தென் இந்திய சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு

சகோதரிகளே! சகோதரர்களே!

இந்த பெரியதும் முக்கியமானதுமான மகாநாட்டிற்கு என்னை தலைவனாக தெரிந்தெடுத்ததன் மூலம் தாங்கள் எனக்களித்த கௌரவத்திற்காக எனது மனமார்ந்த நன்றி அறிதலை தங்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

periyar with kidsஇம்மகாநாடு சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு என்று சொல்லப்படுகிறது. எனவே, இத்தகைய ஒரு மகாநாட்டுக்கு சீர்திருத்தத்தில் மிகுதியும் நம்பிக்கையுள்ள ஒருவரைத் தலைவராக தெரிந்தெடுத்திருப்பீர்களானால் அது மிகவும் பொருத்தமுடையதாக இருந்திருக்கும் என்று நான் சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். ஏனெனில் வரவர எனக்கு சீர்திருத்தம் என்பதில் உள்ள நம்பிக்கை மறைந்து கொண்டே போகின்றது. அன்றியும் நமது நாட்டை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பவர்களுக்கும், நமது நாட்டு பெரும்பான்மையான மக்களுக்கு சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாக்கச் செய்ய வேண்டும் என்பவர்களுக்கும், எதிரில் இருக்கும் வேலை சீர்திருத்த வேலை அல்ல என்பதே எனது அபிப்பிராயம். மற்றென்னை யெனில் உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையே ஆகும்.

அளவுக்கு மீறின பொறுமை கொண்ட யோசனையின் மீதே நான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறேன். உதாரணமாக ஒரு பெரிய கிணறு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; அந்தக் கிணற்றிற்கு மிகப் பழமையானதும் விசேஷமானதுமான ஒரு புராணம் இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; அதாவது அந்தக் கிணற்று தண்ணீரில் ஒரு துளி தண்ணீரை சாப்பிடுவதனாலோ, அல்லது மேலே தெளித்துக் கொள்வதினாலோ நம்முடைய எல்லாப் பாவமும் - மகா பாதகமான காரியம் என்று சொல்லப்பட்ட செய்கைகளைச் செய்தாலும் மன்னிக்கப்படுவதுடன் மோட்சலோகம் என்பது கிடைக்கும் என்று எழுதி இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்போது அந்தக் கிணற்றுத் தண்ணீரில் ஒரு சிறிது சாப்பிட்டால் விஷபேதி காணக்கூடிய தாகவும், அதில் ஸ்நானம் செய்தால் சரீரமெல்லாம் சொரி சிரங்கு வருவதாகவும் இருந்தால் அதற்காக நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? அந்தத் தண்ணிரில் விஷப் பூச்சிகள் உண்டாகி தண்ணீரைக் கெடுத்து விட்டது என்று கருதி அந்த விஷப் பூச்சிகள் சாகத்தக்க மருந்தை அந்த கிணற்றுக்குள் போடுவோம்.

அப்படிப் போட்ட பிறகும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே முன்போலவே இருக்குமானால் மேல் கொண்டு என்ன செய்வோம்; மருந்துக்குக் கட்டுப்படாத அளவு கெடுதி அந்தத் தண்ணீரில் உண்டாய் விட்டதாகக் கருதி அந்தக் கிணற்றுத் தண்ணீர் முழுவதையும் இரைத்து வெளியில் ஊற்றி அந்தக் கிணற்றையும் நன்றாய்க் கழுவி விடுவோம். அந்தப்படி செய்த பிறகும் மறுபடியும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே இருக்குமானால் அதனுடைய காரணம் என்ன? அந்த கிணற்றுக்குத் தண்ணீர் வரும் ஊற்றே விஷத்தன்மை பொருந்தியது. அதாவது விஷ நீர் ஊற்றுக் கிணறு என்றுதானே ஏற்படும். அப்படிப்பட்ட விஷநீர் ஊற்றுக் கிணற்றை என்ன செய்வீர்கள்? பழைய புராணத்தையும் அதில் உள்ள அந்தக் கிணற்றுப் பெருமையையும் மதித்து, அதிலேயே குளித்து அந்த நீரையே சாப்பிட்டு விஷபேதியையும் சொரி சிரங்கையும் அடைந்து கொண்டிருப் பீர்களா? அல்லது அந்தக் கிணத்தை மண்ணைக் கொட்டி மூடி விடுவீர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

எனவே, மருந்து போட்டு தண்ணீரைச் சுத்தம் செய்வதும், தண்ணீர் பூராவையும் இரைத்து கிணற்றைக் கழுவுவதும் சீர்திருத்த வேலையாகும். அடுத்தபடியான மண்ணைப் போட்டு நிரவி மூடிவிடுவதே அழிவு வேலையாகும். இந்த முறையில் தான் நான் ஒரு அழிவு வேலைக்காரன் என்பதாகத் தெரிவித்துக் கொண்டேன்.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் சீர்திருத்தம் என்பதெல்லாம் செய்து பார்த்தாய் விட்டது. நான் பார்த்தாய் விட்டது என்று சொல்வது இப்போது நடைபெற்று வரும் சீர்திருத்தம் என்பதைக் குறித்தல்ல. ஏனெனில், இது உண்மையான சீர்திருத்தமல்ல. இப்போதைய சீர்திருத்தம் என்று சொல்லப்படுவதுகளெல்லாம் பாமர மக்களை ஏய்த்து அவர்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காக படித்த கூட்டத்தார்களோ பணக்காரர்களோ தங்களில் ஒருவருக்கொருவர் போட்டி போடுவதற்காகக் கண்டுபிடிக்கப் பட்ட அநேக சூட்சி ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும். இது மேல்நாட்டாரைக் கண்டு பழகிய செய்கையாகும். இம்முறைகள் எல்லாம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியவர்களுடைய நன்மையைக் கருதி கண்டுபிடிக்கப்பட்டதல்ல. சீர்திருத்தம் செய்பவர்களுடைய சுயநலத்தை உத்தேசித்தே பெரிதும் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனாலும், சீர்திருத்தம் பெற வேண்டிய மக்கள் இதை உண்மையாகவே நம்பி வந்திருக்கின்றார்கள். ஆனாலும், அதன் முடிவுகள் எல்லாம் மேலும் மேலும் மோசமான நிலைமைக்கே, அதாவது இனிமேல் சுலபத்தில் சீர்திருத்தம் செய்யமுடியாத நிலைமைக்குப் போய்க்கொண்டிருக்கின்றார்கள். இதன் முக்கிய காரணம் என்னவெனில், எந்தக் கூட்டத்தாரால் - எந்த மனப்பான்மை உடையவர்களால் மக்கள் கெட்டு சீர்திருத்தமடைய வேண்டிய நிலைமைக்கு வந்தார் களோ, யாருடைய எந்தக் கூட்டத்தாருடைய சுயநலத்திற்காக மக்கள் பெரிதும் நிலை குலைய வேண்டியதாயிற்றோ அந்தக் கூட்டத்தார்களே தான் மிகுதியும் சீர்திருத்தம் என்கின்ற துறையை உபயோகித்துப் பயன்பெற்று வந்திருக்கின்றார்கள். இனியும் அவர்களே தான் பெரும்பாலும் இத்துறையில் இருக்கின்றார்கள். அதனால்தான் நான் நமது மக்களின் நிலை சீர்திருத்த முடியாத நிலையை அடைந்து விட்டது என்று சொல்லுகின்றேன்.

சீர்திருத்தம்

சமுதாய சீர்திருத்தம் என்பது ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு மாதிரியாக இருக்கின்றது. உதாரணமாக மேல்நாடுகளில் எல்லாம் சமுதாய சீர்திருத்தம் என்பது எல்லா மக்களையுமே பொறுத்தது. அதாவது, சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய சமூகப்பழக்க வழக்கம் முதலியவைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவே இருப்பவைகளாகும். நமது நாட்டில் பெரும்பாலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியவைகள் என்று சொல்லப்படுபவைகள் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு வகையானதாகும்.

