(கொளத்தூர் மணி உரை சென்ற இதழ் தொடர்ச்சி)
 
பெரியார் இந்தி எதிர்ப்புக்காக தேசிய கொடியை எரிக்கப் போவதாக அறிவித்தார். இது திருப்பூர் குமரன் காத்த கொடியாயிற்றே என்றான். ‘அட மடையா, குமரன் காத்த கொடி இராட்டைப் போட்டது; இது சக்கரம் போட்டது’ என்றார் பெரியார். தந்தி கம்பம் அறுத்து இரயிலை எரித்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ்காரன், கொடியை எரிக்கலாமா என்று கேட்கிறான். காங்கிரஸ்காரன் தனது கோரிக்கைக்கு இதையெல்லாம் செய்யும்போது, நான் மட்டும் என் கோரிக்கைக்கு கொடி எரிக்கக் கூடாதா என்றார் பெரியார்.

1957 இல் சட்ட எரிப்பு போராட்டத்தில் இறந்தவர்கள் 18 பேர். ஒரு இராணுவ வீரர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு 9 மாதம் தண்டனை பெற்றார். இரண்டு மாத விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து, இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். பெரியார் எப்பொழுது போராட்டம் அறிவித்தாலும் விடுமுறை எடுத்துக் கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்வார். ‘பிராமணாள்’ பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தில் இவருக்கு 3 மாத சிறை தண்டனை. இவருக்கு விடுமுறையே இரண்டு மாதம் தான். அப்போது பரமசிவம் குமாரமங்கலம் என்ற தமிழர் உயர்அதிகாரியாக, கமாண்டராக இருந்தாராம். அவரிடம் நேரில் விளக்கம் தர அழைத்துப் போனார்கள். உயர் அதிகாரியிடம், ‘பெரியார் அறிவித்தார், நான் கலந்து கொண்டேன்’ என்றார், அந்த ராணுவ வீரர். அவரும் சரி போய் விட்டு வா என்று விட்டு விட்டாராம்.
 
மீண்டும் அவரிடமே 9 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு சென்றாராம். அப்போது உயரதிகாரி, “உண்மையிலேயே பார்ப்பனரல்லாதார் என நிருபித்திருக்கிறாய்” என்று சொல்லி, சம்பளத்தோடு விடுமுறை என்று சொல்லி, மீண்டும் வேலையில் சேர்த்துக் கொண்டாராம். கட்டுப்பாட்டுக்கு பெயர் போன இராணுவத்தில் இருந்தவரே பெரியார் போராட்டத்தில் அன்றைக்கு கலந்து கொண்டார். இப்போது ஏன் கூட்டத்திற்கு வரவில்லையென்றால்கூட 'இப்போது தான் அரசு பணியில் சேர்ந்திருக்கிறேன். யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது' என்கிறார்கள். அப்போது இராணுவ வீரன் கூட போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்ற அந்த உள்ளக் குமுறல் இப்போது எங்கே போனது? இப்போது ஏன் அப்படிப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டங்கள் வீரியமாக நடக்கவில்லை? ஏன் அப்படிப்பட்ட போராட்டங்கள் எடுப்பதற்கு தயங்குகிறார்கள்? ஏன் என்றால் எல்லோருடைய நோக்கமும் வேறாகப் போய்விட்டது.
 
சாதி ஒழிப்பைப் பேசி அரசியலுக்கு வரலாமா, தேர்தலில் போட்டியிடலாமா என்பது நோக்கமாக இருக்கிறதே தவிர சாதியை ஒழிக்க வேண்டும், இதற்கான முயற்சி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய்விட்டது. அப்பேர்ப்பட்ட நாட்களில்தான் நாம் பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பை புதுப்பித்து 2001 இல் தொடங்கியபோது ஒருமுழக்கத்தை வைத்தோம். “பெரியார் காலத்திய தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்றோம். ஏன் என்றால் அப்போது இருந்த உணர்ச்சிகள், எழுச்சிகள் எல்லாம் இப்போது இந்நாட்டில் ஏற்பட வேண்டும். தங்களைப் பற்றி கவலைப்படாத சமுதாயம் பற்றிய சிந்தனையூட்டி இருக்கிற இளைஞர்களை, உணர்வு கொண்டவர்களை நாம் திரட்டி மக்களுக்கான கோரிக்கைகளை முன் வைத்து வீரியமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கருதினோம். அதில் நாங்கள் முன்னேறியிருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரிகிறது. ஆனால், நாம் தொடர்ச்சியாக செய்ய வேண்டியது மிக அதிகமாக இருக்கிறது. பெரியார் அறிவித்தது போன்ற போராட்டங்களை எடுக்கிற ஆற்றல் இல்லை என்றாலும், சிலவற்றை நாம் நடத்தியேயாக வேண்டும். அதிலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இந்துமதத்தை ஒழிக்காத வரை சாதி இருக்கத்தான் செய்யும்.
 
