நம் நாட்டின் மக்களுக்கு நன்மை பெறவே, நமக்கு வேண்டியவர்களை வைத்து ஆட்சி செலுத்த வேண்டும்.
இன்றைய தினம் நடப்பது நீதியின் ஆட்சியா? காசு செலவு செய்தால் கழுதை கூட மந்திரி ஆகலாம் என்று இருக்கிறது. இப்படி அது ஆட்சி செய்தால் நாம் அதில் இருப்பது அர்த்தமா? ஒருவன் கூட யோக்யமானவன் இல்லையே! பணம் செலவு செய்தால் மந்திரி.
பார்ப்பான் காலைக் கழுவி குடித்தால் அவனும் மந்திரியாகி விடுகிறான். மக்களைப் பற்றி கவலை யில்லை. நான் 5-வருடம் மந்திரியாக இருந்தால் போதும் என்று நினைக்கிறான். 1947 ஆகஸ்டு 15-ஆம் தேதி சுதந்திர நாள் என்றார்கள்.நான் தான் அதை துக்க நாள்; கேடு பயக்கும் நாள்; நமது பரம்பரை எதிரி களான பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு வரும் நாள் என்றேன். ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமியற்றிக் கொண்டார்கள். அதை பார்த்தவுடன் நான் இது மனுதர்ம சட்டம் என்றேன்.
இது பொய்யா? அன்று முதல் இன்று வரை அதை எதிர்த்தே வந்துள்ளேன். இந்த இந்திய நாட்டில் இருந்து நாம் பிரிய வேண்டும்.
முதலாவதாக இந்த வடநாட்டு பார்ப்பானின் ஆட்சியில் இருந்து பிரிய அதாவது தமிழ்நாடு சுதந்திர நாடாக பிரிய வேண்டும். அதற்காக இந்திய நாட்டின் படத்தை எரித்து, அதன் சாம்பலை பிரதம மந்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எதற்காக என்றால், உன் ஆட்சியில் இருக்க எங்களுக்கு பிரியமில்லை. மனுதர்ம அடிப்படையில் சட்டம் உள்ளது அதனால் எங்கள் நாட்டை எங்களுக்கு பிரித்துக் கொடுத்து விடு என்று கேட்பதன் அறிகுறியாக இந்த போராட்டத்தை நடத்தியாக வேண்டும் நாள் குறித்தவுடன் தயாராக இருங்கள். அரசாங்கம் இதற்காக அதிகப்படியான தண்டனை என்றாலும் அதை நாம் வரவேற்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தை 12000- பேர்கள் கொளுத்தினர். 4000-பேரைப் பிடித்து சிறையில் போட்டனர். இனி அதற்கும் மேலான அடக்குமுறைக்கு ஆளாகி மடிய வேண்டியது தான். மோசடி செய்து நம்மை இந்த கொடுமையான நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். காந்தி, ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட “மகாத்மா” பட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டு உலகத்தில் இருக்கவே நம்மை காட்டிக் கொடுத்து விட்டார்.
இந்த நாட்டில் சாதி ஒழியக்கூடாது என்று காந்தி வாயிலிருந்து தான் முதலில் வந்தது. மக்களை ஏமாற்றமே தீண்டாமை ஒழிய வேண்டும் என்றார். அதனால் தான் இங்கு ஒரு முன்னேற்றக் காரியமும் ஆகவில்லை. அதற்கு முன் இருந்தது போலவே உள்ளது.
தீண்டாமை ஒழிப்பிற்கு பிறகு ஒன்றும் புதியதாக இல்லை. பொது கிணறு, ரோடு வசதி, கோயில் பிரவேசம் இவற்றிற்கும் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.யாராவது முன்வந்து என்னிடம் சம்பந்த முண்டு என்று சொல்ல முடியுமா? காந்தியாருக்கு முன்பே ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் போது தீண்டாமை அனுசரித்தால், ரூபாய் ஐம்பது அபராதம் என்பது போன்ற சட்டத்தை செய்து வைத்திருந்தார்கள். தீண்டாமை சம்பந்தமான கிளர்ச்சியின் போது காந்தி தெளிவாக கூறினார். தீண்டாமைக்கும் சாதி ஒழிப்பிற்கும் சம்மந்தம் இல்லை என்றும் சாதி ஒழிக்கப்பட மாட்டாது என்றும் தீண்டாமை தான் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னார். இது பற்றி 'யங் இந்தியா' போன்ற பத்திரிகைகளில் அவரே எழுதியும் உள்ளார். சமபந்தி போஜனம்கலப்புத் திருமணங்கள் இவற்றிற்கும் தீண்டாமைக்கும சம்பந்தமில்லை என்கிறார். இன்று நாம் மிகப்பெரிய சதித்திட்டத்திற்கு ஆளானோம்.
சுதந்திரம் அடைந்த பின்னரும் சாதியை ஒழிக்க முடியாவிட்டால் என்ன பயன்?
(14-09-1958-அன்று திருச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
- பெரியார் ஈ.வெ.ரா