நமக்குள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சீர்திருத்தம் பொது மனித சமூகத்தில் மக்களின் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பிப்பதாகும். இந்த முறை நமது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மோசமான கற்பனையின் மீது கையாளப்படுவதே இல்லை. அடுத்தபடியானது வாழ்க்கையில் இருந்து வரும் பழக்க வழக்கம், மூட பக்தி, குருட்டு நம்பிக்கை ஆகியது போன்ற வகைகள்; இவைகள் எல்லாம் நமது நாட்டில் விசேஷமாய் மதம், கடவுள், மோட்சம் என்பதன் பெயர்களாலேயே அவைகளை ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருகின்றது. என்றாலும், இவைகளை சீர்திருத்தம் செய்யவேண்டும் என்கிற கவலை வெகுகாலத்திற்கு முன்னதாகவே ஏற்பட்டது என்று சொல்லலாம். அதாவது புத்தர், இராமானுஜர், திருவள்ளுவர் முதலிய பல பெரியோர் காலத்திலேயே ஏற்பட்டதாகச் சொல்லலாம். ஆனாலும், மேற்கண்ட துறைகளில் அதுமுதல் இதுவரை ஒரு சிறு காரியத்திலாவது வெற்றியேற்பட்டு அது நமக்குப் பயன்பட்டது என்று சொல்லுவதற்கு இல்லை. இப்போது ஏதாவது ஒரு சிறிதளவு மாறுதல் ஏற்பட்டு இருக்கின்றது என்று யாராவது சொல்லவருவார்களானால் அது வெளி நாடுகளில் நடைபெறும் சமூக சீர்திருத்தத்தின் சாரல் அல்லது ‘வெளிநாட்டார் தங்கள் சுயநலத்திற்காகச் செய்யப்பட்ட வேலைகளின் பலன்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

நம் நாட்டில் நம் நாட்டு மக்களால் சமூக சீர்திருத்தம் என்பது ஒரு சிறிதும் செய்வதற்கு சாத்தியமே இல்லை. ஏனெனில், அவற்றிற்குத் தடையாய் கடவுள் உணர்ச்சியையும், மத உணர்ச்சியையுமே நிறுத்தப்பட்டு இருப்பதால் முடியாததாய் இருக்கின்றது அன்றியும் இந்நிலை சிலருக்குப் பயன்படுவதாயுமிருக்கின்றது. இதுவரை செய்து வந்த காரியங்கள் எல்லாம் பயன் படாமல் போனதற்குக் காரணமே இதுதான் என்றே சொல்லுவேன்.

இதற்கு சமாதானம் சொல்ல வேண்டியவைகள் எல்லாம் சொல்லி யாய்விட்டது. செய்யவேண்டியதெல்லாம் செய்து ஆய்விட்டது. அதாவது புத்தர், கபிலர், திருவள்ளுவர் முதலியவர்கள் சொன்னவைகளுக்கு மேலாகவும், இராமானுஜர் செய்ததற்கு மேலாகவும் இனி ஒருவர் வந்து புதிய ஞானத்தை போதித்தோ, புதிய காரியத்தைச் செய்தோ விடமுடியும் என்பது இலேசான காரியம் அல்ல. அன்றியும் சமூக சீர்திருத்தத்திற்கு இப்போது விரோதிகளாயிருப்பவர்களுங்கூட தங்களுடைய தடை வேலையில் நம்பிக்கை வைத்திருப்பதன் காரணமும் இதுவேதான். ஆனாலும் அப்போதைய நிலைமையும், சௌகரியமும், அரசாங்கமும் வேறு; இப்போதைய நிலைமையும், சௌகரியமும் அரசாங்கமும் வேறு என்பதான ஒரு சிறிய திருப்தி சமூக சீர்திருத்தக்காரர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதா யிருந்தாலும், கடவுள் உணர்ச்சியும், மத உணர்ச்சியும், ஒரு சிறிதும் மாறு பாடடையாமல் இருப்பதால் இந்த நிலையில் நமது நாட்டுச் சமுதாயத்திற்குச் சீர்திருத்தம் என்பது முடியாத காரியம் என்றே முடிவு கட்ட வேண்டி யிருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டையுமே மனிதனின் மூடபக்தியும், குருட்டு நம்பிக்கையும் என்கின்ற அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக் கின்றது. ஏனெனில், குருட்டு நம்பிக்கையின் பயனாய் ஏற்பட கடவுளி னிடத்தில் தான் பெரிதும் மூட பக்தியால் ஏற்பட்ட மதத்தின் மூலம் கொள்கை களை வகுத்து வாழ்க்கை நடத்துகிறோம். இம் மூட பக்தியையும், குருட்டு நம்பிக்கையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவது சீர்திருத்த வேலையின் பாற்பட்டதல்ல; அது மனித சமூகத்தின் நன்மைக்காக அழிக்கப்பட வேண்டிய வேலையின் பாற்பட்டதாகும். ஏனெனில், அடியோடு அழித்துத் தரைமட்டமாக்கி புதுப்பிக்க வேண்டி இருக்கும் வேலை சீர்திருத்த வேலை யாகாது, வேண்டுமானால் புனருத்தாரண வேலை சுநஉடிளேவசரஉவiடிn என்று சொல்லலாம்.

இவ்வேலையில் ஈடுபடுபவர்களுக்கு மகத்தான மன உறுதியும் சந்தேகமற்ற தெளிவும் இருக்கவேண்டும். அஃதில்லாமல் ஆவேசத்தில் தலையிட்டுவிட்டால் தற்கொலையாகவே முடியும். ஏனெனில் பலமானதும் இடையறாததுமான எதிர்ப்புகளிற்கிடையே இவ்வேலை செய்ய வேண்டி இருக்கிறது. காரணம் என்னவென்றால் வெகு காலமாக மனித சமூக இருதயத் தில் கலந்து ஊறி விட்டதும், இந்நிலை வெகு பேரினுடைய சுயநலத்திற்கு அனுகூலமாகயிருப்பதும் ஆகிய இரண்டு காரணங்களால்தான்.

எந்த காரணங்களால் உண்மையான சீர்திருத்தம் வெற்றி பெறவில்லையோ, என்ன என்ன சாதனங்கள் அச்சீர்திருத்தத்திற்குத் தடையோ அவைகளை வேருடன் அழிக்கத் தயாராயிருக்க வேண்டும். அவைகளில் ஒரு சிறு தாரையாவது கிளை வேரையாவது மீத்தி வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்யலாம் என்று எந்தவிதமான சீர்திருத்தக்காரர்கள் நினைத்தாலும் அவர்கள் ஒருக்காலமும் வெற்றி பெற மாட்டார்கள் என்பது எனது உறுதி.

அன்றியும் சிலர் சொல்லுவது போல் சீர்திருத்தக்காரர்களுக்கு நிதானமும் சாந்தமும் அளவுக்கு மீறி வேண்டும் என்பதையும் நான் ஒப்புக் கொள்ளுவதில்லை. அன்றியும் இவ்விஷயத்தில் வெறுப்பும் பிடிவாதமும் அடியோடு கூடாது என்பதையும் நான் ஒப்புக் கொள்வதில்லை.

நான் இப்படிச் சொல்லுவதால் அநேக பெரியோர்களுடைய அபிப்பிராயத்திற்கு முரண்பட்டவனாக பலருக்குக் காணப்படலாம். ஆம், இவ்வித அபிப்பிராயங்களில் நான் நன்றாக முரண்பட்டவன்தான். மேற்கண்ட விதம் சொல்லப்பட்டவர்களின் பொறுமையையும், நிதானத்தையும் சாந்தத்தையும், துவேஷமற்ற தன்மையையும் நான் என்னறிவுக்கு எட்டிய வரை கவனித்துப் பார்த்தேன். அவைகள் மிகுதியும் பயத்தாலும், ஒருவிதப் பலக்குறைவினாலும் இவ்விஷயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை கள் என்றே கண்டேன்.

அன்னியர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்பு பலமாய் விடுமே என்கிற பயமும் பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர்கள் ஒருக்காலமும் உண்மையான சீர்திருத்தத்திற்கு உதவவே மாட்டார்கள். அன்றியும் அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் சீர்திருத்தம் ஒரு காலமும் பயனளிக்கவே முடியாது; அன்றியும் சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருத்தல் கூடாது. சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகள் எல்லாம் உடைத்தெறிவதைக் கைக்கொள்வதுதான் சீர்திருத்தத்திற்கு முதன்மையான பாதையாகும். கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது அதிலும் நம் நாட்டைப் பொருத்தவரை சிறிதும் பயனற்றது.

