல மேல்கண்ட ஜில்லாக்களில் தாண்டவமாடிக்கொண்டு வருகின்றன. திருச்செந்தூரில் இருக்கின்ற ஒரு சைவக் கோவிலில் வைசியர்கள் என்கின்ற வாணியச் செட்டியார் சகோதரர்களுக்கு உள்ளே செல்ல உரிமை இல்லை. அதுபோலவே மதுரை, ராமேஸ்வரம் முதலிய அனேக கோவில்களில் Bத்திரியர்கள் என்கின்ற நாடார் சகோதரர்கள் பிரவேசிக்க உரிமை இல்லை. (குடி அரசு - 16.09.1928)
இதுபோலப் பல இடங்களில் பெரியார், பார்ப்பனக் கோவில்களில் மட்டுமல்லாமல், பார்ப்பனர் அல்லாத ஜாதிகளில் உயர்ந்த ஜாதியாகக் கூறப்படுபவர்களின் ஆதிக்கங்களையும் எதிர்க்கிறார். அவற்றுக்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்துகிறார்.
“நாங்கள் இந்துக்கள் அல்ல” - தாழ்த்தப்பட்டோர் பிரகடனம்
1929 ஆம் ஆண்டு 13.07.1929 ல், சென்னை ஆதிதிராவிடர் சுயமரியதை மாநாடு ஒன்று நடைபெற்றது. ராவ்சாகிப் எல்.சி.குருசாமி, கே.சி பாலசுந்தரம் ஆகிய தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தோழர் பெரியார் சிறப்புரை நிகழ்த்தினார். அங்கு ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“ஆறரைக்கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது, இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் நிமித்தம் தீண்டப்படாதவர்களாக இருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும், இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும்படியும், சர்க்கார் தஸ்தாவேஜ்களிலும் எங்களை இந்துக்கள் என்கின்ற பதத்திலிருந்து நீக்கிவிடும்படிக்கும் செய்யும்படி சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக்கொள்ளுகின்றது” (குடி அரசு 21.07.1929)
சுயமரியாதை இயக்கத்தினர், இது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு, வேறு வேலைகளில் மூழ்கிவிடவில்லை. தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கும் இடங்களில் களத்தில் நின்று போராடினர். தாழ்த்தப்பட்டோர் இந்து மதத்தை விட்டு வெளியேறத் தூண்டுகோலாக இருந்தனர். அதன் விளைவாக அப்போது, திருவண்ணாமலையில் 200 தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் முகமதிய மதத்திற்கு மாறினர். திருப்பூர் சுல்தான்பேட்டை, முருங்கப்பாளையம் பகுதிகளில் 41 குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். இன்றைய தேனிமாவட்டத்தில் உள்ள சீலையம்பட்டி என்ற கிராமத்தில் 69 குடும்பங்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறின. இவற்றையெல்லாம் குடி அரசு ஏடு உடனுக்குடன் பாராட்டி செய்திகளை வெளியிட்டு வந்தது. ( குடி அரசு 22.10.1929)
நாங்கள் இந்துக்களும் அல்ல; எங்களுக்கு எந்த மதமும் இல்லை
1929 லிருந்து தொடர்ச்சியாக தனது குடி அரசிலும், மேடைகளிலும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, மதமாற்றம், இந்து மத மறுப்பு வாழ்வியல் ஆகியவற்றைத் தீவிரமாகப் பரப்பி வந்தார். அதன் விளைவாகத் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கொச்சி - திருவாங்கூர் சமஸ்தானங்களிலும் இந்து மதம் பெரும் தாக்குதலைச் சந்தித்தது. சுயமரியாதை இயக்கத்திற்கு தோழமையாகவும், தோழர் பெரியாருக்கு உற்ற நண்பராகவும் விளங்கிய, கேரள ‘யுக்திவாதி’ ஏட்டின் ஆசிரியர் தோழர் கே.அய்யப்பன் அவர்களின் முயற்சியால், சுமார் 25 இலட்சம் ஈழவர் மற்றும் தீயர் சமுதாய மக்கள் “நாங்கள் இந்துக்கள் அல்ல” எனப் பிரகடனம் செய்தனர்.
“...சுமார் 4, 5 வருஷங்களுக்கு முன் இதே எஸ்.என்.டி.பி மகாநாடானது முதுகுளம் என்னும் ஊரில் நடந்த பொழுது அங்கு ஈழவர்கள் எல்லோரும் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய்விடுவது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெருத்த கலவரம் நடந்தது” ( பெரியார் அந்த முதுகுளம் ஈழவ மாாட்டில் பங்கேற்றிருந்தார்.)
...25 லட்சம் பேரும் ஒரு மித்து ஒரே அபிப்பிராயமாக தங்களுக்கு இனி “மதமே வேண்டியதில்லை” என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால், மற்றபடி அந்த ராஜ்ய தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை.”
