பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தப் போராடுதல், கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்துப் போராடுதல் இவை இரண்டையும் விட இக்காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, பரமக்குடி கலவரத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்பதும், இக்கலவரத்தில் கொல்லப்பட்ட உயிர்களுக்காக நாம் என்னவிதமான நிலைப்பாட்டினை எடுக்கிறோம், நாம் யாருக்காக நிற்கிறோம், குரல் கொடுக்கிறோம் என்பதும்!
 
தமிழக அரசியலில் ஊழல் புரிந்தவர்கள் ரவுடித்தனம் செய்பவர்கள், ஆதிக்க சாதி வன்முறையைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள் ஆகியோர் அனைவரையும் நம்முடைய மனசாட்சியால் எந்த வித வேறுபாடுமின்றி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் தலைவராக வரும்போது, அவர் அமைதியானவராகவும், வன்முறை செய்யாதவராகவும் தன்னுடைய சாதியைக் காட்டிக்கொள்ளாதவராகவும், எல்லோருக்கும் அடங்கிப்போகக் கூடியவராகவும் இருக்க விரும்புகிறோம்.
 
தோழர் ஜான்பாண்டியன், எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவே இருந்து வந்திருக்கிறார். ஆனால், சமூகம் அவரை ஒரு தலைவராக ஒப்புக்கொள்ள மறுக்கிறது.  அமைச்சர்களும், முதல் அமைச்சர்களும், செய்யாத காரியத்தை ஒன்றும் இவர் செய்யவில்லை. ஆனாலும், இவர் மட்டுமே தொடர்ந்து வன்முறையாளராக சித்திரிக்கப்படுகிறார்.  தமிழக அரசியல் வரலாற்றில் ஆதிக்க சாதியை எதிர்த்து நேரடியாகக் குரல் கொடுக்கும் தலைவர்களில் முக்கியமானவர் இவர்! சமூகநீதியையும், சம உரிமையையும் யாருக்கும் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதை அவருடைய மொழியிலேயே அவர் விளக்கும்போது, அவர் வன்முறையாளராகச் சித்திரிக்கப்படுகிறார்.
 
1980 – களில், போடிக்கலவரத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திலும், அவர் பேசியதால் கலவரம் உண்டாயிற்று என்று அரசும் பொது மக்களும் உலகுக்கு தங்கள் வாதங்களை முன்வைத்தனர். ஆனால், ஜான் பாண்டியன் இரு சாதி சமூகங்களுக்கு இடையில் திருமண ஒப்பந்தங்களும், கொடுக்கலும் வாங்கலும் இருக்கவேண்டும் என்பதைத் தன்னுடைய மொழியில் கூறினார். ஆனால், இதை சமூகத்தின் எந்த ஒரு பகுதியினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பெருங்கலவரங்களுக்குக் காரணம், தோழர் ஜான் பாண்டியனே என்று கோஷமிட்டனர். இந்தப் பின்னணியிலேயே, செப்டம்பர் 11, 2011 பரமக்குடியில் நிகழ்ந்த கலவரத்தையும் பார்க்க வேண்டும்.
 
1.   பசும்பொன் கிராமத்தில் அரசு அதிகாரத்தின் ஆதரவுடன் தேவர் ஜெயந்தி நடைபெறும்போது, மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எண்ணற்ற வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன. அன்றைய நாள் முழுவ‌துமே, பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழமுடியாத தன்மை ஏற்படுகிறது.  நாம் ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றும். கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். பாதசாரிகள் மரண பீதியில் வலம் வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு வருடமும் இப்படி நடைபெறும் வன்முறைச் செயல்களுக்கு எந்த அரசும் பொறுப்பேற்பதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் எதுவும் பேசுவதில்லை. காவல் துறையினர் எல்லா வெறிச் செயல்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் எந்த ஒரு தலைவரும் வழிமறிக்கப்படுவதில்லை. கைது செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் வன்முறைகள் நிறைந்திருக்கவே அந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதையெல்லாம் நாம் புரிந்து, உணர்ந்து கொண்டால் தான் பரமக்குடிக் கலவரத்திலும் நம்முடைய நிலைப்பாட்டினை எடுக்கமுடியும்!
 
2.   50–களில் நடந்த முதுகுளத்தூர் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கம், தன்னிலும் மிக வயது குறைந்த இம்மானுவேல் சேகரனைத் தனக்குச் சமமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவரான பேரையூர் பெருமாள் பீட்டர், தன்னை விட வயதில் மிகக் குறைந்த இம்மானுவேல் சேகரனை தன்னுடைய தலைவன் என்று அறிவித்தார். பின்பு, சமூக நீதி பற்றியும், சம உரிமை பற்றியும், தீண்டாமைக் கொடுமைகள் பற்றியும் மாபெரும் அரசியல் போராட்டங்களை முன் எடுத்த இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். அன்றிலிருந்து ஆதிக்க சாதித் தலைவரை நேரடியாக எதிர்த்தவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. இதிலிருந்து அறுபது வருடமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன இனக்கலவரங்கள். நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதி அணிவகுப்புகள், இம்மானுவேல் சேகரன் விழாவைக் கொண்டாடுவதை எப்போதுமே விரும்பியதில்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளவர்கள் இம்மானுவேல் சேகரனுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதுமே எடுத்திருக்கிறார்கள்!
 