நிதானமும், சாந்தமும், பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு வெறுப்பில்லாமலும், துவேஷமில்லாமலும் நல்ல வார்த்தையும் கூட்டுறவிலும், நயமாகவும், கெஞ்சியும் நமது நாட்டில் எத்தனை காலமாக செய்து வந்திருக்கிறது? இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்கள் என்ன ஆயிற்று? இன்னும் எத்தனை நாளைக்குப் பரீட்சைப் பார்ப்பது என்கிற விஷயங்களை யோசித்தால் மேற்கண்ட வார்த்தைகள் சீர்திருத்தத்திற்கு விரோதிகளாயுள்ளவர்களிடம் மரியாதை பெறுவதற்காகவும், தங்களது சொந்த புகழுக்காகவும், பெருமைக்காகவும் பேசப்பட்ட வார்த்தைகள் அல்லது பலவீனத்தின் தோற்றம் என்று ஏற்படுமே ஒழிய வேறொன்றுமே இருக்காது. சிலர் இம் மாதிரியான நமது அபிப்பிராயத்திற்கு விரோதமாய் சில பெரி யோர்களான விவேகானந்தர், காந்தி முதலியோர்களுடைய வார்த்தைகளை எடுத்துக் காட்டுவார்கள். இம்மாதிரியான அப்பெரியோர்களுடைய வார்த் தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதை நான் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். காரணம், அவ்வார்த்தைகள் சொன்ன பெரியோர்களை சுவாமியாகவும், மகாத்மாவாகவும் மக்கள் கொண்டாடினார்கள்; கொண்டாடுகிறார்கள்; படம் வைத்து பூசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்வார்த்தைகளால் சீர்திருத்தம் வேண்டிய மக்கள் அடைந்த கதியென்ன? எந்த ஒரு அபிப்பிராயத்தையும் அதனால் ஏற்படும் பலனைக் கொண்டுதான் மதிக்க வேண்டுமே ஒழிய வார்த்தையினுடைய இனிப்பைக் கொண்டும், அழகைக் கொண்டுமே மதிப்பது அறிவுடைமை ஆகாது என்று சொல்லுவேன். சீர்திருத்தம் வேண்டியவர்கள் இதுவரை காட்டின பொறு மையும், கெஞ்சின கெஞ்சும் பேசின இனிமையான வார்த்தையும் போதாது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேழ்க்கின்றேன்; அல்லது மக்கள் படும் கஷ்டம் அவர்கள் அறிவு அடைந்த தன்மை அதனால் நாடு கெட்ட நிலைமை ஆகியவைகள் இப்பொறுமையினுடையவும், சாந்தத்தினு டையவும் கெஞ்சுவதனுடையவும் பரீக்ஷைகுப் போதாது என்றாவது யாராவது சொல்ல முடியுமா? எனவே, பொறுமையும், சாந்தமும், சகிப்புத் தன்மையும், இவ்விஷயத்தில் காரியத்தின் அனுகூலத்தை உத்தேசித்துக் காட்டப்பட வேண்டியதே அல்லாமல், வெறும் பொறுமைக்கும், சாந்தத்திற்கும் உருவாம் என்கின்ற பெயர் பெறுவதற்கல்ல.

அன்றியும் சிலர் சீர்திருத்தம் செய்வதன் மூலம் பழைய சின்னங்களையும், ஓவியங்களையும், கலைகளையும் அழித்து விடாதீர்கள் என்கின் றார்கள். இந்தக் கூட்டத்தார்கள் எந்தப் பழைய சின்னம் ஓவியம், கலை முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு சொல்லுகிறார்களென்று நான் கண்ணியமாய் நினைக்கின்றேனோ அந்தச் சின்னமும் ஓவியமும் கலைகளுமே தான் நம்மையும் நம் மக்களையும் நமது நாட்டையும் பாழாக் கியதுடன், ஒவ்வொரு அறிவாளி மனதிலும் சமுதாய சீர்திருத்தம், செய்து தீரவேண்டும், இல்லாவிடில் வேறு எந்த விதத்திலும் நமக்கு கதி மோஷம் இல்லை என்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டது.

உதாரணமாக இராமானுஜர் நாமத்தையும், பூணூலையும் பழைய சின்னம் என்பதாகக் கருதி அதை வைத்துக் கொண்டு ‘பறையன்’ என்பவர்களை யெல்லாம் பிடித்து நாமமும், பூணூலும் போட்டு மக்களைச் சமத்துவம் அடையச் செய்வது என்பதான சீர்திருத்தம் செய்தார் என்பதாகச் சொல்லப் படுகின்றது. இதனால் பழைய சின்னம் காப்பாற்றப்பட்டதே தவிர, மக்களுக்கு சமத்துவம் கிடைத்ததா? சமத்துவ உணர்ச்சி உண்டாயிற்றா?. நாமமும் பூணூலும் உடையவர்களுக்குள்ளாகவே உயர்வு தாழ்வும், அதுகள் இல்லாத வர்களை தாழ்மையாய்க் கருதுவதும் இன்று சூரியன் போல் துலங்குகிறது. மற்றும் பழைய சின்னங்கள் என்பதான கோயில்களை எடுத்துக் கொள்வோம். கோயில் என்றால் சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்ட கடவுள் என்பவர் இருக்குமிடம் என்றும், அவரை வணங்க வேண்டிய இடம் என்றும் சொல்லப்படுகின்றது. அதை மக்கள் உணர்ந்து உய்வதற்கே உண்டாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்லப்படும் கோயில்களின் நிலைமை என்ன? அதனால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்ன? தற்காலம் என்ன காரியங்களின் கொடுமைகள் சகிக்கமாட்டாமல் சீர்திருத்தம் வேண்டும் என்று மக்கள் கருத இடம் கொடுத்ததோ அந்தக் காரியங்களுக்கு எல்லாம் இந்த சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்டதாக கடவுள் என்பது குடி இருப்பதாகச் சொல்லும் கோயில்களே காரணமாயிருக்கின்றது என்பதை யாராவது மறுக்க முடியுமா? பழைய ஒவியங்கள் என்பதுகளை எடுத்துக் கொண்டால் அதுவும் உண்மையான சீர்திருத்தத்திற்கு எவ்வளவு தடையாய் இருக்கின்றது என்பது விளங்காமல் போகாது. அது போலவே பழைய கலைகள் என்பதுகளை எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு மலையாக இருக்கும்.

உதாரணமாக வேதம் என்றும், சாஸ்திரம் என்றும் புராணம், என்றும் சொல்லப்படுவனவாகிய மனித வர்க்கத்தின் வாழ்க்கை நலத்திற்கு இலக்காக உண்டாக்கப்பட்டது என்று சொல்லும்படியான ஆதாரங்களும், அவைகளுள் முக்கிய கலைகளாகக் கொண்டாடப்படும் பல புராணங்களும் இது வரை மக்களுக்கு என்ன நன்மையைக் கொடுத்து வந்திருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். அதிலும் தென் இந்திய வாசிகளும், அவர்களுள் சிறந்த பண்டிதர்கள் என்பவர்களும் பக்தி விசுவாசத்துடனும், கலா ஞானத் துடன் கொண்டாடும் புராணங்கள், இதிகாசங்களாகிய பாரதம், இராமாயணம், சிவபுராணம், விஷ்ணு புராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் என்பவைகள் போன்ற கலைகளால் இதுவரை மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன? அவைகளில் காணப்படாத மனித தத்துவத்திற்கும், ஒழுக்கத்திற்கும் விரோதமான காரியங்கள் வேறு எந்தக் கலைகளிலாவது, கலைகள் அல்லாத வெறுக்கப்பட்ட புஸ்தகங்களிலாவது, வெகு கீழ்த்தர மக்கள் கூட்டத்தின் நடவடிக்கையிலாவது காண்கின்றோமோ என்பதைச் சற்று கவனித்துப் பாருங்கள்.

