பதினாறாம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசின் கீழ் சிற்றரசர்களாக விளங்கிய சோழன் வீரசேகரனும், பாண்டியன் சந்திரசேகரனும் போரிட்டுக் கொண்டிருந்த காலத்தில், இடையே நுழைந்த நாயக்கர்கள் பாண்டிய அரசைக் கைப்பற்றி, தென்தமிழகத்தில் ஆட்சி புரியத் தலைப்பட்டனர். அவர்களின் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சாதிய அடுக்கில் மேல்தட்டிலிருந்த பிராமணர்களேயாவர்.
அரியணையில் நாயக்க மன்னர்கள்; ஆனால் ஆட்சி அதிகாரம் அனைத்தும் பிராமணர் கைகளிலே! நாயக்க மன்னர்களின் தளவாய்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தனர். ஆனபடியால் அவர்கள் அளவற்ற உரிமைகளையும், செல்வாக்கையும் பெற்றிருந்தனர். ஆகவே அவர்களின் எண்ணப்படியே நாயக்க மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது!
அதன் விளைவாக, ஆண்ட பாண்டியர் வழிவந்த நாடார் சமுதாயத்தினர், அரசியல் பொருளாதார, சமுதாயத் தளங்களில் சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டனர். நாடார் சமுதாயத்தினர் பொது வீதிகளில் நடக்கத் தடை; கோயில் வீதிகளில் திருமண ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுப்பு; மேல் சாதியினர் முன் நடந்திடக் கூடாது; பொதுக் கிணறுகளைப் பயன்படுத்த அனுமதி கிடையாது; இந்த மக்கள் கால்களில் காலணி அணிதல் கூடாது; குடை எடுத்துச் செல்லக் கூடாது. இச் சமுதாயப் பெண்கள் பொன் நகைகள் அணிதல் கூடாது; இந்தப் பெண்கள் மார்பகங்களை மேலாடை அணிந்து மறைத்திடல் கூடாது; தண்ணீர்க் குடங்களை இடுப்பில் ஏந்திச் செல்லக் கூடாது எனப் பல்லாற்றாலும் கொடுமைப் படுத்தப்பட்டனர்.
இவ்வாறு காலங்காலமாய் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இந்தச் சமூக மக்கள் வீறு கொண்டெழுவதற்கு, சிம்மம் என எழுந்த ஒப்பற்ற தலைவன் தான் ஊ.பு.அ. சௌந்திரபாண்டியன்.
திண்டுக்கல் - கொடைக்கானல் அருகில் பட்டிவீரன்பட்டியில் வாழ்ந்த முக்கிய பண்ணையார் குடும்பத்தில், ‘தோன்றில் புகழோடு தோன்றுக’ என்ற வைர வரிக்கு எடுத்துக்காட்டாக அந்த ஆண் சிங்கம் நிகர் தலைவர் தோன்றினார்.
அந்தப் பண்ணையின் உரிமையாளர் ஊ.பு.அ. ஐயநாடார். அவருடைய கரம் பற்றியவர் திருமதி சின்னம்மாள். இவர்களுக்கு 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் இரண்டாவது மகனாகப் பிறந்தார் பட்டிவீரன்பட்டி. ஊ.பு.அ. சௌந்திர பாண்டியன்.
உடன்பிறப்புகள்
இவருடன் பிறந்தவர்கள் தமக்கை பெரிய நாயகி, இரண்டாவது பாண்டியனார், மூன்றாவது தங்கை இராஜலட்சுமி, நான்காவது தங்கை இராஜேஸ்வரி, ஐந்தாவது தம்பி இரங்கசாமி.
தன் தாய் தந்தையரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்., தன் உடன்பிறந்தவர்களிடம் அளப்பரிய அன்பும் பாசமும் கொண்டிருந்தார். மேலும் மற்ற உற்றார் உறவினர்களை உள்ளன்புடன் நேசித்து வாழ்ந்தார். மனித நேயமிக்க மனிதராக வளர்ந்து வந்தார் .வாய்மையையும் நேர்மையையும் போற்றி வாழ்ந்து வந்துள்ளார். போட்டி, பொறாமை, புறங்கூறுதல் ஆகிய பண்புகளைப் புறந்தள்ளி வாழ்ந்து வந்துள்ளார். அஞ்சாமை அவருடன் பிறந்த பண்பாகும்.