3.   தற்பொழுது பரமக்குடியில் நடைபெற்ற கலவரங்களுமே இதன் தொடர்ச்சி தாம்! எந்தவித வன்முறையும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்திருக்கவேண்டிய இம்மானுவேல் சேகரன் விழாவை அரசே வன்முறையாக மாற்றிவிட்டது. தோழர் ஜான் பாண்டியனைக் கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவர் பாட்டுக்கு வந்து அவர் பாட்டுக்கு மரியாதை செய்து திரும்பியிருப்பார். அவர் வந்தால் கலவரம் ஏற்படும் என்றால் அந்தக் கலவரத்தைச் செய்பவர்கள் யார்? நிச்சயமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை.
 
ஆதிக்க சாதியினரே கலவரத்தை உண்டு பண்ணுவார்கள் என்று அரசு நினைக்கிறது. அதனால் தான் ஜான் பாண்டியனைக் கைது செய்கிறார்கள். உண்மையில் கலவரத்தை உண்டுபண்ணக்கூடிய ஆதிக்க சாதியினரைத்தானே கைது செய்யவேண்டும்!
 
தேவையற்ற கைதினாலேயே கலவரம் மூண்டது! அதற்கு இரண்டாயிரம் வருடங்கள் பின்னணி உள்ளது. எந்த நியாயமும் இன்றி,  தாழ்த்தப்பட்ட மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதற்கும் இரண்டாயிரம் வருடம் பின்னணி உள்ளது!
 
ஆறு பேர் கொல்லப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஏழாகியுள்ளது. அரசு காட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நிச்சயம் உண்மையில்லை. நமக்குத் தெரிய வேண்டியவை, இந்தக் கலவரத்துக்குப் பின்னால் உள்ள காவல் துறை அதிகாரிகளின் சாதி குறித்த விவரங்களும், உண்மையான நீதியுமே! ஓய்வு பெற்ற நீதிபதிகளின் விசாரணைக் கமிஷன்கள் மூலம் நமக்கு ஓய்வு பெற்ற நீதியே கிடைக்கும்!

