1957 – அக்காலகட்டத்திலும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பது ஒரு பொதுப் போக்காகும். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று முத்துராமலிங்கம்(தேவர்) வெற்றி பெற்றார். ஒரே நபர் இரு பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் தனது சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவே, முதுகுளத்தூர் தொகுதியில் சட்டசபைத் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற வேட்பாளர் சசிவர்ண 'தேவர்’  என்பவருக்கு பள்ளர்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தால் மறவர்கள் அவர்கள் மீது  தாக்குதலை நடத்தினர். இதில் 42 பேர் கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் நாள் ஓர் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், தாழ்த்தப்பட்டோர் சார்பாக இம்மானுவேல் சேகரன் அவர்களும் கலந்து கொண்டார்.  அவர் முத்துராமலிங்கம் வரும் பொழுது எழுந்து நின்று வணக்கம் செலுத்தவில்லை;  அவருக்கு சரி நிகராக உட்கார்ந்து கொண்டு பேசினார்.

பேச்சுவார்த்தையின் கோரிக்கைகளை முத்துராமலிங்கம் ஒப்புக்கொண்டாலும் இம்மானுவேல் சேகரனுடன் சேர்ந்து கையெழுத்திட மறுத்ததால் ஒரே கோரிக்கை இரண்டு பிரதி எடுக்கப்பட்டு முத்துராமலிங்கம் தனி பிரதியில் கையெழுத்திட்டார். மறுநாள், செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவர் சுயமரியாதையுடன் நடந்து கொண்டது தான் மறவர்களை ஆத்திரம் அடையச் செய்து கொலை வெறிக்கு தூண்டியுள்ளது.  'தேவர்' சாதி வெறியை ஊட்டி வளர்த்த முத்துராமலிங்கம் ’தேசத் தலைவர்’ ஆனார். அவர் பிறந்த நாள் அரசு விழா ஆனது. ஆனால் ஒடுக்கப்பட்டோர் தலைவர்கள் சாதிக்கு எதிராக களம் கண்டிருந்தாலும், நாட்டின் அரசியலமைப்பையே எழுதியிருந்தாலும், தியாகிகளானாலும் ’தேசத் தலைவர்கள்’ ஆக முடியுமா என்ன?

50 ஆண்டுகளுக்குப் பிறகு, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தியாகி இம்மானுவேலின் நினைவு நாள் அரசியல் அரங்கில் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், பரமக்குடியிலும் மதுரையிலும் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பார்க்க வேண்டுமே அன்றி, இதை தனி ஒரு நிகழ்வாக அணுக முடியாது. செப்டம்பர் 10 அன்று பழனிக்குமார் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொல்லப்பட்டதும் அதற்குக் காரணம் முத்துராமலிங்கத்தைப் பற்றி அவதூறாக எழுதி வைக்கப்பட்டிருந்தது என்று சட்டசபையில் முதல்வர் பேசியதும் இந்த வரலாற்று  வேர்களைத் தேடச் சொல்கின்றது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்திற்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள்  கொல்லப்பட்டுள்ளார்கள்.  இது வெறும் அரச வன்முறை என்று கண்டித்தலோடு, நாம் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல.

நம் மண்ணில் எல்லா மனிதர்களின் முதல் ஏக்கமும் சாதி தீண்டாமை இழிவிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே. இதற்காக  வரலாறு முழுவதும் கதாநாயகர்களுக்காக காத்திருக்கின்றார்கள் அவர்கள். தமக்கு கிடைத்தத் தலைவர்களைத் தலைமேல் வைத்து கொண்டாடி இருக்கின்றார்கள். வரலாறு தோறும் கைவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தம் எழுச்சிக்கான அடையாளங்களும், குறியீடுகளும் இன்றியமையாததாகின்றது. இப்படித் தான் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் சுயமரியாதை போராட்டத்திற்கான குறியீடாக கொண்டாடப்படுகின்றது. தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் அரசியல் எழுச்சி நாளாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.  இன்னொருபுறம் 1980, 90களில் சாதி வெறியர்களால் தாம் தாக்கப்படும் பொழுதெல்லாம் வலிக்கும்படி திருப்பி அடித்துக் காண்பித்தார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்; புதிய கட்சிகள், புதிய தலைவர்கள் என்று அரசியல் எழுச்சி கொண்டார்கள். இனியும் வெட்டறிவாள், கம்போடு அரசு, காவல் துறை உதவியுடன் ஆதிக்க சாதி வீரத்தைக் காட்டுவது அத்தனை எளிதல்ல என்று மாறியது களம்.