கல்வி
அவருடைய இல்லத்தில் வசித்து வந்த ஆசிரியர் சின்னசாமி அவர்களிடம் முதலில் பாடம் பயின்றார். பின்னர் விருதுநகரில் அமைந்திருந்த விருதுநகர் சத்திரிய வித்யாசாலையில் தொடக்கக் கல்வி பயின்றார். பின் மதுரையில் ஐக்கியக் கிறித்துவ உயர் நிலைப்பள்ளியில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் கலை இணையர் வகுப்பில் சேர்ந்து படிக்க முற்பட்டார். ஆனால் குடும்பப் பொறுப்பின் காரணமாகக் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டார்.
விளையாட்டு
விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் பயிலுங்காலத்தில் கால்பந்தாட்ட அணியில் இடம் பெற்று, தான் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என மெய்பித்துள்ளார். பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளார். நிலாக் காலங்களில் தமிழ் மண்ணுக்கே உரிய சடுகுடு ஆட்டம் ஆடி மகிழ்ந்துள்ளார். தன் பண்ணையில்லத்தில் டென்னிஸ் ஆடுகளம் அமைத்து டென்னிஸ் ஆடி மகிழ்ந்துள்ளார்.
குடும்பம்
அகவை இருபது நிரம்பிய பின்னர் 1913 ஆம் ஆண்டு, விருதுநகரில் பிறந்து வளர்ந்த பாலம்மாள் என்ற பெண்மணி யைக் கடிமணம் புரிந்து கொண்டார்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. குறள்-45
என்பதை அறிந்து அன்போடும், அறப்பண்போடும் கருத்தொருமித்து இல்லறம் எனும் நல்லறம் நடத்தினர். விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பர். பணியாளர்களிடம் அன்புடனும், கனிவுடனும், தோழமையுடனும் நடந்து கொள்வர். தீனதயாளன், விஜயாம்பிகா, இராஜசேகரன் என்கிற சந்திராபோஸ், பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி என ஐவர் இவர்களுடைய மக்கள் செல்வங்கள். இராஜசேகர் அகவை 15 இல் கொடைக்கானல் ஏரியில் எதிர்பாராத நிலையில் காலமாகி விட்டார்.
நண்பர்கள்
சௌந்திர பாண்டியனார் எல்லோரிடமும் சாதி, மதம், கட்சி கடந்து இன்முகம் காட்டிப் பழகும் தன்மையர் ஆனபடியால், அவருடைய நட்பு வட்டம் பெரியது. குறிப்பாகப் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த பாண்டியன், அவரிடம் மிகுந்த அன்புடனும் நட்புரிமையுடனும் பழகி வந்துள்ளார்
மதுரையில் சர்.பி.டி.இராசனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் பொதுக்காரியங்களில் ஈடுபடுமுன்னர் இருவரும் ஒன்றினைந்து ஆலோசனை செய்வர்; அதன் பின்னரே செயல்படுவர். மதுரையின் இரட்டைத் தலைவர்கள் என்றே மக்கள் அவர்களைக் கருதினர். பூ.வாளுர் அ.பொன்னம்பலம் அவர்களின் நட்பும் அத்தகையதே
மற்ற முக்கிய நண்பர்கள், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன், சர்.பிட்டி தியாகராயர், சுப்பராயர், பசும்பொன் முத்துராமலிங்கம், திருச்சி இரத்தினவேல், ஆதித் திராவிடத் தலைவர் சிவராஜ், கலைவாணர்.என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் பலர் அவரிடம் நெருங்கிப் பழகி நட்பு கொண்டிருந்துள்ளனர்.