அன்றியும் எவ்வித சீர்திருத்தத்தையும் தடைசெய்யும் படியான முட்டுக்கட்டைகள் அக்கலைகள் என்பதற்குள் மலிந்து கிடக்கின்றதா இல்லையா என்பதைச் சற்று பொது நோக்குடன் யோசித்துப் பாருங்கள்.

இன்றைய தினம் அறிவாளிகள் வெகு கவலையுடன் செய்ய ஆசைப் படும் சீர்திருத்தங்களுக்கு எதிரிகளாயிருப்பவர்கள் தங்களுடைய அதிக பலம் பொருந்திய ஆயுதங்களாக இந்தப் பழைய சின்னங்கள், ஒவியங்கள், கலைகள் என்பதையே உபயோகித்துக் கொண்டு அதாவது அவைகளி லிருந்தே ஆதாரங்கள் எடுத்துக்காட்டி சீர்திருத்தக்காரர்களை எதிர்த்து தடையுத்தம் செய்கின்றார்களா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

ஆனால், அச்சின்னங்களுக்கும் கலைகளுக்கும் வக்காலத்து பேசுபவர்களால் சீர்திருத்தக்காரர்களுக்கும் அனுகூலமான ஆதாரங்கள் அவைகளில் எங்கேயோ இருப்பதாக சொல்லப்படுகின்றது. அது வெறும் மயக்கம் என்பதும் நம்மை ஏமாற்றுவதற்கு உபயோகப்படுத்தக் கூடியது என்பதும் எனது அபிப்பிராயம்.

ஏனெனில், அவைகள் எல்லாம் கடவுள் வந்து நேரில் செய்ததாகவும், மற்றும் நம்மால் தாங்க முடியாத நிபந்தனைகள் கொண்டதும் மனிதன் நம்பமுடியாததும், மனிதத் தன்மைக்கு மீறினதுமான சம்பவங்கள் கொண்டதுமாக இருக்கின்றனவேயன்றி, அனுபோகத்தில் இருக்கின்றதாகவோ அனு போகத்திற்கேற்றதாகவோ எடுத்துக் கையாளக் கூடியது அதில் ஒன்றும் காணக்கூடுவதில்லை. அப்படி காணக்கூடியது என்பதாக எதையாவது எடுத்து வியாக்கியானம் செய்யக் கூடியதாகயிருந்தாலும் அதை யாரும் ஒப்புக்கொண்டாக வேண்டும் என்று நிர்பந்திக்கவோ அமுலில் கொண்டுவரச் செய்யவோ அது உபயோகப்படுவதுமில்லை.

உதாரணமாக, பறையன், பள்ளன் என்பவர்கள் (கொடுமை செய்யப்பட்டவர்கள்) எல்லோரும் கோயிலுக்குள் போனதாகவும் கடவுள் ஏற்றுக் கொண்டு தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுவதை பழைய கலைகளாக உபயோகிக்கின்றார்கள். ஆனால், அவை இப்போது ஏன் அனுபோகத்தில் இல்லையென்றால் அந்தப் பறையன் வேறு, இந்தப் பறையன் வேறு என்று சொல்லி வெளியே தள்ளி விடுகின்றார்கள். இந்த கலையை எதற்காகக் காப்பாற்ற வேண்டும்? மனிதருக்குத்தான் பறையனில் வித்தியாசமிருக்குமே ஒழிய சாமிக்குக் கூடவா வித்தியாசம் என்றால், கலைகளுக்கு ஆபத்து வந்து விட்டது என்கிறார்கள்.

ஆகவே இந்நாட்டிலுள்ள பழைய சின்னங்களையும், ஓவியங்களையும், கலைகளையும் காப்பாற்றிக் கொண்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் என்றைக்குமே வெற்றி பெற மாட்டார்கள் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இதுவரை நமது நாடு சீர்திருத் தப் பலன் அடையாததற்கு இந்த உணர்வுக்காரர்களேதான் முக்கிய காரண கர்த்தர்கள் என்றும் சொல்லுவேன். எனவே இந்த சில உரைகளால் சீர்திருத்தக்காரர்கள் நிலைமையைப் பற்றிப் பேசினேன்.

சீர்திருத்தப்பட வேண்டிய விஷயங்கள்

முதலாவது கடவுளும், மதமுமே முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டியிருக்கின்றது. ஏனெனில், முன்பு நான் சொன்னது போல நம்முடைய சீர்திருத்தத்திற்கு இவ்விரண்டுமே விரோதமாய் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடவுளைப் பற்றி இங்கு நான் அதிகமாகப் பேசவரவில்லை. அதைப்பற்றி எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவும் நல்லதென்றே சொல்லுவேன். ஏனெனில் அது ஓட்டைக் குடத்தில் தண்ணீர் சேந்துகின்ற மாதிரி இழுக்கும்போது குடம் நிறைய தண்ணீர் மொண்டு பாரமாய் வரும் - மேலே வந்து சேரும்போது வெறுங் குடமாயிருக்கும். எத்தனை நாளைக்கு இதை வேலையில் இருந்தாலும் தண்ணீர் வந்து கரை சேராது. அதைப் போலவே கடவுள் என்பது வீண் தர்க்கத்திற்கேற்ற பேச்சே ஒழிய காரியத்திற்கேற்ற பேச்சல்ல. இதுவரையில் வாதம் செய்தவர்கள் கண்ட முடிவுகளில் மிகவும் முக்கியமானது நமது கண்ணுக்கும், மனதிற்கும், அறிவின் உணர்ச்சிக்கும் எட்டாத ஏதோவொன்று இருக்கின்றது என்றும், அதிலும் தேர்ந்த முடிவாக நம்பினால்தான் உண்டு என்றும் சொல்லும் படியானதுகளே ஆகும். இதற்காக மனத்திற்கும், கண்ணுக்கும், அறிவுக்கும் எட்டாத ஒன்றை ஏற்றுக் கொண்டு தக்க ஆதாரம் இல்லாவிட்டாலும் நம்பித்தான் ஆக வேண்டும். நாம் யாரைத் தொந்திரவு செய்வது? அல்லது அம்மாதிரியான தொந்தரவினால் யாருக்குத்தான் என்ன லாபம்? அடுத்தாற்போல் மதம் என்பதைப் பற்றியோவென்றால் அது ஒரு பொருளற்ற தன்மையது. என்னவெனில், இது வரை மதமானது உலகத்திற்கு எவ்விதமான பலனையும் கொடுத்திருப்பதாய் விளங்கவில்லை. எந்த மதக்காரனுக்காவது ஒரு சாந்தி ஏற்பட்டிருப்பதாய்த் தெரியவில்லை ஆனால் மதச்சண்டைக்கும் மதப் பிரசாரத்திற்கும் குறைவில்லை.

ஒவ்வொரு மதக்காரனும் தன் மதமூலமாகத் தான் மக்கள் முழுவதும் மோட்சத்திற்குப் போக முடியுமென்றும், தன் தன் மதத் தலைவன்தான் கடவுள் மகனென்றும், கடவுள் தூதன் என்றும், கடவுள் அவதாரம் என்றும், அவரவர்கள் சொன்னதுகள் எல்லாம் கடவுளால் சொல்லப்பட்டது தான் என்றும் சொல்லுகின்றார்கள். இவர்களுக்குள்ளும் கிளைகள் பல இருக் கின்றன. இதில் யார் மெய்யர்களாகயிருக்க முடியும் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு மதக்காரனும் அவனவன் மதத்தை நம்பாதவ னுக்குப் பாவம் என்றும் நரகம் என்றும் சொல்லுகிறான். மனிதனாகப் பிறந்தவன் இந்த மதத்திற்காக எத்தனை நரகத்திற்குத்தான் போய் வருவது? பொதுவாக மனிதர்களை கடவுளிடத்தில் அனுப்புவதற்கு இத்தனை ஏஜண் டுகள் வேண்டுமா? இவர்களுக்குள் இத்தனைப் போட்டிகள் வேண்டுமா? இந்த மனிதர்கள் கடவுளை அடைய இந்த மதத் தலைவர்களுக்கு இவ்வளவு கவலையா என்பவைகளை நிதானமாய் நடுநிலையிலிருந்து யோசித்துப் பார்ப்பீர்களானால் மதத்தின் அசம்பாவிதமும ஆபாசமும் விளங்காமற் போகாது.

