அதிமுக ஆட்சியின் ‘ஓராண்டு சாதனை’யாக நடத்தப்பட்ட ‘பரமக்குடி படுகொலை’ ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதற்குள்ளாகவே மற்றுமொரு அநீதி! அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளை தகர்த்துள்ளனர் ஆதிக்கசாதி விஷமிகள்.

2011,செப்டம்பர் 11ல் பட்டப்பகல் படுகொலை நடத்திய காவல்துறை குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்பட வில்லை. குறைந்தபட்சம் அவர்கள் மீது குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை. 09-10-2011ல் 10000க்கும் மேற்பட்ட பெண்கள் போர்க்குணத்துடன் பரமக்குடியில் திரண்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததாலும் தியாகி இமானுவேல் சேகரன் பேரவை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், முற்போக்கு வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகளின் பெருமுயற்சியால் மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த விசாரணையும் வேகமாக நடப்பதாக தெரியவில்லை.

பரமக்குடியில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், தங்களை காத்துக்கொள்ளவும் மக்களைக் காக்கவும் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என்று பேசிய முதலமைச்சர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கண்டு கொள்ள வில்லை. இத்தகைய முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட விசாரணைக்கமிஷனால் நீதி கிடைக்காது என்பதாலேயே பரமக்குடி தேவேந்திர மக்கள் சம்பத் கமிஷனை புறக்கணித்தார்கள்.

2012 செப்டம்பர் 11ல் ஒன்று திரளும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கைகளை மீண்டும் எழுப்புவார்கள். எனவே அவர்களை அணிதிரள விடக்கூடாது, கோரிக்கைகள் எழும்பவிடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளை உடைத்திருக்கிறார்கள் ஆதிக்கவெறிபிடித்த விஷமிகள்.

1957 முதுகளத்தூர் கலவரம், 1967 வெண்மணிப்படுகொலை, 1979 உஞ்சனைப் படுகொலை, 1996 கொடியங்குளம், 1997 மேலவளவு, 1999 தாமிரபரணி, 2011 பரமக்குடி படுகொலை என ஆதிக்கசாதி மிராசுதார்களும் அரசாங்க எந்திரமும் போட்டிபோட்டுக்கொண்டு வன்முறைகளையும் படுகொலைகளையும் நடத்திவருகின்றன. இவை எவற்றிலுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அரசாங்கம், விசாரணைக்கமிஷன்கள், நீதிமன்றம் அனைத்துமே குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே நின்றுள்ளன. உத்தபுரம், கண்டதேவி என தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களில் நுழைய தடை. கிரானைட் குவாரிகள், கல்லூரிகள் என லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமர் நிலங்கள் அபகரிப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செயல்பட முடியாமல் அடக்குமுறை, நரபலி, இரட்டை கிளாஸ் முறை, சுடுகாட்டுக்கு பாதை மறிப்பு, சாதிமறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்ணோ, ஆணோ படுகொலை செய்யப்படுவது, பட்டியலின மாணவர்களின் உதவித்தொகைகள் கொள்ளையடிக்கப்படுவது என ஒடுக்கப்பட்ட மக்களின் உடைமைகளும் உரிமைகளும் கொடூரமாகப் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 78% வழக்குகள் விசாரிக்கப்படவில்லை, தண்டனை வழங்கப்படவில்லை. காரணம் அரசாங்கம் முதல் காவல்துறை, அதிகாரவர்க்கம், நீதித்துறை வரை அனைத்தும் ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான்.