நட்பிற்காக
திருச்சி நகராட்சித் தலைவராக இருந்தவர் திரு.இரத்தினவேல் தேவர். இவர் பாண்டியனாரின் உயிர் நண்பர். அவர் கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க விரும்பினார். கொடைக்கானலைச் சுற்றிக் காட்டுதற்குத் தன் மகன் இராஜசேகரனை உடன் அனுப்பி வைத்தார். தேவர் ஏரியில் படகில் சுற்றி வந்துள்ளார். கரையிலிருந்த இராஜசேகரனை நீந்தி வந்து படகினைப் பிடிக்க முடியுமா என்று வினவியுள்ளார். இளம் கன்று பயம் அறியாது என்பதற்கிணங்க, ஏரியில் நீந்தத் தலைப்பட்டார். சிறிது நேரத்தில் நீரின் குளிர்ச்சியாலும், நீரிலிருந்த செடிகொடிகள் அவரை இறுகப் பற்றிக் கொண்டதாலும் நீரிலிருந்து மீள முடியாமல் அவர் துன்புற்று உயிர் நீத்தார். பாண்டியனார் செய்தி அறிந்தார். இத் துன்ப நிகழ்வை எவர்க்கும் அறிவிக்காது இரகசியம் காத்தார்; கலவரம் ஏற்படாதவாறு நிலைமையைச் சமாளித்தார். இரத்தினவேல் தேவரைப் பாதுகாப்போடு திருச்சிக்கு அனுப்பி வைத்த பின்னரே எலோருக்கும் மகனின் மரணம் குறித்துச் சொல்லியுள்ளார். மகனை இழந்த சோகத்திலும் நண்பருக்கு ஊறு விளைந்திடக் கூடாது என்று கவலையோடு செயல்பட்டுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கம் - பாண்டியன் நட்பு
முத்துராமலிங்கம் வெளியூர்களுக்குச் சென்றால் அவருடைய நண்பர்கள் தம் இல்லங்களில் இருந்து மதிய உணவு அனுப்பி வைப்பர். அவரின் பாதுகாவலர்கள் அந்த உணவினைப் பரிசோதித்த பின்னரே முத்துராமலிங்கம் உண்பார். ஒருமுறை பாண்டியனார் இல்லத்திலிருந்து உணவு அனுப்பப்பட்டது. தேவரின் காவலர்கள் உணவினைப் பரிசோதிக்க முயன்றதைக் கண்ணுற்ற தேவர், பாண்டியன் இல்லத்து உணவைப் பரிசோதிக்கத் தேவையில்லை என்றும், பாண்டியன் தன் உயிர் நண்பர் என்றும் கூறி விருப்புடன் உண்ணத் தலைப்பட்டார் என்று விஷயமறிந்தோர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வு பாண்டியனார் எல்லோரிடமும் ஆழ்ந்த நம்பிக்கைக்குரிய நண்பராகவே பழகி வந்துள்ளார் என்றறிய முடிகின்றது.
வாக்குத் தவறாமைக்கு ஓர் எடுத்துக்காட்டு
திரு. ஏ.கே.செர்புதின் என்ற செல்வந்தரின் தோட்டத்தை மூன்றரை இலக்கம் உருபாய்க்குக் குத்தகைக்கு பாண்டியனார் எடுத்திருந்தார். வரும் வருவாயில் இருபத்தைந்து விழுக்காடு பாண்டியனாருக்கும், எழுபத்தைந்து விழுக்காடு செர்புதினுக்கும் என்று உறுதி செய்து கொண்டனர். வந்தவருவாய் ஓர் இலக்கம். அதனால் மகிழ்வுற்ற செர்புதின் அவர்கள் பாண்டியனாரிடம் உருபாய் ஐம்பதாயிரம் தந்துள்ளார். ஆனால் பாண்டியனார் உறுதி செய்து கொண்டதற்கொப்ப, உருபாய் இருபத்தைந்தாயிரத்தைத் திருப்பிக் கொடுத்தார். இதனைக் குறித்து செர்புதின், கதையிலே தான் “நான் நாணயம் உள்ளவங்களைப் பத்தி படிச்சிருக்கேன். இப்ப நேர்லே பாக்கறேன் என்று கூறியுள்ளார்” என அறிகின்றோம்.
