dvk mayiladuthurai meeting 721“தமிழ்நாட்டு கிராமங்களில் ஜாதிய பாகு பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அந்த அறிக்கையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கினர்.

தலித் மக்கள் வாழும் பகுதிகளில் ரேஷன் கடைகள் நடத்தத் தடை, முடிவெட்ட மறுப்பு, இரட்டை தம்ளர் முறை, இருசக்கர வாகனங்களில் செல்லத் தடை போன்ற பல்வேறு வடிவங்களில் தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக உயர்நீதிமன்றங்கள் ஜாதிக்கு எதிராகதீர்ப்புகளை வழங்கி வருவது பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். ஜாதி அடிப்படையில் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது. கோயில் திருவிழா விளம்பரங்களில் ஜாதிப் பெயர் போடக்கூடாது. ஜாதியை நிலை நிறுத்தும் போக்கு, செயல்பாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நாடகத் தொடர்கள், நிகழ்ச்சிகள், செய்திகளில் ஜாதி அடையாளம் இடம்பெறுவது இல்லை. ஜாதி கலவர செய்திகளை ஒளிபரப்பும் போது கூட இரு பிரிவினருக்குமிடையே என்று கூறி ஜாதிப் பெயரை குறிப்பிடுவதைத் தவிர்க்கின்றனர்.

ஆனால் வரன் தேடும் விளம்பரங்களில் வெளிப் படையாகவே ஜாதி அடையாளம் பேசப்படுகிறது, இது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய விளம்பரங்களை செய்தி ஒழுங்கு கருதி வெளியிடாமல் தவிர்க்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக்கொள்கிறது.

வன்கொடுமைகள் ஜாதியின் பெயரால் நடக்கும் போது காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது, ஆனாலும் தீண்டாமை அடிப்படையில் சிவில் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி கருதி இதற்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ துணை போகிறார்கள். தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் சமூக நல்லிணக்கம் பேணும் கிராமத்திற்கு ஒரு கோடி பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதுபோலவே தீண்டாமையைப் பின்பற்றும் கிராமங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறது.

இந்த தீண்டாமை அவலங்களை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முழு வீச்சோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களும் காலத்திற்கு ஒவ்வாத பாகுபாடுகளை நிலைநிறுத்தும் இந்த ஜாதி அடையாளத்தை கைவிட்டு சமூக மனிதர்களாக வாழ முன்வர வேண்டும் என்றும் மாநாடு கேட்டுக்கொள்கிறது.” 

இந்துசமய அறநிலையத்துறைக்கு கண்டனம்‌ 

“இந்துக் கோயில்களை நிர்வகிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அண்மைக் காலமாக மக்களிடம் இந்து மதப் பரப்புரை செய்யும் துறையாகவே மாறிவருகிறது. பழனியில் உலக முருகன் மாநாட்டைநடத்தியது. இப்போது மகா சிவராத்திரியை அறநிலையத்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு முதன்முறையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடியதாக இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருமைப் படுகிறார். சிவராத்திரி போல் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாக்களையும் அடுத்தடுத்து கொண்டாட அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம். மத உணர்வுகளை மக்களிடம் வளர்த்து விடும் அறநிலையத்துறையின் இந்தச் செயல்பாடுகள் மதவாத சக்திகள் வேர்ப் பிடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சுட்டிக் காட்டுகிறோம். அறநிலையத் துறையின் எல்லை மீறும் செயல்களுக்கு, இந்த மாநாடு கண்டனத்தைப் பதிவு செய்கிறது. 

அர்ச்சகர் நியமனத்தை விரைவுப்படுத்துக 

அதேபோல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தை 24 பேருடன் அறநிலையத் துறை நிறுத்திக் கொண்டு விட்டது. அர்ச்சகர் பதவிக்காகப் பயிற்சி பெற்றவர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். நீதி மன்றத்தில் உள்ள தடைகளை அகற்ற எந்த முயற்சியும் அறநிலைத் துறை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது எனவே நீதிமன்றத் தடைகளை நீக்கி அனைத்து சாதிகளும் அர்ச்சகராகும் திட்டத்தை அடுத்தடுத்த கோயில்களில் விரிவுபடுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடிவடிக்கை

“ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவரும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றுக்கு எதிராகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன.

a) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, தமிழ்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக்களை, குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு வேண்டி கேட்டுக் கொள்கிறது.

b) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட் டாலும் காணொலி வழியாக பொதுவெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் (report) இடுமாறும், அதேவேளை காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு வேண்டி கேட்டுக் கொள்கிறது.

c) பெரியார் மீதான ஆதாரமற்ற அவதூறு களை பரப்பியதற்காக புதிய தண்டனை சட்ட விதிகள் 192, 196, 352, 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சீமான், அண்ணாமலை, எச்.ராஜா போன்ற பேர்வழிகள் மீது புகார் கொடுத்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

புகார் அளித்த தோழர்கள் சீமானையும் உரிய காவல்துறை அதிகாரிகளையும் எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டு தனி வழக்குகளாக (Private complaint) உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

(மயிலாடுதுறையில் மார்ச் 22.03.2025 மாலையில் நடத்தப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்)