எப்படி ஒரு மனிதன் மக்களின் நலத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தான் அரசனாக வேண்டும் என்று கருதி ஒரு அரசாங்கத்தை ஸ்தாபித்து, பிறகு மக்கள் நலம் மறைந்து தான் அரசாட்சியை விஸ்தரிப்பதில் கவலைகொண்டு, கொலை முதலியவைகளைச் செய்து, அயல் நாடுகளைப் பிடிக்கும் கவலையில் மூழ்கியிருக்கின்றானோ அதுபோலவே மக்கள் நலத்திற்கு மதம் என்று சொல்லி மதத் தலைவனாகி, கடவுள் மகனாகி, தூதனாகி, அவதாரக்காரனாகி, உலகத்திலுள்ள மக்களை எல்லாம் தன் மதத்தில் சேர்க்கும் ஆசைகொண்டு, ஆள் பிடிக்கும் கவலையில் மூழ்கி இறக்கின்றான் என்பதே மத சம்பந்தமான எனது அபிப்பிராயமேயொழிய மதத் தலைவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றாவது, அவர்கள் சொன்னதெல்லாம் கடவுளால் சொல்லப்பட்டவைகள் என்றாவது அவர்களி டத்தில் கடவுள் தன்மைகள் இருந்தது என்றாவது ஒப்புக்கொள்வது முடியாத காரியமாயிருக்கின்றது. ஏனெனில் இவைகளையெல்லாம் ஒப்புக் கொள்வ தானால் பல கடவுள்களையும், பல ஏஜண்டுகளையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஒரு கடவுள்பாடே திண்டாட்டத்தில் இருக்கும் போது பல கடவுள்கள் சங்கதி எப்படி நிலை நிற்க முடியும்? ஆதலால் மதம் என்ப தை கடவுள் என்பவனிடத்தில் சம்பந்தப்படுத்துவது பொருத்தமற்றதாகும்.

மற்றப்படி மதம் என்பது மனித வாழ்க்கைக்கான கொள்கைகளை வகுத்து அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி ஏற்படுத்தப்பட்டது அல்லது வகுக்கப்பட்டது என்று சொல்வதானால் ஒருவாறு அதைப்பற்றி யோசிக்கலாம். அதுவும் அந்தந்த கால நிலைமைக்குத் தக்கபடி கொள்கைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மையை உடையது என்பதானால் மாத்திரம் தான் மதத்தைப் பற்றி யோசிக்கலாம். அப்படிக்கில்லாமல் மாற்ற முடியாதது, கடவுளின் மகனோ, தூதனோ, அவதாரமோ சொன்னது, கடவுள் தன்மைபொருந்தியது, அதனருகில் வேறுயாரும் நெருங்ககூடாதென்று சொல்வார்களானால் அந்த மதங்களை மதங்களாகவே (ஆணவம்) கருதி அவற்றை ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்களின் முக்கிய கடமைகளில் முதன்மையான கடமையாகும். ஏனெனில், சமுதாயச் சீர்திருத்தம் என்பது காலத்திற்கு ஏற்ற வண்ணம் அறிவுக்கு ஏற்றவண்ணம் மாறுபாடுகளைச் செய்ய ஒப்புக் கொள்ளுவதேயாகும். எனவே அத்தகை யவர்கள் முன்னால் “எக்காலத்திலும் எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது” என்கின்றதான மதத்தடைகள் வந்து குறுக்கிடுமானால் எந்த விதத்தில் அவற்றை வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்க முடியும்? கொஞ்சமும் கலங்காது உறுதியுடனும் தைரியத்துடனும் தகர்த்தெறிய எவன் முன்னுக்கு வருகின்றானோ அவன்தான் சமுதாய சீர்திருத்தத் துறையை அணுக முடியும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். சமுதாய சீர்திருத்தகாரர்கள் அடுத்தபடி கவனம் செலுத்த வேண்டியது.

ஆண், பெண், தன்மைகள்

பொது மக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்பவர்கள் மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள் - புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத் தப்பட்ட உணவு என்பது போலவும் - பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப் பட்ட உணவு என்பது போலவும் - ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை என்பதாகக்கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரானால் முதலிலேயே அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும். ஐயோ பாவம்! “ஏழைக் கடவுள்” மீது எத்தனை பழிதான் போடுவது என்று தோன்றினாலுங்கூட, அந்தக் கடவுளுக்கு இவ்வளவையும் சகித்துக் கொண்டு உயிர் வாழும்படியான அவசியம் என்ன வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை; கஷ்டமாயிருந்தால் ஒழிந்து தொலையட்டுமே என்றுதான் தோன்றுகின்றது.

உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் எல்லாவற்றையும் விட பெண்கள் நிலையே மிக மோசமானது. அதிலும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பதிவிரதைத் தன்மையை நினைக்கும்போது மனம் குமுறுகின்றது. அதாவது பதிவிரதம் என்கிற கற்புதான் அவர்களுடைய கடமை யாம் - அதுவும் எத்தகைய பதிவிரதம் என்றால் தன்னைக் கொண்டவனாகிய புருஷன் பழைய சாதம் சுடுகின்றது என்றால் விசிறி எடுத்து விசிற வேண்டுமாம் - தண்ணீர் சேந்தும் போது கணவன் கூப்பிட்டால் அப்படியே கயிற்றை விட்டுவிட்டு ஓடிவர வேண்டுமாம் - ஓடி வந்தால் மாத்திரம் போதாதாம் - அந்தக் கயிறும் பாத்திரமும் கிணற்றின் நடுவே திரும்பி வருமளவும் இராட்டினத்தில் தொங்கிக் கொண்டிருக்கவேண்டுமாம் - இல்லாவிடில் அந்தப் பெண் கற்புடைய பதிவிரதை அல்லவாம். எனவே, சகோதரர்களே! பெண்களுடைய நிலைமைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? அன்றியும் ஆண்கள் பிறவி மூர்க்கப் பிறவி அல்லது தூர்த்தப் பிறவி என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? உங்கள் கடவுள்கள் தங்கள் மனைவிகளை இப்படியா நடத்துகின்றன? தலையிலும், நாக்கிலும், மார்பிலும், தோளிலும் துடைகள் மீதும் தங்களது மனைவிகளை வைத்துக் கொண்டிருக்கிற கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட உங்கள் புத்தி இவ்விதம் சென்றதற்குக் காரணம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. பெண்களை அடிமைகளாக்கியதின் பலனாய் மக்கள் அடிமைகளால் வளர்க்கப்பட்டார்கள்; அடிமைகளால் வளர்க்கப்பட்டதன் பலனாய் மக்கள் சகலத்திற்கும் அடிமைகளானார்க ளெனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டுமானால் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! பெண்கள் அடிமை நீங்க வேண்டும்!! முக்காலமும் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்!!!

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால் முதலாவதாக அவர்களைக் கற்பு என்னும் சங்கிலியில் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்; கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலமும் கூடாது! கூடாது!! கூடவே கூடாது!!! வாழ்க்கை - ஒப்பந்தத்திற்காகவும், காதல் - அன்பிற்காகவும் இருவர்களையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டப்படட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு அடிமைப்படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவு யோக்கியமும் பொறுப்பும் இல்லை.

இந்த விஷயங்களில் பெண்களுக்கு ஆண்கள் உதவி புரிவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலையே ஆகும். வீரப்பெண்மணிகள் தாங்க ளாகவே தான் முன் வந்துழைக்க வேண்டும். அரசாங்கத்திலும் அனேகம் செய்யப்படவேண்டி இருக்கின்றது. ஆனால் பெண் அரசாக்ஷியால் (விக்டோரியா மகாராணி) ஆகாத காரியம் ஆண் அரசாக்ஷியால் ஆகுமா என்பது சிலருக்கு சந்தேகமாயிருக்கலாம். பெண்களின் உறுதியான ஊக்கமும், உழைப்பும் இருந்தால் கண்டிப்பாய் முடியும். ஆனாலும் சமுதாய சீர்திருத்தக்காரர்கள் இதை மிகவும் முக்கியமாய்க்கருதவேண்டியது என்ப தாக முன்னமேயே சொன்னேன். பழக்கத்தையோ, வழக்கத்தையோ, மதத் தையோ, வேதத்தையோ கருதிக்கொண்டு பயப்பட்டுவிடாதீர்கள்; காலதேச வர்த்தமானத்தைப் பாருங்கள். துருக்கியையும், ஆப்கானிஸ்தானத்தையும், சைனாவையும் பாருங்கள்! சைனாப் பெண்களுடைய காலுக்கு விடுதலை ஏற்பட்டுவிட்டது என்பதை நினையுங்கள்.