புறங்கூறுதலைத் தவிர்த்தல்
மதுரையில் சர்.பி.டி.இராஜன் இல்லத்தில், பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ,பெ.விசுவநாதம் ஆகியோர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சென்னை மாநகரத் தந்தையாக இருந்தவர் சிவராஜ். அந்த உரையாடலின் இடையே பெரியாரும், பி.டி.இராசனும், சிவராஜ் குறித்துக் குறை கூறியுள்ளனர். பாண்டியனார் சினத்துடன், “நாம சிவராஜோட உண்மையான நண்பர்களே இல்லை. உண்மையான நண்பர்களாக இருந்தா, அவரு இல்லாத எடத்திலே அவரைப் பத்திப் பேசியிருக்க மாட்டோம் அவரெ வரவழைச்சி அவருக்கு எதிர்லே தான் பேசியிருப்போம். நீங்க பேசிக்கிட்டிருக்கிறதெ கேக்கறதுக்கு எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி எழுந்து விட்டார். உடன் பி.டி. ராஜன் பாண்டியனார் கையைப் பிடித்துச் சமாதானப்படுத்தி அமரச் செய்தார்”. சில நிமிட அமைதிக்குப் பின்னரே மீண்டும் உரையாடியுள்ளனர்.
“துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு” (குறள் 188)
என்ற இந்தக் குறளின் பொருளை உணர்ந்தவராகப் பாண்டியனார் விளங்குகின்றார்.
நன்றி மறவாமை
பாண்டியனாரின் தந்தையார் நீரிழிவு நோயினால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டார். குடந்தை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நலமடையச் செய்தார். பாண்டியனார் தம் நன்றிப் பெருக்கின் அடையாளமாகத் தன் கடைசி மகனுக்கு மரு.கிருஷ்ண மூர்த்தியின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.
“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு”. (குறள் 106)
என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்துள்ளார் பாண்டியனார்.
விவசாயம்-தொழில் முனைவு
பாண்டியனாரின் பாட்டனார் திரு.அருணாச்சலம், பட்டி வீரன்பட்டி சுற்றியுள்ள தொண்ணூறு ஏக்கர் தோட்டத்தை விலைக்கு வாங்கி விவசாயம் செய்தவர். பாண்டியனாரின் தளராத உழைப்பின் பயனாய் மூவாயிரம் ஏக்கர் தோட்டமாக வளர்ச்சியடைந்தது.
மைசூர் மாநிலத்தில் 2,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட அசோகா என்ற பண்ணையில் காபி, ஏலம் முதலிய பயிர்களைப் பயிரிட்டு வந்தார்.
மலை, காடுகளில் இவருடைய விவசாயப் பண்ணைகள் இருந்தன. தம்பி இரங்கசாமியுடன் இணைந்து பாடுபட்டு, பண்படுத்தப்படாத நிலங்களை விளை நிலங்களாக மாற்றி விவசாயம் செய்துள்ளார். இப்பண்ணைகளில் புதிய புதிய வேளான் உத்திகளைப் பயன்படுத்தி, வேளாண்மை ஆய்விலும் ஈடுபட்டிருந்தார். அதன் காரணமாக மதுரை மாவட்ட கரும்பு விவசாயப் போட்டியில் ஐநூறு உரூபாய் பரிசை வென்றார். கறம்பு நிலத்தில் கரும்பைப் பயிரிட்டு, அரசின் பாராட்டுப் பட்டம் பெற்றார். 1951 ஆம் ஆண்டில் சிறந்த நெல் வேளான்மைக்கான பரிசினையும், 1953 ஆம் ஆண்டில் சிறந்த நிலக்கடலை வேளான்மைக்கான பரிசினையும் பெற்றார்.
தன் தோட்டத்தில் விளைந்த திராட்சைப் பழங்களைக் கொண்டு திராட்சை இரசம் தயாரிக்க வேண்டி ஆலையைத் தொடங்க ஏற்பாடுகளைச் செய்தார் பாண்டியனார். ஆலையைத் தொடங்கும் நிலையில், அன்னையாருக்குத் தெரிய வந்தது. அன்னையாருக்கு இந்த ஆலையைத் தொடங்குவதில் விருப்பம் இல்லை. அவர் தன் இளைய மகனிடம், “இது வேணாம்னு சொல்லு” என்றார். தம்பி இரங்கசாமி, தமையன் பாண்டியனாரிடம் தாயின் விருப்பமின்மையைத் தெரிவித்தார். பான்டியனார் தாயிடம் வந்து, ஆலையை மூடினால் பெரும் நஷ்டம் வருமே, என்றார். இந்த வியாபாரம் நம்ப குடும்பத்திலே வேணாம் என்றார் தாய். தாயாருக்குச் சம்மதம் இல்லை என்றான பின்னர், ஆலைக்கு மூடுவிழா செய்துவிட்டார் அன்னையின் ஆணைக்குக் கட்டுப்பட்டு.
