திரைப்படங்களில் நகைச்சுவை வழியாக பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி வருகிறார் நடிகர் விவேக். ‘குமுதம்’ வார ஏடு இதுபற்றி எழுதியுள்ள விமர்சனமொன்றில், ‘வழக்கமான பகுத்தறிவுப் பிரச்சாரம்’ என்று, மலினப்படுத்தியிருந்தது. இதற்கு ‘குமுதம்’ பத்திரிகைக்கு நடிகர் விவேக் சூடாக எழுதியுள்ள பதில் இது:

விவேக் எழுதுகிறேன். தமிழின் ஒண்ணாம் நம்பர் இதழான ‘குமுதம்’ பத்திரிகையில் சென்ற வாரம் ‘ஜாம்பவான்’ பட விமர்சனம் கண்டேன். களிப் பேருவுவகை அடைந்தேன். அடடா! அடடா! என்ன ஒரு விமர்சனம். அதிலும் என் காமெடி பற்றி ஒற்றை வரியில் ‘வழக்கம் போல் பகுத்தறிவுப் பிரச்சாரம்’ என்று திருவாய் முத்து உதிர்த்துள்ளீர்களே! அதுதான் சூப்பரோ சூப்பர்.

“கலையில்லாத பிரசாரமும்; பிரசாரம் இல்லாத கலையும் மக்களைச் சென்றடையாது” என்று நான் சொல்லவில்லை; காரல்மார்க்ஸ் காரல்மார்க்ஸ் என்று தாடி மீசையோடு இருந்தாரே, ஒரு பொருளாதார, சமூகவியல் மேதை! அவர் சொன்னார். (இதையே ரகஸ்யா சொல்லியிருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்!) அவர் உரைத்தது இன்றுவரை ஏனோ உங்களுக்கு உறைக்கவில்லை.

‘ஜாம்பவான்’ படத்தில் நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதை நான் உங்களுக்கு விண்டுரைக்க விழைகிறேன். ‘கல்வியறிவுதான் மக்களை மேம்படுத்தும்’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் கிராம நாட்டாண்மை ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் டாக்டரை (விவேக்) சந்திக்கும் காட்சியில் காமெடியாக அமைத்திருப்பேன்.

ஹீரோயின் நிலா சித்தபிரமை அடைந்த நிலையில் இருக்கும்போது, கிராமத்து வைத்தியச்சி அவளை சாமியாடி வேப்பிலையால் அடிக்கும்போது, இது, ‘பேய் பிடிக்கவில்லை’ இதற்குப் பெயர் ‘ஸ்கீசோபெர்னியா’ என்ற மனவியாதி. இதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறேன்.

‘சேது’வில் இருந்து ‘அந்நியன்’ வரை விக்ரம் செய்தது இந்த ஆல்டர் ஈகோ எனப்படும் ‘மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ என்ற ‘ஸ்கீசோபெர்னியா’ வகையைச் சார்ந்ததுதான். இதற்காக அரசும் மற்றும் பல மனநல மருத்துவ அமைப்புகளும் பல கோடி ரூபாய்களைச் செலவழித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் போராடி வருகின்றன என்பது குமுதத்திற்குத் தெரியாமல் போய் விட்டதே!

இன்னொரு காட்சியில் பெண் சிசுக் கொலையைக் கண்டித்து வசனம் பேசியுள்ளேன் மற்றொரு காட்சியில், ஜாதிச் சண்டையை நையாண்டி செய்து காமெடி செய்திருக்கிறேன். இவற்றையெல்லாம் ‘வழக்கம் போல் பகுத்தறிவுப் பிரசாரம்’ என்ற ஒற்றை வரியில் உதாசீனம் செய்து உதறித் தள்ளி விட்டீர்களே! இது நியாயமா?

நம் ஜனாதிபதி அப்துல்கலாமை நான் சந்தித்து எடுத்த பேட்டியையும் நீங்கள்தான் போடுகிறீர்கள். நல்ல விஷயத்தை காமெடி வாயிலாகச் சொன்னால், அதை ‘பகுத்தறிவுப் பிரச்சரம்’ என்று டைட்டில் வைத்து புறக்கணித்தும் விடுகிறீர்கள்.
அப்படி என்றால் என்னை என்ன மாதிரி காமெடி செய்யச் சொல்கிறது குமுதம்?

பட்டாப்பட்டி டிராயர் போட்டுக் கொண்டு பக்கத்தில் நிற்பவன் புட்டத்தைக் கடிக்கவா? சகதியில் புரளவா? வாந்தி எடுத்துக் கொண்டே வரப்பில் ஓடவா? டபுள் மீனிங் மற்றும் ட்ரிபிள் மீனிங் டயலாக் பேசவா? பெண்களைக் கிண்டல் பண்ணி குபீர் சிரிப்பை ஏற்படுத்தட்டுமா? வயதானவர்களை மண்டையில் தட்டவா? என்ன செய்து உங்களுக்கு கிச்சுகிச்சு மூட்ட வேண்டும் பத்திரிகை ஜாம்பவானே!

நமீதாவின் தொப்புளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில், அசினின் இடுப்புக்குக் காட்டும் அக்கறையில், த்ரிஷாவின் உதட்டுக்குக் கொடுக்கும் பப்ளிசிட்டியில் கொஞ்சம் இந்த விவேக்கின் நகைச்சுவைக்கும் கொடுங்களேன், மிஸ்டர் குமுதம்!

கடைசியா ஒன்று, விமர்சனங்கள் படிப்பதற்கு மட்டும்; அவையே படைப்புகள் அல்ல.

‘குமுதம்’ 18.10.2006

Pin It