விதவைத் தன்மை

அடுத்த விஷயமாக உலக வாழ்க்கையில் இருந்து உயிருடன் பிரிக்கப்பட்ட சகோதரிகளான விதவைகள் என்பவர்களைப் பற்றி சில வார்த்தைகள் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஜீவ சுபாவத்திற்கே பொருந்தாததான ஒரு நிபந்தனையை நமது சகோதரிகள் மீது சுமத்திக் கொடுமைப்படுத்துவதான விதவைத்தன்மை என்பது எந்த விதத்திலாவது. பொருத்தமுடையதா என்பதை ஆலோசித்து பாருங்கள். இந்நிலை பெண்களை அடிமைகளாய் நடத்துகின்றோம் என்பது மாத்திரமல்லாமல் நம்மை போன்ற மனிதஜீவன்களிடத்தில் நாம் எவ்வளவு கொடுமையாய் அறிவீனமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர்களாய் இருக்கின்றோம் என்பதற்கு அறிகுறியாகும்.

உலகத்தையும், நதியையும், சக்தியையும் பெண்ணாய் கருதும் இரண்டு பெண்டாட்டிக்குக் கம்மியில்லாத கடவுள்களையுடையதும் 1000, 10000, 60000 பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்ட ராஜாக்கள் ஆண்டதுமான இந்த நாட்டில் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள்!! உதைக்கப்படுகின்றார்கள்!! அதிலும் விதவைத் தன்மையால் மிகவும் வதைக்கப்படுகின்றார்கள்.

பெண்கள் சம்பந்தமான வேறு எந்த காரியத்திற்காவது ஆண்கள் தங்கள் சுயநலத்தைக் கொண்டு கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்லுவதானாலும் இந்த விதவைத் தன்மையை எதற்காக கற்பித்தார்கள் என்பதே நமக்கு விளங்கமாட்டேன் என்கிறது.

இதில் எவ்வித அறிவுடைமையும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை. இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்பதும் அறியக் கூடவில்லை. ஒரு சமயம் சந்நியாசிகளையும் அதிதிகளையும் உத்தேசித்து இப்படி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதாகக் கருதினார்களா அல்லது பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது ஆதலால் இம்மாதிரி செய்வதன் மூலம் மற்றப் பெண்களுக்கு புருஷன் கிடைக்கட்டும் என்று செய்தார்களா அல்லது வேறு என்ன காரணத்திற்காக இப்படிச் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கே முடியாதாயிருக்கின்றது. எப்படி இருந்தாலும் இதைப் போன்ற முட்டாள்தனமானதும், சித்திரவதைக் கொப்பான கொடுமை யானதும், இனி அரைக்ஷணமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாததுமான காரியம் வேறு இல்லை என்றே சொல்லவேண்டும்.

இந்த விதவைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்கள் மிக்க தைரியமாகப் பாடுபடவேண்டும்; இது விஷயத்தில் மானம் இன்னது அவமானம் இன்னது என்பதாகவோ, அவர்கள் என்ன சொல்லுவார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரிய மாய் வெளிக்கிளம்பிவிட வேண்டும்; தங்களுக்கு இஷ்டமான கணவன் மார்களைத் தாங்களே தெரிந்தெடுத்துக் கொண்டதாய் வெளிப்படுத்திவிட வேண்டும்; இவ்விஷயத்தில் சற்று சௌகரியக் குறைவு இருந்தாலும் அதை வலிமையுடன் பொறுத்துக் கொண்டால் அடுத்து வரும் சகோதரிகளுக்கு மிகுதியும் பலனளிக்கும். அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருந்து வருகின் றது. நமது நாட்டிலேயே சில வகுப்புகளில் இவ்வழக்கம் நடைபெறுகின்றது. ஆகையால் இதில் இனி தாட்சண்ணியம் பார்ப்பதென்பது சற்றும் பொருந்தா தெனவே சொல்லுவேன். இதற்கு விதவைகள் அல்லாத ஸ்திரீகளும் கொடுமைப்படுத்தப்பட்ட ஸ்திரீகளுக்குப் புருஷன் சம்பாதித்துக் கொடுப்ப திலும், அவர்களுக்குத் தைரியமூட்டி கொடுமைப்படுத்தப்பட்ட குடும்பங் களிலிருந்து வெளிப்படுத்தித் தனியாகவும் சுயேச்சையாகவும் வாழச் செய்யத் தக்க வழியில் கவலை எடுத்துக் கொண்டு உதவி செய்ய வேண்டு மென்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன். நான் ஏன் இப்படிச் சொல்லு கிறேன் என்றால் இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று கண்டதால்தான்.

ஜாதி வித்தியாசம்

ஜாதி வித்தியாசம் என்பது கற்பிக்கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைப்பது என்பதற்கு ருஜு ஜாதி வித்தியாசமேயாகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப்பிராயத்தில் இருந்து மனிதப்பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா? பிறவியிலாவது வாழ்க்கையிலாவது ஒழுக்கங்களிலாவது அறிவிலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றதா? ஒன்றுமே இல்லையே. அப்படி ஏதாவது ஒரு வழியில் பிரித்திருந்தாலும் அதற்குச் சமாதானமாவது சொல்ல முயற்சிக்கலாம். ஒரு காரணமும் இல்லா மல் பிறவி மாத்திரத்தில் எதேச்சாதிகாரமாய் செய்யப்படும் கொடுமையாகத் தானே விளங்குகின்றது. இந்த முறை மக்களின் ஒழுக்கத்திற்கே நேர் விரோதமாக இருக்கவில்லையா?

சகோதரர்களே! இந்தக் கொடுமையை ஒப்புக் கொள்ளாதவர்கள் யார்? இதை ஒழிக்கவேண்டுமென்று சொல்லாதவர்கள் யார்? இதற்காக எத்தனை காலமாக முயற்சி செய்யப்பட்டு வருகின்றது? ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கூடாது அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சொல்லாத பெரியார் யார்? ஆயினும் ஏதாவது பலன் ஏற்பட்டிருக்கின்றதா? ஒரு சிறிதும் காணப் படவில்லையே. இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆகவேண்டும். எனவே இதற்குச் சரியான வழி அறிவினாலோ ஞானத்தினாலோ போதனை யினாலோ ஏற்பட்டுவிடும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது பெரிதும் அரசாங்கச் சட்டத்தினாலும், அரசியல் வகுப்புவாரிப் பிரதிநிதித்து வத்தினாலும் தான் இதை (அதாவது இந்த உயர்வு தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும்.

ஆனாலும் இது அரசியல் கூட்டமல்ல. இங்கு நான் அரசியலைப் பற்றிப் பேசப்போவதில்லை. அரசாங்கத்தில் நமது முன்னேற்றத்திற்குப் பலவித சட்டம் வேண்டும் என்று கேட்பதுபோல எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்றோம். இதையும் ஏன் வேண்டும் என்கிறோம் என்றால் வலுத்தவன் இளைத்தவனை நசுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான். இது சமுதாய சீர்திருத்தத்தின் பாற்பட்டதா இல்லையா என்பதைத் தாங்களே யோசித்துப் பாருங்கள். இன்னும் ஓர் அவசியமும் சொல்லுகின்றேன். அரசியல்காரர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் கேட்கும்போது எதற்காக வகுப்பு வித்தியாசத்தைக் கற்பிக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாமே என்கின்றார்கள். இதை நம்பி, இந்தப்படியே சமுதாய வாழ்க்கையில் இருக்கலாம் என்றாலோ மத இயல்காரர்கள் அது மதத்திற்கு விரோதம் என்கின்றார்கள். அம்மதத் தடை யை நீக்க சட்டம் செய்யலாம் என்றாலோ மத ஆச்சாரியர்கள் ‘மதத்தில் சர்க்காரோ சட்டசபையோ பிரவேசிக்கக் கூடாதெ’ன்கிறார்கள். எனவே இப் போதாவது ஒவ்வொரு வகுப்புக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்க வேண்டிய அவசியம் என்று சொல்லுவது சரி என்று தோன்றவில்லையா? அடுத்தபடியாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால் ஜாதி வித்தியாசம் என்பதற்கு தீண்டாமை என்பதாகும்.