பாண்டியராஜபுரம்
1947 ஆம் ஆண்டில் சர்.பி.டி.ராசனோடு இணைந்து, மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலை யில் மதுரை சர்க்கரை ஆலையைத் தொடங்கினார். ஆலையை ஒட்டி உருவான புதிய ஊருக்கு, சௌந்திரபாண்டியன் பெயரையும் அவரின் உற்ற நண்பர் பி.டி.ராசன் பெயரையும் இணைத்து “பாண்டிய ராஜபுரம்” எனப் பெயர் சூட்டினார், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். இந்த ஆலையை உருவாக்குதற்காகப் பாண்டியனார் அவ்விடத்திலேயே 1947 முதல்1951 வரை தங்கியிருந்து செயல்பட்டார்.
1943 ஆம் ஆண்டில் ஏலக்காய் விவசாயிகள் நலமுடன் வாழத் தென்னிந்திய ஏலக்காய் விவசாயிகள் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக 1943 முதல் 1953 வரை பதவி வகித்து, விவசாயிகளுக்குப் பல நலன்கள் கிடைக்கச் செய்தார்.1941 ஆம் ஆண்டில் காஃபி வாரியத்தின் உறுப்பினராகப் பணியாற்றி யுள்ளார்.
கூட்டுறவு இயக்கத்தில் இணந்து கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டார். அதன் விளைவாக, பட்டிவீரன்பட்டி காஃபி பதனிடும் கூட்டுறவுத் தொழிற்சாலை, பட்டிவீரன்பட்டி கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கம், பட்டிவீரன்பட்டி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் தலைவர் அல்லது இயக்குநர் பதவிகளை வகித்துள்ளார்.
விவசாயிகளும், வணிகர்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக, 1921 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியைத் தொடங்கினார். அந்த வங்கியைத் தொடங்கிட நிதி திரட்டிட பெரும்பாடு பட்டுள்ளார், அந்த வங்கி இன்று பல கிளைகளோடு வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்று வருந்தியுள்ளார். 80 விழுக்காடு மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும். விவசாயம் நலிந்தால் நாடும் நலிவு பெற்றுவிடும். எனவே விவசாயத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். அது செவிடன் காதில் ஊதிய செய்தியாயிற்று. இன்றும் உழுவார் நிலை பாராட்டும் நிலையில் இல்லை. நாட்டிற்கே உணவளிக்கும் தஞ்சை மண்ணைப் பாலைவனமாக்கும் முயற்சியில் மைய அரசு முனைந்துள்ளது
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை. (குறள் 1031)
என்பதை உணராத அரசுகள் என் சொல்ல?
இவ்விதம் விவசாயம், வணிகம், தொழில்,ஆகிய துறை களில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். அது போன்றே அவர் அரசியல், சமுகப் பணிகளிலும் வெற்றிகரமாக செயலாற்றியுள்ளார்.
சமூகப் பணி
ஒடுக்கப்பட்டத் தமது சமுதாய மக்களின் மேம்பாட்டிற் காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதிக் குரல் கொடுப்பதற்காகவும், செயல்படுவதற்காகவும் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு மகாஜனசங்கம். 1920 முதல் 1937 வரை இச் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான்கு ஆண்டுகளும், துணைத் தலைவராகப் பதினேழு ஆண்டுகளும் பொறுப்பு வகித்து அரும்பணியாற்றியுள்ளார்.
நீதிக்கட்சி-சுயமரியாதை இயக்கத்தில்:
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி 1916 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இச் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் சௌந்திரபாண்டியன் உறுப்பினராகி, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பெரியார், காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கம் மிகவும் இருந்த காரணத்தால் காங்கிரசிலிருந்து விலகி, 1926 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் பெரியாரின் புரட்சிகரமான சமூகச் சீர்திருத்தக் கருத்துகளும், அவரின் நேர்மையான தொணடின் சிறப்பும், சௌந்திரபாண்டியனைக் கவர்ந்தன. ஆதலால் பெரியாரிடம் நெருங்கிய நட்பு கொண்டு அவருக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் துணையாக இருந்தார். பெரியாரின் சுயமரியாதை தத்துவம் “யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்லர், எவரும் எவரையும் தாழ்த்துவரல்லர்” இந்த நற்கருத்தைப் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் பாண்டியனார் ஊர்தோறும் பள்ளிகள் தோன்றுவதற்கும் அரும்பாடுபட்டுள்ளார். சௌந்திரபாண்டியனின் நேர்மைப் பண்பையும், கொள்கைப் பிடிப்பினையும் உணர்ந்து கொண்டிருந்த பெரியார், தான் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் சௌந்திரப்பாண்டியனை நியமித்தார். துணைத் தலைவராகப் பெரியார் தன்னை இருத்திக் கொண்டு பணியாற்றினார்.