விழிப்புணர்வு பெற்ற தேவேந்திரர்கள், ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள் எங்கெல்லாம் எப்போதெல்லாம் எழுகிறார்களோ( கம்பம், போடி, மீனாட்சிபுரம், கொடியங்குளம்) அங்கெல்லாம் அப்பொழுதெல்லாம் அரசின் துணையோடு ஒடுக்கப்படுகிறார்கள். அரசே பயங்கரவாத வன்முறையில் இறங்கிவிடுகிறது. சமூக சீர்திருத்தம், சமூக நீதி அரசியல் பேசும் அதிமுக, திமுக ஆட்சிகளில்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏராளமான அடக்குமுறைகள். சிறப்புக்கூறு திட்டம், சீர்திருத்தம் பேசும் திராவிட ஆட்சிகளில்தான் தாழ்த்தப்பட்டவர்கள் நிலங்களிலிருந்தும் வாழுமிடங்களிலிருந்தும் தூக்கியெறியப்படுகிறார்கள். பொதுச்சொத்துகளை அனுபவிப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். உரிமைகளும், உடைமைகளும் அபகரிக்கப்படுகின்றன. நிலச்சுவான்தார்கள், முதலாளிகள் அதிகாரம் செலுத்தும் திமுகவும் அதிமுகவும் ஆளும்போதெல்லாம் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் ஒடுக்கப்படுவது தொடர்கதையாக நீளுகின்றன.

உழைக்கும் மக்களான பட்டியலின, பழங்குடி மக்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் அழைத்துக் கொண்டாலும் அம்மக்கள் மீதான வன்முறையும் படுகொலைகளும் ஒரு அகில இந்திய மொழியாகவே உள்ளன. வளர்ச்சி, முன்னேற்றம், வல்லரசு என்ற பேரால் நாட்டின் வளங்களை அபகரிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கமும் கொள்ளையும் அதிகரிக்க அதிகரிக்க சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறையும் அதிகரித்து வருகிறது. பீகார், உபி, மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ஆந்திரம், கர்நாடகா, ஹரியானா என்று அரங்கேறி வருகின்றன. பீகார் முதலிடத்தில் உள்ளது. 1995 முதல் 2000 வரை ஏறத்தாழ 30 கிராமங்களில் 300க்கு மேற்பட்ட ஒடுக்கப்பட்ட வறியமக்கள் முஸ்லீம் சிறுபான்மை மக்கள் நிலப்பிரபு தனியார்படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். பதானிதோலா, பாதே, லக்ஷ்மண்பூர் என நீளுகிறது. 1996 ஜூலை 11ல் பதானிதோலா எனும் கிராமத்தில் பட்டப்பகலில் நுழைந்த ரன்வீர் சேனா தனியார் நிலப்பிரபு படை குழந்தைகள்,பெண்கள் என 23 பேரை கொன்று குவித்தது.

இங்குள்ள அதிமுக, திமுக ஆட்சிகள் போலவே அங்குள்ள லாலு, நிதிஷ்குமார் ஆட்சிகளும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவில்லை. நிலப்பிரபுக்களுக்கு பாதுகாவலாக நிற்கின்றன. இககமாலெ மற்றும் ஜனநாயகசக்திகளின் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக அர்ரா மாவட்ட நீதிமன்றம் குற்றவாளிகள் மூன்றுபேருக்கு மரண தண்டனையும் 20 பேர்களுக்கு ஆயுள்தண்டனையும் வழங்கியது. ஆனால் 2012 ஏப்ரல் 16ல் மறுவிசாரணைசெய்து தீர்ப்பு வழங்கிய பீகார் உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்துவிட்டது! ‘உயிரோடு இருப்பவர்கள் சொல்லும் சாட்சி உண்மையான சாட்சியாக இருக்கமுடியாது’ எனக் கூறி குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது! பாதிக்கப்பட்டவர்களின் கடைசிப்புகலிடம் என்று கூறப்படும் நீதிமன்றமே அநீதி இழைத்திருக்கிறது.

பரமக்குடி முதல் பதானிதோலா வரை இந்தியா முழுவதும் நீதிமறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீதிகோரி போராடுவது ஒடுக்கப்பட்ட, இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் கடமை. சமூகப் பொருளாதார ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் கவுரவும், சமத்துவமும் ஜனநாயகமும் கிடைக்கப்போராட வேண்டும்.