ஒரு பக்கம் இந்து மதத்தை ஒழிக்க பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்துமத சாஸ்திரங்களை, புராணங்களை அதில் இருக்கும் கேவலங்களை விளக்குவதும் அம்பலப்படுத்துவதும், அதைப் பின்பற்றாதீர்கள் என மக்களிடம் பரப்புரை செய்து வருகிறோம். இன்னொரு பக்கம் மெல்ல மெல்ல சாதியத்தை நேரடியாக ஒழிப்பதற்கு முன்னால், சாதியத்தின் பின் விளைவாக இருக்கிற தீண்டாமையை அல்லது இக்கொடுமைக்கு எதிரான போராட்டங்களை எடுப்போம்.
 
வீதியில் நடக்காதே என்கிறான். எல்லா சாதிக்கும் ஒரே குவளையில் தேநீர் கொடுக்க மாட்டேன் என்கிறான். இப்படிப்பட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நின்றால், தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்படுகிறார்கள். நாம் அந்த நேரத்தில் அந்த தளத்தில்நின்று அவர்களுக்காக போராடி உரிய வழக்காவது கடைசியாக பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யுங்கள் என்று போராடி செய்ய வேண்டிய சூழல்.
 
நாம் இரண்டு ஆண்டுக்கு முன்னால் இரட்டைக் குவளை உடைப்பு என்ற போராட்டத்தை முன்னெடுத்தோம். இதே நவம்பர் 26 ஆம் தேதியை தேர்ந்தெடுத்து, அந்த தேதியில் உடைக்கப் போகிறோம் என்று அறிவித்தோம். பட்டியலை அனைவருக்கும் அனுப்பினோம். அப்போது காவல்துறையினர் அந்தந்தக் கடைகளில் போய் “பொறுப்பாக” சொன்னார்கள், "பெரியார் தி.க. போராட்டம் நடத்தும் அந்த ஒருநாள் மட்டும் இரட்டை தம்ளரை வைக்காதீர்கள்" என்று. நாம் உடைத்ததற்குப் பிறகு கடைக்காரர்கள் சொன்ன தகவல் இது. சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் யோக்கியதை இப்படி உள்ளது. அரசும் அப்படித்தான் உள்ளது. அப்போது ஒரு அய்.ஜி. சொன்னார்  "தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இப்படி ஒரு போராட்டத்தை நடத்துகிறார்கள். எங்கேயும் இரட்டை தம்ளர் முறையெல்லாம் இல்லை" என்றார், நாம் பட்டியலை தந்த பின்பும். ஆனால், 36 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 2 லட்சம் ரூபாய் அளித்து, ‘சமபந்தி போஜனம்’ போல சமத்துவ தேனீர் விருந்து நடத்தினார்கள். நம்மை ஆதாயத்திற்காக நடத்துபவர்கள் என சொல்லியவர்கள் 72 லட்சம் ரூபாய் செலவிட்டு, தேனீர் விருந்து நடத்தியது, யார் ஆதாயத்திற்காக என்பது தெரியவில்லை.
 
இரட்டைக் குவளை இல்லை என்று சொல்லிவிட்டு, எதற்காக சமத்துவ தேனீர் விருந்து? இனி நாம் போராட்டத்தை அந்த காவல்துறை அலுவலகத்தின் முன்னாள் தான் நடத்த வேண்டும். ஏன் என்றால் அரசு, சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், அதற்கு குதர்க்கம் பேசிக் கொண்டு திசை திருப்புகிறார்கள். இப்போது நாம் கடமையை செய் என்பதற்காக போராடவேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.
 