தீண்டாமை

கனவான்களே!

தீண்டாமை என்பதைப் பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதாக நீங்கள் யாரும் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்றே கருதுகின்றேன். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அகிம்சாத் தர்மத்தோடும் இருக்கவேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும் இம் மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா என்பதும் எனக்கு விளங்கவில்லை.

இம்மாதிரி ஒரு பெரிய மனித சமூகத்தை கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரண விடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா என்று கேட்கின்றேன். சிலர் சுயராஜ்யம் வந்துவிட்டால்-பூரண சுயேச்சை வந்துவிட்டால் இவைகள் ஒழிந்து போகும் என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். சுயராஜ்யம் மட்டுமல்ல; தர்மராஜ்யமும், அவதார ராஜ்யமுமாகிய ராமராஜ்யமும் சத்திய சந்தன் ராஜ்யமாகிய, அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில் தானே இவைகள் உண்டாக்கப்பட்டதாகவும் இவற்றைச் சரிவர பரிபாலித்து வந்ததாகவும் இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. எனவே மறுபடியும் அந்த ராஜ்யங்கள் வருமானால் இந்தக் கொடுமைகள் குறையுமா? அதிகமாகுமா? என்று கேட்கின்றேன். ஆதலால் இக்குற்றங்கள் நமது நாட்டை விட்டு ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்கள் கடமை மாத்திரமல்லாமல் அரசியல் சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களுடையவும் முக்கியமான கடமையேயாகும்.

கல்வி

இனி கல்வி என்பதைப் பற்றியும் சீர்திருத்தக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டியது அதிகமுண்டு. ‘கல்’ என்பதற்கு ‘அறி’ என்று பொருள். கல்வி என்றால் அறிவி, தெரிவி என்பது தான் பொருளாயிருக்க வேண்டும். எனவே, எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையும் மனிதத்தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும். மற்றவைகள் வித்தை யாகும். இதற்கு உதாரணமாக

 ‘ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்’

 ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்

 கல்லார் அறிவிலா தார்’

என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது. ஆதலால் உலக நிலையை யும் அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத் தன்மையுமே முக்கியமாய்க் கொண்டு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும், இப்போதைய கல்வி என்பது மனிதத் தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும் பொறுத்தமானதல்ல. குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் தேசத்துரோகிகளுமாக ஆக்கி தனது காலடியிலேயே அமுக்கி வைத்துக் கொண்டு நிரந்தமாய் தன் இச்சைப்படி ஆக்ஷி புரியவேண்டும் என்று கருதுகின்ற ஒரு அரசாங்கத்திற்கு அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகின்றது. அது மாத்திரமல்லாமல் ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதும் அயோக்கியர்களின் ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, இது அடியோடு மாற்றப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் பக்தி, மதபக்தி, இராஜபக்தியாகிய அறிவுத்தடையும், அடிமை புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்விச் சாலை களுக்குள் தலைகாட்டவே விடக்கூடாது. ஏனெனில் கடவுளிடத்திலும், மதத் தினிடத்திலும் அரசனிடத்திலும் பக்தியாய் இருக்கும்படி அவ்வவைகளே செய்து கொள்ள வேண்டுமே ஒழிய இதற்காக ஒரு பள்ளிக்கூடம் வைத்து மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத்தனத்தின் முதல் பாகமாகும். கல்வி கற்பிக்கும் வேலை இது சமயம் முக்கியமாய்ப் பெண்களுக்கும் தீண்டாதார் ஆக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வர்களுக்குமே செய்ய வேண்டும்.

ஏற்கனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்கின்ற சமூகத்திற்கும், பாரம்பரியமாகவே கல்வி அறிவோடு இருப்பதாகச் சொல்லப்படுபவர் களுக்கும் பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இப்போது சிறிதும் கல்வி கற்பிக்க வேண்டிய தேயில்லை. எனவே குறைந்தது ஒரு பதினைந்து வருஷத்திற்காவது உயர்தர கலா சாலைகளையும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் பள்ளிக் கூடங்க ளையும் காலி செய்து, கதவைச் சாத்தி மூடிவிட்டு முன் சொன்ன கல்வியும், அறிவும் இல்லாதவர்கள் என்கிற கூட்டத்திற்கே பள்ளிக்கூடம் வைத்துக் கற்பிக்க வேண்டும். யோக்கியமான அரசாங்கம் இதைத்தான் முதலில் செய்யும். உண்மையான சீர்திருத்தக்காரர்களும் கல்வித் துறையில் இதைத் தான் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

மூடப்பழக்க வழக்கங்களும் சடங்குகளும்

சீர்திருத்தக்காரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் ஒழிப்பது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் இந்த விஷயமே இப்போது எங்கும் பேச்சாயிருக்கின்றது. இந்த மூடப்பழக்க வழக்கங்களால் பிழைக்கின்ற கூட்டம் தவிர மற்றவர்கள் எல்லோரும் இதன் அறியாமையை நன்றாய் உணர்ந்திருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களுடைய தைரியமற்ற தன்மையினால் அதை மாற்றிக்கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள்.

கடவுள், மதம், பக்தி, வேதம் முதலாயதுகள் மாத்திரம் அல்லாமல் உற்சவம், சுபம், அசுபம் என்பது சம்மந்தமான சடங்குகள், நோன்பு, விரதம் மாத்திரம் அல்லாமல் வேண்டுதல் தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம்: காணிக்கை ஆகியவைகள் போன்ற அநேக விஷயங்களில் நாம் நடந்துகொள்ளும் நடவடிக்கைகள் முழுவதும் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கை கள் ஆகியவை களின் பாற்பட்டதேயாகும்.

இந்த மூடப்பழக்க வழக்க குருட்டு நம்பிக்கையும் செய்கையும் நம் முடைய அறிவு, ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு முதலியவை களையெல்லாம் அடியோடு கெடுத்துவிடுகின்றது. நல்ல காரியங்களுக்குப் பணமும் அறிவும் இல்லாமல் செய்துவிடுகிறது. உலகத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றையும் விட, இயற்கையிலேயே எல்லா வளமும் சௌகரியமும் பொருந்தியதான நமது நாடு மட்டும் உலகத்தில் உள்ள மற்ற எல்லா நாடு களையும் விட மிக மோசமான நிலைமையில் என்றுமே விடுதலை அடைய முடியாத அடிமைத்தன்மையிலும், அறியாமையிலும் ஆழ்ந்து கிடப்பதற் குக்காரணமே. இந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு நமது மக்கள் கண்மூடித் தனமாக அடிமையாகியிருப்பதுதான்.

நமது நாட்டைவிட மிகவும் பின்னணியிலிருந்த மற்ற நாடுகள் இன்றைய தினம் எல்லா நாடுகளையும் விட முன்னணியில் இருப்பதற்கு காரணம் அந்நாட்டார்கள் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு நம்பிக் கைகளையும் அறவே ஒழித்து அவர்களது பகுத்தறிவுக்கு மதிப்புக்கொடுத்து ஆராய்ச்சித்துறையில் அவர்களது அறிவையும் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் முயற்சியையும் செலவு செய்வதன் பலனே ஒழிய வேறில்லை.

நம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றுயறிந்த ஒரு சிறு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமானாலும் நடுங்குகின்றோம். தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும், ஸ்மிருதியும், புராணமும் வந்து தடைக் கல்லாய் நிறுத்திவிடுகின்றது. இவைகளையெல்லாம் கூட ஒரு விதத்தில் சமாளித்துவிடலாம். ஆனாலும் ‘பெரியவர்கள் நடந்த வழி’ என்கின்ற பொறுப்பற்றதும் அர்த்தமற்றதுமான தடை பெரிய தடையாய் இருக்கின்றது. எனவே இவ்விஷயத்தில் சிறிதும் தாக்ஷண்ணியமில்லாததும் தயங்காத துமான அழிவு வேலையே மிகவும் தேவையானது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன்.

