வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது என்பது தெரிந்திருந்தாலும் எம் நினைவிலிருக்கும் வாழ்நாளில் நீண்ட காலம் எம் கூடவே வெள்ளித்திரை வழியாகவும் சின்னத்திரை வழியாகவும் பயணித்து எம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நல்ல கலைஞன் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கின்றது.
வெறுமனே நகைச்சுவை நடிகராக இருந்து மக்களைச் சிரிக்கவைப்பதே பெரிய விடயம். அதனையும் தாண்டி சமூக ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள், அடக்குமுறைகளுக்கு எதிராக விழிப்புணர்வூட்டிய மகத்தான பணியை மேற்கொண்டவர்.
மாமனிதர் அப்துல் கலாமின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்த விவேக், ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பெரும் பணியில் 33 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியைப் பூர்த்தி செய்திருந்தார். சிலர் எப்போது செத்துத் தொலைவார்கள் என்று மக்கள் எண்ணுவதுண்டு.
ஆனால் காலாகாலத்திற்கும் எம்மோடு வாழ்ந்திருக்க வேண்டும் என மக்கள் விரும்பும் மனிதர்களும் உண்டு அந்த வரிசையில் விவேக்கிற்கும் இடமுண்டு. 59 வயது என்பது தற்போதைய உலகில் பெரிய வயதில்லை. எம்மை விட்டு சீக்கிரம் போய் விட்டீர்கள் சின்னக்கலைவாணரே!
- அருண் ஆரோக்கியநாதன்