1929 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17, 18 நாள்களில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். தலைவரை முன்மொழிந்து பெரியார் ஆற்றிய உரையில், "இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கயிருக்கிற நாடார் அவர்களைப் பற்றிச் சொல்ல வருவது என்பது பகலில் சூரியனைக் காட்டுவதற்குத் தீவட்டி பிடிப்பது போலாகும். அவர் சுயமரியாதைக் கொள்கைகளில் மூழ்கியவர்; அக்கொள்கைகளை மனப்பூர்த்தியாக ஒப்புக்கொண்டு ஒழுகுகின்றவர்; மற்றவர்களும் இக் கொள்கைகளை ஏற்று நடப்பதற்குத் தன்னுடைய உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தஞ்செய்து தொண்டு செய்தற்கு தயாராயிருக்கிறார் என நான் மனப்பூர்வமாகச் சொல்லுகின்றேன். அப்பேர்பட்ட பெரியார் நமக்குக் கிடைத்தது நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு அறிகுறி" என்று குறிப்பிட்டார்.
மாநாட்டுத் தலைவர் பாண்டியுன் தன் தலைமையுரையில், நாம் பழம்பெருமைகளைப் பற்றிப் பேசி மகிழ்வதில் பொருளில்லை. தற்காலச் சீர்கேடுகளை ஆய்ந்து காலத்துக்கு ஏற்றவாறு செப்பனிட்டுக் கொள்வதே சிறந்ததாகும். உத்திரத்திலிருந்து இங்கு போந்த ஆரியர்களின் ஆதிக்கம் வலுத்த நாள் முதல், நம் நாட்ட்டிற்குக் கேடு கிட்டியது, வர்ணாசஸ்ரம தர்மம் கோலோச்சியது. ஒன்றாயிருந்த மக்கள் சாதி மத வேற்றுமைகளால் பிரிக்கப்பட்டு ஒற்றுமை குலைக்கப்பட்டது. பார்ப்பனர் முன் நாம் அனைவரும் சூத்திரர்கள்தான்; வேசிமக்கள்தான். பார்ப்பனர்கள் முன் சமுதாய அடிமைகளாகவும், ஆங்கிலேயர்க்கு அரசியல் அடிமையாகவும் இருக்கின்றோம். இந்த இரு அடிமைத் தளைகளிலிருந்தும் நாம் விடுதலை பெற வேண்டும் என்ற போதிலும், சமூக அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதே முதல் முக்கியக் கடமை என்று நான் அபிப்பிராயப்படுகின்றேன்" என்று தன்னுடைய வாழ்வின் முக்கிய கடமை என்று முடிவு செய்கிறார். அதன்படி நடப்பதற்காகப் பார்ப்பனரல்லாத எல்லா மக்களையும் அழைத்தார்.
1936 ஆம் ஆண்டு நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியுற்று, வலிவிழந்து துவண்டு போயிற்று. கட்சியை வலிவுடனும், பொலிவுடனும் நிலை நிறுத்திடத் தலைவர் தந்தை பெரியாருடன் இணைந்து நாடெங்கும் சுற்றிப் பரப்புரை செய்தார் சௌந்திர பாண்டியனார். அப்போது வெளியிடப்பட்ட பாண்டியன்-இராமசாமி அறிக்கை கட்சியில் விவாதத்தையும், சர்ச்சையையும் உருவாக்கிற்று என்ற போதிலும், பாண்டியன் பெரியாருடன் இணைந்து அறிக்கையில் சொல்லப்பட்ட செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைந்து நின்றார்.