...இந்த வருஷத்தில் கூட்டப்பட்ட வருடாந்தர எஸ்.என்.டி.பி மகாநாட்டில் இந்தப்படிக்கு அதாவது, ஈழவ சமூக மக்கள் மதத்தில் நம்பிக்கை அற்றவர்கள் என்றும், அவர்களுக்கு மதம் தேவையில்லை என்றும், எந்த ஈழவரும் இனி தங்களை இந்து என்றோ, அல்லது வேறு எந்த மதஸ்தர் என்றோ, சொல்லிக் கொள்ளக் கூடாதென்றும் தீர்மானித்துக் கொண்டார்கள்.” (குடி அரசு 24.09.1933)
கேரளாவில், தனது தோழர்களுடன் இந்து மதத்திற்கு எதிராகக் களம் கண்ட பெரியார், வடமாநிலங்களிலும் தனது ஆதரவு சக்திகளைத் தேடினார். தோழர் அம்பேத்கரின் போராட்டங்களைத் தனது குடி அரசில் 1929 லிருந்தே தொடர்ந்து பதிவு செய்து வந்தார். ( இரு தலைவர்களுக்கும் 1929 க்கு முன்பிருந்தே தொடர்பு இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது)
பம்பாயில் தோழர் அம்பேத்கர் தலைமையில் தாதர் பகுதியிலுள்ள ஒரு விநாயகர் கோவிலில், தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுத்த கோவிலுக்கு எதிராக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றது. அந்த வெற்றியைக் குடி அரசு ஏடு பதிவு செய்தது. (குடி அரசு 12..09.1929)
வங்காள மாகாணத்தில், குல்னா என்ற இடத்தில் உள்ள காளி கோவிலில் தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவுப்போராட்டம் நடந்து வெற்றிபெற்றது. இந்து மிஷின் சார்பில் ஒரு ஆலயநுழைவுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்திற்கான அறிவிப்புத் தீர்மானமும் போராட்டச் செய்திகளும் குடி அரசில் பதிவாகின. ( குடி அரசு 21.07.1929, 22.09.1929)
படேலைப் பதற வைத்த பெரியார்
இப்படி இந்தியா முழுவதும், தீண்டாமைக்கு எதிராக நடக்கும் எந்தப் போராட்டமானாலும், உடனடியாக தமிழ்நாட்டுக்கு அதை அறிவித்தது குடி அரசு ஏடு மட்டுமே ஆகும். இதே காலத்தில், பூனாவிலும் அப்படி ஒரு ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிகிறார் பெரியார். வடநாட்டைப் போல தமிழ்நாட்டிலும் இன்னும் தீவிரமாக ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
அதற்காக, 22.10.1929 ல் சென்னை நேப்பியர் பூங்காவில் ஒரு பொதுக்கூட்டம் எற்பாடானது. பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், தோழர்கள் சிவராஜ், பாலகுருசாமி, முனியசாமிப்பிள்ளை, சகஜானந்தர் ஆகிய தலைவர்கள் உட்பட சுயமரியாதை இயக்கத்தின் பல தளபதிகள் பங்கேற்றனர். அதில் பெரியார் ஆற்றிய உரை...
“இன்றைய ஜாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவைகள் எல்லாம் ஒரு விதமாக மாற்றப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் இந்த கோயில்கள்தான் சிறிதும் மாற்றுவதற்கு இடம் தராமல் ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த உபயோகப்பட்டு வருகின்றது. ஆதலால்தான், நான் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோவிலுக்குள் போய்த் தீர வேண்டுமென்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ, மோட்சத்திற் காகவோ, பாவ மன்னிப்புக்காகவோ அல்லவே அல்ல. கோவிலில் சமத்துவ மடைந்து விட்டால் மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது. கோவிலில் பிரவேசிக்க நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை.”
என்று, கோவில் நுழைவுப் போராட்டங்களை ஏன் நடத்துகிறேன் என்பதை விளக்கினார். ஆனால், பெரியாருக்குப் பின் பேசிய சகஜானந்தரின் குழப்பங்களால் போராட்டம் மடைமாற்றப்பட்டது.
தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் என்றால், வன்கொடுமைகளை ஏவிவிடும் பிற்படுத்தப் பட்டவர்களையும் எதிர்த்து நின்றார். தீண்டாமைக்கு அடிப்படைக் காரணமான இந்து மதத்தையும் எதிர்த்து நின்றார். பெரியாரின் இந்த அதிரடியான எதிர்வினைகளை அகில இந்தியத் தலைவர்கள் அனைவருமே மிரட்சியுடன் பார்த்தனர்.
1929 ல் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்த சர்தார் வல்லபாய் படேல், மைசூர் சென்று அங்கு பெரியாரைப் பற்றிப் பேசிய கருத்துக்கள் பெரியாரைப் பற்றிய இந்திய அரசியல்வாதிகளின் பார்வைக்கு ஒரு சான்றாக இருக்கும்.
“தாழ்த்தப்பட்டவர்களின் நன்மைக்கு உழைப்பதாகச் சொல் லிக் கொண்டு ஒரு சிலர், சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்றை ஆரம்பித்து இந்திய நாட்டிற்குப் புனிதமானவைகளை அழிப்பதும், பெண்களின் மேன்மைக்குப் பங்கம் விளைவிப்பதும், இந்து மதத்தைத் தாக்குவதும், கோடிக் கணக்கான மக்களால் பூஜிக்கப்படும் இராமனை யும் சீதையையும் குற்றம் சொல்லுவதும், பிராமண சமூகத்தின்மீது துவேஷம் உண்டு பண்ணுவதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள். இதை யோக்கியமான அரசாங்கம் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது.” ( குடி அரசு 22.09.1929)
இவையெல்லாம் இந்து மதத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள். இதே காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும் கடும் போராட்டங்களை நடத்தி, மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்தார்.
கிறிஸ்தவத்தின் ஜாதி, தீண்டாமைகளுக்கு எதிர்வினை
இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மதத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாயுடு, முதலியார், பிள்ளை, வன்னியர் போன்ற ஜாதியினரையும், கிறிஸ்தவப் பார்ப்பனர்களையும் கடுமையாக எதிர்த்தார் பெரியார். அந்த ஜாதியினரால் கிறிஸ்தவ மதத்தில் திணிக்கப்பட்டுள்ள தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகக் களம் கண்டார்.
“எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள சாதியார்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந்துள்ளவர்களும், நாயுடு, முதலியார், பிள்ளை, அய்யர் முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்றுமைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.” (குடி அரசு - 31.01.1932)
கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத் தீண்டாமைகளை வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கிய உடன், கிறிஸ்தவ மத ஆதிக்கவாதிகளும் பெரியாருக்கு எதிராக எதிர்வினைகளைத் தொடங்கிவிட்டனர்.
“30.05.1932 ல் தூத்துக்குடியில் நடைபெற்ற கத்தோலிக்க வாலிபர்களின் மகாநாட்டில் நமது இயக்கத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அத்தீர்மானம் வருமாறு:-
சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை மேலே போர்த்துக் கொண்டு நாஸ்திகத்தையும் மதத்தில் வெறுப்பையும் பரப்பிவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இம்மகாநாடு கத்தோலிக்க இளைஞர்களுக்கு எச்சரிக்கை செய்வதுடன்,
சமத்துவமின்மையை உண்டு பண்ணியவர்களும், அதை ஆதரித்து வருகின்றவர்களும், குருக்கள் மார்கள் என்று சொல்லிக் குருக்கள்களை எதிர்த்தும், அவர்கள்மேல் குறைகூறியும் வரும் மனப்பான் மையை வளர்த்துவருவதையே நோக்கமாகக் கொண்டுள்ள இவ் வியக்கத்தின் செயல்களில் ஒன்றை இம்மகாநாடு முக்கியமாகக் கண்டிக்கிறது.
இத்தகைய பிரசாரத்தை அழிக்கத் தங்களால் முடிந்த வகையில் எல்லாம் முயற்சி செய்யுமாறு இம்மகாநாடு கத்தோலிக்க வாலிபர்களைக் கேட்டுக் கொள்கிறது.” (குடி அரசு - 05.06.1932)
இவ்வாறு கத்தோலிக்கர்களின் மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேறிய பிறகும், பெரியார் ஓயவில்லை. தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கலகக்குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார். அப்போதைய கோவை ஜில்லாவின் கத்தோலிக்க பிஷப், குடி அரசை யாரும் வாங்கக்கூடாது. மீறி வாங்கிப் படித்தால் மதத்திலிருந்து நீக்கப்படுவீர்கள் என எச்சரித்தார்.
பாதிரியார் மறுப்புத் திருமணங்கள்
“கத்தோலிக்க மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களின் நிலையை எடுத்துக் கொண்டால், அவர்கள் படும் கஷ்டத்திற்கும், இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் படும் கஷ்டத்திற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை என்றே சொல்லலாம். தாழ்த்தப்பட்டட சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்களுக்கு உயர்குலக் கிறிஸ்துவர்கள் செல்லும் மாதா கோயில்களுக்குட் சென்று அவர்களுடன் சமமாக இருந்து வணங்குவதற்கு உரிமையில்லை. கிறிஸ்து மத சம்பந்தமாக வைக்கப் பட்டிருக்கும் கலாசாலைகளிலும் சாப்பாட்டு விடுதிகளிலும், உயர்குலக் கிறிஸ்துவர் களுக்குச் செய்து கொடுக்கப்படும் செளகரியங்கள் தாழ்த்தப்பட்ட சமூக கிறிஸ்தவர் களுக்குச் செய்து கொடுக்கப் படுவதில்லை; இன்னும் இவை போன்ற பல புகார்கள் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன.
இக்காரணங்களால் இப்பொழுது கிறிஸ்துவர்களில் பலர் பாதிரிமார்களைப் பகிஷ்கரித்துச் சுயமரியாதை முறைப்படி கல்யாணம் முதலிய காரியங்களைத் தாங்களே செய்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இம்முறையில் திருச்சி ஜில்லாவில் மாத்திரம் சுமார் 150 கல்யாணங்கள் வரையிலும் பாதிரிமார்களை நீக்கி நடைபெற்றிருக்கின்றன என்று தெரிகின்றது. இதற்கு ஒரு வகையில் சுயமரியாதை இயக்கமும் குடி அரசும் காரணமாகும் என்பதை அவர்கள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள்.”
அவர்கள், இவ்வியக்கத்தால், தமது மதத்தில் கட்டுண்டு, தமது சொற்களுக்கு அடங்கி நடந்து கொண்டு வரும் பாமர மக்கள் அனைவரும் விழிப்படைந்து விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டு, தமது முழு அதிகாரத்தையும் செலுத்திக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் மத்தியில் சுயமரியாதை இயக்கத்தை பரவாமல் தடுக்க முயலுகிறார்கள்.