இன்னொருபுறம் அரசின் துணையுடன் சாதி வெறி தாக்குதல் நடத்தினால் சேதாரம் தம் பக்கமும் உண்டு; இனி அரசு இயந்திரத்தை நேரடியாக களத்தில் இறக்குவது தான் சிறந்தது’ என்று தக்க தருணம் பார்த்து காத்து இருந்திருக்கின்றது சாதி வெறிக் கும்பல். அதற்கு சரியான காலம் கனிந்தது போல், இந்த பார்ப்பனிய அரசக்கட்டமைப்பில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டது. ஒடுக்கப்பட்டோர் தம் எழுச்சி நாளாக கருதிய செப்டம்பர் 11 ஐ கலவர நாளாக மாற்றிவிட்டார்கள். அடுத்த ஆண்டு இன்னும் பலத்த காவல்துறை கெடுபிடி, துப்பாக்கிகள், செக் போஸ்ட்கள் என்று  மக்களைப் பீதியூட்டுவதற்கு அடித்தளமிட்டுவிட்டார்கள்.  தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை, அரசியல் முக்கியத்துவமற்றதாக ஆக்குவதற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் அரசுடன் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையே இந்த துப்பாக்கிச் சூடு.

ஆதிக்க சாதி வெறிச் செயல்கள் நடந்தேறும் பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக இச்சமூகம் கடந்து போவதே, சாதிய மனநிலையில் இருந்து தான். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் நடக்கும் போது அதை நம் சமூகம் மெளனமாக ஆதரிக்கின்றது. நம் சமூகத்தின் மெளனம் தான் அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைக்கான ஆயுதமாக இருக்கின்றது. கிராமங்களில் சாதி ஒடுக்குமுறையும் அதன் வெளிப்பாடும் அப்பட்டமாக எந்த ஒளிவு மறைவும் இன்றி நடந்து கொண்டிருக்கின்றது. 'நகரத்தில் யாரும்  சாதி பார்ப்பதில்லை’ என்பது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ’தாழ்த்தப்பட்டோர்’ என்று வரும் பொழுது தான், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ‘சாதி முகம்’  வெளிப்படுகின்றது.  தாழ்த்தப்பட்டோரின் அரசியல் எழுச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமை, அவர்களின் தலைவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதும், கருதுவதும் சமூகத்தின் பொதுப் போக்காகவே இருக்கின்றது. ஒரு ‘தலித் விரோத உளவியல்’  சமூக உளவியலின் ஆழத்தில் படிந்து கிடக்கின்றது. தாழ்த்தப்பட்டோர் மீதான காழ்ப்புணர்ச்சியும், வன்மமும், ஆதிக்க உளவியலும் சொந்த ஊரிலிருந்து  இடம்பெயர்ந்து நகரத்திற்கு வந்தாலும், கடல் கடந்து வேறு நாட்டுக்கு சென்றாலும்கூட சிந்தனையில் இருந்து பெயர்த்தெடுக்கப் படாமலே இருக்கின்றது.

பொது கோயில், பொது சாலை, பொது சுடுகாடு, பொது கிணறு, பொது தண்ணீர் குழாய், தேநீர் கடைகளில் பொது குவளை என்று தீண்டாமை ஒழிப்புக் கோரிக்கைகளே முற்றுப்பெறாமல் இருக்கின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே கொலை வெறித் தாக்குதல்கள் தொடர்கின்றன. கிராமங்களில் சேரிகள் காலனியாக உருமாற்றப்பட்டது முன்பு. அது போல், இப்போது நகரங்களில் ஊருக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் என்று புதிய சேரிகள் உருவாக்கப்படுகின்றன. தீண்டாமை புதியப் பெயர்களில், புதிய வடிவங்களில் தொடர்கின்றது. ’சட்டப் புத்தகத்தில் இருந்து மரண தண்டனையை ஒழித்திடு!’ போன்ற மனித உரிமைகளின் உன்னதமான கோரிக்கைகளை முன் வைக்கும் அளவிற்கு நம் சமூகம் மனித உரிமை விழுமியங்களில் வளர்ந்திருக்கிறதா? என்ற கேள்வியே இதிலிருந்து எழுகின்றது.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து அதை  சாதி ஒழிப்பு அரசியலாக வளர்த்தெடுத்த பெரியார் வாழ்ந்த மண்ணில் தான் இன்னும் இந்த பேரவலங்கள் தொடர்கின்றன. தாழ்த்தப்பட்டோர் மீதான ஒடுக்குமுறைகள் சமூகத்தின் மிக முக்கிய முரண்பாடாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்கள் தம் மீது நடத்தப்படும் அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய வண்ணம் ஒரு அரசியல் எழுச்சிக்கு தயாராகி வருகின்றார்கள். இதை தடுக்க அளவற்ற தடைகளை அவர்கள் முன் வைக்கின்றது சாதிய சமூகம். பெரியார் விதைத்த 'பார்ப்பனிய எதிர்ப்பு’  வீறு கொண்டெழத் தடையாயிருப்பது பெரும்பான்மை சமூகத்தின் தலித் விரோத போக்கு. சாதி ஒழிப்பு அரசியலைப் பெருமரமாக வளர்த்தெடுக்க  வேண்டுமாயின் இச்சமூகத்தின் 'தலித் விரோத உளவியல்’ என்ற களையைப் பிடுங்கி எறிய வேண்டும் நாம். 'பறையன் பட்டம் போகாமல் உன் சூத்திரப் பட்டம் போகாது’ என்பதை இச்சமூகத்திற்கு அறைந்து உணர்த்தாவிட்டால், பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடி இந்து மதத்தை வேரறுத்து சாதியை  ஒழிப்பது நோக்கி இனி ஒரு அடியைக் கூட முன் வைக்க முடியாது.