அந்த அறிக்கையின்படி பார்ப்பனரல்லாத மக்களிடையே எழுச்சியை உருவாக்க பிரச்சாரக் கமிட்டியை உருவாக்கினர் கமிட்டியின் தலைவராகப் பாண்டியன் அவர்களையே தேர்ந்தெடுத்தனர். சி.டி.நாயகமும், பெரியாரும் செயலாளர்களாக இருந்தனர். இவர்கள் திட்டங்களைத் தீட்டிச் சுயமரியாதைக் கட்சி, நீதிக் கட்சி ஆகியவற்றின் கொள்கைகளைக் கோட்பாடுகளைத் தீவிரமாக நாடெங்கும் பரப்பினர்.
திமிர் வரி
1918 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் நாடார் சமுதாயத்தினருக்கும், மறவர் சமுதாயத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது. இக்கலவரத்தைக் காரணமாகக் கொண்டு கமுதியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் இரு சமுதாயத்தினருக்கும் திமிர் வரியை விதித்தது, ஆங்கில அரசு.
இந்த வரியினைச் செலுத்த முடியாமல் இருபிரிவினரும் அல்லலுற்றனர். சௌந்திரபாண்டியனார், இருசமூகத்தினரிடமும் நல்லுறவை ஏற்பத்திடப் பாடுபட்டு வெற்றியும் கண்டார்.
சட்டசபையில்
இந்த நிலையில், மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் படி தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. நீதிக்கட்சியின் தலைவர் சர்.பி.டி இராசன் பரிந்துரையின்படி ஆளுநர் வெல்லிங்டன் நாடார் மகாஜனசபை சார்பாக சௌந்திரபாண்டியனை மேலவை உறுப்பினராக நியமித்தார்; சௌந்திரபாண்டியனார் 1920 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டுவரை மேலவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்; 1927ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை சுப்பராயன் அமைச்சரவையில் நீதிக்கட்சியின் கொறடாவாகப் பணியாற்றியுள்ளார்.
திமிர் வரியை நீக்கவும், தண்டம் வசூலிக்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவலரை விலக்கிக் கொள்ளவும் 10-2-1921 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் சௌந்திரபாண்டியனார் தீர்மானம் கொண்டு வந்தார். இராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதி, அத்தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்தார். தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல தலைவர்கள் இத் தீர்மானத்திற்கு ஆதரவாகத் தங்கள் கருத்துகளை வழங்கினர். ஆனால் உள் துறை அமைச்சர் சர்.லயனல் டேவிட்சன் கமுதியில் திமிர் வரியை நீக்கவும், தண்டம் வசூல் செய்யும் காவலரை விலக்கிடவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் பாண்டியனார் இத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டு முடிவெடுக்கக் கோரினார். தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது; தீர்மானத்தை ஆதரித்து 43 பேரும், எதிர்த்து 13 பேரும், நடுநிலை வகித்து 9 பேரும் வாக்களித்தனர். தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. திமிர் வரி நீக்கப்பட்டது
சௌந்திரபாண்டியனாரின் விடாமுயற்சியினால் கமுதியில் திமிர் வரியால் அல்லலுற்ற நாடார் சமுதாயத்தினரும், மறவர் சமூகத்தினரும் நிம்மதியடைந்து இன்புற்றனர்; பகை மறந்து நல்லுறவு கொண்டனர்; இவை பாண்டியனாரின் தளராத முயற்சிக்கும் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த இரண்டு சமூகத்தினரும் ஒன்றுபட்டு என்றும் நல்லுறவுடன் வாழ்ந்திட வேண்டும் என்று விரும்பினார். ஆதலால் நாடார் மகாஜனசபை ஆண்டு விழாவில், இராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதி அவர்களைத் தலைமை ஏற்கச் செய்து சிறப்பித்தார். இதன் மூலமிரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்டுள்ள நட்பு வலுப்பெறச் செய்தார்.
பாண்டியனார் தன் சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டும் பணியாற்றவில்லை. அனைத்து மக்கள் சமுதாயமும், சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும்; சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்.
1921 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 4 ஆம் நாள் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், பொதுச் சாலைகள், பொதுக்கிணறுகளைப் பயன்படுத்தத் தடை செய்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து எம்,சிராஜா முதல் பல தலைவர்கள் கருத்துரை வழங்கினர். இறுதியாக முதல்வர் பனகல் அரசர் தடை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கினார்.