சமீபத்தில் கோயம்புத்தூர் ஜில்லாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கெல்லாம், அந்த மதகுருவாகிய “மேற்றிராணியார்” என்பவர் “குடி அரசிலும், சுயமரியாதை இயக்கத்திலும் யாரும் சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது, “குடி அரசு” வரவழைத்துப் படிப்பவர்கள் 15 நாட்களுக்குள் அதை நிறுத்தி விட வேண்டும்” என்று ஒரு சுற்றுத் தரவு அனுப்பி, 15 நாட்களில் குடி அரசை நிறுத்தாதவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
சென்ற 30. 10. 32 - இல் திருச்சியில் நடந்த கத்தோலிக்க வாலிபர் மகாநாட்டில், சுயமரியாதை இயக்கத்தைக் கண்டிப்பதாகவும், வாசக சாலை களிலும் பொதுமேடைகளிலும், பத்திரிகைகளிலும் இவ்வியக்கத்தை எதிர்த்துப் பிரசாரம் பண்ணவேண்டும் என்றும் தீர்மானித்திருக்கின்றார்கள். (குடி அரசு 06.11.1932)
குடி அரசை ஒழிக்க கத்தோலிக்கர்கள் நிதிதிரட்டல்
கத்தோலிக்கர்களின் இவைபோன்ற கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு பெரியார் பின்வாங்கினாரா என்றால், இல்லை. மீண்டும் 23.04.1933 ல் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் ‘களத்தில் வென்றான்பேட்டை’ கிராமத்தில் ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மாநாட்டில் தாழ்த்தப் பட்டோருக்காக முழங்கினார். கிறிஸ்தவமதப் பாதிரியார்களும் விடுவதாக இல்லை. குடி அரசை அழிக்க நிதிதிரட்டத்தொடங்கினர்.
“குடி அரசை” எதிர்த்துப் போராட கத்தோலிக்கர்கள் நிதி என்ற பெரிய தலைப்பின் கீழ் “கத்தோலிக் லீடர்” என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு முறை யீடு காணப்படுகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரிகள் சு.ம. இயக்கத்தின் மீதும், ‘குடி அரசின்’ மீகும், ஆத்திரங்கொண்டு, அவைகளை அழிப்பது என்கிற முடிவு கொண்டு நிதிவசூல் செய்து வருகிறார்கள். அவர்களின் வேண்டுகோளின் பிரகாரமே இதுவரையிலும் ரூ. 250க்கு மேல் பணம் சேர்த்திருப்பதாகவும் நமக்குத் தெரிய வருகிறது. சபாஷ்! கத்தோலிக்கர்களே!! மெச்சினோம் புத்திசாலித் தனத்தை!!!”(குடி அரசு - 16.07.1933)
தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கு எதிராக இருந்த காரணத்தால் மட்டுமே கிறிஸ்தவ மதத்தை எதிர்க்கத் தொடங்கினார் பெரியார். ஆனால், கிறிஸ்தவ ஆதிக்கச் சபைகளிலிருந்து தொடர்ச்சியான எதிர்த் தாக்குதல்கள் வந்த பிறகு, கிறிஸ்தவ மதத்தின் வண்டவாளங்களையும், அதன் கடவுள்களையும் ஆராயத் தொடங்கினார். கிறிஸ்தவ மதம் ஆதிக்கத்தில் உள்ள அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகளிலிலிருந்து வெளியாகும் நாத்திகக் கட்டுரைகளைத் தொடர்ந்து குடி அரசில் இடம்பெறச் செய்தார்.
கிறிஸ்தவ மதத்தின் ஜாதி - தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில், தனது படைக் கருவியான குடி அரசு ஏட்டையே இழந்தார். “கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்காகக் ‘குடி அரசு’ பத்திரிக்கை நிறுத்தப்பட்டுப் போயிற்று.” என்று, பெரியார் தனது பகுத்தறிவு (09.0.1934) ஏட்டில் பதிவு செய்துள்ளார்.
ஜாதி ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க முடியாத கிறிஸ்தவப் பாதிரிமார்கள் சிலர், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இன்றுவரை, தொடர்ச்சியாக பெரியார் கொள்கைகளுக்கு எதிராகக் குழிபறித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்று தாழ்த்தப்பட்டவர்களின் காவல் அரணாகப் பெரியார் இருந்தார். இன்று அதே தாழ்த்தப்பட்டவர்களைப் பெரியாருக்கு எதிராகத் திசைதிருப்பும் வேலைகளைச் சில கிறிஸ்தவத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
பல்வேறு தலித் அமைப்புகளில் பணியாற்றும் களப்பணியாளர்கள், சமூகவலைத்தள ஆர்வலர்கள் ஆகியோரை “அம்பேத்கரியலைப் பயிற்றுவிக்கிறோம்” என்ற பெயரில், அழைத்துச்சென்று பெரியாரியலுக்கு எதிராகத் தோழர்களைத் தீட்டி வருகின்றனர்.
தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா
விடுதலை பெற்றதாகச் சொல்லப்படும் இந்தியாவில், இன்று நாடு முழுவதும் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு எழுத்தளவில் வந்துவிட்டன. இச்சட்டங்கள் வருவதற்கு முன்பு பெரியாரும், பெரியாரின் தளபதியான ஆர்.கே.சண்முகமும் சட்டரீதியாகத் தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுக்க முயற்சி எடுத்துள்ளனர்.
அகில இந்திய சட்டசபையில் (பாராளுமன்றம்) 04.02.1932 ல் தோழர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு மசோதாவைத் தாக்கல்செய்தார். பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பால் அந்த மசோதா தோல்வி அடைந்தது.
