திருச்சி மாவட்ட கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 133 ஆவது பிறந்த நாள் செப்டம்பர் 17 அன்று காலை 10 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலைக்கு கழகத்தின் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டன. பெரியார் சிந்தனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் நூற்றுக் கணக்கில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு திருச்சி இரயில் நிலையம் முன்பாக கழகத்தின் சார்பாக பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளை உடனே அகற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பரமக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்தும், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.முத்து தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியசாமி, ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கங்களான புதிய தமிழகத்தின் மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி மற்றும் தோழர்கள், ஆதித் தமிழர் பேரவை சோழன், ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியில் கழகத்தின் மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார் நன்றியுரை யாற்றினார். த. புதியவன், நா. குணா, திருவரங்கம் அசோக், இளந்தாடி துரையரசன், மனோகரன், பொன்னுசாமி, ஆறுமுகம், கேசவன், கார்த்தி, பாரத், மணிகண்டன், இராமதாஸ், இரத்தினசாமி, பழனி, அன்பழகன், ஏங்கல்ஸ், மனோஜ், விஜி, வழக்கறிஞர் சுமன், தாமரைக்கண்ணன், சண்முக ஞானம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை வடசேரியில் கழகக் கூட்டம்

31.8.2011 புதனன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரியும், சட்டசபை தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்தும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. க.சொ. சிவசுப்பிரமணியன் (ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர்) தலைமை தாங்கினார். கா.மா. கார்த்திகேயன் வரவேற்புரையாற்ற கு.பாரி, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட கழகத் தலைவர் இர.ரசித்கான், பொடா. க. அழகுசுந்தரம் (மாநில இளைஞரணி செயலாளர், ம.தி.மு.க.), விடுதலை வேந்தன், ம.தி.மு.க. தலைமை நிலைமை பேச்சாளர் சிறப்புரையாற்றினர். பொடா க. அழகுசுந்தரம், ‘மரண தண்டனை மடியட்டும், தூக்கு தண்டனை ஒழியட்டும்’ என்ற தலைப்பில் ஆணித்தரமான வாதங்களை அழகாக வைத்தார். விடுதலைவேந்தன், “எம்.ஜி.ஆரின் பார்வையில் ஈழத் தமிழனும், தமிழீழமும்” என்ற தலைப்பில் விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர். என்னென்ன உதவிகள் செய்தார் என்பதை பட்டிய லிட்டு மிகவும் உணர்ச்சிகரமாக சிறப்புரை யாற்றினார்.

வடசென்னையில் பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம்

17.9.2011 அன்று மாலை 6 மணிக்கு பாடியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சம்பூகன் கலைக் குழுவினரின் இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மு. கனகராஜன் தலைமை வகித்தார். அம்பத்தூர் பகுதி அமைப்பாளர் கருணா வரவேற்புரையாற்றினார். சொ. அன்பு, தே. ஜெய வேல், கே. திலீபன் முன்னிலை வகித்தனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கொளத்தூர் பகுதி அமைப்பாளர் அருள் நன்றியுரையாற்றினார். ஏராளமான பொது மக்கள் திரண்டிருந்தனர்.

டக்ளஸ் பிரச்சினையில் இந்தியாவின் இரட்டை வேடம்

டக்லஸ் தேவானந்தா ஈ.பி.டி.பி. என்ற அமைப்பின் தலைவர் ராஜபக்சே அமைச்சரவையில் சிறுதொழில் வளர்ச்சித் துறை அமைச்சர், விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பாக இந்திய உளவு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்படுகிறவர். 1986 இல் இவர் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது உள்ளூர் மக்களிடம் தகராறு செய்து திருநாவுக்கரசு என்ற தலித் சிறுவனை சுட்டுக் கொன்றுவிட்டார். அப்போது, இவர் மீதும் இவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. பின்னர் 1988 இல் சென்னையில் 10 வயது சிறுவனை ரூ.7 லட்சம் பணம் கேட்டு கடத்தியதாக மற்றொரு வழக்கு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப் பட்டார். சிறையிலிருந்த இவரை உளவுத் துறையே தலையிட்டு, விடுதலை செய்ய வைத்து இந்திய ராணுவ விமானத்தில் ஏற்றி யாழ்ப்பாணத்தில் கொண்டு போய் இறக்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது.

இந்த நிலையில் அரசு சுற்றுப்பயணமாக இந்தியா வந்த ராஜபக்சேவுடன் அவர் பங்கேற்றார். அவரை கைது செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி. நாகப்பன், எம்.சத்தியநாராயணன், மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டனர். மத்திய அரசு டக்லஸை கைது செய்ய முடியாது என்றும், இருநாடுகளுக்கு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கிடையாது என்றும், இலங்கையுடன் நல்லுறவை பாதிக்கும் என்றும் பதிலளித்துள்ளது. இதே இந்திய அரசு தான் பிரபாகரனை ஒப்படைக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் கொலை வழக்கில் 3 தமிழர்களை தூக்கிலிடத் துடிக்கும் காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டில் கொலை கடத்தலில் ஈடுபட்டவருக்கு பாதுகாப்பு தருகிறது. துரோக காங்கிரஸ் துரோகிகளுக்கு நட்புக்கரம் நீட்டுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

தோழர் ரங்கநாதன் முடிவெய்தினார்

கழகத்தின் செயல் வீரரும், குருவரெட்டியூர் நகர கழகத்தின் தலைவருமான தோழர் ரங்கநாதன் கடந்த 23.8.2011 அன்று நெஞ்சுவலி காரணமாக முடிவெய்தினார். இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர் இல்லத்தில் நடைபெற்ற படத்திறப்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் நாத்திக சோதி, சேலம் மாவட்ட பொறுப்பாளர் டைகர் பாலன், காசிபாளையம் வேலுச்சாமி, தைரியமணி, வேல்மணி, திராவிடர் கழகம் யோகனந்தம், பிரகலாதன் போன்றோர் தோழரின் கழகச் செயல்பாட்டினையும், பண்புகளையும் விளக்கி உரையாற்றினர். தோழர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Pin It