தென்னாப்பிரிக்காவில் கருப்பர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்காக வெள்ளையர்கள் வருந்தினார்கள். கண்ணீர் விட்டு அழுதார்கள்; குற்றவுணர்ச்சியில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பவற்றை நாம் படித்து இருக்கின்றோம். வெள்ளையர்கள் தம் முன்னோர்கள் இழைத்த அநீதிகளை எண்ணி அவமான உணர்ச்சி கொண்டதைக் கண்டவர்கள் சொல்லிக் கேட்டிருக்கின்றோம். ஆனால், எந்த ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரும் ஒரு வரலாற்று அநீதி இழைக்கப்பட்டிருப்பதை எண்ணி தம்மைக் குற்றவாளியாக உணர்ந்ததாக கேட்டறிந்த கதைகள் அரிதிலும் அரிது. ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழே யாராவது ஒருவரையாவது 'கீழ் சாதி' என்று சொல்லி ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு படிநிலை சமூகமாகத் தான் நம் சமூகம் இருந்துவந்திருக்கின்றது. இந்த சாதிய இழிவைப் போக்கிக் கொண்டு சாதி ஒழிப்பதற்கான போராட்டத்தினூடே ஒவ்வொரு சாதியினரும் தாம் இழைத்த அநீதிகளுக்காக வருந்த வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது. 'சாதி ஒழிப்பு போராட்டம்’ என்ற நீண்ட பயணம் தீண்டாமை ஒழிப்பு, சாதிய வன்முறை தாக்குதல்களைச் சாத்தியமற்றதாகச்  செய்வது,  சமூகத்தின் அத்தனை துறைகளிலும் சமத்துவம்,  இங்கு இருக்கும் வளங்களைப் பகிர்வதிலும் சமத்துவம் என்று பல இலக்குகளை உள்ளடக்கி உள்ளது. இந்த நெடியப் போராட்டப் பயணத்தில் தான் தீராத வன்மத்தையும், ஆறாத காயங்களையும் கொண்ட இந்த சாதிய சமூகத்தில் ஒன்றிணைவும், மீள் இணக்கமும் சாத்தியமாகப் போகின்றது.

ஜனநாயக (தேசிய, புரட்சிகர, முற்போக்கு) ஆற்றல்கள் சிலரின் மெளனமும், மழுப்பல் அணுகுமுறையும் எந்த அரசியலையும் வளர்த்தெடுக்கப் போவதில்லை. மேலும் நம் சொந்த மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். இந்த அணுகுமுறை, என்றாவது ஒருநாள் சாதி ஒழிப்புக்கு எதிராகக் கொண்டு சென்று நிறுத்திவிடும். ஆதிக்க சாதி வெறியர்கள் உருவாக்கி வைத்துள்ள அடையாளங்களும், குறியீடுகளும் அதை சுற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ள பிம்பங்களும் சாதி இருத்தலுக்கே உரம் சேர்க்கின்றன. ஒடுக்கப்பட்டோர் தம் அடையாளங்களும், குறியீடுகளும் சாதி ஒழிப்புக்கே இட்டுச் செல்லும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. இவ்விரண்டையும் இனம் பிரித்துக் பார்ப்பதும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சிக்கு துணை நிற்பதுமே ஆதிக்க சாதி வெறிப் போக்கைத் தனிமைப்படுத்துவதற்கும் உணர்த்துவதற்கும் வழி. இதுவே, பார்ப்பனியத் தன்மை கொண்ட அரசுடன் சேர்ந்து சாதி வெறி கும்பல் தொடுத்திருக்கும் தாக்குதலுக்கு, ஜனநாயக ஆற்றல்கள் தரும் அரசியல் பதிலடியாக அமையும்.
Pin It