“பிப்ரவரி 4-ந்தேதி கூடும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் சமூக சீர் திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்படுகின்றனவாம். அவைகளில் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்களால் கொண்டுவரப்படும் தீண்டாதவர்களுக்கு இருந்து வரும் அசெளகரியங்களைப் போக்கும் மசோதாவும், தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவும் முக்கியமானவையாகும். இதில்தான் இந்திய சட்டசபையின் யோக்கியதை விளங்கப் போகிறது. ஜாதி இந்துக்கள் ஏழைத் தீண்டாதவர்களின் நன்மையை எவ்வளவு தூரம் கவனிக்கின்றவர்களா யிருக்கின்றார்கள் என்பது வெட்டவெளியாகி விடும்.” (குடி அரசு - 31.01.1932)
இதற்கு முன்பே 1931 லேயே தோழர் ஆர்.கே.சண்மும், இந்திய சட்டசபையில் தீண்டாமை ஒழிப்புக்காக சட்ட மசோதாவை கொண்டுவந்திருக்கிறார். அதற்காக 07.04.1931 ல் காரைக்குடியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் அவருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பற்றி எல்லாம் விரிவான ஆய்வுகள் தேவை. வரலாறுகளை ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டோம்.
இரட்டை வாக்குரிமைக்கு வட்டமேஜை மாநாட்டில் ஆதரவு
தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி - இரட்டை வாக்குரிமைமுறை வேண்டும் என்பது குறித்து 1931 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில், தோழர் காந்திஅடிகள், “முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதிக்கிறேன், ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை என் உயிர் போகும் வரையிலும் தடுத்துப் போராடுவேன்” என்றுகூறி, தாழ்த்தப்பட்டோர் விடுதலையை சவக்குழிக்கு அனுப்பினார்.
தோழர் அம்பேத்கர் வட்டமேஜைமாநாட்டிலேயே காந்திக்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார். இரட்டை வாக்குரிமையின் அவசியத்திற்காக பெரும் கருத்துப் போராட்டத்தை நடத்தினார். அப்போது, அந்த மாநாட்டில் அவருக்குத் துணையான நின்றவர்கள் பெரியாரின் நண்பர்களும், தளபதிகளுமான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பொப்பிலி அரசர், ஏ.இராமசாமி (முதலியார்) ஆகியோர் ஆவர். தமிழ்நாட்டிலிருந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் சார்பாக தோழர் ஆர்.சீனிவாசன் அவர்களும் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்றிருந்தார். அவரும் சுயமரியாதை இயக்கத்தோடு நெருங்கிய உறவு கொண்டவர்தான்.
“சென்ற 27-12-31 ல் சென்னைக்கு வந்து சேர்ந்த, திருவாளர்கள் எ.டி. பன்னீர்செல்வம், எ. ராமசாமி முதலியார், ஆர், சீனிவாசன், பொப்பிலிராஜா முதலியவர்களைக் குதூகலமாக வரவேற்ற கூட்டத்தில் மிகுதியாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புப்பிரதிநிதிகளும், அவ்வகுப்புத் தொண்டர்களுமே யாவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் இவ்வாறு ஏராளமாகக்கூடி வரவேற்றது ஏன்? திரு. அம்பேத்கரின் துணையாக இருந்த திரு. ஆர். சீனிவாசன் அவர்களிடம் தங்களுக்குள்ள நம்பிக்கையை காட்டுவதற்கேயாகும். திரு. அம்பேத்கரின் கொள்கையை ஆதரித்த திருவாளர்கள். பன்னீர் செல்வம், பொப்பிலிராஜா, ராமசாமி முதலியார் ஆகியவர்களிடமும், தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கேயாகும்.” (குடி அரசு - 10.01.1932)
களத்தில் நேரடியாகப் போராடுவதோடு சட்டரீதியாகச் சாதிக்கும் வாய்ப்புகளையும் சரியாகச் செயல்படுத்தி இருக்கிறார் பெரியார்.
பிற்டுத்தப்பட்டோரின் ஜமீன் நிலங்களை அரசுடமை ஆக்கிய பெரியார்
1933 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில், சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ‘ஜமீன்தாரல்லாதார் மாநாடு’ ஒன்று நடைபெற்றது. அதில் தோழர் பெரியார் பேசிய உரை 27.08.1933 ஆம் நாளிட்ட குடி அரசு ஏட்டில் முழுமையாக வெளியாகி உள்ளது. அப்போதைய காலத்தில், தமிழ்நாடும், ஆந்திராவின் சில பகுதிகளும் இணைந்த சென்னை இராஜதானியில் பெரும் ஜமீன்களாக ஆதிக்கம் செய்து வந்தவர்கள் யாரென்று அறிந்து கொண்டு, பெரியாரின் ஜமீன் ஒழிப்பு நடவடிக்கை களைக் கவனிக்கவேண்டும்.
கொள்ளைக்கார ஜமீன்கள் என்று பெரியாரே பட்டிலிட்டுள்ள ஜமீன்களாவன: விஜயநகரம், பொப்பிலி (அப்போதைய முதல் மந்திரியுடையது), பிதாபுரம், தேவகோட்டா, வெங்கடகிரி, காலாஹாஸ்தி, சிவகங்கை, இராமனாதபுரம், எட்டியாபுரம் ஜமீன்கள். இவற்றில் சிவகங்கை, இராமநாதபுரம் தவிர மற்றவர்கள் அனைவரும் தெலுங்கர்கள்.
“...பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர் களைப் போலவே ஜமீன் தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர்களாவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்களுக் கெல்லாம் காரணமாயிருப்பவர்களுமாவார்கள்.
...மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அது போலவேதான் ஜமீன்தாரன்-குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாதென்று வேலைசெய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம்” (குடி அரசு 27.08.1933)
தோழர் பெரியார் சமுதாயத்தில் ஏற்படுத்திய எழுச்சி அரசியலிலும் எதிரொலித்தது. பெரியாரின் மிக நெருங்கிய நண்பரும், அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்அமைச்சராகவும் விளங்கியவர் பொப்பிலி அரசர் என்று அழைக்கப்பட்ட இராமகிருஸ்ண ரெங்கா ராவ் ஆவார். அவர் அதே 1933 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜமீன்களுக்கு எதிரான ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார். அது Velliyakundam Impartible Estate Act, 1933 எனப்படும்.
மதுரை மாவட்டத்திலுள்ள நாயக்கர்கள் தலைமையிலான வெள்ளியகுண்டம் ஜமீனுக்குரிய நிலங்களில் அந்த ஜமீன்தாருக்கு முழுஉரிமை இல்லை. நினைத்தவுடன் நிலங்களை விற்கவோ, உழுபவர்களை வெளியேற்றவோ முடியாது என்பதை அறிவிக்கும் ஆணை அது. இப்படி ஒரு தெலுங்கு ஜமீன்தாருக்கு எதிராக அவரது அதிகாரத்தைப் பறித்த முதலமைச்சரும் ஒரு தெலுங்கு ஜமீன்தார்தான்.
தோழர் பெரியார் மற்றும் நீதிக்கட்சியின் அயராத போராட்டங்களால் ‘ஜமீன்தார் - இனாம்தார்’ ஆகிய இரண்டு கொடுமையான முறைகளும் 1948 ல் முடிவுக்கு வந்தன. அந்த இரண்டு ஆதிக்கங்களையும் ஒரு சேர அழித்தவர் தோழர் பெரியாரின் உற்ற நண்பரான, தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆவர். அவர் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
The Tamilnadu Estates ( Abolition and Conversion into Ryotwari) Act 1948 என்ற இச்சட்டத்தின்படி கோடிக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள ஜமீன்நிலங்களும், பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்த இனாம் நிலங்களும் அரசுக்குச் சொந்தமானதாக ஆக்கப்பட்டன. மேற்கண்ட நிலங்களில் சாகுபடி செய்தவர்களுக்கு ரயத்வாரிமுறையில், அதாவது அரசுக்கு நேரடியாக வரிசெலுத்தும் முறையில் பட்டா வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
தாழ்த்தப்பட்டோருக்கு 4 இலட்சம் ஏக்கர் நிலம் வழங்கிய நீதிக்கட்சி
இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு நீதிக்கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தை வாரி வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் 1931 வரை கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3, 42, 611 ஏக்கர் ஆகும். (ஆதாரம் T.G.Boag ICS என்ற சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras prsidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.
பிற்படுத்தப்பட்டோரின் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோருக்கு இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. மிகப் பெரும் ஆயுதப் போராட்டத்தால் சாதிக்க வேண்டியதை, அறிவாயுதத்தால் சாதித்தவர் தோழர் பெரியார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான தீண்டாமை ஒழிப்புக் களங்கள்
1.சிவகங்கை, தேவகோட்டை, இராமநாதபுரம் போன்ற நாட்டார்கள் ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலாடை அணியக்கூடாது. பெண்கள் இரவிக்கை அணியக் கூடாது. வெள்ளைச் சேலைதான் கட்டவேண்டும். வண்ணச் சேலைகளைக் கட்டக்கூடாது. தங்க நகைகள் அணியக்கூடாது. வெள்ளி, செம்புப் பாத்திரங்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. செருப்பு அணிந்து நடக்கக்கூடாது. மழைக்கோ, வெயிலுக்கோ குடைபிடிக்கக்கூடாது என்பவை போன்ற பல ஜாதிக்கட்டுப்பாடுகள் இருந்தன.
சிவகங்கை மாவட்டம் எழுவன்கோட்டையில் வசித்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள்அந்தக் கட்டுப்பாடுகளை மீறி, மேலாடைகளை அணிந்துவிட்டனர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நாட்டார்கள் - கள்ளர்கள் எழுவன்கோட்டைக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி தானியங்களையும், நகைகளையும்,பாத்திரங்களையும் கொள்ளையடித்துச்சென்றனர். வீடுகளுக்குத் தீ வைத்தனர். தொடர்ச்சியாக நடந்து வந்த ஜாதியத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு சுயமரியாதை இயக்கம் பணியாற்றியது.
ஆதிதிராவிட மகாஜனசபையின் தலைவர் தோழர் ஏ.எஸ்.ஜான், சுயமரியாதை இயக்கப் பொறுப்பாளர்களும் வழக்கறிஞர்களுமான தோழர்கள் ஈப்பன், இலட்சுமி ரதன் பாரதி ஆகியோரது முன்முயற்சியில் 11.09.1931 மற்றும் 20.09.1931 ஆகிய நாட்களில் இரண்டு சமாதானக் கூட்டங்கள் நடைபெற்றன.
தாக்குதலில் ஈடுபட்ட கள்ளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் சார்பில் இருதரப்புப் பொறுப்பாளர்களும் பங்கேற்ற இக்கூட்டங்களின் முடிவாக, அப்பகுதித் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வண்ணச்சேலைகள், இவிக்கை அணியவும், பொதுத்தெருவில் நடக்கவும், பொதுக்கிணறுகளில் நீர் எடுக்கவும், செருப்புப் போட்டு நடக்கவும், குடை பிடிக்கவும், கட்டாயக் கூலி வேலைகளிலிருந்து விடுதலை பெறவும் முடிந்தது (குடி அரசு 20.09.1931)
2 .தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தில் 1937 ம் ஆண்டு டிசம்பர் 28 ம் நாள் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதில் நடந்த விருந்து ஒன்றில், அப்பகுதி தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் 20 பேரும் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அது பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பண்ணையார்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அதனால், அந்த 20 பேரும் இழுத்துவரப்பட்டு கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு, சாணிப்பால் குடிக்க வைக்கப்பட்டனர். 20 பேரையும் மொட்டை அடித்து ஊர்வலமாக நடத்தியுள்ளனர்.