பெரியாரின் மூலக் கொள்கையான சாதி ஒழிப்பிற்கு நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி, இரட்டைக் குவளை உள்ள கடைகளை நாம் கணக்கெடுப்போம். இந்த ஆண்டு முழுவதும் கணக்கெடுத்து விட்டு, 2010 ம் ஆண்டு சனவரி மாதம் பொங்கலுக்குப் பின்னால் தமிழ்நாடு தழுவிய அளவில் பரப்புரை பயணங்கள் மேற்கொண்டு இந்த போராட்டங்களின் தேவைகள் என்ன? ஏன் நடத்துகிறோம்? இதில் உள்ள நியாயங்கள் என்ன? என்பதை மக்களிடம் விளக்குவோம். உயர்சாதியில் பிறந்திருக்கிறோம் என்ற கருத்தியல் கொண்ட இளைஞர்களே! நீங்கள் நகரங்களில் வாழ்கின்றீர்கள்! கிராமங்களில் நிலவும், இந்த அவலங்களை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? நீங்கள் எல்லாம் எங்கள் பணிகளுக்கு துணையாக வரவேண்டும் என்று அழைக்கிறோம்.
 
கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்திற்கான தேவைகளை உணர்ந்து, நீங்கள் எங்களுக்கு உதவுங்கள்! பரப்புரை பயணங்களை மூன்று மாதம் மேற்கொள்ள இருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 இல் இந்த போராட்டங்கள் நடைபெறும்.
 
இந்த போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பெரியாரியல் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, சமத்துவ சிந்தனையுள்ள அனைத்து தரப்பினரும் இதற்கு ஆதரவு தரவேண்டியது சமுதாயக் கடமையாகும். இதன் வழியாக அரசைக் கேட்டுக் கொள்வது எல்லாம், அரசு அதிகாரிகளே பணத்திற்காக எதை எதையோ செய்து கொண்டிருந்தாலும் இந்த ஒரு கடமையிலாவது உளப்பூர்வமாக உண்மையாக ஈடுபடுங்கள். உங்களையும் சேர்த்து, தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வாய்ப்புண்டு. அல்லது ‘சூத்திரர்’களாக நமது மக்களை அறிவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் ஏராளமானவர்கள் அரசுப் பணியாளர்களாக, அதிகாரிகளாக, காவல்துறை அதிகாரிகளாக இருக்கிறார்கள். இந்த சாதி ஒழிப்புக்காகவாவது காசு இல்லாமல் வேலை செய்யுங்கள். இந்த ஒரு கடமையாவது செய்யுங்கள் என்று அந்த தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தின் முன்னாலே போராட்டம் நடத்துவோம்.
 
ஒன்று இரட்டைக் குவளைகளை உடைக்கும் போராட்டம். நேரடியாக இனி உடைப்பதுதான். அவர்களிடம் சொல்லிக் கேட்பது எல்லாம் ஒரு பயனும் தராது. மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது. இனி பறிக்க வேண்டியதுதான். இனி நேரடி நடவடிக்கை உடைப்பு நடவடிக்கை தான். அடுத்த நடவடிக்கை இதற்காக அமைக்கப்பட்ட காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது, மறியல் செய்வது. அவர்களை, ஒன்று பணியாற்று அல்லது உள்ளே போகாமலும், வெளியே வராமலும் தடுக்க வேண்டிய போராட்டங்களை நடத்த வேண்டியதுதான்.
 
அரசுகள் இப்போதெல்லாம் சின்னச் சின்ன போராட்டங்களை கவனிப்பதேயில்லை. வெளிநாடுகளில் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து சென்றாலே கேட்பார்களாம். இதையெல்லாம் கழற்றி விடுங்கள்,. கோரிக்கைகள் என்னவென்று சொல்லுங்கள் செய்கிறாம் என்று. ஆனால், நம் நாட்டிலோ நான்கு பேருந்துகளை உடைத்தால் தான் திரும்பிப் பார்க்கின்றார்கள். அதற்காக நான் பேருந்துகளை உடைக்கச் சொல்லவில்லை. நாம் உடைக்க வேண்டியது சட்ட விரோதமான இரட்டைக் குவளைகளை. அதற்கு அனைவரின் ஆதரவையும் தாருங்கள்!

- கொளத்தூர் மணி

Pin It