ஆதிக்க சக்திகள், அரசாங்க வன்முறையை துணிச்சலுடன் எதிர்த்துப்போராடி வரும் பரமக்குடி ஒடுக்கப்பட்ட மக்கள், ரன்வீர் சேனா நிலப்பிரபு படையை, அரசாங்க வன்முறையை துணிச்சலுடன எதிர்த்துப்போராடி வரும் பதானிதோலா மக்களுடன் கைகோர்ப்போம்! அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

ஆகஸ்ட் 18 மதுரையில் நடக்கும் நீதிகோரும் கருத்தரங்கில் பெருந்திரளாக கலந்துகொள்வதுடன் பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற தொடர்ந்து போராடுவோம்!

· வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை தனி விரைவு நீதி மன்றம் அமைத்து விரைந்து நீதி வழங்கு!

· பஞ்சமர் நிலமீட்பு ஆணையத்துக்கு உயிரூட்டி தமிழ்நாடு முழுவதும் அபகரிக்கப்பட்டுள்ள பஞ்சமர் நிலங்களை மீண்டும் தலித்துகளுக்கே பிரித்துக்கொடு!

· கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், பண்ணையார்கள் வைத்துள்ள நிலங்களை கையகப்படுத்தி நிலமற்ற அனைவருக்கும் பிரித்துக் கொடு. ஒடுக்கப்பட்டமக்களுக்கு முன்னுரிமை வழங்கு!

· பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த மத்திய புலனாய்வு(சிபிஅய்) விசாரணை விரைந்து நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் அதிகாரிகளை கைது செய், தண்டனை வழங்கு!

· அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளை சேதப்படுத்திய விஷமிகளை கைது செய்து தண்டனை வழங்கு. தமிழ்நாடு முழுவதுமுள்ள அம்பேத்கர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்களின் சிலைகள், நினைவிடங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கு!

· தாமிரபரணி, கொடியங்குளம் உள்ளிட்ட அனைத்து சம்பவங்களிலும் உயர்மட்ட விசாரணை அமைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!

· பட்டியலின, பழங்குடி உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட பாதுகாப்பு வழங்கு!

· பதானிதோலா படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும்!

போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள், இடது, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒன்றுபட்டு போராடுவோம்! நீதிகோரும் கருத்தரங்கம் (பால்மீனாஸ் மண்டபம், (11.தானப்ப முதலி தெரு) மதுரை

18-08-2012 பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை

தலைமை: தோழர். அ.சிம்சன், மாநில அமைப்பாளர், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, பதானிதோலாவுக்கு நீதி கோரும் கமிட்டி உறுப்பினர்,

வரவேற்புரை: தோழர் சி.மதிவாணன், மாவட்டச்செயலாளர், இகக(மாலெ),

உரையாற்றுவோர்: தோழர் பூ.சந்திரபோஸ், பொதுச்செயலாளர், தியாகி இமானுவேல் சேகரன் பேரவை,

தோழர் கவிதா கிருஷ்ணன், இகக மாலெ மத்தியக்கமிட்டி உறுப்பினர்,

தோழர் சுப்ரமணியன், மாநிலச் செயலாளர், ஏஅய்சிசிடியு (டாக்டர் அம்பேத்கர் பணியாளர் &பொறியாளர் சங்க மாநிலப்பொதுச்செயலாளர்),

தோழர் இளம்பரிதி, எழுத்தாளர்,

தோழர் பாலசுந்தரம், மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),

நன்றியுரை: தோழர் வேல்முருகன், வழக்கறிஞர்

நிகழ்ச்சி துவக்கத்தில் பரமக்குடி,பதானிதோலா பற்றிய படங்கள் திரையிடப்படும். பரமக்குடி மற்றும் பிற பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்ட பிரதிநிதிகள் பேசுவார்கள்.

- பரமக்குடி-பத்தானிதோலாவுக்கு நீதி கோரும் இயக்கம்

(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி)

Pin It