இக்கொடுமையைக் கேட்ட பெரியார், உடனடியாக பண்ணையார்களுக்கு எதிராக, அந்தச் செய்தியைத் தனது விடுதலை ஏட்டில் படங்களுடன் வெளியிட்டார். செய்திவெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கண்டனக்கூட்டங்களை நடத்தினார். தாக்கப்பட்ட தோழர்களைத் தமிழ்நாடு முழுதும் பயணம் செய்ய வைத்து, நடந்த கொடுமைகளை நேரடியாக விளக்க வைத்தார். இதனால், கோபமடைந்த பண்ணையார்கள் தினமணி பத்திரிக்கையின் மூலம், “இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. தாழ்த்தப் பட்டவர்கள் அவர்களாகவே தலையை மொட்டை அடித்துக்கொண்டனர்” என்று அறிவித்தனர். இது தொடர்பாக அப்போது தினமணிக்கும், விடுதலைக்கும் மிகப் பெரும் கருத்துப்போர் நடந்தது. (குடி அரசு 30.01.1938)
இறுதியில், பண்ணையார்கள் வென்றனர். தீண்டாமை வன்கொடுமை நடக்கவே இல்லை என்று கூறி, தவறான செய்தி வெளியிட்டதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, விடுதலை ஏட்டின் வெளியீட்டாளர்கள் ஈ.வெ.கிருஷ்ண சாமி, முத்துச்சாமி இருவரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டனர். ( குடி அரசு 19.06.1938)
3. திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே உள்ள அம்மாபட்டியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமண ஊர்வலத்தில் மோட்டார் வண்டியைப் பயன்படுத்தி யுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மோட்டார் வண்டியைப் பயன்படுத்தக்கூடாது என்று மிரட்டி, அதை மீறுபவர்களைத் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. கிறிஸ்தவ வன்னியர்கள் அப்பகுதியில் ஆதிக்கம் செய்துவந்தனர். அவர்களை எதிர்த்துப் போராடி தாழ்த்தப்பட்டோருக்கு மோட்டார் வண்டி பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம். (குடி அரசு 19.09.1928)
3. 1929 பிப்ரவரி 17 ல் நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் தமிழ்நாட்டில் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கின. சுயமரியாதை இயக்கத் தோழர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஜாதி, தீண்டமை ஒழிப்புக்காக களமிறங்கிப் போராடினர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை சாலையில் உள்ள அம்மாபட்டியில் நாயுடுகளுக்குச் சொந்தமான கிணற்றில் நாடார்கள் தண்ணீர் இறைக்கக்கூடாது என்று தடை இருந்தது. அதை நீக்கி நாடார்களுக்கு தண்ணீர் உரிமையைப் பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம். (குடி அரசு 10.03.1929)
4. இராமநாதபுரத்தில் உள்ள நாடார்களும், சைவப்பிள்ளைகளும் இணைந்து தாழ்த்தப் பட்டோருக்கு உரிய உரிமைகளைப் பெறத் துணைநின்றனர். தங்களது கட்டுப்பாட்டில் இருந்த கோவில்கள், பள்ளிக்கூடங்களில் தாழ்த்தப்பட்டோரைச் சேர்த்துக்கொண்டனர். பள்ளிகளில் இருந்த பார்ப்பன ஆசிரியர்களுக்குப் பதிலாக பார்ப்பனரல்லாத ஆசிரியர்களை நியமிக்கத் தொடங்கினர். பட்டிவீரன்பட்டி செளந்திரபாண்டியனார் இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக பதவியேற்ற பிறகு இத்தகைய மாற்றங்கள் ஏராளமாக நடைபெற்றன. அப்பகதியில் செல்வாக்கான நபர்களான காமாட்சி நாடார், காளியப்ப நாடார், வடகாசிப்பிள்ளை, பொன்னுச்சாமிப்பிள்ளை போன்றோர் இம்முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். (குடி அரசு 10.03.1929)
எதிர்ப்புகளோடு வளர்ந்த இயக்கம்
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே, ஜாதி ஒழிப்பில் உண்மையான அக்கறை கொண்டு இயங்கி வந்தது. அதனால், பார்ப்பனர்களும், இடைநிலைச்சாதியினரும் ஒருசேரப் பெரியாரை எதிர்த்தனர். சான்றாக சில நிகழ்வுகள் மட்டும்.
காரைக்குடியில் 07.04.1931 ல் திட்டமிடப்பட்ட செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டை நடத்த விடாமல் அங்கிருந்த பார்ப்பனர்களும், செட்டியார்களும் இணைந்து கடும் எதிர் நடிவடிக்கைகளைச் செய்தனர்.