- ஆர்.ஆர்.சீனிவாசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

5 comments

5
கணேஷ் எபி
நல்ல கட்டுரை ஆனால் இந்த வரிகள் புரியவில்லை.
//ஆதிக்க சாதியினரே கலவரத்தை உண்டுபண்ணுவார்கள் என்று அரசு நினைக்கிறது. அதனால் தான் ஜான் பாண்டியனைக் கைது செய்கிறார்கள். உண்மையில் கலவரத்தை உண்டுபண்ணக்கூடிய ஆதிக்க சாதியினரைத்தானே கைது செய்யவேண்டும்!//
ஆறுமுகம்
தமிழக அரசியலில் ... இருக்க விரும்புகிறோம் என்பது நடுநிலைமை அற்றது. தோழர் ஜான்பாண்டியன் என்பது சாதி அடிப்படையில் ரௌடியிசத்தை ஆதரிப்பதாகும். ஜான் பாண்டியன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை பாளை பகுதியில் உள்ள மக்களுக்கு தான நன்கு தெரியும். மக்களிடையே கசப்புனர்வை ஊட்டுவதால் சகிப்புத்தன்னை நீங்கி வன்முறையே மேலோங்குகிறது காரணம் இவர் போன்ற தலைவர்கள் தான். 1) பசும் பொன்னில் நடப்து உண்மை அது தவறானதே 2) பழைய பகையே இந்த குருபூஜை இது மத நம்பிக்கை அடிப்படையில் கொண்டாப்படுவதல்ல. முழுவதும் சாதி அரசியல் காரணங்களே பசும்பொன் குருபூஜை அப்படியானதல்ல மாறாக திமுக அதிமுக அரசியல் அல்ல. 3) கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது ஏற்புடைய தே ஃ) இது (குரபூஜை) ஒரு தொடர்கதையாக பல ஆண்டுகலாக இப்பகுதியில் சாதி அரசியலுக்காக மாற்றபட்டு வருகிறது . ராமநாதபுரம் அரசு கல்லூரி இநத அனுபவத்தை கொண்டு மூன்று நாள்கள் முன்னதாகவே விடுமுறை அளித்துள்ளனர்.இதிலிருந்தே நிலைமை எந்த அளவு மேசமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். இறுதியாக, மக்கள் அடித்தட்டு வகுப்பை சேர்ந்தவர்கள் அவர்கள் அணைத்தையும் ஆராய்ந்து சரியானதை செயல்படுத்தும் நியைல் இல்லாதவர்கள் அவர்கள் மீது முழு நாகரீக அரசு அமைப்பு நவீன ஆயுதம் தூப்பாக்கி கொண்டு கொலை செய்வது சரியான நடவடிக்கை அல்ல. வன்மைகயாக கணடிக்கத்தக்கது
நிலவன்
ஆதிமுக வந்தால் ஆதிக்கசமூகம் தன் வெறியை தனிக்க இப்படி தான் செய்யும் என்பது தலித் மக்களுக்கு நன்றாக தெரியும், அரசே தேவர் குருபூசை நடத்துவதும் அதில் முதல்வர் கலந்துக்கொள்வதும் வெக்ககேடு, ஆனால் பரமக்குடி கலவரம் திட்டமிட்ட சதி அல்லது ஜெ அரசின் கண்டுக்கொள்ளாத போக்கை காட்டுகின்றது. இந்த கலவரத்தை ஒட்டி பார்க்கம்போது ஜான் பாண்டியன் கைது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது போல் உள்ளது. அவர் ஏன் கைது செய்யப்பட்டார். செய்யவேண்டியதின் அவசியம் என்ன என்பது முட்டாள் தனமாக உள்ளது. அவர் பாட்டுக்கும் வந்து அஞசலி செழுத்துவதில் ஆளும் தரப்பு மற்றும் ஆதிக்க சாதியினருக்கு என்ன கசப்பு என்று தெரியவில்லை. நல்ல கட்டுரை எழுதி உள்ள சீனிவாசனுக்கு நன்றி.
Mukil
இந்த அரச பயங்கரவாதத்தை சீர்தூக்கிப் பார்த்து மிகவும் அருமையாக இக்கட்டுரையை தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன் எழுதியிருக்கின்றார். ஆனால் அவரோ அல்லது அவருக்கு எதிர்வினை ஆற்றியிருக்கும் நண்பர் நிலவன், ஆறுமுகம் அவர்களோ பிரச்சனையை வெளிநாட்டு வாழ் தமிழராக இருந்து அனுகியிருக்கின்றார்கள். மாவீரன் இமானுவேல் தேவேந்திரரின் குருபூசைக்கு செய்யப்பட விளம்பரங்களில் அம்மக்கள் தங்களை தேவேந்திரர் என்று திரும்பத்திரும்ப உரத்துக் கூறிய பொழுது உங்களை போன்ற முற்போக்கு சுய உதவிக்குழுக்களும், சார்லஸ் ஆன்றனி போன்ற தர்மராஜாக்களும் தலித் என்று அவர்களை வழிந்து அழைப்பதேன்? மக்களின் நியாயமான மனப்போக்கையும் அதற்கான போராட்டங்களையும் மதிக்காமல் அரசால் குழப்பப்பட்டுள்ள தேவேந்திரர் குளத்தில் மீன் பிடிக்கப்பார்க்கும் உங்களைப் போன்ற புரட்சிக்காரர்கள் மற்றும் நீங்கள் அரிசி(உயிர் தியாகம்) கொண்டு வாருங்கள் நான் உமி(தலித் சொல்லாடல்) கொண்டு வருகின்றேன், ஊதி ஊதி தின்னலாம் என்பது போன்ற திருமாவளவர்களும் எங்களுக்காக இந்த அளவிற்கு நேர்மையாக இயங்கும் போது தேவேந்திரர்களின் முதுகை குறிபார்க்கும் குண்டுகளின் எண்ணிக்கை குறையப்போவது இல்லை.
Kartheeswaran
ஆதிக்க சாதி திமிர் பிடித்தவர்கள் செப்டெம்பர் 11 அன்று ஒரு பள்ளி மாணவனை கொன்றார்களே, அது தான் கலவரத்துக்கு முழு காரணம் என்பதை எப்படி புரிய வைப்பது? ஈகியர் இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள் கொண்டாட்டம் நடைபெறக் கூடாதென்றே ஆரம்பிக்கப்பட்ட கலவரம், அதற்கு அரசும் காவல் துறையும் உடந்தை என்பதற்கு சாட்சியே துப்பாக்கிச் சூடும் சட்ட சபையில் முதல்வர் ஆற்றிய உரையும். அந்த உரையை கேட்டவர்கள் உண்மையான மனசாட்ஷி உள்ளவர்களாக இருந்தால் இந்த அரசு எந்த அளவுக்கு சாதிய வன்முறையை தூண்டி விடுகிறது என்பது புரியும். மேலும் தேவேந்திரர்களை தலித் என்று அழைக்கும் போக்கை கைவிட வேண்டும்.. இல்லையேல்...???

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.