இந்த மூட நம்பிக்கை குருட்டு பக்தி என்கின்ற துறையில் நமது மக்கள் பணம் வருஷம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வீணாகின்றது. நமது தென்னாட்டில் மட்டும் வருஷத்தில் ஒரு லக்ஷம், இரண்டு லக்ஷம், ஐந்து லக்ஷம், பத்து லக்ஷம், இருபது லக்ஷம் வரும்படியுள்ள கோயில்கள் பல இருக்கின்றன. வருஷத்தில் பத்து லக்ஷம், இருபது லக்ஷம், ஐம்பது லக்ஷம் செலவு செய்து கூட்டங்கூடும் யாத்திரை ஸ்தலங்கள் நமது தேசத்தில் அநேக மிருக்கின்றன; இவைகள் யாவும் ஒருசில கூட்டத்தாரின் சுயநலத்திற்காக வஞ்சகக் கருத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட மோசடியே அல்லாமல் வேறல்ல. இதற்காக எழுதி வைத்த புராணங்களும், ஆகமங் களும், சமயாச் சாரியர்கள் என்பவர்களின் சரித்திரங்களும், ஸ்தல மான்மி யங்கள் தீர்த்த விசேஷங்கள் என்பதுகளும், புண்ணிய தினங்கள், திதி, திவசம் என்பது களும் சுயநலம் கொண்ட அயோக்கியர்களாலேயே பாமர மக்களை ஏமாற்றச் செய்த சூழ்ச்சியேயாகும்.

உதாரணமாக இரயில்வேக்காரர்களை எடுத்து கொள்ளுங்கள். அவர்களுக்கு நமது தெய்வங்கள் என்பவைகளிடத்திலாவது, புண்ணிய ஸ்தலம், தீர்த்தம், சிரார்த்தம், புண்ணியதின ஸ்நானம், தேர்த்திருவிழா, உற்சவம், தீபம், மேளம் என்பவைகளிடத்திலாவது கடுகளவு நம்பிக்கையாகிலும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது அவர்கள் உண்மையிலேயே நம்மைப் போன்ற அவ்வளவு முட்டாள்களா? ஒருக் கால மும் இல்லை என்றும் அல்லவென்றும் வெகு தைரியமாய்ச் சொல்லுவேன். ஆனால், அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள்.

(“தவிர ஸ்நானத்திற்குப் போகவில்லையா” “வைகுண்ட ஏகாதசிக்குப் போகவில்லையா” “ஆடி அமாவாசைக்கு தனுஷ்கோடிக்கு போகவில்லையா” “பிரயாகைக்கு சிரார்த்தம் கொடுக்கப் போகவில்லையா” “கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்குப் போகவில்லையா” “கும்பமேளாவுக்கு அரித்துவாரத்திற்குப் போகவில்லையா?” “மாமாங்கத்திற்குக் கும்பகோணம் போகவில்லையா” “ஆருத்திராவுக்குச் சிதம்பரம் போகவில்லையா”) என்று விளம்பரம் செய்கின்றார்கள். கூலி கொடுத்துப் பத்திரிகைகளில் போடச் செய்கிறார்கள். படம் எழுதி சுவர்களில் ஒட்டுகிறார்கள். நல்ல நல்ல பெண்களின் உருவத்தைப் படத்தில் எழுதி மக்களுக்குக் கவர்ச்சி உண்டாகும்படி செய்கின்றார்கள். இவைகளெல்லாம் எதற்காக? நாம் மோக்ஷம் அடைவதற்காகவா? நமக்கு புண்ணியம் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவா? ஒருக்காலமும் இல்லை என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். ஆனால் மற்றெதற்கு? நம்மை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதற்காக நம்மிடத்தில் சற்றும் அன்பும் காதலும் இல்லாமல் தங்களை நன்றாய் அலங்கரித்துக் கொண்டு நம்முன் நின்று கண் ஜாடை காட்டும் கீழ்த்தர விபசாரிகளின் மனப்பான்மையை ஒத்ததான ஏமாற்ற மல்லவா இது? இதன் மூலம் இரயில்வேக்காரர்களுக்குப் போகும் பணம் எவ்வளவு? இதுபோல்தானே புராணமும், ஆகமமும், ஸ்மிருதிகளும் எழுதினவர்கள் மனப்பான்மையும் இருந்திருக்கும் என்று எண்ண வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால் நம்முடைய மோட்சத்தைப் பற்றி இந்த கூட்டத்தாருக்கு இவ்வளவு அக்கறை எதற்கு? எனவே நமது மூடப்பழக்கம், குருட்டு நம்பிக்கையாகியதன் மூலமாக நமது பணங்கள் எத்தனை கோடி பாழாய்ப் போகின்றது என்பதைப் பாருங்கள். சர்க்கார் நம்மிடம் அரசாக்ஷியின் பேரால் வசூலிக்கும் வரி என்னும் கொள்ளையை விட இந்த மூடநம்பிக்கையாலும், குருட்டு பக்தியாலும் செலவிடும் பணமும் இதன் பேரால் பலர் கொள்ளையடிக்கும் பணமும் குறைந்த தொகை கொண்டதெனக் கருதுகின்றீர்களா? சர்க்கார் இதைச் செய்யவில்லை, அதைச்செய்யவில்லை என்று கத்தும் பொருளாதாரத் திட்ட நிபுணர்கள் இந்தப் பகல் வழிப்பறிக் கொள்ளைக்கு ஏதாவது கவலை கொள்ளுகின் றார்களா? இதைப் பற்றி பேசவாவது அனுமதிக்கின்றார்களா? இந்தப் பக்கம் சற்று தலை வைத்தாவது படுக்கின்றார்களா? அனுகூலமான துறையில் ஒன்றும் செய்யாமலிப்பதோடு இந்த ஒழுக்கமற்ற கொள்ளைக் கூட்டத் தாருக்கு தரகர்களாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்துக் குழியில் தள்ளு வதற்கு உடந்தையாய்த் தானே இருக்கின்றார்கள்.

இந்தப் பணங்களும் நேரங்களும் கல்வியிலாவது ஆராய்ச்சித் துறையிலாவது செலவு செய்யப்பட்டிருக்குமானால் நமது நாட்டில் 100-க்கு 93-ஆண்கள் தற்குறிகளாயிருப்பார்களா? 1000-க்கு 999 பெண்கள் தற்குறிகளாயிருப்பார்களா? என்பதுகளை யோசித்துப் பாருங்கள். நமது நாடு தரித்திரமாயிருப்பதற்குக் காரணம் விளைவில்லையா? விளைவுக்கு விலையில்லையா? போதிய பண புழக்கம் இல்லையா? எல்லாப் பணமும் சாமிக்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் உற்சவத்திற்கும் சடங்குகட்கும் மூடநம்பிக்கைக் கும் சோம்பேறிகளுக்கும் ஏமாற்றுகின்றவர்களுக்கும் அழுவதற்கே செலவாகிவிடுகின்றது. சூதாட்டத்தில் எப்படி சீட்டு மேஜை வாங்கின வனுக்கே எல்லாப் பணமும் போய் சேர்ந்துவிடுகிறதோ அதுபோல் நம்மை மூடநம்பிக்கையில் அழுத்தி வைத்திருப்பவர்களுக்கே எல்லாப் பணமும் போய்ச் சேர்ந்து விடுகின்றது.

எனவே, நமக்கு செல்வமோ, கல்வியோ, அறிவோ, ஆராய்ச்சியோ, வேண்டுமானால் இந்த மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும். இந்தத் துறையும் மற்றெல்லாத் துறைகளைவிட மிகுதியும் அழிவு வேலை செய்யப்படவேண்டியதாகும். மற்றதை முடிவுரையில் சொல்லுகின்றேன்.

(குறிப்பு : 26.11.1928 சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் தென் னிந்திய சமுதாய சீர்திருத்தக்காரர்களின் மாநாடு - தலைமையுரை சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 02.12.1928)

Pin It