“ஒரு குரங்கு கள்ளைக்குடித்து, அதைத் தேளும் கடித்து விட்டால் எப்படி அது தலை கால் தெரியாமல் கண்டதை யெல்லாம் கடிக்குமோ அது போலவேதான் நமது பார்ப்பனப் போலீசு நிர்வாகம் இருக்க முடியும். போராக் குறைக்கு இவர்களுடைய தயவை பைத்தியக்கார பணக் காரச் செட்டியார்மார்கள் எதிர்பார்த்து தூபம் போடுவதும் சேர்ந்து விட்டால் 144 உத்திரவு மாத்திர மல்லாமல் இன்னமும் என்ன வேண்டுமானாலும் செய்யப் பின் வாங்க மாட்டார்கள். (குடி அரசு - 08.03.1931)
இராமநாதபுரம் ஜில்லா, திருப்பத்தூர் தாலுக்காவில் 11.03.1934 ல் நடத்தத் திட்டமிடப்பட்ட திருப்பத்தூர் முதலாம் சுயமரியாதை மாநாட்டுக்கு 144 தடை உத்தரவு போட வலியுறுத்தி அங்கிருந்த பார்ப்பனர்களும், கள்ளர்களும், செட்டியார்களும் அரசை அணுகினர். 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நீதிபதி, மாநாட்டுத் திடலுக்கே நேரில் வந்து தடை விதித்தார். ஆனால், தடைகளுக்கு அஞ்சாமல் மாநாட்டை நடத்திக்காட்டியது சுயமரியாதை இயக்கம். (புரட்சி 18.03.1934)
ஜாதி ஒழிப்பு நோக்கிய பெரியாரின் அணுகுமுறை
பெரியாரின் இயக்க மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், இயக்க நிர்வாகிகள், அவரது ஏடுகளின் எழுத்தாளர்கள், போராட்டங்கள் அனைத்திலும் பெரும்பான்மை மக்களின் அனைத்துப் பிரிவினரின் பங்களிப்பும் தவறாமல் இருக்கும். பார்ப்பனர் தவிர தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றனர். உண்மையான மக்கள் இயக்கமாக - அவரவர் ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த உறவுகளின் ஒருங்கிணைப்பாக இயக்கத்தை வழிநடத்தப்பட்டது.
தேவகோட்டையில் கள்ளர்கள் தாழ்த்தப்பட்டோரைத் தாக்கினால், அதே பகுதியில் வாழ்ந்த சிவகங்கை இராமச்சந்திரன் துப்பாக்கியுடன் களத்திற்குச் சென்று தாழ்த்தப்பட்டோர் பக்கம் நிற்பார். சுயமரியாதை இயக்கத்தையும் அதன் ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டின் அனைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் எதிர்த்தனர். தடைகள் போட்டுக்கொண்டிருந்தனர். அதேநேரத்தில், எந்தப் பகுதியில் எந்த ஜாதி ஆதிக்கத்தில் இருக்குமோ, அந்த ஜாதியைச் சேர்ந்த சுயமரியாதை இயக்கத் தோழர்களே அந்த எதிர்ப்புகளை முன்னின்று தாங்கிக் கொண்டனர். மெல்ல மெல்ல ஜாதி, மத வெறியர்களை அரசியல்படுத்தினர். எதிர்ப்பாளர்கள் மெதுவாக, வெறும் கிண்டல் செய்பவர்களாக மாறினர். பிறகு அமைதியாக ஒதுங்கினர். காலப்போக்கில் நமது கருத்தின் நியாயங்களை ஏற்று அமைப்பாக வந்தனர்.
அதன் விளைவாகத்தான் 1957 ல் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில், ஆதிக்க ஜாதிகள் என்று சொல்லப்படும் அனைத்து முன்னேறிய ஜாதியினரும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும், தாழ்த்தப் பட்டோரும், சிறுபான்மையினரும் வேறுபாடு இல்லாமல் சிறைச்சாலைக்குச் சென்றனர். மூன்ற ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை உண்டு என்று அறிவிக்கப்பட்ட போதும், ஜாதி ஒழிப்பிற்காக அனைத்து ஜாதியினரும் அரசியல் சட்டத்தைக் கொளுத்தி, சிறை சென்றனர்.
பெரியார் இயக்கத்தின் இந்த அணுகுமுறைதான் ஜாதி ஒழிப்பை நோக்கி நம்மை நகர்த்தும். நகர்த்தியது. ஆனால் அந்தச் சமூகப்புரட்சியாளர் பெரியாரையே ஒரு ஜாதிக்குள் அடைத்துப் பார்க்கும் போக்கு எந்த வகையில் ஜாதி ஒழிப்புக்குப் பயன்படும் என்று புரியவில்லை.
தோழர் இரஞ்சித் அவர்கள் திராவிடர் இயக்கங்களில் நேரடியாகப் பணியாற்றியவர் அல்ல. அதனால், பெரியாரை முழுமையாகப் புரிந்துகொள்ளமால் இருப்பதற்கு நியாயம் இருக்கிறது. ஆனால், திராவிடர் இயக்கங்களின் தோழர்களோ, தலித் அமைப்புகளின் தோழர்களோ பெரியாரைப் பற்றிய இரஞ்சித்தின் தவறான புரிதலுக்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி ஒரே.... ஒரு.... உயிர்கூட இல்லாமல் போனது மிகவும் வேதனையாகவே இருக்கிறது.
தமிழ்த்தேசியத்தை எதிர்க்கிறார், சீமானை எதிர்க்கிறார் என்பதற்காக, பெரியாரைக் கொச்சைப்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் தோழர்களே? பெரியாரை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இயக்குநர், தோழர் இரஞ்சித்தை எவரும் விமர்சனம் செய்யக்கூடாது என்பது எந்த வகையில் பெரியாரியம்? எந்த வகையில் அம்பேத்கரியம்?
(காட்டாறு ஏடு செப்டம்பர் 2017)
- அதிஅசுரன்