இராமநாதபுரம், மதுரை மாவட்டக் கழகங்களில்
சௌந்திரபாண்டியனார் 1926ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். அக்காலத்தில் பேருந்துகளில் ஆதித் திராவிட மக்கள் பயணிக்கத் தடையிருந்தது. அதனை அறிந்த பாண்டியனார், “ஆதித் திராவிட மக்கள் பயணிக்கத் தடை செய்யும் பேருந்துகளின் உரிமம் பறிக்கப்படும்” என, ஆணை பிறப்பித்தார். அதன் பின் ஆதித் திராவிட மக்களும் பேருந்துகளில் சரிசமமாக மற்ற சமுதாய மக்களுடன் பயணித்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்க மறுத்தனர் ஜாதி இந்துக்கள். இந்த அநீதியைப் பாண்டியனார் அரசுஆணை பிறப்பித்து நீதியை நிலை நாட்டினார்; அனைத்துச் சமூகமக்களின் பிள்ளைகள் கற்பதற்கு வழிவகுத்தார்.
மதுரை மாவட்டக் கழகத் தலைவராக 1943 முதல் 1948 வரை பணியாற்றினார். கோப்புகளை உடனுக்குடன் பார்த்து, வேண்டும் ஆணைகளையிட்டார். காலதாமதம் மக்களைப் பாதித்துவிடும் என்று கவனமாக இருந்தார்.
பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் தொடங்கினார். சௌந்திரபாண்டியனாரிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த அண்ணா, தான் தொடங்கிய அரசியல் இயக்கத்திற்கு அவரைத் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று அழைத்தார், பாண்டியனார் அண்ணாவின் அழைப்பை அன்புடன் மறுத்து விட்டார். தன் வாழ் நாள் முழுதும் சமூக மறுமலர்ச்சிக்காகப் பாடுபடவே தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார்.
15-1-1953 அன்று ஏலக்காய் விவசாயச் சங்கம் சார்பில் அரசினரிடம் பேசுதற்கு சென்னை தலைமைச் செயலகம் சென்றார், மறுநாள் சென்னைப் பொது மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று சேர்ந்தார்,
எல்லோரிடத்தும் அன்பும் பரிவும் கொண்டிருந்த மனித நேயம் மிக்கவர்; பொது வாழ்வில் தூய்மை, நிர்வாகத்தில் நேர்மை என்று வாழ்ந்த அந்த மாமனிதர் 22-2-1953 ஞாயிறு அன்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு மாலை மூன்று மணியளவில் இயற்கை எய்தினார். வாழ்க அவர் புகழ்!
உயர்ந்தோர் என்ற பிரிவில், சௌந்திரபாண்டியன் என்ற தலைப்பில், பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடலுடன் நிறைவு செய்கின்றேன்.
பாண்டியன் பேர் வாழ்கவே-சவுந்திர
பாண்டியன் பேர் வாழ்கவே
வேண்டிய செல்வம் அணுகிடும் போதும்
விலகிய செல்வம் விலகும் போதும்
மாண்பிடத்தக்க நோய் வந்த போதும்
மட்டில்லா உடல் நலம் வளர்ந்த போதும்
யாண்டும் எப்போதும் சுயமரியாதை
இயக்கம் பேணத் தயக்கம் கொள்ளாப்
பாண்டியன் பெயர் வாழ்கவே
கயவர் கத்தி உருவும் போதும்
கற்றவர் புகழ்ந்து பேசும் போதும்
அயலவர் சூழ்ச்சி வலுத்திடும் போதும்
ஆரியர் வணங்கி அழைத்திட்ட போதும்
இயலும் முப்போதும் சுயமரியாதை
இயக்கம் பேணத் தயக்கம் கொள்ளாப்
பாண்டியன் பெயர் வாழ்கவே
தோழர்கள் எல்லாம் தொகை வேண்டும் போதும்
தொகை பெற்ற தோழர் பகை காட்டும் போதும்
தாழ்வுறத் தலைவர் ஒதுக்கிடும் போதும்
தலைவர்கள் தலைமேல் தூக்கிடும் போதும்
ஏழ்மையை வெருட்டும் சுயமரியாதை
இயக்கம் பேணத் தயக்கம் கொள்ளாப்
பாண்டியன் பெயர் வாழ்கவே!